22.12.09

கதம்ப மனிதர்கள் நிறைந்த மல்லிகை நகரம் மதுரை.

அந்தக்காலத்தில் துணிவே துணை அப்டீன்னு ஒரு திரைப்படம் வந்தது. தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் நடித்தது.எல்லாப்படத்திலும் ஒரு சூட்கேசைத் தூக்கிக்கொண்டு சுவரோரமாகவே பதுங்கிக்கொண்டு போகிறதைதவிர அவர் நடித்ததாக நினைவில்லை என்று ஜெய்சங்கரைப்பத்தி எங்கோ படித்தது ஞாபகத்திற்கு வருகிறது. அதில் ஜெய்சங்கர் வழக்கம் போல ஒரு சிஐடி அதிகாரி. ஒரு கொலையைக் கண்டுபிடிக்க அந்த ஊருக்குப்போவார். ஊர் ஒரே மர்மமாக இருக்கும். தண்ணித்தாகம் எடுத்து மனுசன் நாக்குவரண்டு கிடக்கும்போது கூட அவருக்கு யாரும் தண்ணீர் கொடுக்க மாட்டார்கள்.

அந்தப் படம் பார்த்தபிறகு அந்தப் பெயருடய சாயலுள்ள எந்த ஊருக்குப் போனாலும் எனக்கு திக் திக்கென இருக்கும்.இப்படித்தான் இந்த திரைப்படம் ஒரு பொருளை அதன் கண்வழியே பார்க்க வைத்துவிடுகிறது.
இப்போதும் கூட இந்த மதுரையை அப்படிப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. மதுரையென்றால் முன்னமெல்லாம் எனக்கு, எனக்குமட்டுமல்ல இந்த உலகத்துக்கு சங்கத்தமிழ்,வைகை ஆறு, மீனாட்சியம்மன்
கோவில்,திருமலைநாயக்கர் மஹால்,கண்ணகி,மல்லிகைப்பூ என பல பிம்பங்கள் நினைவுக்கு வரும்.தோழர் நன்மாறன் மதுரையப்பற்றிச் சொல்லும்போது அது ஒரு தூங்காத நகரம் என்று வர்ணிப்பார்.இரவு இரண்டு மணிக்குக் கூட சூடாகப் புரோட்டாச் சாப்பிடுகிற மக்களைப்பற்றி வியந்து சொல்லுவார் அவர்.சினிமா நடிகர்கள் எல்லோருக்கும் தலைமை ரசிகர் மன்றம் மதுரையில் தானிருக்கிறது.

ஆனால் சமீப காலமாக மதுரையென்றாலே அருவா,அடிதடி என்கிற அளவுக்கு இந்தச்சினிமா மதுரையைப் புரட்டிப் போட்டுவிட்டது.மதுரையச் சுற்றியுள்ள கிராமங்களில் எல்லோரும் முதுகு சொரிவதற்குக்கூட அருவாளைத்தான் பயன்படுத்துவது போலொரு பிம்பம் உருவாக்கப்பட்டுவிட்டது. காரணம் ஒரு படம் ஒரே படம் வெற்றியடைந்து வசூலில் சாதனை பண்ணிவிட்டால் அப்புறம் அந்த நடிகர், அந்தக் கதையின் சாயலில் கதைகள், அந்தப்படத்தின் பாடலைப் போலே பாடல்கள்  போதும் போதும் எனச்சொல்லும் அளவுக்கு கொண்டுபோய்விடும் நமது சினிமா. ஒரு காலத்தில் கள்ளிப்பால் கொடுத்து குழந்தைகளைக் கொன்ற பூமியும் அதுவாகத்தான் வெளி உலகுக்குச் சொல்லப்பட்டது.கோதுமைக்கலரில் இருக்கும் தமன்னா ' நான் ..... ஊர்க்காரி வெட்டிருவன்' என்று சொல்லுவதாக காதல்கொண்டேன் படத்தில் வசனம் வரும்.இப்படியே உருமாக்கட்டி இழுத்துக்கிட்டுப்போய் இப்பொ அந்த ஒன்னுக்குமத்த விளம்பரத் தொடரிலும் மதுரைப்பேய் பிடித்து ஆடத்துவங்கிவிட்டது.

சாத்தூர் மதுரையிலிருந்து எழுபது கிலோமீட்டர் தான் இருக்கும். மதுரை மாவட்டம் விருதுநகர் தாண்டியதுமே துவங்கிவிடும். அந்த எல்லையிலிருந்து நிலம், மண், மனிதர்கள் எல்லாம் வித்தியாசமாகி தரையிலிருந்து அருவா முளைத்துக் கிடக்கவில்லை என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.அங்கும் கூட நெல்,வாழை,கரும்பு கம்பு,சோளம்,கேழ்வரகுதான் நிலத்தில் விளைகிறது. ஒரு கொலை என்பது மிகுந்த பெருமைக்குரிய விஷயமில்லை. அது சம்பந்தப்பட்ட இருண்டு குடும்பங்களையும் சின்னா பின்னப்படுத்திவிடும். என்சிசி சீருடையில் உள்ளூர் மாணவர்கள் வந்தால்கூட வீட்டை,காட்டை,பெண்டுபிள்ளைகளை மறந்து தலைதெறிக்க ஓட நேர்வதை நான் பல நேரங்களில் பார்த்திருக்கிறேன்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தைவிட கொலைசெய்த குடும்பத்தில் மிஞ்சியிருக்கிற பெண்களைப் பற்றி இன்னும் முழுமையாக எந்த இலக்கியமும் பேசவில்லை. அவர்களுக்கான இரவுகள் பெருமைகளால் அலங்கரிக்கப்பட்டதில்லை.கட்டிய மனைவியிடம் சிரித்துப்பேசியவனை வெட்டிவிட்டு ஜெயிலுக்குப்போனவனின் மனைவிதான் மிச்ச நாட்களில் அந்த ஊரின் கேலிப்பொருளாவாள் என்பதை யாரும் அவதானிப்பதில்லை.
மானுடவியல் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ஆ.இரா.வெங்கடாசலபதி இதையே ஒரு நூலுக்கான விமர்சனத்தின் பேசுபொருளாக காலச்சுவடு இதழில் முன்வைத்திருக்கிறார். சமீபத்தில் பருத்திவீரன் படத்தின் இயக்குனர் சகோதரர் சீமான் 'மதுரை அருவாள்களால் அறியப்படுகிறது அது பல்வேறு பகுதி மக்களின் கூட்டு வாழ்விடம்' என்பதை தனது பேட்டியில் அறியத்தருகிறார்.

ஐந்து வகை நிலங்களும் ஐம்பதுக்கும் மேற்பட்ட வட்டார வழக்குகளும் கலந்துகிடக்கிற தமிழகத்தில் எல்லா மண்ணுக்கும் தனித்தனிக்கதை உண்டு. எதுவும் பெரிதில்லை எதுவும் சிறியதும் இல்லை. இசுலாமியத்தமிழ்,கன்னடத்தமிழ்,தெலுங்குத்தமிழ்,சௌராஷ்ட்டிராத்தமிழ்,மலையாளத்தமிழ் எனும் மொழிக்கலப்பும் இங்கே கெட்டிப்படுத்தப் பட்டிருக்கிறது.சமீபத்தில் ஆராய்ச்சி செய்த பேராசிரியர் ஒருவர் சுமார் ஐம்பதுகிலோ மீட்டர் எல்லைப்பரப்புள்ள இருக்கன்குடிப் பகுதி ஒரு நாடாக இருந்ததென்று சொல்லுகிறார். இருஞ்சோ நாடாம் அதன் பெயர். புராண கதைகளில் ஐம்பத்தாறு தேசம் என்று பாடல் வரும். அப்போது ஒட்டுமொத்த உலகத்தைத்தான் அப்படிச்சொல்லுகிறார்கள் என்று நினைத்தேன். இந்தியாவின் ஒரு சில பகுதிகளில்  இருந்த நாடுகளாம் அவை. ஒவ்வொரு தெருவும் கூட ஒரு நாடாகி இருந்த கல்தோன்றாக்காலத்து வெட்டிப்பெருமைகள் பல இருக்கிறது.அப்படி வழக்கொழிந்துபோன கல்லாயுதங்களை மீண்டும் தோண்டியெடுத்து மக்களுக்கு
கையில்கொடுத்து கணினி யுகத்தின் முதுகில் ஏற்றவேண்டாம் சினிமா அன்பர்களே.

15 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல பதிவு தோழர், அவசியமானதும் கூட.....கூடல் நகரின் அழகுகளை விட மற்றவைதான் அதிகம் காட்டப் படுகின்றன......

வாழ்த்துக்கள்....

veligalukkuappaal said...

dear kamaraj,
from the age of 7 and till 1982, i 'lived' my life in madurai. just you go, you can enjoy 'ilangai oliparappu koottuthaabanaththin' abdulhameedhu, rajeswari shanmugam, mayilvaagan sarvaanandha, k.s.raajaa...., malligaipoo, barottaa kurumaa,regal theatre, american college music troop, baan singh guitar, naathasuram, mElam...en nenjil kudiyEriya madurai. Highly nostalgic.....kaamaraj...... What you are trying to focus, i understand. But the fact is that even in English magazines of delhi, bombay etc., they are identifying madurai with Daada Alagiri! What to say?! Especially after dinakaran office attack and thirumangalam byeelection, madurai was made more famous not bcos of the above nostalgic matters but Daada alagiri!
But i appreciate your insight and light on the women folklore of the daadas and killers. Just i could recall the scene in 'Thambi' when Mathavan directly goes to the house of villain to have a direct venture with him but to his utter shock, there awaits a loving welcome by the wife,child and father of the villain...
a typical family atmosphere which nobody would like to venture and disturb! A dumb Mathavan would just return back...
One correction: Paruththiveeran directed by Ameer (not Seemaan).
iqbal

Balakumar Vijayaraman said...

மதுரையில் உண்மையான மணத்தை காட்டியுள்ளீர்கள்.

நன்றி, வாழ்த்துக்கள் காமராஜ் !

லெமூரியன்... said...

அண்ணா.....!
என்னன்னா இது......இவ்வளவு கால இடைவெளி எடுத்துட்டீங்க???
பதிவு அருமை அண்ணா.......!
வேலராம மூர்த்தியின் விளாத்திகுளம், பெருநாழி பற்றிய கதையை
இவர்கள் அறிந்திருக்க மாட்டார்களோ என்னவோ........

இதே திரைப் படங்கள்தாம் முன்பு திருநெல்வேலியை மைய்யப் படுத்தி
இதே கதைகளை காட்டி கல்லா கட்டி கொண்டிருந்தன...!

காமராஜ் said...

வாங்க ஆரூரான் வணக்கம். நலமா.
ஒரே போராட்டம் ஒரு வீம்புபிடித்த நிர்வாகத்தை எதிர்த்து ஒட்டுமொத்த சக்தியை விரயம் செய்கிறோம்.
கருத்துக்கும் ஆறுதலுக்கும் நன்றி.

காமராஜ் said...

நன்றி இக்பால்.உங்களின் அட்டவணை என்பதுகளின் 'land marks'.எல்லோர் வீடுகளும் கதவுகளால் தான் பூட்டப்பட்டிருக்கிறது.அருவாள்களால் இல்லை. அப்படியே இருந்தாலும் வட்டிலில்தான் சாப்பிடவேண்டும்.படுக்கையிதான் படுக்கவேண்டும்.நானும் கிராமத்தான் தான்.ஊருக்கு ஒன்னுரெண்டு ரவுடி உல்கமெங்கும் இருப்பார்கள்.அது வீரம் இல்லை.
இப்படி வீரம் கொப்பளிப்பதாக காட்டும் பூமியில் இருந்து ஒரு ஒரே ஒரு விடுதலைக்குரல்கூட இல்லை என்பது
எதைக்காட்டுகிறது.லீலாவதியைப் படுகொலை செய்த நகரம் தான்.ஆனாலும் அது போல கதைகள்
ஊர் ஊருக்கு இருக்கிறது. ஆமாம் பருத்திவீரன் அமீர் தான் சொன்னது. இது எழுதி வைத்து பதிவிடமுடியாத மனநிலையில் நெடுநாள் காத்திருந்தது.திருத்தாமல் பதிவிட்டுவிட்டேன் மீண்டும் நன்றி.

காமராஜ் said...

வணக்கம் பாலகுமார். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

காமராஜ் said...

அன்புத் தம்பி ரமேஷ் வணக்கம். இங்கே நிர்வாகத்தோடு மல்லுக்கட்டு.
இரண்டு மாதங்களாக பெரும் போராட்டம், பழிவாங்கல் எனத்தொடர்கிறது.
வலையைப்பார்க்கக்கூட நேரம் இல்லை.நலமா ?

ராகவன் said...

அன்பு காமராஜ்,

நலமா? உங்கள் போராட்டங்கள் மேலும் ஸ்திரமாய், நலமாய் இருக்கும் என்று நம்புகிறேன். எல்லா வகையிலும் நல்லவை நடக்கும் என்று தீர்க்கமாக நம்புகிறேன்!

அட! மதுரை! என்று படிக்க ஆரம்பித்தேன். சுவாரசியமாக இருந்தது. வட்டார இலக்கியங்கள் போல வட்டார சினிமா அவ்வளவே! சினிமா சென்னையில் வடசென்னையும் நாறுகிறது இரத்த கவிச்சியுடன். நமக்கு வன்முறை பிடிக்கிறது காமராஜ்! சிலந்தி பூச்சியை தின்பது, புலி மானை விரட்டுவது கடைவாய் எங்கும் ரத்தம் ஒழுகுவதை டிஸ்கவரியில் பார்க்கும் ஒரு மென்மையாளர்கள் கூட்டம் அந்தரங்க வன்முறையுடன் தான் இருக்கிறார்கள். அதீதம் எல்லா படங்களிலும் இருக்கிறது.

அன்புக்கு நன்றிகள் பல! குயில் தோப்பு எப்படி இருக்கிறது? வீட்டில் எல்லோரும் நலமா? உங்களுக்கு துனையாய் புரிந்து கொள்ளும் உறவுகள் மிகப்பெரிய பலம்.
உங்கள் அன்புக்கு ஆயிரம் நன்றிகள்!

அன்புடன்
ராகவன்

பா.ராஜாராம் said...

எப்படி இருக்கிறீர்கள் காமராஜ்?மாது நலமா?

என்னவோ சொல்ல இயலாத குறை. அந்தர வெளிகளில் பெரும் வறட்சி.உதடுகளை ஈர படுத்திக்கொண்டு நடையை எட்டி போட்டு கொண்டு இருப்பது போல் இருக்கிறது. ,நீங்களும் மாதுவும் இல்லாதது.

வாழ்வாதாரமான போராட்டங்கள் மலைக்க வைக்கிறது.இதுவும் கூட இல்லாவிட்டால் வாழ்வு சுவாரஸ்யமில்லைதான்.நல்ல படியாய் ஜெயிச்சு வாங்க மக்கா.

எனக்கும் கூட கணினி முன் "அமுக்கி" அமர முடியாத ஓட்டமாக இருக்கிறது.கிடைக்கிற நேரங்களில் தம்பிக்கும்,நண்பருக்கும் மெயிலில் பதிவுகளை அனுப்பிவிட்டு ஓடவும் நடக்கவுமாக இருக்கிறேன்.ஒரு கொமரு கல்யாணத்துக்கு நிற்காவிட்டால் உதறி சாலை பிடித்து விடலாம்.ஆட்டுபுளுக்கை காற்றை குடித்தபடி..

என்னவோ வரட்டும் வாங்கள்..

இன்று உங்கள் பின்னூட்டம் பார்த்ததும் கண் கலங்கிவிட்டது.பொலம்பனும் போல் தேவையாக இருந்தது.இறக்கி வைத்தாயிற்று.

இந்த கட்டுரை வாசித்து விட்டேன்.முந்தைய சிறுகதை பாக்கி.அடுத்த நேர வாய்ப்பில் வாசிக்க வேணும்.வீட்டு மனுஷர்களை பார்ப்பது போல்,கேட்பது போலானான என் தேவைகளே உங்கள்,மாது,ராகவன், தளம் வருவது.

சீக்கிரம் வர்றேன்.குரலுக்கு நன்றி மக்கா!

மாதுக்கு என் அன்பை தாருங்கள்.

கமலேஷ் said...

முற்றிலும் புதிய பார்வைகளை பதிவு செய்து இருக்கிறீர்கள் உங்களின் வலைத்தளத்தில்..
எல்லா வரிகளும் மனதோடும், வாழ்க்கையோடும் நெருங்கி பேசுகிறது...
இத்தனை நாட்களாக உங்களின் வலைதளத்தை அறிமுகம் கிடைக்காமல் போனதை நினைத்து மருங்குகிறது மனது...
உங்களின் எழுத்து பயணம் தொடர என் வாழ்த்துக்கள்...

காமராஜ் said...

அன்பின் ராகவன் வணக்கம். 1988 க்குப்பிறகு ஏற்பட்ட அசாதாரணச் சூழல் இது.புரிதலற்ற மனிதர்களோடு ஒரே இருக்கையில் பயணிக்கிற நிலைமை இப்போது. எதிராளிக்கு செமிக்கவில்லையென்றால் கூட அது எங்களால் வந்தது என கோபம் கொள்ளும் மனிதர்கள். எல்லாவற்றையும் கடந்து வருவோம்.பெங்களூரு எப்படியிருக்கிறது.அன்பும் வணக்கமும்.

காமராஜ் said...

வாருங்கள் பாரா.ரொம்ப ஆசுவாசமாக இருக்கிறது மீண்டும் வலையினூடே உங்களோடு பேசுவது.நல்ல மனசு இருக்கு உங்களிடம் உலகமே உங்கள் பக்கம் நிற்கும் பாரா.

காமராஜ் said...

வணக்கம் கமலேஷ்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சுந்தரா said...

இடைவெளிக்குப்பின் உங்கள் பதிவை மறுபடியும் பார்த்ததில் மகிழ்ச்சி அண்ணா.

எத்தனையோ பெருமை வாய்ந்த ஊர்களெல்லாம் ஒரு சில மனிதர்களால் மோசமாக அடையாளம் காணப்படுவது வருத்தமான விஷயம்தான்.