17.9.11

நிறுவணங்கள் எந்திரத்தாலானது. (அக்கம்பக்கம் பராக்குப்பார்த்தல்)


ஒரு ஐந்து நாட்கள் மறைமலை நகரில் நடந்த பயிற்சிவகுப்பில் கலந்துகொள்ள நேந்தது. பசுமையான சூழலும்,ஒழுங்குபடுத்தப்பட்ட பராமரிப்பும் அதிக இறைச்சல் இல்லாத அமைதியும் அது அலுவலர்களுக்கானதென்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது. புதிய புதிய மனிதர்கள் புதிய புதிய புரிதல்கள் அதிலேற்படும் நெருக்கம் நட்பு என இன்னொரு கதவு திறந்துவிடப்பட்டிருந்தது. இதுவரை ஏற்றி வைத்திருந்த பாரத்தை இறக்காமல் பயணிக்க சிரமாமமாக இருந்தாலும் தொடர்கிறது பயணம்.

பிஜய்குமார் ஸ்வைன் என்கிற பயிற்சியாளர் மூன்று நாட்கள் எங்களோடு இருந்தார் அறுபது வயதை நெருங்கும் அந்த ஒரியாக்கார மனிதர் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பட்டம் படித்து பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி இடையில் இன்னொரு கம்பெனிக் குத்தாவி இப்போது national institute of rural development பயிற்சி நிறுவணத்தின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கிறார். ஒரியாவும் ஆங்கிலமும் கலந்த அவரது வார்த்தைகளில் ஒரு மிதமிஞ்சிய வேகம் இருக்கும். மிகக்கராறான நேரம் தவறாமையும், சின்னசின்ன ஒழுங்கீனங்களின் மேல் அவர் வைத்திருக்கிற துவேசமும் வியப்பானதாக இருக்கிறது.

நாட்டில் பெருகிவரும் பட்டினி வயிறுகளைக் கண்டு கொள்ளாமல் நாம் நமது   செலுத்துவோமானால் நமது சோறு பறித்துக்கொள்ளப் படும் என்று சொல்லுகிறார்.ஒரே நாள் இரண்டுவேளை சாப்பிட முடியாமல் போனால் கண் சொருகுகிறது நடை சோர்வடைகிறது, நாவரட்சியாகிறது ஆனால் பதின்மூன்று நாட்கள் பட்டினியாய்க் கிடந்த மனிதர் ஒருவர் எழுந்து கையை சுறுசுறுப்பாய் ஆட்டிக் கொண்டு பொது மக்களுக்கு போஸ் கொடுப்பது எப்படி என்கிற எள்ளல் இருக்கிறது அவரிடம். ஆனால் அதே வேளையில் இருக்கிற அத்துணை பொதுத்துறை நிறுவணங்களின் மீதும் துவேசம் வைத்திருக்கிறார்.

லாபம் ஈட்டாத நிலைமைகளுக்கு பணியாளர்கள் மட்டுமே காரணம் என்கிற ஆணித்தரமான கருத்தும் இருக்கிறது. முன்னதை மனிதாபி மானத்தோடு சேர்ந்த அறிவென்றும் பின்னதை தொழில் பக்தி என்றும் நாம் எடுத்துக்கொள்ளலாம். மாலை நேரங்களில் அப்படியே காலாற நடந்து நால்வழிசாலைக்குப் போனால்  நோக்கியா நிறுவணத்தின்  மிகநெடிய தனிச் சாலையும் பார்த்தவுடன் பயம் பிடித்து ஆட்டுகிற தொழிற்சாலையும் தூரத்தில் தெரிகிறது.அங்கிருந்து வெளியே வரும் இளம் யுவதிகளின் கழுத்தில் தொங்குகிற அடையாள அட்டையும் அவர்கள் கண்களில் தங்கி  இருக்கிற சோர்வும் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. வேலை முடித்துவருகிற களைப்பும் திருப்தியுமில்லை அது. உழைக்கிற போது வெளியேறுகிற வியர்வைமேல் வெளிக் காற்று பட்டவுடன் ஒரு பரவசம் வருமே? அதுவும் இல்லை. பிஜய்குமார் ஸ்வைனைப்போல ஒரு கடைந்தெடுத்த பயிற்சியாளனிடம் மேலாண்மை பயின்ற ஒரு மேலாளரின் மனித உழைப்பைப் பிழிந்தெடுக்கிற தந்திரத்தில் சிக்கிக்கொண்ட ஒரு பெண்ணின் சாயல் அது.

அப்புறம் நண்பரோடு மறைமலை நகரில் மதுபாணம் வாங்க டாஸ்மாக் கடைக்குப்போனோம்.  திரையரங்குகளில் நுழைவுச் சீட்டுக் கொடுக்கிற இடம் போல விற்பனையாளருக்கும் வாங்குபவருக்குமிடையில் ஒரு சிறு துளை மட்டுமே இருக்கிறது. முற்றிலும் கம்பி அழி பாய்ச்சப்பட்ட முகப்பில் தொங்கிக்கொண்டு, கூட்டம் அலைமோதுகிறது ஒரு கால் புட்டி மதுவாங்க. எறி திராவகத்தைத் தொண்டை வழி இறக்கி ரத்த நாளங்கள் வழியே சிறுமூளையை தள்ளாட வைக்கிற கிறக்கம் தேவையிருக்கிற மனிதர்கள் லட்சம் லட்சமாய்ப் பெருகிக் கொண்டிருக்கிறார்கள். கூட்டம் கூடுகிற எல்லா இடங்களையும் கட்டுப்படுத்த ஒரு குறுகலான வழி இருக்கிறது.

விருதுநகரைக் கடந்து வரும்பொழுது தமுஎசவின் மாநிலமாநாட்டு பதாகைகள் சுவரெழுத்துக்கள் கண்ணில் தோன்றி பெரும் சலனத்தை உண்டு பண்ணுகிறது. சொந்த சித்தப்பா வீட்டுக்கல்யாணம் ஊரில் நடக்க பங்கேற்கமுடியாத நானும் என் அம்மாவும் எதையெதையோ பேசிக்கொண்டு சாத்தூர் போன நாட்களின் நெருஞ்சி நினைவுகள் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருக்கிறது.  தமுஎச மாநில மாநாடு குறித்து நடக்கிற சம்பாஷனைகளில் இருந்து விலகி ஒளிந்து கொள்ளவேண்டிய ஒதுக்க நிர்ப்பந்தம் இருக்கிறது. முதல் கலை இலக்கிய இரவுக்காக சாத்தூரின் மூலை முடுக்கெல்லாம் அலைந்து திறவாத கதவையெல்லாம் திறந்து சேமித்த உண்டியலின் சலசலப்பு நிழலாடுகிறது.

தீக்கதிர் செய்தியை வாசித்து தலைதூக்குகிற மனைவியின் கண்களை சந்திக்கமுடியாமல் பின்வாசலுக்கு  போக வேண்டியிருக்கிறது. திரும்பிவரும்போது அவள் கேட்கிற கேள்விக்கு ஒன்றுமில்லை எனச்சொல்லவேண்டியிருக்கிறது. வழிநெடுக சிந்திக்கிடக்கும் இந்த ஒன்றுமில்லை என்கிற வார்த்தைகள் துகள்களாகி வழி நடந்த பாதை மண்ணெங்கும் உரமேறிக் கிடக்கிறது.

1 comment:

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

பிஜய்குமார் ஸ்வைன் அவர்களின் ஆதங்கமும் ஆலோசனையும் உண்மையில் ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டிய ஒன்றுதான் . எங்களுடனும் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி .

திருவிழா நாட்களில் கூடாத கூட்டம் இந்த மதுபானக் கடைகளில் கூடிக் கிடக்கிறது என்பது மனதை ஒரு புறம் கத்தியால் காயம் செய்யும் வேதனையான ஒன்று .