25.9.11

வாணியின் பாடலைக் காதலித்தவன்


காலையில் வசந்த் தொலைக் காட்சியில் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது. அந்தப்பாடல்கேட்டதும் வெளியே பல்துலக்கிக் கொண்டிருந்தவன்  திடுதிடு வென உள்ளே ஓடிவந்தால்.வீட்டுக்காரி என்ன சொல்லுவாள். நெனப்பு வந்துருச்  சாக்கும். என்னமும் சொல்லிவிட்டுப்போகட்டும். இந்தப்பாட்டைக் கேட்கிறபோதெல்லாம் என்னிலிருந்து விலகி மிதந்து அமிழ்ந்து உள்ளே போய்விடுவேன்.

நீண்ட வெயில் சைக்கிள் பயணத்தில் திடீரென மேகம் கவிழ்ந்துகொண்டு நிழல் கூடவரும் சுகம் அலாதியானது. அப்படித்தான் எங்கிருந்தாவது இழைந்தோடும் வானிஜெயராமின் திரைப்பாடல்.எனது பதினான்மூன்றாவது வயதில் நான் காதலித்த பலவற்றில் அந்தக்குரலும் ஒன்று. எவளோ ஒருத்தியி டமிரு ந்தெனக்கொரு காதல் கடிதம் கிடைத்தது போல இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திலிருந்து எனக்கென இசைக்கப்பட்டது போல வாணி ஜெயராமின் குரல் வரும். மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா என்கிற பாடல் என்னைக் கிறக்கியபோது மல்லிகை பற்றியும் நானறியேன். மன்னனெப்படி மயங்குவானென்பதையும் நானறியேன்.அதற்கு வாயசைக்கும் கே ஆர்.விஜயாவுக்கு  என்  அம்மா வயசிருக்கும். பாடிய வாணிஜெயரமைப் பார்த்ததில்லை. எனவே எனது கனவும் கற்பனையும் கலந்து அந்தக் குரலுக்கொரு உருவம் கொடுத்திருந்தேன்.அந்த ஓவியம், ஆம் அந்த ஓவியம் இன்னும் அலுங்காமல் குலுங்காமல் அப்படியே இருக்கிறது என்னிடம்.

அப்புறம் இன்ரீகோ இசைத்தட்டுக்களின் உறையில் பாடகர்களை பதிவு செய்யும் வழக்கம் வந்தது.அப்போது ஒத்தையால் ஜானகிராம் சவுண்டு சர்வீசின் கண்ணன்ணனை நான் பழகிவைத்திருந்தேன். எங்கள் ஊரில் கல்யாணம் சடங்கு பொங்கல் கிறிஸ்துமஸ் வரும் போதெல்லாம் நான் அவரோடுதான் இருப்பேன்.ஒரு இசைத்தட்டு சுழன்றுமுடிக்கிற தருவாயில் அடுத்த இசைத்தட்டை எடுத்து ஒரு துணியால் துடைத்துக் கொடுக்கிற இசைச்சேவை செய்வேன்.அப்போதெல்லாம் ஊர் என் தெரிவுகளையே இசைத் தெரிவாக ஏற்றுக்கொள்ளும்.எவனாவது எம்ஜியார் சிவாஜி என்று வம்பி ழுத்தால் அவனுக்கிருக்கும் அன்றைய இரவில் கொடமானம்.சிவாஜியும் எம்ஜியாரும் கொடிகட்டப் போட்டிபோட்டுப் பறந்த காலமது.அப்போது, அவர்களுக்கு இணையான புகழுடன் இருந்த டி எம் எஸ் சுசீலாம்மாதான் அவர்களுக்கு பாடவேண்டும் என்கிற ஒரு மேட்டிமைத்தனம் இருந்தது. அப்போதெல்லாம் வாணியம்மா சிவகுமார், ஜெய்சங்கர், முத்துராமன், கமலஹாசன் போன்ற சில்லண்டி நடிகர்களின் ஜோடிகளுக்குத்தான் குரல்கொடுத்துக் கொண்டிருந்தார்.அந்தக் குரல்தான் எனக்கு கனவுக் கன்னியாக இருந்தது.

அந்தகுரலுக்கு நான் வரைந்த ஓவியத்தைப்போல யாரும் தென்படவில்லை.அதன் அருகில் வந்தவளை சின்னமணி உயிருக்கு உயிராக காதலித்துக் கொண்டிருந்தான்.சின்னமணி என் நண்பணாக இருந்ததால் நான் அந்தக்காதலுக்கு தூதும் போனேன். நான் காதலித்ததாக நினைத்துக் கொண்டிருந்த  கலைச்செல்வியை என் நன்பணும் அண்ணனுமான அன்பரசன் நிஜமாகவே காதலித்தான் என்பதை அறிந்து தோற்றுப்போன காலமது. அந்த தோல்விகளை சரிக்கட்டும் விதமாக மர்பிரேடியோ பாடும் எல்லா இடங் களுக்கும் போவேன் எப்படியும் ஒன்றிரண்டு வாணியம்மாவின் பாடலை கே எஸ் ராஜா கொழும்பிலிருந்து சுழல விட நான் நடுச்சூரங்குடியிலிருந்து அதை வாங்கிக் கொள்வேன். உலகம் எல்லாம் காதலித்துக்கொண்டிருக்கும் போது நான் தனித்து விடப்பட்டதைப் போலொரு கழிவிறக்கம் வரும். அதனாலே உலகமெல்லாம் சுசீலாவையும் டி எம் எஸ்சையும் விரும்பிக் கேட்டுக் கொண்டிருந்த அந்த காலத்தில் ஒதுங்கி வாணிஜெயராமின் பாடல்கள் போதுமென ஒதுங்கிக்கொண்டேன்.

அப்போது இளையராஜா மெல்ல மெல்ல தமிழ் திரையிசைத்தளத்தில் தன்னை நிறுவிக்கொண்டிருந்தார். என்னடா சினிமாப்பாட்டு ஒரே ’ரண்டணக்காவா’ இருக்கு என்கிற விமர்சனங்கள் சொல்லுவது பேசனாக இருந்தது.அப்படியான விமர்சகர்களுக்கு சாஸ்திரிய இசைபற்றியும் தெரியாது திரை இசை பற்றியும் தெரியாது.ஆனால்  அவர்கள் எப்படியோ சிரமப்பட்டு இளையராஜாவின் ஜாதியைப் பற்றித் தெரிந்துகொண்டார்கள். அந்த தகுதியே அவரை விமர்சனம் செய்ய போதுமானதென்று கருதியகாலம் அது. அன்னக்கிளியின் மச்சானப்பாத்தீங்களா பட்டிதொட்டிகளின் விருப்பகீதமாக மாறிப்போன மாற்றத்தைச்ச்கைக்கமுடியாத இந்த விமர்சனம் வரும் முன்னதாகவே அவர் சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் தஞ்சாவூரு நாந்தாவி வந்த என்கிற பாடலில் தனது திறமையைச்சொன்னவர். ஆனாலும் பாருங்கள் அந்த அன்னகிளி படத்தில் சுசீலாம்மா ஜானகியம்மா,சுசீலாம்மா பாடியபாடல்கள் அனுபவித்துப்பாடினமாதிரி இருக்கும் டிஎம் எஸ் பாடியது மட்டும் ஊரா பிள்ளைக்கு கால்கழுவி விட்ட மாதிரி இருக்கும். இருந்துவிட்டுப்போகட்டும் அது இசையரசியல்.

அப்போதெல்லாம் தமிழ்ச்சனம் தங்கள் சுகதுக்கங்களை சினிமாவோடும் சினிமா இசையோடும் குழைத்துக்கொண்டு வாழ்ந்தார்கள். தெரு ஊர்,ஜாதி,மதம்,கோவில்,கல்யாணம்,அவன் இவர் எனப்பிரிந்து கிடக்கிற அவர்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் குவிய வைக்கிற மகத்தான பணியைச்செய்தது சினிமா.அதற்குப் பிரதியுபகாரமாக நகுமோகு இசைத்து சில துதிப்பாடல்களோடு தங்கள் சுபகாரியங்களைத் துவங்கினார்கள். மணமகளே மணமகளே வா வா என்று இசைத்தட்டு முழங்காத கல்யாணம் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்யாணம் இல்லையென ஆகிப்போனது. அப்போது களையெடுக்கும் பெண்கள் ஆஆங் ஸ்ரீரெங்கபுரத்து சன்னாசி மகன் அழகாபுரிக்காரிக்கு தாலிகட்டிட்டாண்டி என்று கணித்துக்கொள்வார்கள்.

இப்படிப் பாடலோடும், இன்னும் சில பாடல்களோடும் தனக்கும் கல்யாணம் விடியும் எனக் கனவுகண்ட சின்னமணியின் காதல் குடும்பச் சண்டையில் முடிந்தது. கிழக்கே போகும் ரயில் சுதாகரைப்போல அவன் ஊரைவிட்டுப் போய்விட்டான்.ஆதலால் அவளுக்கும் வாணியம்மாவின் பாடல்கள் பிடித்துப் போயிருந்தது. எனக்குகிக்கிடைத்த அந்த ஏகாந்தத்தைப்பறித்துக் கொள்ள வந்தவள் போல வந்தாள். ஒருவருக்கொருவர்  சோகங்களைப் பகிர்ந்து கொள்கிற பாவனையில் ரசனைகளை,விருப்பங்களை பேசிப் பகிர்ந்து கொண்டோம். சீனிக் கிழங்கவித்து சொலகில்வைத்து பனியில் நனைய விட்டுக் காலையில் எடுத்துத் திண்ண நான் பேயாய் அலைவேன் என்பதை தெரிந்து கொண்டாள். அதைப் போலவே செய்து கொண்டுவந்து தரும்போது அதில் அடிப்பிடித்த கிழங்கை தனக்கென ஒதுக்கிக்கொண்டாள். அது இன்னமும் வாசமாக இருக்கும் என்பதை இருவரும் பகிர்ந்துகொண்டோம்.

ஒருவருடம் கழித்து ஒரு வெயிநாளில் பூவரசம்பூக்கள் பூக்க வந்த சின்னமணி அவளிடமும் பேசவில்லை என்னிடமும் பேசவில்லை. அவன் ஊராரிடம் அதிகம் பேசியிருந்தான். ஊர் எங்களைப்பற்றிப் பேசியிருந்தது அப்போதுதான் தெரிய வந்தது. அப்போது ஒரு சின்ன விலகல் இருந்தது வேண்டாம் இந்த வீண் பழி என இருவரும் ஒதுங்கிப்போயிருந்தோம். ஒருமாத இடைவெளி தான் பௌதிக மாற்றங்களொடு மிக நெருக்கமானது. இரண்டுநாள் சோர்வாய் இருந்தவளிடம் துளசிபிடுங்கிக்கொடுத்தேன்.மறுப்பின்றி வாங்கிக்கொண்டாள் அந்த துளசி வாடிப்போய் மறுநாள் குப்பையில் கிடந்தது கண்டு சோர்ந்து போனேன்.சொன்னேன். காரணம் சொன்னபோது நான் நாக்கைக் கடித்துக் கொண்டேன். இது கூடத்தெரியாத மக்கு என என்தலையில் ஒரு கொட்டுக் கொட்டினாள். அந்த செல்லக் குட்டுக்கு பதிலாக நான் ஏப்ரல் ஒண்ணாம் தேதி ஒரு வெற்று இன்லாண்ட் லட்டரை அவளுக்கு அனுப்பியிருந்தேன். ஊர் அதை நான் அவளுக்கு எழுதிய காதல் கடிதம் என திரித்து எழுதியது.  இல்லை இல்லை எனச்சொல்லிக்கொண்டே எதோ புள்ளியில் திரித்து எழுதியது நிஜமாவே மாறியது.

அப்புறமான எனது பொழுதுகளை நகர்த்தும் கடிகார முட்கள் அவளைச்சுற்றியே வட்டமடித்தது. நாங்கள் வாணியம்மாவின் எல்லாப் பாடலிலும் துள்ளல் இசையோடு காலம் கடத்தினோம். அந்த வருடம் ஸ்ரீதரின் இயக்கத்தில் வந்த அந்தப்படத்தில் கிட்டத்தட்ட எல்லாப் பாடல்களும் வாணியம்மாவே பாடியிருந்தார். ஒரு முன் நிலவுநாளில் கனிநாடாரின் சோளப்பிஞ்சைக்குள் சந்தித்துக் கொண்ட நாங்கள் எதையெதையோ பேசி னோம்.  மூச்சுக்காற்றும்,மனசும்,உடம்பும் வெப்பத்தோடு கனன்று கொண்டிருக்க  நாங்கள் நல்லவர்களாக நடித்துக்கொண்டிருந்தோம். அம்மா தேடும் என்று எழுந்தவளின் கையைப் பிடித்தேன் இரண்டு கையும் வெப்ப மாகவே இருந்தது.  உதறிவிட்டு ஓடியவளிடம் மறுநாள் நேருக்கு நேர் முழிக்க முடியவில்லை. ரெண்டுபேரும் கையில் கிடைத்ததை தவறவிட்ட ஏக்கத்தில் இருந்தோம்.அதன் பிறகு அப்படியொரு நிலவு திரும்பவரவேஇல்லை. சித்திரை வெயில்தான் வந்தது. அம்மாவிடம் சண்டைபிடித்துக்கொண்டு ஊருக்கு மேற்கே இருக்கும் காந்திநாயக்கர் தோட்டத்து பம்புசெட்டு தாவரத்தில் படுத்துக்கிடந்தேன்.

திடீரென மழைபெய்தது போலக் கனவுகண்டு விழித்தேன் ஈரத் தலையிலிருந்து சொட்டும் நீரை முகத்தில் விசிரியபடி அவள் சிரித்திருந்தாள். அந்த வெயில் நாளிலிருந்து மூன்றாம் நாள் எஸ்ஜிஜே பேருந்தில் ஸ்ரீவில்லிப்புத்தூருக்குப் போனேன். மல்லியை நெருங்கியதும் சிலுசிலுவெனக் காற்றடித்தது. கோடை மழை. மல்லியிலிருந்து கிளம்பும்போது கிடைத்த ஜன்னலோர இருக்கை. மழை நின்ற மண்வாசனை.முகத்தில் அடிக்கும் காற்று அவள் நினவு இப்போது என் கல்யாண வைபோகம் உன்னோடுதான் என்கிற வாணியம்மாவின் பாடல்.

 இப்போது சொல்லுங்கள் கேட்கிற நேரம் எல்லாம் கிறங்கவைப்பதற்கு இந்தக் காரணங்கள் போதாதா?

என்ன அவள் பெயரையே சொல்லவில்லையா ? நான் யாரென்று சொல்லவில்லையா ?.

நினைவுகளில் மிதக்கிற எல்லோருடைய பெயரும் என் பெயர். அலைக்கழிக்கிற எல்லாப்பெயரும் அவள்பெயர்.

7 comments:

காமராஜ் said...

////

vijayan said...

மல்லிகை முல்லை மலர்பந்தல்,மரகத மாணிக்க பொன் ஊஞ்சல் ,எல்லாம் எதற்காக நமக்கு கல்யாணம் அதற்காக என்ற வாணியின் பாடலை என்னால் நாற்பது வருடங்களுக்கு பிறகும் அலுக்காமல் கேட்டு ரசிக்கமுடிகிறது.

ஓலை said...

Arumaiyaana vivarippu. Nice.

அன்புடன் அருணா said...

/நினைவுகளில் மிதக்கிற எல்லோருடைய பெயரும் என் பெயர். அலைக்கழிக்கிற எல்லாப்பெயரும் அவள்பெயர்./
இது ரொம்ப நல்லாருக்கு!

Mahi_Granny said...

ஆஹா அற்புதமாய் இருக்கு. இந்த தமிழும் கூடுதல் சுவை கூட்டுகிறது . நேற்றைய ' எதார்த்த பதார்த்தம்' இன்றைய' இந்தப்பாட்டைக் கேட்கிறபோதெல்லாம் என்னிலிருந்து விலகி மிதந்து அமிழ்ந்து உள்ளே போய்விடுவேன்' ஆகியவை சின்ன உதாரணங்கள் .

Mahi_Granny said...

let me know the meaning of ur comments pl.

Kannan said...

"நினைவுகளில் மிதக்கிற எல்லோருடைய பெயரும் என் பெயர். அலைக்கழிக்கிற எல்லாப்பெயரும் அவள்பெயர்."

நல்ல தத்துவம்.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com