30.10.11

ஜன்னலும், கண்களும் சேர்த்துப்பிடித்த படங்கள்.


பேருந்துகளின் ஜன்னலோர இருக்கை வெறும் காற்றையும், கடந்துபோகும் இயற்கையையும் காண்பித்துச் செல்லுவதில்லை. கூடவே மனிதர்களையும் துரிதப்படம் பிடித்துக் காட்டுகிறது. புயலின் வருகை தமிழகத்தில் காற்றோடு மழையையும் கொண்டுவந்துகொட்டுகிறது.தீபாவளியைக் கொண்டாட விட வில்லை என்று மனம்வெதும்புகிற ஜனங்களுக்கு எப்படி மழையைக் கொண் டாட  மனம் லயிக்கும்.

சாலைகள் எல்லாம் கரும்பச்சை ஓவியத்தின் ஊடே  கழுவித்துடைத்த கருப்புக்கோடுபோல நீண்டுகிடக்கிறது. அதற்கருகிலேயே புத்தம்புது பழுப்புத்தண்ணீர் இன்னொரு கோடுகிழித்துக்கொண்டு ஓடுகிறது. எங்கிருந்தன இத்தனை பசும்புல்லும் இவ்வளவுகாலமாய் என்று அறிவைக் கிளறிவிடும் அதன் வசீகரச்சிரிப்பு அறுபது கிலோ மீட்டர்வேகத்தில் கடந்துபோகிறது.

முகத்திலடிக்கும் சாரல் மொத்தமாக குளிர் நினைவுகளை அள்ளித் தெளிக்கிறது.  இருக்கட்டும் இன்னொரு பயணத்துக்கென நினைவை மட்டுப்படுத்த ஜன்னல் கண்ணாடியை இறக்கிவிட வேண்டியிருக்கிறது. முன்னிருக்கையில் இருக்கும் மூதாட்டியின் குளிர்போக்க போர்வையில்லை. கையே நீண்டு இன்னொரு கண்ணாடியை இறக்குகிறது. விருதுநகரில் ஏறும்போது இடம்மாறி உட்கார்ந்து இருக்கை தரவில்லையென்று பழித்த பழம் திரும்பிச்சிரித்து ஸ்நேகம் வளர்க்கிறது.

போகவழியில்லாததால் முளைவிட்ட பயிர்களை மூழ்கடித்துக்கொண்டு ஆக்ரமிக்கும் தண்ணீரைத் திருப்பிவிட கையிலிருக்கிறது நனைந்த மண் வெட்டி. முழுவதும் நனைந்து விட்ட உலகத்தார்க்கு அச்சாணிக்கிழவனின் முதுகில் கிடக்கிறது நவீனக்குடைகளின் முன்னோடி.யூரியாச்சாக்கு கொங்காணி. சண்டைக்காரனின்  அடுத்த வயலிலும் தேங்கிக்கிடக்கும் தண்ணீரை வெட்டிவிட்டு நிமிர்கிறவனின் முகத்தில் விழுகிற மழைத்துளிகள் சொல்லும் நன்றி போதும் எப்போதும்.

நிறுத்தமில்லா இடத்தில் நனைந்த கையுயர்த்தி இடம்கேட்கும் பயணிக்காக பிரேக்கை அழுத்துகிறது  அந்த ஓட்டுனரின் ஈரக்கால்கள். நாற்கரச்சாலையின் வளைவில் எங்கிருந்தோ கொண்டுவந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு தூங்கும் காவலரின் கனவிலும் வந்து தொலைக்கிறது அடுத்து வரப்போகும் இன்னொரு காவல். காட்டுப்பாதையில் காத்துக்கிடக்கும் காக்கிச்சட்டைக்கு தூக்குவாளியில் தேநீரும் சட்டைப்பைக்குள் சிகரெட்டுப்பெட்டியும் கொண்டு வரும் சிறுவனுக்கு பின்னாட்களில் தெரியலாம் இரும்புவாசமடிக்கும் அரசு எந்திரத்தின் இதயங்கள்.

4 comments:

சத்ரியன் said...

வார்த்தைகளை வாசித்துக் கடக்கையில், படக்காட்சிகள் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே வருகிறது.

மழையையும், இயற்கையையும் ரசிக்கும் கண்கள் ஊனமாகிப் போயிருப்பதை சமகாலத்தவர்கள் உணர வாய்ப்பேயில்லை.

ச.தமிழ்ச்செல்வன் said...

தமிழில் பயணியின் பதிவாக-பயணக்கட்டுரைகளாக- வந்த பல கட்டுரைகளில் மனதைத் தொட்ட பதிவு இது

ஷஹி said...

மூன்றாம் கோணம்
பெருமையுடம்

வழங்கும்
இணைய தள
எழுத்தாளர்கள்
சந்திப்பு விழா
தேதி : 06.11.11
நேரம் : காலை 9:30

இடம்:

ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்

போஸ்டல் நகர்,

க்ரோம்பேட்,

சென்னை
அனைவரும் வருக!
நிகழ்ச்சி நிரல் :
காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )

11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
1 மணி : விருந்து

எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
ஆசிரியர் மூன்றாம் கோணம்

பதிவர் சந்திப்பு

வானம்பாடிகள் said...

அருமை காமராஜ்