11.3.12

தோனியின் கேள்விகள் முன்வைக்கிற நம்பிக்கை.

ஒரே சுற்றுச் சுவருக்குள் இருக்கும் இரண்டு தியேட்டர்களில் அரவானும்,தோனியும்  திரையிடப்பட்டுக்  கொண் டிருக்கிறது. அரவான் பார்த்துவிடலாம் என்று சொல்லும்போது பதறிப்போய் வேண்டாம் என்று என் கையைப் பிடித்துக்கொண்டார் தேனிப் பக்கத்து ஊர்க்காரர் இளைஞர் ஒருவர்.படம் வெளியாகுமுன்னமே அரவான் க்ரூப்ஸ் னு போஸ்ட்டர் அடிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க சார் என்று கலக்கத்துடன் கூறினார்.ஒரு கலைப் படைப்பை, ஒரு கலை ஞனை சாயம் பூசி அழகுபார்ப்பது வேதனை மிகுந்த அருவருப்பாகும். எனவே சாவகாசமாய்  பார்த்துக் கொள்ளலாம் என்று தோனியைத் தேர்ந்தெடுத்தோம். காலம் கடந்து விமர்சனம் . ஆனாலும் இது விமர்சனம் இல்லை. சும்மா பார்த்த திரைப்படத்தை  சிலாகிப் பதுதான். இந்த சிலாகிப்பு எல்லோருக்கும் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அதுதான் உலகம் அவரவர் ரசனை வேறுவேறாய் கிடக்கிறது. எனினும் சமூகம் சார்ந்த சிந்தனை வயப்படுகிறவர்கள் காலம் கடந்தும் நிற்கவே நிற்பார்கள். பிரகாஷ்ராஜ் நிற்பார்.

திரைத் துறையில் இருந்துகொண்டு இப்படி ஒரு கலகக் குரலைப் பதிவு செய்ய துணிச்சல் தேவை. அது நூறு கோடி இரு நூறுகோடி பணம் முதலீடு செய்கிற மசாலாத் துணிச்சலை விட கோடி மடங்கு பெரியது. கல்வி வியாபாரமாகிற கொடுமையை ஒரு முப்பதாண்டுகளுக்கும் மேலாக இடதுசாரி இயக்கங்கள் தெருத்தெருவாய் புலம்பிக்கொண்டிருக்கின்றன. அந்தப் புலம்பல்களை போட்டி என்கிற இரைச்சல் ஓரங்கட்டி விட்டது. அந்தோ.. இன்று கல்வி பொது விநியோகத்திடமிருந்து பறிக்கப்பட்டு கார்ப்பரேட் ....... கையில்  சிக்கிக்கொண் டிருக்கிறது. முதலில் சென்னை போன்ற பெருநகரங்களில் விதைக்கப்பட்ட விஷச்செடி தமிழகம் முழுக்க நீக்கமற வியாபித்துவிட்டது.

மூட்டை கட்டிக்கொண்டு போனால் ஒழிய உயர்கல்வி கற்க வேறு முகாந்திரமே இல்லை என்றாகிப்போன சூழல் இருக்கிறது. மண்ணெண்ணய் விளக்கிலும்,தெருவிளக்கிலும் படித்தவர்கள் மாவட்ட ஆட்சியாளராகினார்கள்  என் கிற செய்திகளால் பெருமிதப்பட்ட காலம் ஒன்றிருந்தது.அது வறிய மக்களின் கல்விக் கனவின்மீது திடமான வெளிச்சம் பாய்ச்சியகாலம். அதெல்லாம் இப்போது  மலை யேறிப்போய்  ஒரு லஞ்சம் வாங்காத அரசாங்க ஊழியன் கூட உயர்கல்வி குறித்து யோசிக்கமுடியாத சூழல் வந்து விட்டது. அப்படிப்பட்ட ஒரு பத்திரப் பதிவு அலுவலக குமாஸ்தாவின் குமுறலாய் கிளம்புகிறது தோனி.  ஒவ்வொரு ப்ரேமிலும் பெற்றோர்களின் மனசாட்சியை உலுப்பி விட்டுச் செல்கிறது படம்.

புறச் சமூகம் தனது குழந்தைகள் குறித்து விசாரிக்கிற கேள்விகளால் கூனிக்குறுகிப் போகிற பெற்றோர்களின் பிரதிநிதியாய் பிரகாஷ்ராஜ் தனித்து நிற்கிறார்.பந்தியில் அருகே அமர்ந்திருப்பவர் கேட்கிற கேள்விகளுக்கு அளக்கிற பெருமிதப் பொய்யும், கல்வி நிறுவன அதிபரிடம் தனது மகன் கட்டாயம் அதிக மதிப்பெண் வாங்கு வான் என்று சொல்லுவது, அதனால் வருகிற ஆதங்கத்தை மகனிடம் காட்டுகிற கோபமும் துல்லியமான செதுக்கல். பிரகாஷ்ராஜிடம் அடிவாங்குகிற ஒவ்வொரு அடியிலும் தனது அபிமானத்தை தளரவிடாத பந்தாய் திரும்புகிறது அந்தச் சிறுவனின்  நடிப்பு. கோமாவினால் படுத்த படுக்கையாய் கிடக்கிற போது நிலைகுத்தி நிற்கிற அவனது கண்கள் எல்லோரது கண்களிலும் நீரைக்கொட்டச்செய்யும்.

அடுக்குமாடியில் குடியிருக்கும் மக்களுக்கிடையே ஊடுறுவிக்கிடக்கும் பந்தம் மேலோட்டமாக இருந்தாலும் இந்த ஜாதிய திரட்டல் யுகத்தில் இன்னும் அழுத்தமாக சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. குடும்பத்துக்காக அரசியல்வாதியின் சின்ன வீடாகிற நளினியின் மீது காட்டுகிற வெறுப்பு,கந்து வட்டிக்கு கொடுக்கிற கனிபாயின் கறார்தன்மை மீது காட்சிப் படுத்தப்படுகிற வெறுப்பு,மதிப்பெண் வாங்கமுடியாத மகன் மேல் கவிழ்ந்திருக்கும் கோபம்  எல்லாமதிப்பீடுகளும் உடைந்து அன்பாகத் திரும்புகிற நெகிழ்ச்சி அழகு. எல்லோருக் குள்ளும்  மனிதா பிமானம்  ஒளிந்து கிடப்பதையும் எல்லோருக்குள்ளும் தனித்திறமை ஒளிந்து கிடப்பதையும் நம்பிக்கையோடு முன்வைக்கிறது தோனி.அதே நேரம் கல்விக்கொள்கை,புரையோடிக்கிடக்கும் லஞ்சம் இவற்றைச்சொல்லுகிறேன் பேர்வழி என்று இட ஒதுக்கீட்டுக்கு எதிராகக் கோபத்தைத் திசை திருப்பாத நேர்மை இருக்கிறது இந்தப்படைப்பில்.

சமூக மாற்றங்கள் சினிமாக் கதாநாயகர்களால் மட்டுமே வரும் என்கிற மூடநம்பிக்கையையும், காதல் 100 சதவீதம் சுத்தமானதும் டூயட் பாடுவதாலும் என்கிற முரணான மூட நம்பிக்கையையும் ஜஸ்ட்லைக்தட்  ஒதுக்கி விட்டு  இயல்பாக நகர்கிறது. பின்னணி இசை படம் முழுக்க பிரகாஷ்ராஜுடன் கை கோர்த்துக் கொண்டு  வரு கிறது. நிழலாகப்படகோட்டி விளையாண்ட காலம்போய் பாடல் வீட்டுக்கு வந்த பிறகும் பின்னாடி நிழலாகத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

4 comments:

இரசிகை said...

nalla silaahippu.
:)

காமராஜ் said...

நன்றி ரசிகை.

காமராஜ் said...

நன்றி ரசிகை.

கிச்சான் said...

அண்ணா எதாவது புதுமையான தமிழ் படம் வராதான்னு
எத்தனை ரசிகர்கள் !
இன்னும் எதிர் பார்த்த படிதான்
ஒவ்வொரு முறையும் திரையரங்கிற்கு செல்கிறார்கள்

ஒரு சில சமயத்தில் அந்த எதிர் பார்ப்பு நிறைவேற்ற்படுகிறது
அந்த விதத்தில் அரவான் வெற்றியடஞ்சிருக்குன்னு நம்பலாம் .
ஒரு காலத்துல நடிகர்களுக்காக படம் ஓடியது
அடுத்து கதைகளுக்காக படம் ஓடியது
அடுத்த கட்டமாக ஒளிபதிவிர்காகவும் படம் ஓடும் காலம்
வந்துவிட்டதாக நினைக்கிறேன்
கதை என்பது ஒரு லைன் தான்
ஆனால் கதையை விட ஒளிப்பதிவு ,தேர்ந்து எடுக்கப்பட்ட இடம் ,நடிகர்கள்
நடிப்பு என அருமையாக இருக்கிறது அண்ணா

ஒருமுறை பொய் பாருங்க அண்ணா

அன்புடன் கிச்சான்