10.12.08

அத்துவான நினைவுகள்






முந்தைய நாளின் ஈரத்தோடு
ஒத்தையடிப்பாதையை மறித்துக்கொண்டு
படுத்திருக்கும் ஆழ்வார் நாயக்கர் பம்புசெட்டு வாய்க்கால்.


நசநசக்கும் வியர்வையோடு
நினைவுகளைப் பின்னிழுத்துக்கொண்டு
ஊர்தேடி முன்நகரும்
ஆளில்லா ஒத்தையடிப்பாதை.


ஒன்றையொன்று விரட்டிப் பிடிக்கும்
வால்விடைத்த அணில்களுக்கு
மதியமென்ன, மொட்டைக்கிணறும் என்ன?


அதட்ட ஆளில்லா எருமைகள்
கதிர் முற்றிய பிஞ்சை நுழைந்து
கம்மங்கருதை அவக்கு அவக்கென அத்துமீறும்போது
சாணிவாசம் மாறாத தாவணியில்
வெயிலில் நனைந்து
தகித்துக்கிடந்தது முதல் இறுக்கம்.


நாங்களிருவரும் நல்லமேய்ப்பார்கள்.
அத்துவான வெயிலின் காடெங்கும்
சிதறிக் கிடக்கிறது நினைவுகளின் வெக்கை..

6 comments:

மாதவராஜ் said...

காமராஜ்!

அற்புதம். வெயிலின், வாழ்க்கையின் அடர்த்தியோடு வெளிப்பட்டிருக்கின்றன வார்த்தைகள். தலைப்பே கவிதையாக இருக்கிறது

geevanathy said...

///நாங்களிருவரும் நல்லமேய்ப்பார்கள்.
அத்துவான வெயிலின் காடெங்கும்
சிதறிக் கிடக்கிறது நினைவுகளின் வெக்கை..///

கவிதையோடு சேர்ந்து நாமும் வெயில் குளித்தோம்....
அருமையான கவிதை...

அன்புடன் ஜீவன்....

................................
{முடியுமென்றால் Word Verification எடுத்துவிடுங்கள் அது மறுமொழியிடுவதை இலகுவாக்கும் - நட்புடன் ஜீவன்}

காமராஜ் said...

வருகைக்கு நன்றி ஜீவன், நடை பழகுகிறேன்
எனது தோழன் மாதுவுக்கு நன்றி
உங்கள் போன்றோரின் தொடர்புக்கு
அவனே உந்து விசை.

Anonymous said...

//சாணிவாசம் மாறாத தாவணியில்
வெயிலில் நனைந்து
தகித்துக்கிடந்தது முதல் இறுக்கம்.

நாங்களிருவரும் நல்லமேய்ப்பார்கள்.
அத்துவான வெயிலின் காடெங்கும்
சிதறிக் கிடக்கிறது நினைவுகளின் வெக்கை..//

நல்ல வார்த்தைப் பிரயோகங்கள் சார். வெயிலும் சாத்தூர் வாழ்க்கையும் பிரித்தறிய முடியாதது. விருதுநகரைச் சேர்ந்த ரமேசு என்பவர் வெயிலான் என்ற பெயரில் எழுதி வருகிறார். முடிந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

பூமணி எழுதிய வெக்கை நாவல் படித்திருக்கிறீர்களா?

காமராஜ் said...

கருத்துக்கும், வருகைக்கும் நன்றி
வடகரை வேலன், ஆரம்பத்தில்
தங்களுக்கு பதிலளிக்க இயலாதது
தொழில் நுட்ப குறைச்சலால் மட்டுமே.
இனி நிறையப் பரிமாறலாம்.
பூமணி எனது பிரிய எழுத்தாளர்களில்
ஒருவர்.
ஒரு வனதேவதையும் ரெண்டு பொன்வண்டுகளும்
எனது சிறுகதைத்தொகுப்பு
வம்சி வெளியீடு.

cheena (சீனா) said...

வெயிலின் தாக்கம் புரிகிறது - நினைவுகளின் வெக்கை தகிக்க வில்லை - மாறாக குளிர்ச்சியாக இருக்கிறது. நல்ல தேர்ந்தெடுத்டஹ் சொற்கள் - நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் காமராஜ்