11.12.08

மேலிருந்து கீழ்நோக்கி வளரும் விஷச்செடி

வழக்கத்துக்கு முன்னாலேயே முழித்துக்கொண்டு ஊர் பஞ்சாயத்துப்பள்ளிகளை நோக்கி பயணப்படும். நடக்கமுடியாதவர்கள், வயோதிககர்கள், பிள்ளைத்தாச்சிப் பெண்கள் எல்லாம் மாட்டுவண்டிகளில் கொண்டுவந்து இறக்கிவிடப்படுவார்கள். நீண்டவரிசையில் பாட்டும் கூத்துமாக நகர்ந்துபோய் ஆட்காட்டி விரலில் மை தடவிக்கொண்டு திரும்ப வருவார்கள். ஏதாவது வேப்ப மர நிழலில் மொய் எழுதுகிற தங்கிலியான் உட்கார்ந்து ரெண்டு கருத்த வெத்திலையும் ஒரு கொட்டப்பாக்கும் கொடுத்துக்கொண்டிருப்பார். 'கூட ரெண்டு குடுத்தா ஙொப்பன் வீட்டுச்சொத்தா போயிரும்' என்று கேட்கிற மதனிமார்களுக்குச் சொல்ல, ''வீட்டுக்கு வா கூட ரெண்டு போனி கூலு கரைச்சித் தாரன், அதுவுமில்லைன்னா குருன வாங்கிப் பொங்கி கருவாட்டுத்தண்ணி வச்சித்தாரன்,
இது ஊர்த்துட்டுல வாங்குன வெத்தில, பங்காளத்தபடிதான்'' யோக்கியமான பதிலும் அவரிடம் இருக்கும். ஓட்டுப்போடுவதைப் பார்க்கவென்றே சின்னப்பிள்ளைகள் கூட்டம் கூட்டமாய் வந்துபோகும். ஜனநாயகத்தின் பெரும் திருவிழாவாக கள்ளங்கபடமற்ற தேர்தல் கடந்துபோன காலங்கள் அது.


முடியாட்சியும் ஆங்கில ஆட்சியும் தாண்டியொரு மக்களாட்சியை ருசிக்கத் தொடங்கிய காலம் அது. கிட்டத்தட்ட எண்பதுகள் வரை இதுதான் நிலைமை. ஆனால் இருபது வருசத்தில் எல்லாம் வேகமாய் மாறிக்கொண்டு வருகிறது. இப்போது எல்லாக் கிராமங்களிலுமே காலைப் பேருந்துக்கு ஒரு கூட்டம் கிளம்புகிறது. தாலுகா ஆபீஸ், கோட்டாட்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், காவல் நிலையம் இப்படி மக்கள் வந்து போகும் இடங்களுக்கு அவர்கள் பிரிந்து போய் காத்திருப்பார்கள். பிரச்சினைகளை உண்டாக்க, பெரியதாக்க, கடைசியாய் ராசி பண்ணி முடித்து மதியம் சீமைச்சாராயமும், பிரியாணியும் இரவு கடைசி வண்டிக்கு வீடு திரும்பும் போது ஒரு நூறு ரூபாயும் பையில் இருக்கும்.


பருத்தியும் மிளகாயும் விளைந்த நிலங்களில் வேலிக்கருவேல மரங்கள் மண்டிக்கிடக்க, எங்கள் உழைப்பாளர்கள் கிராமங்களிலிருந்து கிளம்பி வந்து கௌரவப் பிச்சைக்காரர்களாக நகரத்து வீதிகளில் பிரியாணி வாடை மணக்கிற முகங்கள் தேடி அலைகிறார்கள். ஏற்கனவே நாறிக்கிடக்கிற பல அலுவலகங்கள் சுத்தம் செய்ய முடியாதபடி இன்னும் அதிகமாக நாறடிக்கப்படுகிறது.


1975 ஆம் ஆண்டு சாத்தூரில் அழகுத்தேவர் என்கிற எம்.எல்.ஏ ஒருவர் இருந்தார். அவரிடம் கையெழுத்து வாங்கி மாணவர் விடுதியில் சேர எனக்கு எட்டு கிலோ மீட்டர் நடக்கிற நேரம் மட்டுமே செலவானது. 'தம்பி எந்த ஊரு, என்ன படிக்கிறெ, நல்லாப்படிக்கனும்' என அறிவுரை சொல்லிக்கொண்டே அமுக்குத்தேவர் என்று கையெழுத்துப்போட்டு விட்டு கீழே வைத்த வேப்பங்குச்சியை எடுத்து திரும்பவும் பல்விலக்க ஆரம்பித்தார். அந்தக் கிராமத்தானின் முகம் எதோ கனவில் வருகிற மாதிரி இன்னமும் நிழலாடுகிறது. அவர் தங்கியிருந்த அந்த வாடகை வீட்டில் இப்போது யாரோ தீப்பெட்டி ஆபீஸ் போர்மேன் வாடகைக்கு குடியிருக்கிறார்.


தன்னைத்தேடி வருகிறவர்களை காக்க வைப்பதுவும், அலைக்கழிப்பதுமே ராஜதந்திரமாகிப் போன காலமாகிவிட்டது இப்போது. லஞ்சப்பணத்தில் பங்களாக் கட்டியவன் பிழைக்கத் தெரிந்தவனாகிறான். நேர்மையான அரசு அதிகாரி முசுடு, மனிதரண்டாதவன் எனப் பட்டம் வாங்கி மதிப்பிழந்து போகிறான். அந்த கருத்துருவாக்கம் நகரம் தாண்டிப் பயணமாகி பான்பராக் பொட்டலம்போல், அழுகுனி சீரியல் போல் கடைகோடிக் கிராமத்துக்கும் விஸ்தரிக்கப்பட்டுவிட்டது. அதனால் தான் இப்போது ஒவ்வொரு கிராமத்திலும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமில்லாமல், கொள்ளை நடக்கிறது. ஐந்து வருசம் தங்களைச் சுரண்டித் திங்க தலைக்கு இருநூறு முன்னூறு என்று சுய அடமானம் அரங்கேறுகிறது.


ஒரு துக்க விட்டுக்குப் போவதற்கு இரவு பனிரெண்டு மணிக்கு இரு சக்கர வாகனத்தில் கிராமத்துக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. நான்கு கிராமங்கள் தாண்டிப்போகவேண்டும். ஒவ்வொரு ஊரிலும் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் பத்துப்பேர் உட்கார்ந்துகொண்டு போகிற வருகிற வாகனங்களை மறித்துக் கொண்டிருந்தார்கள். சாதிக்கலவரம் ஏதும் நடந்துவிட்டதோ என்னும் பயத்தோடு கடந்துபோன என்னயும் வழிமறித்து எந்தக்கட்சி என்று விசாரித்தார்கள். ஒருவேளை கட்சிக்கலவரமாக இருக்குமோ என்னும் சந்தேகம் வந்தது. கிராமங்களில் கட்சி மற்றும் மதக்கலவரங்கள் வருவதற்கு சாத்தியமே இல்லை.


கிராமங்கள் அழிந்து வருவதற்கு சமச்சீரற்ற நடைமுறையும், அதன் ஆதிக்காரணியான சாதியும் தான் முக்கியகாரணம். அதை அழிக்க எந்த விஞ்ஞானியாலும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே அங்கு என்ன ஜீவாதாரப் பிரச்சினை குறித்து.முரண்பாடு வந்தாலும் அது சாதிக் கலவரமாகத்தான் மாறும். அது வேறு பிரச்சினை.

எனது ஊருக்கு முந்திய ஊரில் என்னை இடை மறித்தார்கள். பக்கத்து ஊர் என்பதால் தைரியமாக நின்றேன். என்னை அடையாளம் கண்டுகொண்ட சிலர் குசலம் விசாரித்து விட்டு போகச்சொன்னார்கள். என்ன என்று கேட்டேன் " தேர்தல் செலவுக்கு பணம் தர ஆள் வரும் அதான் நிக்கோம், பையப் பதனமா போங்க" என்று என்னை அனுப்புவதிலே குறியாக இருந்தார்கள். ஒவ்வொருவரின் கையிலும் வெவ்வேறு கட்சிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ஸ்லிப்புகள் இருந்தன.

யார் யாரை எமாற்றுகிறார்கள் என்று புரியவில்லை.

3 comments:

arun said...

உங்கள் எழுத்தில் நல்ல நடையும் ஆழமும் உள்ளது. பதிவு என்பதை தாண்டி நல்ல படைப்புகளையும் தங்களால் தர இயலும். வாழ்த்துக்கள்.

காமராஜ் said...

நன்றி, அருண் இந்த வலைத் துவக்கத்தில்
உங்கள் போன்றோரின் ஊக்கம் எனக்கு
வழித்துணையாய் வரும், மிக்க நன்றி.

Anonymous said...

நன்றாக அலசி எழுதியிருக்கிறீர்கள் சார்.

வேர்டு வெரிஃபிகேசன் எடுத்துவிடுங்கள். அது ஒரு தொந்திரவு. அதிகப் பின்னூட்டங்கல் வராது