உள்ளே வரும்போது வாடிய பயிர்போல வந்தார்கள். வருவதற்கு முன்னாள் ஒரு குடிகார ஆணும், மெல்லிய குரலில் பெண்ணும் சண்டையிட்டுக்கொள்ளும் சத்தம் கேட்டது. உள்ளே நுழைந்த அவர்கள் தான் சண்டையிட்டிருப்பார்களென்றுசொன்னால் யாரும் நம்புவதற்கில்லை. படித்த கதைகள் ரசித்த சினிமாக்களின் நாயகிகளோடு ஒத்துப் போகிற ஜாடை இருந்தது. கையில் ஒரு குழந்தையுமிருந்தது. அப்படி லட்சணமான பெண்கள் வந்தால் மேனேஜர் காபின் தொடங்கி மெஸ்ஸஞ்சர் இருக்கை வரை சுறுசுறுப்பாகிவிடும். நான் உங்களுக்கு உதவலாமா என்கிற குரல் எல்லோர் உதட்டிலும் தயாராக நிற்கும். யாரையும் எதிர்கொள்ளாது வாடிக்கையாளர் இருக்கையில் அமர்ந்துகொண்டது. கூட்டம் வழிந்த பின்னும் அதே இடத்தில் உட்கார்ந்திருந்தது. ஒரு ஐந்து நிமிடம் வங்கியின் காற்றாடிச் சத்தம் மட்டுமே பிரதான பின்னணி இசையாகியிருந்தது. மெசெஞ்சர் ரபீக் தான் அந்த மௌனத்தை உடைத்தார். "வரவு செலவு நேரம் முடியப்போகிறது உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ". "செல்வி மேடம் வல்லையா" என்று கேட்டது. அன்றைக்கு செல்வி மேடம் வேறு ஒரு கிளைக்கு டெபுடேசன் போயிருந்தார்கள். இதைச்சொன்னதும் நம்பிக்கையின் கடைசி இழை அறுந்தது போலமுகம் மாறியது. நகை அடகு வைக்கணுமா? மேடத்துக்குச் சொந்தமா? வேற ஏதுனா லோன் விஷயமா? ரபீக்கின் எந்தக்கேள்விக்கும் பதிலில்லை. ரபீக் என் முகத்தைப்பார்த்தார். நானும் எனது பங்குக்கு கேட்டேன் பதிலில்லை.இங்க பாருங்கம்மா மேடம் லீவு எதாவது எங்ககிட்ட சொல்ற மாதிரி இருந்தாச்சொல்லுங்க என்றேன் .குனிந்த தலை இன்னும் கீழே குனிந்தது. கொஞ்சம் தயங்கி '' சப்ப்டீங்களா '' என்றதும் மடியில் இரண்டு மூன்று சொட்டுக் கண்ணீர் விழுந்தது. சித்திரை வெயிலில் வாசலுக்கருகில், வேஷ்டி ஒதுங்கி வாயைப் பிளந்து கொண்டு கிடக்கிற கணவனென்னும் உத்தியோகத்துக்காரன். மார்ச் சேலையை இழுத்து இழுத்து ஓய்ந்து போய் கீழே கிடக்கும் ஏதோ ஒன்றைத் தேடி ஊர்ந்துபோகும் கைக்குழந்தை. இறுதிக் கையிருப்பான தாலியை நீட்டியது அடகு வைக்க. எப்போதோ செல்விமேடம் சொன்னபக்கத்து வீட்டுக்கதை நிழலாடியது. " அவ்ளோ கலர், அவ்ளோ அழகு, வீட்டை விட்டு வெளியே வராது. வாசல் கதவு விட்டா கார்க் கதவு தொறக்கும், பெரிய தீப்பெட்டிக் கம்பெனி ஓனர். காலேஜ் படிப்ப நிறுத்திக் கல்யாணம். அதுக்கப்புறம் வெளியே வராது ". " மனுஷியா இல்ல மொளப்பாரியா " என்று நான் கேட்டதும் '' அட இது நல்லாருக்கே '' என்று சொன்னதும்ஊர்ஜிதம் ஆகியது. மேனேஜர் குய்யோ முறையோ என்று கத்தினார், உடனிருந்த இன்னொரு எழுத்தர் இந்தியாவைத் தாங்கும் இன்னொரு தூண் இடிந்து போனதாகக் கவலை கொண்டார். வெகுநேர உணர்ச்சி பட்டிமன்றத்துக்குப் பின். இப்படி முடிவாகியது.ஆளுக்கு கொஞ்சம் பிரித்து அவர்களுக்கு கையில் கொடுக்கவும் மேனேஜர் கொஞ்சம் புத்திமதி சொல்லவும். " இந்தாங்கம்மா.... இங்க தாலியெல்லா அடகு வாங்குறதுக்கில்ல, என்னதா கஷ்டன்னாக்கூட இப்டி.. " சட்டென எழுந்து, முகத்தைத்துடைத்துவிட்டு மேனேஜரை நேரடியாகப் பார்த்து ரொம்பத் தீர்க்கமாக சொன்னது. " சார் அதுவு தங்கந்தான " நீண்ட நாள் கழித்து. தலையில் பஞ்சுத்துகள்கள் ஒட்டிக்கொண்டிருக்க, கையில் வயர்க்கூடையோடு பேருந்தில் ஏறியபத்துப்பெண்களுக்கு நடுவில் சிரித்த முகத்தோடு அந்தப்பெண்மனி. |
17.2.09
முளைப்பாரிகள் மீண்டும் வயலில்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//குனிந்த தலை இன்னும் கீழே குனிந்தது. கொஞ்சம் தயங்கி '' சப்ப்டீங்களா '' என்றதும் மடியில் இரண்டு மூன்று சொட்டுக் கண்ணீர் விழுந்தது.//
படிக்கும்போது எனக்கும் கண்ணீர் வந்தது.
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
தோழர்,
அதுதான் பெண்களின் பலம். வெகு சீக்கிரம் நிதர்சனம் உணர்ந்து தங்களைத் தயார்படுத்திக் கொள்வர்.
தலைப்பு மிக வசீகரம். எப்படித்தான் வார்த்தைகள் உங்களுக்கு வசப்படுமோ?
Post a Comment