10.2.09

காங்க்ர்ரீட் தெருவில் வெள்ளந்திப் பூக்கள்
எனக்கு மட்டும் குளிக்கிற நேரம் குறி பார்த்து தொலை பேசி அழைப்புகள் வருவதாகத் தோன்றியது. இதற்காக வளமையாகக் குளிக்கிற நேரத்தை மாற்றிப் பார்த்தேன் அப்படியும் விட்டபாடில்லை. மிகுந்த எரிச்சலாகவே உணர்ந்தேன்.இந்த எரிச்சலை இரட்டிப்பாக்க என் மனைவி குளிக்கும்போது கதவைத்தட்டி "ஒங்களுக்கு போன் வந்திருக்கு" என்று சொல்லுவாள். " எடுத்து பேசு அல்லது குளிப்பதாகச்சொல் " என்று சொல்லிப்பார்த்தேன். ஆனால் மறுநாளே கதவைத்தட்டுவது தொடரும். ஒருநாள் இதன் நிமித்தம் சண்டையே வந்துவிட்டது. "எதாவது அவசரமான சேதியாக இருந்தால்" என்கிற கேள்வியைக் கேட்டு மீண்டும் சண்டையைத் தொடர்ந்தாள்." என்ன அவசரமானாலும் இரண்டு நிமிடம் கழித்து பேசினால் என்ன குறைந்து போகிறது" நான் சொல்ல. "அப்ப போன் எதுக்கு" என்று கேட்டாள். ஏனைய பெண்களைப்போல் நறுவிசாக நடந்து கொள்ளத் தெரியவில்லை எனவும், அவளுக்குப் புரியவைக்க முடியாது என்றும், நானாக முடிவு கட்டிக்கொண்டு முற்றுப்புள்ளி வைத்தேன்.


பிரிதொரு நாள் அவசரமாகவே ஒரு அழைப்பு வந்தது. வெளியூரிலிருக்கும் எனது அலுவலக நண்பரின் அழைப்பு. தனது உறவினருக்கு ஒரு தகவல் சொல்லவேண்டும் அவர் தொலைபேசியை எடுக்கவே இல்லை என்றும் முடிந்தால் நீங்கள் தொடர்புகொள்ளுங்கள் அல்லது நேரிலாவது போய் இந்த தகவலைச் சொல்லிவிடுங்கள் என்றார். ஒரு பத்து நிமிடம் நானும் முயற்சி பண்ணிவிட்டு வண்டி எடுத்துக்கொண்டு நேரில் போனேன். உள்புறம் பூட்டப்,பட்ட மதிற்சுவர் கதவு, உள்ளே ஈரக்கொலை பதற வைக்கிற காவல் நாயின் குரைப்பு . நான் காத்திருந்தேன். அழைப்பு மணியின் இடையறாத சத்ததிற்குப்பின் கதவு திறந்த பெண்மனிக்கு நான் திருடன் இல்லை என்பதை சிரமப்பட்டு ஊர்ஜிதப்படுத்தினேன். " அப்படியா அவர் தூங்கறார் " அப்புறம் அவாருங்கள் என்று சொல்லி முடிக்கு முன்னே கதவை மூடிவிட்டார்கள். தகவல் சொல்ல சுவரேறிக்குதிக்க முடியாதல்லவா நான் திரும்பி வந்தேன்.


" எங்க போனாலும் போனக்கொண்டு போங்க தொனத்தொனன்னு ஒரே தொந்தரவா இருக்கு " வாசலில் நின்றிருந்தஅவளின் கோபம் எனக்கு சந்தோசமாக இருந்தது.

3 comments:

DIEGO MALLÉN said...

I'AM VERY SORRY. I DO NOT UNDERSTAND ANYTHINK¡¡¡ BUT MY BEST REGARDS FROM SPAIN¡¡¡¡

காமராஜ் said...

வணக்கம் மல்லன்.
வருகைக்கு நன்றி
நேர்மையான தங்கள் கருத்துக்கும் நன்றி.

காமராஜ் said...

welcome mr.diego mallen,
you cant't understand unless
you know tamail.
but thanks for your visit and
true comment