4.7.09

இரண்டு உண்டியல்கள்.

செருப்பில்லாத கால்களில் இரண்டுமைல் நடந்து டவுன் பஸ்ஸுக்கு காத்திருந்து கல்லூரி வர நெஞ்சுரம் வேண்டும். வண்ண வண்ண டிபன் பாக்ஸ் கொண்டு வரும் பிகாம் வகுப்பில் தூக்குச்சட்டியில் ரசஞ்சோறு கொண்டு வர வலிமை வேண்டும். ஏழெட்டுப்பேர் சேர்ந்து பகிர்ந்து சாப்பிடுகிற போது மர நிழல் தேடி, தனியே சாப்பிடத் துணிச்சல் வேண்டும். சோக்கு உடை தாமோதரனோடு சிரித்துப்பேசிவிட்டு அலட்சியப்பார்வையோடு கடந்துபோகும் பொருளியல் போதகரை சகித்துக்கொள்ள திடக்காத்திரமான மனசு வேண்டும். இவையெல்லாம் ஒருங்கே அமைய வேண்டுமென்றால் கடைக்கோடிக் கிராமத்தில் கூலிக்காரத் தாய் தகப்பனுக்கு மகனாகப் பிறந்தால் மட்டும் போதும்.


பிறகு தோளில் கை போடுகிறவன் தானே உயிர் நண்பனாவான். அவனுக்கு உலகம் என்ன பெயர் வேண்டுமனாலும் வைக்கட்டும். கர்ணனுக்கு நண்பன். ரோட்டில் பசித்துக்கிடக்கும் பூஞ்சை உடலுக்கொரு ரூபாய் அதுவுமில்லை யென்றால் ஒரு உச்சுக்கொட்டல் கேட்கும் போது அந்தக்குரலோடு இணைந்து நடக்க எனக்கென்ன தடை. இழப்பதற்கெதுவுமற்ற என்னிடம் அள்ள அள்ள குறையாத அன்பிருத்தது. அந்த அன்பிற்குப் பாத்திரமாக அவர்களிடம் எல்லாம் இருந்தது.


தோழர் என்னும் வார்த்தை, தோளில் தொங்கும் ஜோல்னாப்பை, அந்தப்பைக்குள் என் கேள்விகளைத் தீர்த்துவைக்கிற புத்தகப் பக்கங்கள். அந்தச்சிகப்பு நிற தகரத்துக்குள் விழுகிற சில்லறைகளின் சத்தத்தில் ஒரு யுகாந்திரப்பசியைப் போக்கும் ஓசை கேட்டது. அதன் காது வளையத்துக்குள் கை நுழைத்துக் குலுக்க கிடைத்த பாக்கியம் எனக்கு பெரும்பாக்கியம் எனக்காத்துக்கிடந்தேன்.


தனிப்பாடம் என்று நானும், செய்முறை என்றென் தாயும் இருக்கங்குடி மாரியம்மன் கோவிலில் சந்தித்துக்கொண்டபோதுஎனது கையில் சிகப்பு உண்டியல் இருந்தது. அவள் போட்ட காசோடு இரண்டு சொட்டு கண்ணீரும் உள்ளே விழுந்தது." கல்ல ஒடைச்சு கருமலைய நீஞ்சி, வேகாத வெயில்ல வெறகு சொமந்து படிக்க வச்சது இப்படிப் பிச்சயெடுக்கவா" என்று சொல்லிச்சொல்லி அழுத கண்ணீரை நிறுத்த அப்போதில்லை வார்த்தைகள். என்னிடமும் கண்ணீர் தானிருந்தது.தானுண்டு தன் வேலையுண்டு எனும் நியதிக்குள் சிக்காத மாணவர்கள், படிப்பாளிகள், அரசாங்க உத்தியோகஸ்தர்கள்தறிகெட்டவர்கள் எனும் மூட நம்பிக்கை திணிக்கப்பட்ட சமூகத்தில் கூலிக்காரத்தாய் எப்படி கார்க்கியின் தாயாக மாற முடியும்.


வங்கியில் வேலை கிடைத்து அதே மாரியம்மன் கோவில் உண்டியல் காசு எண்ணிக்கைக்கு போனேன். என் அம்மாவுக்கு அளவு கடந்த சந்தோசம். பிரபலமான ஒரே ஊர், இரண்டு உண்டியல்களை எனக்கு அறிமுகப்படுத்தியது. காசு போட்டதோடு முடிந்துவிடுகிறது பக்தர்களின் வேலை. அந்த உண்டியல் பணத்தை வங்கியில் போடச்சொல்லி காத்திருந்த வங்கிகள் எத்தனை.அந்த உண்டியல் பணத்தை பராமரிக்க நடந்த போட்டியில் எத்தனை வெட்டுக்குத்து. எத்தனை வருடம் நீதிமன்றம். இங்கேயே இப்டீன்னா ?...


என் அம்மாவிடம் மட்டுமல்ல யாரிடமும் இதைச் சொல்லமுடியாது, அருள் வந்துவிடும்.

14 comments:

Karthikeyan G said...

:-((

ஆ.சுதா said...

உணர்வெழுத்து.

ஆ.ஞானசேகரன் said...

//இவையெல்லாம் ஒருங்கே அமைய வேண்டுமென்றால் கடைக்கோடிக் கிராமத்தில் கூலிக்காரத் தாய் தகப்பனுக்கு மகனாகப் பிறந்தால் மட்டும் போதும்.//

அழுத்தமான இடம்....

ஆ.ஞானசேகரன் said...

//என்னிடமும் கண்ணீர் தானிருந்தது.தானுண்டு தன் வேலையுண்டு எனும் நியதிக்குள் சிக்காத மாணவர்கள், படிப்பாளிகள், அரசாங்க உத்தியோகஸ்தர்கள்தறிகெட்டவர்கள் எனும் மூட நம்பிக்கை திணிக்கப்பட்ட சமூகத்தில் கூலிக்காரத்தாய் எப்படி கார்க்கியின் தாயாக மாற முடியும்.//

என் நண்பனின் ஞாபகம் வருகின்றது....

ஆ.ஞானசேகரன் said...

///என் அம்மாவிடம் மட்டுமல்ல யாரிடமும் இதைச் சொல்லமுடியாது, அருள் வந்துவிடும். //

ம்ம்ம்ம்ம்..


இரண்டு உண்டியல்களும் வேறு வேறு பாதைகள்...

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

\\ரோட்டில் பசித்துக்கிடக்கும் பூஞ்சை உடலுக்கொரு ரூபாய் அதுவுமில்லை யென்றால் ஒரு உச்சுக்கொட்டல் கேட்கும் போது அந்தக்குரலோடு இணைந்து நடக்க எனக்கென்ன தடை.\\
\\தனிப்பாடம் என்று நானும், செய்முறை என்றென் தாயும் இருக்கங்குடி மாரியம்மன் கோவிலில் சந்தித்துக்கொண்டபோதுஎனது கையில் சிகப்பு உண்டியல் இருந்தது. அவள் போட்ட காசோடு இரண்டு சொட்டு கண்ணீரும் உள்ளே விழுந்தது.\\ உயிர் தெறிக்கும் வார்த்தைகள். வாசிக்க வாசிக்க ஒரு நாவலின் காட்சிகளாய் மனதில் விரிகின்றன.

அன்புடன் அருணா said...

மனதைத் தொட்டுவிடும் எழுத்து...அருமை...அருமை...பிடியுங்கள் பூங்கொத்து!

ஈரோடு கதிர் said...

//அவள் போட்ட காசோடு இரண்டு சொட்டு கண்ணீரும் உள்ளே விழுந்தது//

கனமாக இருக்கிறது நண்பரே

biskothupayal said...

உங்கள் தமிழுக்கு
உங்கள் பாதம் தொழுகிறேன்

☼ வெயிலான் said...

// செருப்பில்லாத கால்களில் இரண்டுமைல் நடந்து டவுன் பஸ்ஸுக்கு காத்திருந்து கல்லூரி வர நெஞ்சுரம் வேண்டும். வண்ண வண்ண டிபன் பாக்ஸ் கொண்டு வரும் பிகாம் வகுப்பில் தூக்குச்சட்டியில் ரசஞ்சோறு கொண்டு வர வலிமை வேண்டும். ஏழெட்டுப்பேர் சேர்ந்து பகிர்ந்து சாப்பிடுகிற போது மர நிழல் தேடி, தனியே சாப்பிடத் துணிச்சல் வேண்டும். //

காலம் பின்னோக்கி கடந்து காட்சிகளாய் கண்முன்னே......

அருமை! அருமை!

Anonymous said...

வணக்கம் சார் ... உண்மையிலேயே உங்க நடை ரொம்ப சிறப்பா இருக்குது ... ரொம்ப ஆழமான விசயத்த எளிமையா சொல்லிடிங்க ... நானும் உங்க ஊருக்காரன் தான் ... :)
பொழைப்புக்காக சென்னை வண்டு வாழ்க்கைய ஒட்டிக்கிட்டு இருக்கேன் . இருக்கன்குடி கோவிலும் வைப்பற்று மணலும் என் நெஞ்சுகுள்லையே இருக்கு . என்ன மாதிரி இந்த நகர வாழ்கையில ஒட்டாம வாழுறவங்க நெறைய பேர் ...

காமராஜ் said...

எனது பதிவுக்கு ஊக்கமளித்த
அணைத்து நண்பர்களுக்கும்
நன்றி.

venu's pathivukal said...

அன்புத் தோழர் காமராஜுக்கு

அடேங்கப்பா, எத்தனை அருமையான எழுத்து...

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்
என்றானே மகாகவி...
அந்த உண்மையின் தரிசனம் அய்யா இந்தப் பதிவு.

இயக்கத் தொண்டனின் உண்டியலில் காசு விழும்போது அவனது உள்ளத்தில்
நம்பிக்கை விழும். காசு விழ மறுக்கும் போது ஆவேசம் எழும். இரண்டும்
அவனது உணர்வுகளுக்கு உரம் போடவே.

ஒரே ஒரு மாற்றுக் கருத்து: கூலிக்காரத் தாய் எப்படி கார்க்கியின் தாய் ஆவாள் என்ற இடத்தில் தான்.

பாவெல் விலாசவின் தாயும் ஒரு கூலிக்காரனின் தாய் அல்லவா...

எஸ் வி வேணுகோபாலன்