9.7.09

குபேரன் - விளையாட்டுப்பிராயத்தைக் களவுகொடுத்தவன்








அவன் பெயர் குபேரன். வயது எனது இளையமகனின் வயது இருக்கலாம். அதாவது பத்து அல்லது பதினொன்று. அழுக்கேறிய பெரிய மேல்சட்டை. அவனது வயதுக்கு மீறிய அணுபவத்தின் குறியீடு. ஒரு தேனீர்க்கடையின் சிப்பந்தி. எச்சில் குவலைகளைக் கழுவுவான். தாகமெடுத்தவர்களின் பணியிடத்துக்குப்போய் தேனீர் விநியோகிப்பான். அவசரத்தேவைக்கு கடைக்கு போவான். அது இல்லாத நேரங்களில் கடைமுதலாளியிடம் அடியும் உதையும் வாங்குவான். அவனுக்கு கொடுக்கப்படும் ஊதியம் இருபது ரூபாய். ஒவ்வொரு இரவும் மதுவிடுதியில் மித மிஞ்சிய போதையில் திண்ண இயலாமல் கீழே போட்டுவிட்டு வரும் வறுத்த கோழியின் விலையில் நான்கில் ஒரு பங்கு.



அருகிருக்கும் அந்த புகைப்பட நிலையம் நிரந்தர வாடிக்கை தளம். தேனீர் கொண்டு வருகிற சாக்கில் அமுங்கிக்கிடக்கும் தனது குழந்தைப்பிராயத்தை தவணை முறையில் வெளியில் எடுத்துவிடுவான். அது அவனது ஆசுவாச நேரம். ஒடிந்துபோன சுழல் நாற்காலியில் உட்கார்ந்து காரோட்டுவான். பிளாஷ் விளக்குகளின் நடுவில் நின்று எதிரே இல்லாத புகைப்படக்கருவிக்கு போஸ் கொடுப்பான். காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிற வண்ணப்புகைப் படங்களுக்குள் புகுந்து வான்காவைப்போல பிரயாணம் செய்வான். குடும்பப்புகைப்படத்துக்குள் தொலைந்து போன தகப்பனின் முகம் தேடுவான்.



யாராவது கூப்பிட்டு அவன் தலபுராணம் கேட்டால் "போங்கண்ணே" என்று உதாசினப்படுத்திவிட்டு ஓடிவிடுவான். உரையாடல்களை ஒளித்து வைப்பதுபோலவே சதா நேரமும் அவனது இரண்டு பிஞ்சுக்கைகளை பிரத்தியாருக்கு காண்பிக்காமல் மறைத்துக்கொள்வான். யாரும் பார்க்காத நேரத்தில் எச்சிலைத்துப்பி அவன் விரலிடுக்குகளை செயற்கையாக ஈரப்படுத்திக்கொள்வான். எச்சில் தண்ணீரில் கிடக்கிற விளையாட்டு விரல்களில் நிரந்தரமாகக்குடிகொண்டு விட்டது சேத்துப்புண். இப்போது அதோடும் விளையாடுகிறான். "பொன்மகள் வந்தாள் பொருள்கோடி தந்தாள்" என்று அவனது மானசீக கதாநாயகன் போல பாவனை செய்து பாட்டுப்பாடுவான். அப்போது கெட்டவார்த்தையில் திட்டிக்கொண்டு இழுத்துப்போகும் கடை முதளாலி பொடதியில் சடீரென அடிப்பது அவனுக்கு ஒரு போதும் வலித்ததில்லை.

16 comments:

ஈரோடு கதிர் said...

//ஊதியம் இருபது ரூபாய். ஒவ்வொரு இரவும் மதுவிடுதியில் மித மிஞ்சிய போதையில் திண்ண இயலாமல் கீழே போட்டுவிட்டு வரும் வறுத்த கோழியின் விலையில் நான்கில் ஒரு பங்கு.//

தவிர்க்க இயலுகின்ற அதேசமயம் யாரும் தவிர்க்க விரும்பாத‌ கொடூரம் இது

ஈரோடு கதிர் said...

//குடும்பப்புகைப்படத்துக்குள் தொலைந்து போன தகப்பனின் முகம் தேடுவான்.//
வேதனையான வரிகள்

காமராஜ் said...

நன்றி கதிர்.
நேற்று மதுரைப்பக்கம் ஒரு பட்டாசு ஆலையில்
வெடிவிபத்து இறந்தவர்களில் பெரும்பாலானோர் சிறார்கள்.

மாதவராஜ் said...

பார்த்து, அறிந்த விஷயங்கள் என்றாலும், வலிக்கிற மாதிரி பதிவு செய்திருக்கிறாய் தோழா!

அகநாழிகை said...

காமராஜ்,
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
ஒரு குறும்படமாகவோ, காட்சிக் கவிதையாகவோ வடிக்கக்கூடிய விஷயம். எனக்கு இதை எப்படி அணுகுவதென்று தெரியவில்லை. காரணம் எனக்கு நீங்கள் கூறும் சிறுவன் மீது அளவிலா பரிதாப உணர்வேற்படுகிறது. இவ்வுணர்வு மட்டுமே சரியா ? அல்லது நாம் என்ன செய்ய, செய்திருக்க வேண்டும், என்ன செய்து விட முடியும் என்றெல்லாம் சிந்தனை எழுகிறது.
இயலாமையும், குற்றவுணர்ச்சியும் என்னை அழுத்துகிறது.
பகிர்விற்கு நன்றி.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

ச.முத்துவேல் said...

என்ன சொல்வது? படித்ததும் சிறிது நேரம் மீள முடியாட நிலையில்!

☼ வெயிலான் said...

களவு கொடுத்தவனை மட்டுமன்றி களவாண்டவனைப் பற்றியும் சொல்லுங்கள்.

பதிவும்,படமும் முகத்திலறைகிறது.

அன்புடன் அருணா said...

மனதை நெகிழ்த்தியது....அருமையான எழுத்து!

Nathanjagk said...

நன்று! புகைப்படங்ளில் தேடுவதும் பிஞ்சுக்​கைகளின் ஈரமும் உருக்கமாயிருக்கின்றன.

காமராஜ் said...

நன்றி என் தோழா.

காமராஜ் said...

வாருங்கள் வாசுதேவன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

காமராஜ் said...

முத்துவேல் நன்றி

நன்றி வெயிலான்
முயற்சி செய்கிறேன்

காமராஜ் said...

அருணா மேடம் நலம் தானே ?
நன்றி.

காமராஜ் said...

வருகைக்கு நன்றி ஜகன்நாதன்

ஆ.ஞானசேகரன் said...

//குடும்பப்புகைப்படத்துக்குள் தொலைந்து போன தகப்பனின் முகம் தேடுவான். //

நெஞ்சை அழுத்திவிட்டது நண்பா... தொலைந்துபோன அவன் வாழ்கைப்பற்றிய நிகழ்வு.. ஏதோ ஒன்று என் மனதை வாட்டுகின்றது. இதை நினைக்கும்பொழுதுதான் நாமும் ஏதாவது செய்யனும் என்ற உணர்வு வெளிப்படுகின்றது.

நல்ல பகிர்வு நண்பா

காமராஜ் said...

ஞானசேகரனுக்கு...

நன்றி அன்பு நண்பா.
வரவில்லையே என காத்திருந்தேன்,
நலம் தானே.