அவரும் கூட எனக்கு ப்ரியா ஸ்டுடியோவின் மூலமே பரிச்சயமானவர். ப்ரியா ஸ்டுடியோ இந்த தேசத்தின் சகல பரிமாணமுள்ள மணிதர்களும் வந்துபோகிற இடம் என்பதைப் பின்னொரு பதிவில் தெளிவு படுத்தலாம். உயர்நிலைப் பள்ளிவரை படித்துவிட்டு வறுமை காரணமாக ஒரு தனியார் முதலாளியிடம் ஓட்டுனராக ஜீவனம் கழித்த அந்த மனிதருக்கும் இந்த வலைப் பக்கத்துக்கும் சம்பந்தமிருக்கிறதா எனத்தெரியவில்லை. தனியார் முதலாளிக்கு ஓட்டுநராக இருந்த அவர் ஒரு தீவிர இடதுசாரி கொள்கை உடையவர் என்பது இங்கே குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. நானிருக்கும் நாட்களில் இரண்டொரு வார்த்தை பேசுவார். கூச்சத்தோடு வீட்டுக்குள் வந்து வெறும் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு ஒருநாள் " இதென்ன தோழர் இண்டெர்நெட்டா என்று கேட்டார் " ஆமாம் என்று சொல்லி வைத்தேன். அந்த ஆமாமில் என்னிடம் ஒரு இளக்காரம் இருந்தது. தொடர்ந்து " ப்ளாக்ஸ்பாட்டுகள் தெரியுமா '' என்று கேட்டார். என்னைத் திருத்திக் கொண்டு " ஆமா நீங்கள் பார்ப்பதுண்டா" எனக்கேட்டேன். " எப்போதாவது ப்ரௌஸிங் செண்டரில் பார்ப்பேன் " என்றார். பின்னர் அவரே எனக்கு சில வலைப்பக்கங்களை சிபாரிசு செய்தார். அந்தப் பக்கங்கள் தமிழ்மணத்தில் கொடிகட்டிப் பறக்கும் பக்கங்கள் என்பதை மட்டும் அவர் அறிந்திருக்கவில்லை. அந்த மாதப் பத்திரிகையின் விலை வெறும் ஏழு ரூபாய்தான். அவர்தான் ஒவ்வொரு மாதமும் அதைக்கொண்டு வந்த எனக்குத்தருவார். அவர் வீட்டுக்கும் எனது வீட்டுக்குமான தொலைவு குறைந்தது நான்கு கிலோமீட்டர் இருக்கும். அந்த ஒரே ஒரு புத்தகத்துக்காக மெனக்கெட்டு நாலு கிலோமீட்டர் சைக்கிள் மிதிக்கிற அவர், பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் தான் வருவார். பெரும்பாலான எனது ஞாயிற்றுக்கிழமைகள் பொதுச்சோலிகள் அபகரித்துக்கொள்ளும். அதனால் எனது துணைவியாரிடம் புத்தகத்தைக் கொடுத்துவிட்டு பணம் தாருங்கள் எனக்கேட்காமல் நின்று கொண்டே இருப்பாராம். பரஸ்பரம் இரண்டுபேருமே அவ்வளவு வெள்ளந்தி. கோட்டையிலே எனது கொடி பறக்காவிட்டாலும் எனது வீட்டுக்கூரையில் ஏற்றிவைப்பேன் எனும் நெஞ்சுறுதியில் ஒரு நுறு ஆண்டுகாலம் கழிந்து போனது. அந்த வெள்ளந்திக் கழிவில் தடம் தெரியாமல் தொலைந்துபோன எண்ணற்ற தோழர்களில் ஒருவர் கணேசன். கடந்த 22.7.2009 ல் அகால மரணம் அடைந்த செய்தி மிகத் தாமதமாக அறிந்து அதிர்ந்து போனேன். இழப்பதற்கு ஏதுமற்ற அவரிடம் மீதமிருந்த உயிரும் பறிபோனது. ஒரு நடுத்தர வர்க்கமான நான் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட போது மீண்டும் மீண்டும் எனது நினைவுகளை அலைக்கழித்தது எனது பையன்களின் எதிர்காலம். இந்தக்கணத்தில் அவர் விட்டுபோன அவரது சின்னஞ்சிறு வாரிசுகள் என்னை அலைக்கழிக்கிறார்கள். அவரோடு சில நேரங்களில் அவரது இரண்டு பையன்களும் வருவார்கள். அவர்களிடம் தோழருக்கு செவ்வணக்கம் சொல்லுங்கள் என்று சொல்லுவார். அவர்களிருவரும் முஷ்டி மடக்கி, கையுயர்த்தி செவ்வணக்கம் தோழரே சொல்லுவார்கள். ,......., . இப்போது தான் அந்தப் பாழாய்ப்போன தத்துவப்பாடல் என்னைக் கடந்து போகிறது " உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு " . சமுதாய ஏற்றத் தாழ்வுகளை அப்படியே அக்மார்க் மொண்ணையோடு ஜீரணிக்கச் சொல்லுகிற தத்துவம். பாடலை இடைமறித்துவிட்டு, நாளை போய் அந்தக் குடும்பத்தைப் பார்க்கணும். என்னோடு உடன் வருகிறேன் எனச் சொன்ன தம்பி ப்ரியா கார்த்திக்கும் எனக்கும் அந்தக் குடும்பத்தோடு ஒரு பந்தம் இருக்கிறது. வஞ்சிக்கப்பட்டவர்கள் எனும் பந்தம். குறுக்கிடுகிற எல்லாச் சுவர்களையும், கோடுகளையும் உடைத்தெரியும் நாள் வரும்.அந்த நம்பிக்கையோடு நாளை செல்வோம். செவ்வணக்கம் சொல்ல. |
31.7.09
பிரபலமாகாத ஒரு வெள்ளந்தித் தோழனுக்கு வீரவணக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
வருத்தமாகவிருக்கிறது தோழர்.
எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி மேற்செல்லும்போது இவ்வாறு இடறியும் செல்கிறது. இவற்றையும் ஜீரணித்துதான் செல்கிறது வாழ்க்கை; ஏதும் செய்யவியலாத கழிவிரக்கத்துடன்.
//கோட்டையிலே எனது கொடி பறக்காவிட்டாலும் எனது வீட்டுக்கூரையில் ஏற்றிவைப்பேன் எனும் நெஞ்சுறுதியில் ஒரு நுறு ஆண்டுகாலம் கழிந்து போனது. அந்த வெள்ளந்திக் கழிவில் தடம் தெரியாமல் தொலைந்துபோன எண்ணற்ற தோழர்களில் ஒருவர் கணேசன்.//
இந்த வரிகள் மனதை என்னவோ செய்கின்றன.
எனது அஞ்சலியையும் சேர்த்துக் கொள்ளும் படி வேண்டுகிறேன்.
http://ebooks.dinakaran.com/kungumam/ebook/2009/jul/30/default.html
அந்த தோழனுக்கு என்னுடைய விர வணக்கமும்...
//வஞ்சிக்கப்பட்டவர்கள் எனும் பந்தம். குறுக்கிடுகிற எல்லாச் சுவர்களையும், கோடுகளையும் உடைத்தெரியும் நாள் வரும்.அந்த நம்பிக்கையோடு நாளை செல்வோம். /
என்ன சொல்ல, எழுத எனப் புரியாமல் திகைத்துப் போயிருக்கிறேன்.
பிரபலமாகாத அவருக்கு என் மலரஞ்சலி...
நன்றி வடகரைவேலன்.
ஏதும் செய்ய இயலாத கழிவிரக்கம்.
உண்மை. உண்மை.
நன்றி தீபா.
யூத்புல் விகடன் பார்த்தேன்
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி கதிர். தகவலுக்கு நன்றி.
வாருங்கள் அன்புமணி.
நலம் தானே.
அருணா மேடம் நன்றி.
மழைக்கவிதை மிக மிக அருமை.
அங்கே பின்னூட்டம் இட இயலவில்லை.
ஏற்றுக்கொள்ளுங்கள் என் வாழ்த்தை
//கடந்த 22.7.2009 ல் அகால மரணம் அடைந்த செய்தி மிகத் தாமதமாக அறிந்து அதிர்ந்து போனேன். இழப்பதற்கு ஏதுமற்ற அவரிடம் மீதமிருந்த உயிரும் பறிபோனது.//
மிகுந்த கண்ணீர் அஞ்சலி.. நண்பரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதபங்கள்...
மனதைத் தொட்டது. என்கருத்துக்களை இங்கே பதிந்துள்ளேன்.
http://nganesan.blogspot.com/2008/12/tamil-in-tn-govt-sites.html
தமிழ்நாட்டில் அரசாங்கம் கணினி மையங்களை உங்கள் மறைந்த நண்பர்
போன்றவர்கள் பயன்படுத்த உருவாக்க வேண்டும்.
நா.கணேசன்
http://tamilmanam.net
Post a Comment