21.8.09

சவ்தார்க்குளம், சிங்காரக்குளம் - நிஜமும் புனைவுமான இரண்டு நீர்நிலைகள்








காற்றும் நீரும் வானும் நிலவும் பொதுவிலிருக்குது,
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது.


இப்படி ஒரு திரைப்படக்கவிஞன் பாடிவிட்டுப்போனான்.காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே என இன்னொரு திரைப்பாடலும் உண்டு. ஆனால், கிழக்குப்பக்கத்தில் மட்டுமே தெரு வைத்துக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள் ஒரு பிரிவினர். காற்றுக்கூட அவர்களை முதலில் தீண்டக்கூடாது எனும் கற்பிதம் ஒளிந்திருக்கும் நடைமுறை அது. ஆறுகள் எல்லாமே கிழக்கு பக்கம் பாய்வதால் முதலில் குளிப்பவன் நானாக மட்டுமே இருக்கவேண்டும் எனும் பெரிய்ய்ய மனசும் கூட இதற்குக் காரணமானது. இதை நீங்கள் india untouched என்கிற ஆவணப்படத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
நீர் நிலைகளில் ஆடுமாடுகள் அனுமதிக்கப்பட்ட போதும் ஒருசரார் கடுமையாகத்தடுத்து நிறுத்தப்பட்டார்கள். சமீப காலம் வரை, அதாவது இருபதாம் நூற்றாண்டின் பாதிவரையில் குற்றாலத்தில் குளிக்க, பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் அனுமதிக்கப்படவில்லை என்பது மிகுந்த அதிர்ச்சி தரும் வரலாற்றுச் சேதி. உலக அதிசயங்களில் ஒன்றாக அறிவிக்கக்கோரி மின்னணு வாக்குகோரப்பட்ட நமது பெருமை மிகு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தாழத்தப்பட்டவர்கள் மட்டுமல்ல பிற்படுத்தப்பட்டவர்களும் அனுமதிக்கப்படவில்லை. நுழைய முயன்ற மூக்க நாடார் நான்மாடக்கூடலின் ஒரு வாயிலில் வைத்துக் கழுத்தறுக்கப்பட்டார். இதியத் தொண்மங்களில் மறைந்தும் புதைந்தும் கிடக்கும் அதிர்ச்சியும் அதிலிருந்து மீண்டெழுந்த ஆச்சரியமும் சொல்லப்படாத வரலாறுகளாகும்.




அப்படியொரு பிரபலமான இடம் மராட்டிய மாநிலத்தின் மஹத் எனும் நகரில் உள்ள சவ்தார் குளம். அது நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரியமும் சுற்றுலா ஈர்ப்பும் கொண்ட நீர்நிலை. நீண்ட நெடுங்காலமாக தாழ்த்தப்பட்டவர்கள் அதை நெருங்க அனுமதிக்கப் படவில்லை. இதை எதிர்த்து ஒரு மாபெரும் போராட்டத்தை ஒருங்கிணைத்தார் அம்பேத்கர். 1927 ஆம் ஆண்டு மார்ச் மதம் 20 ஆம் தேதி சுமார் பத்தாயிரம் தாழ்த்தப்பட்டவர்களைத் திரட்டி ஊர்வலமாக அழைத்துப்போனார். ஊர்வலத்துக்கு தடைகோரி நீதிமன்றத்தை நாடினார்கள், ஊர்வலத்தை குலைக்க மறைந்திருந்து கல்லெறிந்தார்கள், பின்னர் நேரடியாகத் தாக்கினார்கள். என்றாலும் அசம்பாவிதம் ஏதும் -சத்தியாக்கிரஹமாக முடிந்தது அந்தப்போராட்டம். சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்த காலத்தில் நடந்ததால் இரு கோடுகள் தத்துவத்தின் சிறுகோடாய்க் காணாமல் போனது சவ்தார் ஏரிச்சம்பவம் .



இதையெல்லாம் இந்தக் கனிணி யுகத்தில் மீளப்பேசி முகஞ்சுழிக்க வைக்கவேண்டுமா எனும் கேள்வியும் வரும். நகரங்களில் இருந்து கொஞ்சம் ஒதுங்கி விட்ட இது இன்னும் கிராமங்களில் புதுக்கருக்கு மாறாமல் வாழ்கிறது என்பதைவெகுமக்களோடு படித்தவர்களும் தெரிந்து கொள்ளவேண்டும். இதுபோன்ற தகவல்களைத் தெரிந்துகொண்டு அப்படியே எழுத்தாளர் பவா செல்லத்துரையின் சிங்காரக் குளத்தைப் படிக்கவேண்டும்.


0



அந்த ஊரின் மதில்சுவருக்கு பின்னால் தழும்புகிற சிங்காரக்குளமும் அதில் கால் நனைக்க, கையில் அள்ளி இரண்டு மடக்கு நீர்குடிக்கிற ஆசை, அதே ஊரில் இருக்கிற இரண்டு தெருக்களின் யுகக்கனவாக இருக்கிறது. எளனித்தண்ணீர் குடித்துவிட்டு சிங்காரக்குளத்துத் தண்ணீரை ஒப்பிடும் தெருமக்கள், இந்திராக் காந்தியைப் பார்த்தது போல, காமராஜரைப் பார்த்தது போல குளத்தைப் பார்த்தவர் பெருமைப்படும் அறியாமையின் கதை இது. யார்க்கும் பொதுவெனும் பஞ்சபூதங்களில் ஒன்றான தண்ணீர் கூட உலக அதிசயங்களில் ஒன்றாகிப்போகிற அவலத்தைச் சொல்லுகிற சிறுகதை அது.

தெருவே திரண்டு போய் தண்ணீர் சுமந்துவர, நாடு பிடிக்கிற அரசர்கள் கூடத் தோற்றுப்போகும் வியூகங்களோடு உருவாகிறது ஒரு மீறல் திட்டம். வழக்கம் போலவே வாலிபப் பிராயத்தார் அதைத்தலைமை தாங்குகிறார்கள். ஊர்ச் சாவடியில், நடு இரவில் மிகுந்த கொரில்லா சிறத்தையோடு குசுகுசு வாத்தைகளில் மெருகேற்றப் படுகிறது திட்டம். பின்னர் இந்து கிறிஸ்தவப் பிரிவில் இந்தத்திட்டம் பிசுபிசுத்துப் போகிறது. அப்படியன தோல்விப் பொழுதில், ஒரு விடிகாலையில் தெருவை அதிரவைத்துவிட்டு மிதக்கிறாள் திட்டத்துக்கு முதலில் பேர்கொடுத்த அந்தத் தெருப் பெண் மல்லிகா. தலைமுறை தலைமுறையாய் கண்ட கனவினுக்கு உயிர்விலை கொடுத்து முடித்து வைக்கிறாள் மல்லிகா. அதிர்ச்சியும் சந்தோசமும் ஒரேதட்டில் கிடைக்கப்பெற்ற அவர்கள் தூக்குகிற மல்லிகாவின் உடல் தலைமுறைக் கனம் கனப்பாதானது சிங்காரக் குளம்.



0


இந்தச் சிறுகதை இடம்பெற்றிருக்கும் " நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவரை '' என்கிற பவாசெல்லத்துரையின் தொகுப்பில் மலைமனிதர்கள், பென்சன் பெரியவர், அரிதாரம் கலையாத ஏழுமலை ஜமா என இன்னும் நிறைய்ய அரிய மனிதர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கிறது. இது போக அன்பின் ஆகிருதியில் இந்த வையத்தை வசப்படுத்துகிற நட்பு அவரோடு குடிகொண்டிருக்கிறது. யாரும் பொறாமைப்படுகிற எழுத்து நடைபோலவே அவருக்கிருக்கிற நண்பர் பட்டாளமும் மிகப்பெரிது.இந்த தமிழுலகுக்கு கலை இலக்கிய இரவு என்னும் கொடையை வழங்கிய திருவண்ணாமலை ஜமாவின் இருபெரும் தாங்குதூண்கள் தோழர் கருணாவும்,பவாவும். தொண்ணூறுகளில் அவர்களைப்பற்றிய கதைகள் கேட்பதே ஒரு சுகானுபவம். அந்ததோழர்களில் ஒருவரான பவாவின் கதைகளை அறிய, நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவரை. பல அதிர வைக்கும் கதைகள் சுமக்கும் கருவரை.

10 comments:

மண்குதிரை said...

ungka ezhuththu rompa pitich chirukku sir

pakirvukkum nanri

ஈரோடு கதிர் said...

//நகரங்களில் இருந்து கொஞ்சம் ஒதுங்கி விட்ட இது இன்னும் கிராமங்களில் புதுக்கருக்கு மாறாமல் வாழ்கிறது //

கசப்பான
மறுக்கமுடியாத
வலி மிகுந்த
உண்மைதான்

அமிர்தவர்ஷினி அம்மா said...

:(

பவா செல்லத்துரையின் பகிர்வுக்கு நன்றி.

அன்புடன் அருணா said...

எதைப் பற்றி எழுதினாலும் உடனே அதைப் படித்து விடத் தூண்டும் ஆவலை ஏற்படுத்துகிறது உங்கள் எழுத்து....பூங்கொத்து!!!

Deepa said...

அவசியமான பகிர்வு.
மிக்க நன்றி காமராஜ் ஸார்!

சென்ஷி said...

மிகச்சுவையான விமர்சனம். படிக்கத்தூண்டுகிறது. சுவாரஸ்ய எழுத்துக்களின் நடை ஈர்க்கிறது.

பகிர்விற்கு மிக்க நன்றி காமராஜ்.

ஆ.ஞானசேகரன் said...

//காற்றும் நீரும் வானும் நிலவும் பொதுவிலிருக்குது,
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது. //

காற்று, நீர், வானம், நிலவு இவைகளையும் பங்குபோட ஆரம்பித்துவிட்டார்கள் நண்பா>>>

ஆ.ஞானசேகரன் said...

//சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்த காலத்தில் நடந்ததால் இரு கோடுகள் தத்துவத்தின் சிறுகோடாய்க் காணாமல் போனது சவ்தார் ஏரிச்சம்பவம் .//

ம்ம்ம்ம் இப்படியும் நடக்குது!!!

ஆ.ஞானசேகரன் said...

. //பல அதிர வைக்கும் கதைகள் சுமக்கும் கருவரை.//


பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பா

காமராஜ் said...

"என்றும் என் பதிவுக்கு அய் குதிச்சிட்டான் என் செல்லம்"


என விழுந்தவனைப்
பாராட்டும் போல் என்றும்
என் பதிவுகளுக்கு ஊக்கம் தரும்.


மண்குதிரை,
அமித்து அம்மா,
தீபா,
அருணா மேடம்,
சென்ஷி,
கதிர்,
ஞானசேகரன்

நன்றி