15.8.09

வெற்றியின் விளம்பரத்தை கலகமாக்கிய விளையாட்டு வீரன்.








ஒரு குத்தகை விவசாயினுடைய பதினோரு குழந்தைகளில் ஒருவன். நூற்றாண்டு அடிமைகளான ஆப்ரிக்க அமெரிக்க கருப்பின மக்களில் ஒருவன். அந்தப் புறக்கணிக்கப்பட்ட இனத்திலிருந்து வந்த ஜெஸ்ஸி ஓவன். 1936 பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளில் 100,200,400 மற்றும் 4x400 மீட்டர் ஓட்டங்களில் உலகசாதனை படைத்தான். நான்கு பதக்கங்களை அமெரிக்காவுக்கு வாங்கிக்கொடுத்தான். அந்த அமெரிக்கா அவனுக்கு இனவெறியைத் திருப்பிக்கொடுத்தது. ஒரு சமூகம், ஒரு அரசு கொடுத்த கருப்பு வெகுமதி அது.



பரிசளிப்பு வைபவத்தில், விழா மேடையிலிருந்த ஜெர்மனியின் அதிபர் ஹிட்லரும், அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டும் மேலைநாட்டு வழக்கப்படி கொடுக்கப்படவேண்டிய மரியாதையை நிராகரித்தார்கள். அதாவது கைகுலுக்குவதைத் தவிர்த்தார்கள். வாழ்வின் கொடிய தடைகளான வறுமை, மற்றும் பற்றாக்குறையால் அடிக்கடி நோய்வாய்ப்பட்டுக் கிடந்த தெருச்சிறுவன் எல்லாவற்றையும் தாண்டி உலக சாதனை படைத்தான். பரிதாபமாக இனவெறியால் உடனே தோற்கடிக்கப்பட்டான்.



அதுமட்டுமல்ல தொடர்ந்து உள்நாட்டு பந்தயங்களில் சக பந்தய வீரர்கள் ஜெஸ்ஸியோடு போட்டியிட மறுத்தார்கள். இந்தப் புறக்கணிப்பால் நொந்துபோன ஜெஸ்ஸி ஓவன் மனிதர்களோடு போட்டி போடுவதில்லை எனும் புரட்சி முடிவை அறிவித்தான், அமலாக்கினான். ஆம் குதிரைகள் மற்றும் கார்களோடு போட்டியிட்டு ஓடினான். இனவெறிக்கு எதிராக ஒரு விளையாட்டு வீரனின் கலகமானது இந்த நிகழ்வு. நடைமுறைச் சாத்தியங்களற்ற இந்த சாகச அறிவிப்பை நெடுநாள் கடைப்பிடிக்க முடியாமல், வயிறு அவனை உடற்பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளனாக்கியது.



ஆனால் அவன் ஆரம்பித்து வைத்த இந்த எதிர்ப்பும் கலகமும் வேர்பிடித்து முளைத்தது. அவன் தொடங்கிய தொடர் ஓட்டத்தில் டாமி ஸ்மித்தும், ஜான் கார்லோசும் இனைந்துகொண்டார்கள் ( 1968 ஒலிம்பிக்) . பின்னாளில் ஓவனுக்கு அமெரிக்க வரலாறு சிலையையும், தபால் தலையையும் செய்துகொடுத்தது. அது மட்டுமா பின்னாளில் ஒரு கருப்பினத்தவனை ஜனாதிபதியுமாக்கியது அமெரிக்கா.

11 comments:

ஈரோடு கதிர் said...

//வயிறு அவனை உடற்பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளனாக்கியது.//

பெரும்பாலும் கடைசியில் வயிறு வெல்கிறது

வலிமையான ஆக்கம்

Deepa said...

கொடுமை. கறுப்பினத்துக்கு மனித குலம் செய்துள்ள கொடுமைகளை அறியும் போதெல்லாம் மனம் கனக்கிறது.
பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

நல அறிமுகம்

ஆ.ஞானசேகரன் said...

///அந்த அமெரிக்கா அவனுக்கு இனவெறியைத் திருப்பிக்கொடுத்தது. ஒரு சமூகம், ஒரு அரசு கொடுத்த கருப்பு வெகுமதி அது.///

ம்ம்ம்ம்ம்...

ஆ.ஞானசேகரன் said...

நல்லதொரு பகிவு தோழரே

காமராஜ் said...

நன்றி தோழர் கதிர்

காமராஜ் said...

நன்றி தீபா

காமராஜ் said...

வருங்கள் வணக்கம் அக்னிப்பார்வை

காமராஜ் said...

வணக்கம் ஞானசேகரன்
அன்புக்கும், நன்றி

அமிர்தவர்ஷினி அம்மா said...

உணர்ச்சிகரமான பதிவு, பகிர்வுக்கு நன்றி

venu's pathivukal said...

அருமை காமராஜ் அருமை. அடேங்கப்பா என்ன ஆளுமையான மொழி.
துயரமான ஒரு புறக்கணிப்பு வரலாற்றுத் தடத்தை எத்தனை அசாதாரணமான எளிமையில் சொல்லி விட்டீர்கள்...

வாழ்த்துக்கள்

எஸ் வி வேணுகோபாலன்