2.6.10

மொண்டி அருவா.

காப்பிக்கலரும், கருப்புக்கலரும் குழைந்த
கைப்பிடியில்லா ஒரு ஆயுதம் இருக்கிறது.
ஊரில் அதைத் துருப்பிடித்து போனது
என்று சொல்லுவார்கள்.

எங்கோ விறகொடிக்கப்போகையில்
கண்டெடுத்தது என்பதைத்தவிர
அதன் தோற்ற வரலாறு ஒன்றுமில்லை.

யாருக்கும் இரவல் கொடுக்கச்சம்மதிக்காத
எனது தாத்தாவின் விருப்ப பிராணி.
பேரீச்சம்பழக்காரரிடம் போட்டுத்தின்ற
நாளில் எனக்கு விழுந்த வசவும், அடியும்
இன்னும் தித்திப்பாய்க் கசக்கிறது.

வில்லும், பம்பரமும், கிட்டிப்புல்லும்
விளையாடக் கொடுத்தது அதை வைத்துத்தான்.

எங்க வீட்டுக்கூனக் கெழவிக்கு ஊனுகம்பும்
ஆடுமேய்க்க தொரட்டிக்கம்பும்
செதுக்கித்தந்த உற்பத்திக்கருவி.

எதுத்தவீட்டு ஏகலைவத்தாத்தன்
காக்காவலிப்புக்கு அடிக்கடி
கையில்கொடுக்கிற மருத்துவக்கருவி.

வேலையில்லாத காலங்களில்
வேலிக்காடுகளைச்சாய்த்து
விறகாக்கி விற்றுத்தரும்
சம்பாத்தியக் கருவி.

குலசாமி கெழவனாருக்கு
பொங்க வைக்கயில்
பூவோடும், மஞ்சளோடும்,
பூஜைத்தேங்காயோடும்
மங்களமாகப் பயணப்படும்.

யாராவது மொண்டி அருவா
என்று சொல்லிவிட்டால்
ஆங்காரத்தோடு சண்டைக்குப்போவார்.

15 comments:

ராம்ஜி_யாஹூ said...

nice post nga

க.பாலாசி said...

ஒவ்வொரு (வீட்டு) துருபிடித்த அருவாளுக்கும் ஒரு வரலாறு இருக்கும்....அதுவே இங்கு அழகாய்....

க. சீ. சிவக்குமார் said...

நட்சத்திரப் பதிவர் ஆனது மகிழ்வளிக்கிறது. அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தது உங்கள் மாண்பைக் காட்டுகிறது. அதை ‘அணைவருக்கும்’ என எழுதியிருந்தது உங்கள் உணர்ச்சிவசத்தை அல்லது அன்பின் அழுத்தம் மற்றும் நீட்சியைக் காட்டுவதாக இருந்தது.

காமராஜ் said...

க. சீ. சிவக்குமார் said...

// நட்சத்திரப் பதிவர் ஆனது மகிழ்வளிக்கிறது. அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தது உங்கள் மாண்பைக் காட்டுகிறது. அதை ‘அணைவருக்கும்’ என எழுதியிருந்தது உங்கள் உணர்ச்சிவசத்தை அல்லது அன்பின் அழுத்தம் மற்றும் நீட்சியைக் காட்டுவதாக இருந்தது.//


இந்தப்பின்னூட்டம் உங்களின் இங்கித மாண்பைக்கூட்டுகிறது.

பொதுவாகவே இந்த லகர,னகரக் குழப்பங்கள் எனக்கு வரும்.கணினித்தட்டச்சில் கூடுதலாகவே வருகிறது.

vasan said...

'மொக்கை அருவ‌ளால்' சீவிக்கொடுத்த‌ இள‌நொங்கு
ம‌வுஸ் பெருவிர‌லால் நோண்டி, க‌ண்களால் ப‌ருகி ருசித்தேன்.
ஊரில் க‌ல‌வ‌ர நேர‌ம், அப்பா செய்து வாங்கிய‌, "வாங்க‌ருவா"
காலம் மாறிய‌பின், நான் காட்டுக் க‌ருவ‌ம‌ர‌ம் வெட்ட‌ தூக்கிய‌து
நின‌வோடையாய்.

ஈரோடு கதிர் said...

//பேரீச்சம்பழக்காரரிடம் போட்டுத்தின்ற
நாளில் எனக்கு விழுந்த வசவும், அடியும் //

ஆஹா... நீங்களுமா...
நாங்கெல்லாம் மாட்டு வண்டியோட பல ஸ்பேர்பார்ட்ஸ ஐஸ்க்கு அடகு வச்சோம்

.........

மற்றபடி இந்த மாதிரி சாமான்கள் குடும்ப உறுப்பினராகவே... எங்கள் வீட்டில் கடப்பாரை மம்மட்டி இப்படித்தான்

பா.ராஜாராம் said...

இப்ப கவிதையிலும் கை பிடிச்சு கொண்டு போய்,

'உலகத்தை' காட்டுகிற வித்தையை தொடங்கியாச்சா? :-)

மிக அருமை காமு!

இராமசாமி கண்ணண் said...

அருமை காமு சார்.

வானம்பாடிகள் said...

மொண்டி அருவா! ஹ்ம்ம்ம். எத்தன கத சொல்லுது. தோழனா, நண்பனா, வேலையாளா, சாமியா..பாரதிக்கு கண்ணன் மாதிரி..நிறைவா இருக்கு காமராஜ்:)

manjoorraja said...

மொண்டி அருவாளா இருந்தாலும் நல்லாவே வெட்டியிருக்கு.


வாழ்த்துகள் நண்பரே.

காமராஜ் said...

உங்கள் புரிதலுக்கு வந்தனம் மஞ்சூர்ராசா

காமராஜ் said...

ராம்ஜி,
பாலாஜி,
கசீ,
கதிர்,
பாலா,
ராமசாமிக்கண்ணன்,
பாரா,
வாசன்சார்
எல்லோரின் அன்புக்கும்
நன்றி.

இது ஒரு வருடத்திற்கு முன்னாள் எழுதிய மீள்பதிவு.

காமராஜ் said...

எதன் பொருட்டும் யாரையும் காயப்படுத்தக்கூடாதென்பதே என் ஆசை. அஃறினையான அருவாளும் வீட்டின் ஓர் அங்கம் என்பது தான் அந்தக்கவிதை.தட்டையான கவிதை.
வேறு ஏதும் அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டாம் மஞ்சூர்ராசா.

seemangani said...

எங்க ஊர்ல ஒருவழக்கு இருக்கு அண்ணே...யாராவது பிரமாதம எதாவது செஞ்சுட்டா ''அப்டி போடு அருவாள''அப்டின்னு... சொல்லுவோம் எனக்கும் அப்டிதான் சொல்ல தோணுது...நல்லா இருக்கு அண்ணே...கிராமத்து நினைவுகளோடு...''அப்டி போடுங்க அருவாள''...

+Ve Anthony Muthu said...

மிக அற்புதமான கவிதை அண்ணா.

அப்படியே என் இளம் பிராயத்து கிராம வாழ்க்கையை கண்முன்னால் திரைப்படமாய் பார்த்தது போல் இருந்தது.

மிக அற்புதமான இலக்கியம்.

அற்புதம், அற்புதம் என்று நிறைய முறை சொல்லணும் போல இருக்கு.

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.