28.6.10

ஒரு தூங்குமூஞ்சியும்,செயற்குழுக் கூட்டமும்.

அப்போதுதான்  தொழிற்சங்கத்தின் தீவிர உறுப்பினராக அறியப்பட்டேன்.பயிற்சிவகுப்புகள்,ஆர்ப்பாட்டங்கள்,மாநாடுகள் எல்லாவற்றிலும் பங்குபெறுகிற ஆவல் மிகுந்த நாட்கள் அவை. பின்னர் செயற்குழு உறுப்பினராக அறியப்பட்டேன்.வெறும் கொடியும் கோஷங்களும்,வேலை நிறுத்தங்களும், சம்பள உயர்வுமாக அறியப்படுகிற தொழிற்சங்க நடைமுறைகள் இன்னும் பொது உலகம் சரியாக அறியாதது. அவ்வளவு ஏன், கிட்டத்தட்ட இருபது வருடங்கள் அதற்குள் புழங்கிக் கிடக்கிற எனக்கும் புரியயாதது செயற்குழுக் கூட்டங்கள். முன் இரவு நேரங்கள் தொடங்கும். அல்லது ஞாயிற்றுக்கிழமை பகல் பதினோறு மணிக்குத் துவங்கும். வீடுகளில் பொதுவாக 'மீட்டிங்குக்குபோயிருக்காக' சொல்லிவிடுவார்கள்.(இதைச் சொல்லுகிற 'மாநாட்டு நாயக்கர்' என்கிற சிறுகதை முடிகிற தருவாயில் இருக்கிறது).பெரும்பாலும் இரவு நேரங்கள் நடக்கும் விவாதங்களில் தாக்குப் பிடிக்காமல் தூக்கப்பேய் பீடிக்கப்பட்டவனாய் எனது தலை எனக்குத் தெரியாமலே ஆடும். அதைச் சமாளிக்கிற உத்தியாய் கைவிரல்களால் தாளம் போடுகிற மாதிரி ஒரு பாவனை செய்துகொள்வேன்.

முழித்திருக்கிறவர்கள் நான் கண்ணை மூடிக்கொண்டு கேட்கிறேன் அல்லது சிந்திக்கிறேன் என்பதாக நினைக்கவேண்டும் என்கிற அலிபையை உருவாக்குகிற செயல் அது. ஆனாலும் எல்லோருக்கும் 'பயல பேய் பிடிச்சு ஆட்டுது' என்று தெரிந்துவிடும். 'தோழா போய் முகத்தக்கழுவிட்டு வா' என்று கடுகடுப்பாய் மாது சொல்லும்போது கையுங் களவுமாய் பிடிபட்டுப்போன குற்ற உணர்ச்சி வரும்.இல்ல சமாளிச்சிரலாம் என்று பதில் சொல்லும் ரோஷம் ரெண்டு நிமிஷத்தில் தவிடு பொடியாக மீண்டும் தலை மீண்டும் வெடுக் வெடுக்கென ஆடும்.அப்போது சம்பள உயர்வில் இருக்கிற குளறுபடிகளை ஈக்வேசனை சுட்டிக்காட்டி பிச்சமுத்து விளக்கிக்கொண்டிருப்பார்.அல்லது அகில இந்திய சங்கத்தின் முடிவுகளை கிருஷ்ணகுமார் அறிவித்துக்கொண்டிருப்பார்.ஆனால் என்னை அந்த பாழாய்ப்போன சாத்தான் வந்து ஆட்டுவிக்கும்.

எனது கிராமத்தில் சவுத் இண்டியன் பாப்திஸ்ட் மெசின் சார்பில் முழு இரவு ஜெபக்கூட்டம் நடக்கும். சின்ன வயசில் வாத்தியாருக்குப் பயந்து அங்குபோகனும். பாட்டுப்படும்போதும்,கதைகள் சொல்லும்போதும் விழித்திருப்பேன்,ஆனால் பிரசங்கங்கள் என்னைத் தாலாட்ட நான் தூங்கிப்போய் விடுவேன். அப்போதும் பைபிளம்மா என்கிற மேரிப்பாட்டி என்னை இப்படித்தான் திட்டும் 'ஒன்னய சாத்தான் பிடிச்சி ஆட்டுது'.ஏவீஸ்கூல்  ராமச்சந்திரனும்,ராமகிருஷ்ணன் சாரும் சயின்ஸ் பாடம் நடத்தும்போது ஒரு நல்ல கனவோடு தூங்கிப் போய்விடுவேன்.அதுபோலவே கல்லூரியில் எக்கனாமிக்ஸ் நடத்தும் பேரா.லிங்கசாமி. அவரைப் பார்த்தவுடனே எனக்குத்தூக்கம் வந்துவிடும்.நிற்க வைத்து மானத்தை வாங்குவார்கள்.அதுபோலத்தான் இந்த செயகுழுக்கூட்டங்களும். ஒவ்வொரு முறையும் எனக்கு ஒரு பள்ளி இறுதித் தேர்வைப் போலப் பயமுறுத்திக்கொண்டு வரும்.

ஒரு நாள் விருதுநகரில் கூட்டம் நான் முருகவேல்,கிருஷ்ணன் மூன்று பேரும் அழைக்கப்பட்டிருந்தோம்.அன்று மாலையே கிளம்புகிற நேரம்,இடம் எல்லாம் சொல்லிவிட்டார் கிருஷ்ணன்.நான் பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன் இருட்டுப்பக்கம் இருந்து வந்த கிருஷ்ணன் நீங்கள் பேருந்தின் முன்பகுதியில் உட்கார்ந்து கொள்ளுங்கள். நான் நடுப்பகுதி. முருகவேல் கடைசிப்பெஞ்சு என்று குசு குசுத்துவிட்டுப் போய்விட்டார். விருதுநகரில் இறங்கியதும் நீங்க ரயில்வேபீடர் ரோடு வழியா வாங்க, நான்மெயின்ரோடு வழியா,முருகவேல் கந்தபுரம் தெருவழியா என்று சொல்லிவிட்டு மீண்டும் மறைந்து விட்டார். எனக்கு என்ன நடக்கப்போகுதோ என்கிற பயமும் ஆவலும் ஒருசேர வந்துவிட்டது.பலகோணங்களில் யூகித்துவிட்டு இறுதியில், அடடா ஒருவேளை இன்னைக்கே ஆயுதம் தாங்கிய போராட்டம் ஆரம்பிச்சிருச்சுரும் போல இருக்கே வீட்லவேற சொல்லாம வந்துட்டமே என்கிற நமைச்சல் இருந்தது. கல்யாணம் ஆகி ஆறுமாசம் கூட ஆகலையே,அவள் என்ன செய்யப்போகிறாளோ என்கிற பதைபதைப்பு இருந்தது.தெருவில் எதிர்ப்படுகிற எல்லோரையும் சந்தேகத்தோடு பார்த்தேன்.எந்த நிமிடத்திலும் அசம்பாவிதம் நிகழ்ந்துவிடும் பரபரப்பு இருந்தது.கூட்டம் நடந்த இடத்துக்கு போய் கூட்டம் ஆரம்பித்து பாடுபழமைகளைப் பேச ஆரம்பித்ததும் ஏமாந்து போய் தூக்கம் வந்துவிட்டது.

செயற்குழுவின் பதினைந்து பேரில் பணிரெண்டு பேர் சிகரெட் குடிக்கிறவர்களாக இருப்பார்கள்.தோழர் சாமிநாதன் என்னைவிட ரொம்ப இளையவன்.அவன் வளர்த்திருக்கிற தாடி,அவன் குடிக்கிற சிகரெட்,அவனது பேச்சுத்தொணி எல்லாம் என்னை 'நீ ஒரு நாளும் ஒரு தீவிர தொழிற்சங்கவாதியாக முடியாது' என்கிற மாதிரிக் கேலிசெய்யும்.அதுபோலவே முருகவேல்,கிருஷ்ணன்,சோமு போன்ற தீவிர தொழிற்சங்கவாதிகள் என்னையும் மாதுவையும் விளையாட்டுப் பிள்ளைகள் என்பார்கள். இந்த மூன்று பேரில் சோமுவிடம் கூட ஏதாவது பேசிவிடலாம். கிருஷ்ணன், முருகவேல் இருவரிடமும் எது குறித்தும் பேச முடியாது. எல்லாவற்றையும் மறுதலித்து அல்லது எதிர் நிலையிலிருந்துதான் பேசுவார்கள். சூரியன் கிழக்கே உதிக்கிறது என்று சொன்ன மறுகனமே புரியாமப் பேசாதீங்க,நீங்க மேற்குப்பக்கம் நிற்பதனால் தான் அது கிழக்கே இருக்கிறது என்று சொல்லுவார்கள். அந்தானிக்கில சுவத்துலபோய் ரெண்டுதடவ முட்டிவிட்டு வீட்டுக்குப் போய்விடுவேன்.

ஒரு முறை, வேறுகிளைக்கு மாறுதல் வேண்டும் என்கிற கோரிக்கையோடு ஒரு தோழர் சாத்தூருக்கு வந்திருந்தார்.அவரது குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் வயதான தாய் தந்தையருக்கு உடம்புக்கு முடியவில்லை,பணப்பிரச்சினை,குழந்தைகள் சரியாகப் படிக்கவில்லை.இந்த பிரச்சினைகளோடு தினம் அறுபது கிலோமீட்டர் பயணம் செய்து கிளைக்குப் போனால் கிளையில் மேலாளர் புரிதலில்லாமல் எதெற்கெடுத்தாலும் சண்டைக்கு வருகிறார் இப்படியெல்லாம் சொல்லிவிட்டு.'உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு ரெண்டுபக்கமும் இடி' என்கிற பழ மொழியைச் சொன்னாராம். 'எது எப்பிடியோ ஓசை வருதில்ல' என்றாராம் தொழிற்சங்க சுப்புடு.

மேடைப் பேச்சென்றால் கரகரத்த குரலில் உச்ச ஸ்தாயியில், முஷ்டி உயர்த்திக்கொண்டு'ஏற்றமிகு ஏதென்ஸ் நகரத்து எழில் மிகு வாலிபர்களே,நாற்றமெடுத்த சமுதாயத்தை நறுமணம் கமழ்விக்க இதோ சாக்ரடீஸ் அழைக்கிறேன்'என்று பேசுவதுதான் என்கிற நம்பிக்கை மூடியிருந்த காலம்.அதை உடைத்துப்போட்டு ஒரு நிகழ்
கலையாக்கி மேடையை தமிழகமெங்கும் மேடைகளை  அபகரித்துக் கொண்டிருந்த கிருஷ்ணக்குமாரோடு ஆட்டுக்குட்டி போல அழைந்தோம் நானும் மாதுவும். அவர்தான் எங்கள் சங்க செயலாளர். அப்போது எங்கள் சங்க கூட்டங்களில் வாழ்த்திப் பேச நன்மாறன் வருவார். அவர் வந்துவிட்டால் சங்கவித்யாசமில்லாமல் தோழர்கள் கூடிவிடுவார்கள்.அரைமணி நேரம் மேடையில் பேசினால் வயிறு புண்ணாகிப்போகும்.சரவெடியாய்ப் பொருத்திப் போட்டுக்கொண்டே போவார்.

முதன்முதலில் 1985 ஆம் ஆண்டு எங்கள் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசும்போது முன்வரிசையில் உட்கார்ந்து சத்தம் போட்டு சிரித்துக் கொண்டிருந்தேன்.ஒருவர் வந்து தலைவர் கூப்பிடுகிறார் என்று சொல்லி என்னை வெளியே அழைத்துக்கொண்டு போனார்.அங்கு உட்கார்ந்திருந்த அவர் 'ஒரு தொழிற்சங்கவாதி இப்படி சாமான்யன் போல சத்தம்போட்டு சிரிக்கக்கூடாது' என்று கண்டிப்பான குரலில் சொன்னார். எனக்கு அவமானமாகப் போய்விட்டது.தப்புச் செய்துவிட்டோ மே என்கிற குற்ற உணர்ச்சி மேலிட்டது.இனி உட்கார்ந்து தொழிற்சங்க சட்டதிட்டங்களை மணனம் செய்துவிட்டுத்தான் மறுவேலை என்கிற வெறிவந்தது. ரெண்டு நாள் மனசு சரியில்லாமல்  மூன்றாம் நாள் நடந்ததை மாதுவிடம் சொன்னேன்,அவன் கிருஷ்ணக்குமாரிடம் சொன்னான் ரெண்டு பேரும் குதித்துக் குதித்துச் சிரித்தார்கள்.

உடனிருக்கிற மனிதரை தனதுறவாய்,தோழனாய்ப் பாவிக்கிற உணர்வும் ,அவர் துன்பம் கண்டு வதங்கும் மனசும்.அவற்றை ஒருங்கிணைக்கிற சரடாகச் சங்கமும் இருக்கிறது.அங்கு  எல்லாச் சட்டதிட்டங்களையும் மீறிய மனிதாபிமானம் இருக்கிறது. அங்கு புழங்குகிற தோழர்களின் இன்ப துன்பங்களோடு களத்தில் பங்கெடுக்கிற போது எழுத்தில்வராத நியதிகளாய் புதுப்புது அனுபவங்கள் வந்துசேரும். அப்போது இதையெல்லாம் இரவு நேரங்களில் சாவகாசமாக உட்கார்ந்து நினைத்துச் சிரிக்கலாம். காலம்தான் எல்லாவற்றிற்குமான மருந்து,காலம் தான் எல்லாவற்றிற்குமான தீர்வு. இதோ தொழிற்சங்கத்துக்கு எதிர் முகாமில் இணைந்து விட்ட அந்த கிருஷ்ணனின் அந்த பழய்ய ஞாபகங்கள் மலரும் நினைவாக இருக்குமா?  எப்படியிருக்குமெனத் தெரியவில்லை.

13 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

தோழர்களின் பாணியே தனிதான்..

செ.சரவணக்குமார் said...

அருமையான நினைவுப் பகிரல் காமு அண்ணா.

ராசராசசோழன் said...

நல்ல பதிவு....வாழ்க்கையின் சில நிமிடங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

இராமசாமி கண்ணண் said...

கை பிடிச்சு சங்க கூட்டங்களுக்கு அழைச்சுட்டு போன மாதிரி இருக்கு காமு சார்.
ஒரு பதிவு போட்ருக்கேன்
http://satturmaikan.blogspot.com/2010/06/blog-post_27.html
டைம் கிடைக்கிறப்போ வந்து படிங்க.

apnaafurniture said...

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
www.apnaafurniture.com

வானம்பாடிகள் said...

//அதைச் சமாளிக்கிற உத்தியாய் கைவிரல்களால் தாளம் போடுகிற மாதிரி ஒரு பாவனை செய்துகொள்வேன்.//

நாம விரல்கோர்த்து நெத்திக்கு ஒரு கூடாரம் முட்டுக் கொடுத்து வெத்துப் பேப்பர பார்த்துக்கிட்டே தூங்கிருவமில்ல. தலையும் ஆடாது:)).

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் நண்பா.. இயல்பாய் சொல்லியுள்ளீர்கள்..

நல்ல பகிர்வு

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

அம்பிகா said...

\\ சூரியன் கிழக்கே உதிக்கிறது என்று சொன்ன மறுகனமே புரியாமப் பேசாதீங்க,நீங்க மேற்குப்பக்கம் நிற்பதனால் தான் அது கிழக்கே இருக்கிறது என்று சொல்லுவார்கள். அந்தானிக்கில சுவத்துலபோய் ரெண்டுதடவ முட்டிவிட்டு வீட்டுக்குப் போய்விடுவேன்.\\
இது வேறயா.?

அம்பிகா said...

சொல்ல மறந்து விட்டேன்
அருமையான பகிர்வு.

VijayaRaj J.P said...

எனக்கு பல சமயங்களில் தூக்கம்
வருவதில்லை.

இனி செயற்குழு கூட்டங்களுக்கு
என்னையும் அழைத்து செல்ல
முயற்சி செய்யுங்களேன்.

சந்தனமுல்லை said...

மிகவும் ரசித்து வாசித்தேன். ஒரு படம் பாக்கிற எஃபெக்ட்...உங்கள் இடுகையை வாசித்த போது! விஜயராஜ் அவர்களின் மறுமொழி சட்டென்று சிரிக்க வைத்துவிட்டது! :-)

அன்புடன் அருணா said...

/'எது எப்பிடியோ ஓசை வருதில்ல/
அதுசரி!!!

Anonymous said...

ஹை! கந்தபுரம் தெரு! :)