21.6.10

கடவுளைக் காப்பாற்றியவன்.

அவர் குறி சொல்லும் போது ரொம்பப் பயமாக இருக்கும். பற்களை நற நற வெனக்கடித்துக் கொண்டு கூரை முகட்டைப்பார்த்து தலையை ஒரு உலுக்கு உலுக்கி

 " தாயே சக்கம்மா என் கொட்டாரடி காத்த புண்ணியவதி தலமேல வந்திறங்கு
  அடங்காத கருப்பன், கம்பெடுத்தால் அரக்கன் அருவாள கீழபோட்டு கிட்டவாடா
  வெள்ளக்குதிர ஏறி வீச்சருவா கையிலேந்தி விளையாட ஓடிவாட சுடலமாடா
  அள்ளி முடிச்சு, ஆங்காரம் எறக்கி வச்சி ஈஸ்வரியே எந்தாயீ  ஈசானமூலயில வந்து நில்லு
  தொட்டது தொலங்கும், தோட்டம் வச்சாக்காய்க்கும் எனப்பெத்த மகராசி முத்தரசி முன்னவாம்மா
  மார்மேலும் தோல்மேலும் தூக்கிவளத்து குருவுங்கொலையும் குடுத்த எங்கய்யா எல்லாத்தையு அடக்கி வையி "

இரவு பத்து மணிக்கு சரணமுழக்கம் ஆரம்பிக்கும். எட்டு மணிக்கே ஊரடங்கிப்போகும் கிராமத்தில் குறிசொல்லும் ராசாச்சின்னயாவின் உடுக்கையடி கொலைப்பதற வைக்கும். இருந்தாலும் பூஜை முடிந்து திங்கப்போகும் தேங்காச்சில்லும் வாழைப்பழமும் பயத்தை ஓரங்கட்டும்.

குறிபார்க்க வருபவர் முதல்நாளே சொல்லிவிடவேண்டும். அன்றைக்கு காலையில் இருந்து பச்சைத்தண்ணி பல்லில் படாது விரதமிருப்பார். சாணிமெழுகி சாம்பிராணி புகையவிட்டு வீடு சுத்தப்படுத்த வேண்டும். அணைக்கரைப்பட்டி பொத்தையக்குடும்பனிடம் ரெண்டு பாட்டில் சாராயம் வாங்கிவைக்கச் சொல்லிவிடுவார். பூஜைசாமன்கள் எடுத்து அடுக்கிவைக்க, அருள்வந்து தடுமாறுவார் அப்போது தாங்கிப்பிடிக்க நான்கு எளவட்டங்கள் வேண்டும். பூஜை முடிந்து கொடுக்கும் கூவாத சேவலும் காசும் மறுநாளைக்கு அரிசிச்சோறும் கறிக்குழம்புமாகும்.

தாட்டிக்கமான சாதிக்காரர் வீடுகளுக்கு கடவுள்கள் கூட டோர்டெலிவரிதான். ராசாச்சின்னையா சிலநேரம் வெளியூர் போய் குறிசொல்லுவார் லீவு நாட்களில் நானும் போவேன். பெத்துரெட்டிபட்டி ராமசாமி நாயக்கரின் வண்டிச்சக்கரம் காணாமல்போனது. அவர்கள் அதைச் சொல்லமல் விடுகதையை போல  ஒரு பொருள் களவு போய்விட்டது குறி பார்க்கவேணுமென்று சொல்லி  மூணு நாளாச்சு. அத்தனை சாமிகளுக்கும் சேர்ந்து முக்கி முக்கி உடுக்கடிச்சாலும் களவுபோன பொருள் என்னவெனக் கண்டுபிடிக்கமுடியாமல் திணறலெடுத்துவிட்டது ராசாச் சித்தப்பாவுக்கு. பெத்து ரெட்டிபட்டி, ஓடைப்பட்டி, கம்மாப்பட்டி, கரிசல்பட்டி, செவல்பட்டி, மேட்டுப்பட்டி, ஒத்தையால் போன்ற ஊர்கள் கரிசல் விவசாயம் பெருத்த நாயக்கமார்களின் ஊர்கள். இங்கு குறி தோத்துப் போனால் பிறகு வருசம் முழுக்க  குண்டிவழியா வேர்வை வடிய கல்லுடைக்க, கருதறுக்க லோல் படவேண்டும். மூன்று தலை முறையாய் பார்த்த சோசியத் தொழில் கெட்டுப் போகும். இது அவருக்கு வாழ்வா சாவா பிரச்சினை.

மூன்றாம் நாள் ஒரு பீடியைப்பத்த வைத்துக்கொண்டு காலாற நடந்து போய் படப்படியில் ஒண்ணுக்கிருந்தார்.
திரும்ப விறு விறுவென வந்தார். தீர்மானமாக உட்கார்ந்தார். ஒரு பத்துநிமிடம் காட்டப் பத்தி கரையப்பத்தி பாட்டுப் பாடினார்,
அனுபவம்,சமூகம்,குறிபார்த்தல்
'' யாரப்பாத்து சோதன பண்றீங்க இந்தச் சொடல மாடங்கிட்டயா வெளாட்டுக் காற்றீங்க ன்னு "

ஒரு அதட்டுபோட்டார்.

" காணாமல் போனது வலது பக்க வண்டிச்சக்கரம், எடுத்துட்டுப் போன கொம்பனுக்கு மேல்திசையில ஊரு, மேலே ஏதுங் கேள்வி இருந்தாக் கேளு "

சொல்லி முடித்ததும் ஆடிப்போனார் ராமாசாமி நாயக்கர். கூடப்போன நாங்களூம் ஆடிப்போனோம்.
ஊரு வந்து ஒரு வாரம் சாராயம்தான், வெடக்கோழி தான். ஆவல் அடங்காமல் ஒருநாள் கேட்டபோது,
தொழில் ரகசியம் வெளியே சொல்லாதே என்ற பீடிகையோடு சொன்னார். வைக்கோல் படப்புக்கு மறுபக்கம் பேன் பார்த்துக் கொண்டிருந்த உள்ளூர்ப் பெண்களிருவர் பேசிக்கொண்டது அவரது காதில் விழுந்ததாம்.

 "சாமி சுத்து சுத்து ண்ணுதா, செப்பும் வண்டிச்சக்கர ண்ட்டா செப்பும் "
இவ்வளவு கெடச்சா போதாதாப்பா.அதுக்கப்புறம் சித்தப்பன் ஆடித் தொலச்சிறமாட்டேனா என்று சொன்னார்.

'அப்போ யாருவேண்ணா குறி சொல்லலாமா சித்தப்பா'
'ஒழுங்கா படிப்பக்கவனி'
'அப்போ சாமி இருக்கா இல்லியா'
'லூசுப்பெல லூசுப்பெல'

சொல்லிவிட்டு,அணைந்துபோன பீடியை மீண்டும் பற்றவைத்தார்.காலச்சக்கரத்தின் அடியில் சிக்கிக்கொண்டு நசிந்துபோனது விவசாயத் தொழில் மட்டுமல்ல, பண்ணையடிமை முறையும். தீப்பெட்டி ஆலையின் காவலராகிக் காலம் தள்ளும் ராசாî சித்தப்பாவின் முகதைச்சுற்றி இப்போதும் வட்டமிடும் பீடிப்புகையில் என்ன நினைவுகள் மிதக்கும்.

13 comments:

க.பாலாசி said...

எவ்வளவு சொல்கிறது இந்த அனுபவம்... இன்றைக்கும் கிராமத்துக்குள்ள குறி சொல்ற மனுஷனுங்க இருக்காங்க..ஏதோவொரு நம்பிக்கையில மக்களும் அவர்களை நம்பி இருக்கத்தான் செய்யுறாங்க. இது மூடமான நம்பிக்கையின்னு சொல்றவர்கூட துண்டவிரிச்சிப்போட்டு சாமிக்கு எப்ப அருள்வரும்னு காத்துகிடக்கிடக்கிறதப்பத்தி என்ன சொல்றது. ம்ம்..

//'அப்போ சாமி இருக்கா இல்லியா'
'லூசுப்பெல லூசுப்பெல'//

இதுதான் உண்மையோ!!!

நேசமித்ரன் said...

காமு சார்

மண்வாசம் வீசும் கதை. பொதிந்து இருக்கும் வெளிச்சம் உணரக் கிடைத்து விட்டால்தான் உய்து விடுமே சமூகம் :)

ஆனால் மனுஷனுக்கு எதாச்சும் போதை தேவைப்படுதுல்ல

செ.சரவணக்குமார் said...

அருமையான எழுத்து காமு அண்ணா.

//தாட்டிக்கமான சாதிக்காரர் வீடுகளுக்கு கடவுள்கள் கூட டோர்டெலிவரிதான். //

மறுக்க முடியாத உண்மை. சில நேரங்களில் சாமி கால்கடுக்க காத்திருக்கவும் செய்யும் இவர்கள் வீட்டு வாசலில்.

இப்ப வரைக்கும் இந்த குறி சொல்ற பழக்கம் நம்ம ஊருகள்ள தொடர்ந்துகிட்டுத்தான் இருக்கா அண்ணா.

பா.ராஜாராம் said...

//" தாயே சக்கம்மா என் கொட்டாரடி காத்த புண்ணியவதி தலமேல வந்திறங்கு
அடங்காத கருப்பன், கம்பெடுத்தால் அரக்கன் அருவாள கீழபோட்டு கிட்டவாடா
வெள்ளக்குதிர ஏறி வீச்சருவா கையிலேந்தி விளையாட ஓடிவாட சுடலமாடா
அள்ளி முடிச்சு, ஆங்காரம் எறக்கி வச்சி ஈஸ்வரியே எந்தாயீ ஈசானமூலயில வந்து நில்லு
தொட்டது தொலங்கும், தோட்டம் வச்சாக்காய்க்கும் எனப்பெத்த மகராசி முத்தரசி முன்னவாம்மா
மார்மேலும் தோல்மேலும் தூக்கிவளத்து குருவுங்கொலையும் குடுத்த எங்கய்யா எல்லாத்தையு அடக்கி வையி "//

// இருந்தாலும் பூஜை முடிந்து திங்கப்போகும் தேங்காச்சில்லும் வாழைப்பழமும் பயத்தை ஓரங்கட்டும்.//

// பூஜைசாமன்கள் எடுத்து அடுக்கிவைக்க, அருள்வந்து தடுமாறுவார் அப்போது தாங்கிப்பிடிக்க நான்கு எளவட்டங்கள் வேண்டும்//

இதில் //தடுமாறுவார்// fantastic காமு! :-))

//இங்கு குறி தோத்துப் போனால் பிறகு வருசம் முழுக்க குண்டிவழியா வேர்வை வடிய கல்லுடைக்க, கருதறுக்க லோல் படவேண்டும்//

//'' யாரப்பாத்து சோதன பண்றீங்க இந்தச் சொடல மாடங்கிட்டயா வெளாட்டுக் காற்றீங்க ன்னு "
ஒரு அதட்டுபோட்டார்.//

//சித்தப்பாவின் முகதைச்சுற்றி இப்போதும் வட்டமிடும் பீடிப்புகையில் என்ன நினைவுகள் மிதக்கும்.//

அப்பா!...

போட்டா, கீட்டா எடுத்து முழுங்கி தொலைச்சிட்டீரா ஓய், கிராமத்தையும் அதன் வாழ்வையும்?

நினைச்சப்பல்லாம் ஒரு தட்டு தட்டி ,"புடிச்சிக்கோ" ன்னு தூக்கி வீசுரீரே?

நன்றி காமு!

இராமசாமி கண்ணண் said...

அருமை காமு சார்.

அன்புடன் அருணா said...

நல்ல அனுபவம்.

வானம்பாடிகள் said...

காலையிலதான் தினத்தந்தில படிச்சேன். ஒரு பரதேசி, சோசியக்காரன் சொன்னான்னு பெத்த புள்ளைய கழுத்தத் திருகி கொன்னுப்போட்டானாம். புள்ளைக்கு ஏழரச் சனின்னு. அது கெடக்கு.

பா.ரா. சொன்னா மாதிரி எழுத்தோவியம். :)

ஈரோடு கதிர் said...

//தாட்டிக்கமான சாதிக்காரர் வீடுகளுக்கு கடவுள்கள் கூட டோர்டெலிவரிதான்.//

ஆமாங்க ஊடு தேடிப்போய் பாதம் கழுவிக்கிட்டு பணமும் பீசும் வாங்கிட்டுப் போறாங்களே...

இந்தக் குறி சொல்ற மாதிரி...
செய்வினை எடுக்கிறதும் செம பிஸ்னஸ்ங்க...

அம்பிகா said...

கிராமத்து வாசனை... அப்படியே வீசுது.

ஹேமா said...

எங்களூரிலும் கேள்விப்பட்டிருக்கேன்.
கண்டதில்லை.எழுத்தில் மண்வாசனை.இப்படியான விஷயங்களையெல்லாம் நம்புறதா இல்லையா என்கிறமாதிரி இருக்கு !

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நமது கடமையை செய்துகொண்டே இருப்போம் . எழுப்பாமலே விழித்துக்கொள்ளும் இந்த உலகம் ஒரு நாள்

cheena (சீனா) said...

அன்பின் காமராஜ்

மண் வாசனை - கிராமப்புறங்களில் தினந்தினம் நடக்கும் செயல்கள் - அழகான விவரிப்பு - நடை அருமை. நன்று நன்று - நல்வாழ்த்துகள் காமராஜ் - நட்புடன் சீனா

ராசராசசோழன் said...

//தாட்டிக்கமான சாதிக்காரர் வீடுகளுக்கு கடவுள்கள் கூட டோர்டெலிவரிதான். //

வலிமையான வரிகள்...