10.7.10

இருகண்குடி, வெயில் மனிதர்களின் கற்பனை நிழல். (300 வது பதிவு ).





வலையெழுதுகிறசாக்கில் நிறைய்ய  படிக்க முடிந்திருக்கிறது. வலையெழுதுகிறதாய் பேர்பண்ணிக் கொண்டு வீட்டில் நிறய்ய திட்டு வாங்க முடிந்திருக்கிறது.காலத்தையும்,காசையும் செலவழித்து பரஸ்பரம் விலைமதிக்க இயலாத அனுபவத்தையும்,காசுகொடுத்து வாங்கமுடியாத நண்பர் சேமிக்க முடிந்திருக்கிறது.

எழுதிக்கொண்டே வாசகனாகி வாசித்துக்கொண்டே எழுதி. உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்திருக்காத சோம்பேறி, உலகம் சுற்றிய பயணியாக முடிந்திருக்கிறது.செழுமையான தேர்ந்த பதிவர்களின் எழுத்துக்களில் முதிர்ச்சியையும், சீமான்கனி, லெமூரியன்,சரவணக்குமார் ஆகியோரோடு பயணித்து வயதையும் குறைக்கமுடிந்திருக்கிறது.

நான் நன்றி சொல்லத்துவங்கினால் அந்தப்பட்டியல் ஒரு பெரிய பட்டாளமாகி விடும்.எனது பக்கத்துக்கு வரும் எல்லார்க்கும்,நான் படிக்கிற யாவர்க்கும், எனது எழுத்துப்பிழைகளைப் பொறுத்துக்கொண்டு உற்சாகப்படுத்திய அன்பர்க்கும்,தமிழிஷ்,தமிழ்மணம் குழுமங்களுக்கும் என் தோழனுக்கும் அன்புருகும் கண்ணீரால்...........

நன்றி.

 0

சரி , கூட நடங்க,  போவம்.

0

ஆட்டுப்பண்ணையைத் தாண்டியதுமே பனை மரகூட்டமும், புளிய மரங்களும் தெரியும். அதுக்குள்ளேதான் கோவிலிருக்கிறது. ஓடுபாலத்தில் போகிறபோது வேலியும் மணலுமாய் நெளிந்து கிடக்கிற அர்ச்சுனா நதி தெரியும். வெம்பக்கோட்டை வழியாக சங்கர நத்தம் சாத்தூர் தாண்டி வரும் வைப்பாறும் அர்ச்சுனாநதியும் ஆலிங்கணமாகிப்பிரிகிற இடம் ஒரு தீவு மாதிரி இருக்கும். அங்கு தான் 'ஆத்துக்குள்ள அடகிடக்கும் அஞ்சு தல நாகம் அது ஆளக்கண்டா படமெடுக்கும் அம்மனோட சக்தி' என்கிற நாடோ டிப்பாடல் பெற்ற ஸ்தலம், கண்ணித்தெய்வம் இருக்கும் இருக்கங்குடி. வருசம்பூராவும் தண்ணீர் ஓடிச் செழிச்சிருந்தால் ஒரு வேளை இதுவும் திரிவேணி சங்கமம் போல இன்னொரு புண்ணிய ஸ்தலமாகியிருக்கும். கோயில்களுக்குள்லிருந்து தானே ஜாதியும் அரசியலும் ஆரம்பிக்கிறது.  இருக்கிறதா இல்லையா என்கிற விஞ்ஞானப் பிரதேசத்துக்குப் போகாமல், மக்கள் வளமையோடு பார்த்தால் இருக்கங்குடி ஒரு அடித்தட்டு மக்களின் ஆசுவாச பூமி.

அங்கு வருகிற எல்லோரும் ஏழைகள் தானென்று சொல்ல முடியாது. ஆனால் எல்லோருமொருகாலத்தில் ஏழைகளாயிருந்தவர்கள் தான் என்பதையும் வேறு பகட்டான கோயில்களுக்குள் அனுமதிக்கப்படாதவர்களும் தான் என்பது எந்த தொல்பொருள் ஆராய்ச்சிக்குள்ளும் போகாமல் காணக்கிடக்கும். அப்படியான மக்களைத்திரட்டி ஒன்றுகூட வைத்தவள் மாரியென்னும் நாட்டார் குல குறியீடு. அடங்கி அடங்கி காலம் நடத்திய மக்கள்  நாக்குத்துருத்தி, சூலம் ஏந்தி, பம்பை உடுக்கை உறுமிகளின் ஆங்காரச்  சுதியோடு ரண்ணங்கு ணண்டா, ரண்ணங்கு ணண்டா எனக்களம் இறங்கும் புறப்பாடு.

ஆடி வெள்ளி நடவுக்கு மழையாகி, இடைமாதங்களில் உழைப்பாகி உரமாகி, தைக்கடைசியில் அறுவடைக்கு வெயிலாகி ஊர் உராப்பொங்கும் பங்குனிப்பொங்கலாகிய மக்கள் விவசாயத் தோழி கருமாரி. சானியெடுக்கப்போனவளுக்கு சானிக்கூடைதூக்கமுடியாமல்போனதாம், சேதிகேட்டு ஊர்திரண்டு தோண்டியெடுத்த அதிசயம் தான் மாரியென்னும் கதையுண்டு. வாழ்வு வரண்டு போன பஞ்சகாலத்தில் தண்ணீர்குடித்தேனும் உயிர்வாழக் குடியானவர்கள் நாவரண்டு  தேடியலைந்த போது தோண்டக்கிடைத்த வாழ்வூற்று இருக்கங்குடி  எனும் கதைகள் எல்லாம் அந்தக்காலத்து விளம்பர யுக்தி.

புதிதாய் முளைக்கிற எல்லா நாட்டார் தெய்வங்களுக்குப் பின்னாலும் இப்படியொரு காரண கதையிருக்கும். அதில் ஒரு பாம்பு வந்து பேசும், ஒரு காராம் பசு வந்து தானாகப் பால்சுரக்கும், முயல் துரத்த நாயோடும், சுழன்றடிக்கும் சூறாவளிக்குள் பிரசன்னம் கிடைக்கும், ஓயாத அடைமழையை நிறுத்த ஒரு சீட்டுக்கிழியும் இப்படியான அதிசயங்களே கதைகளாகிப் பின்னிக்கிடக்கிற இந்த தேசத்து நாட்டார் தெய்வங்கள். அந்தக்கதைகள் எல்லாவற்றுக்குள்ளும் ஒடுக்கப்பட்ட உழைக்கிற மக்களின் ஏக்கம் மட்டுமே
ஒளிந்திருக்கும். தாளாத சோகத்தைச் சொல்லி அழ ஒரு அரூவ நண்பனாக, சந்தோசத்தைப்பொங்கிப் பகிர்ந்து கொள்ள உறவாகவும் நாட்டார் தெய்வங்கள்.
 
நத்தத்துப்பட்டி விலக்கில் பஸ் நிற்கிறபோது வெத்துக் கடாப்பெட்டிகளோடு பஸ்ஸிலிருந்து இறங்குகிற காய்கறி  விற்கிற  பெண்கள் கண்டக்டரை திட்டிக்கொண்டே இறங்குவார்கள். காது வளத்த நாரணம்மாக்கிழவி
' ஏ தம்பி கடகத்த செத்த எறக்கி விட்றேன்' கடைசி வார்த்தையை இழுத்துச் சொல்லும். அப்போதே பஸ்ஸிலிருந்து பாதிச்சனம் பொட்டி சட்டியைத்தூக்கி ரெடியாகி விடும்.

' ஏ புளியோதரைத் தூக்குச்சட்டியை எடுத்துக்கோ, அன்னா பாரு சூட்கேச மறந்துறாத, சின்னவனக்கையில பிடிச்சிக்கோ, ஏ இன்னாபாரு மூதி கோழ வடிச்சிக்கிட்டு தூங்குறா, ஏ  எந்திரி  கோயிலு வந்திருச்சில்லா''.

அந்த அரவிந்த் வண்டியிலிருந்து தூத்துக்குடிப்பாஷை அல்லோல கல்லோலப்படும்.
புளியமரக் கூட்டத்தை தாண்டியதும் டைவர் ரெம்ப ஸ்பீடா ஓட்டுவாரு, புளுதியைக்கிளப்பிக் கொண்டு வருகிற
பஸ்ஸை எதிர்கொண்டு காளையை அணைகிற வீரர்களைப்போல பஸ்ஸை விரட்டிக்கொண்டு ஐந்தாறு பெண்கள் ஓடுவார்கள்.  புதுசாப்பாக்கிற யாருக்கும் திக்கென்று அடித்துக்கொள்ளும். படிகளில் ஏறிக்கொண்டு அந்த
சாக்குப்பைக்காரண்ணன் எனக்கு, தாடிக்காரண்ணன் எனக்கு என்று கத்துவார்கள். அப்போது கூடவரும் மனைவி மார்களுக்கு லாஞ்சனையாக இருக்கும். கண்டக்டர் சஞ்சீவி படியிலிருந்து அவர்களை விரட்டுவார், பயணிகளைஇறங்கவிடாமல் மறிக்கிற பெண்களை திட்டுவார்.

'இந்தா, சஞ்சீவண்ணே ஓவரப்பேசாதீரும் ' என்று கண்டக்டர் மேல் பாய்வார்கள்.

அதற்குள் மீதிப்பேர் பயணிகளை வளைத்துக்கொண்டு போக அவர்களோடு மல்லுக்குப்போவார்கள்.

' சாக்குப்பைக்காரண்ணன எனக்கின்னு சொன்னமில்ல, நீ சிமிட்டிக்கிட்டு  இழுத்துக்கிட்டுப் போறே'

'அண்ணாச்சி நம்ம கடைக்கு வாங்க செருப்பு சாமானல்லாம் கடையிலே வச்சிக்கிடலாம், தேங்கா பழம், மாலையெல்லாம் நம்ம கடயிலே சல்லுசா வாங்கிக்கிடலாம்'

சொல்லி படக்குனு கையிலிருக்கிற பையைப்புடிங்கிக்கொண்டு விடு விடு வென நடப்பார்கள். பின்னால் மருங்கி, மருங்கி நடக்கிற வீட்டுக்காரியையும், தோளில் உட்கார்ந்து பலூன் கேட்கிற மகனையும் சரிக்கட்டிக்கொண்டு. துணிமணிப்பையை பறித்துக்கொண்டு முன்னாள் நடக்கிற பெண்ணையும் தொயந்து நடக்கணும். அப்போது ஏண்டா நேத்திக்கடன் போட்டொமென்றாகிப்போகும்.

'' எலா வெரசா நடந்தா ஙொப்ப வீட்டுச்சொத்தா போயிரும், அன்ன நடயில்லா நடக்கா ''
'' நா எதுக்கு அவ பின்னதா போறியள்ள ''

ஒரு பெரிய சண்டைக்கான ஆரம்ப வார்ததைகளை அள்ளி வீசுவாள், வந்த இடத்தில் சண்டை வேண்டாமென்று அடக்கிக்கொண்டு தோளில் உட்கார்ந்திருக்கிற பையனை இறக்கிவிட்டு பையைக்காப்பாத்த பின்னால் ஓடுகிற பக்தர்களும். அவர்களை ஒப்படைத்துவிட்டு தேங்காக்கடைக்காரர்களிடம் ஒரு கூடைக்கு ஒரு ரூபாய் வீதம் கமிசன் வாங்கிக்கொண்டு அடுத்த பஸ்ஸைப்பிடிக்கவும், ' சாக்குப்பைக்காரண்ணன் எனக்கு ' என்று சொல்லி அதிலிருந்து இறங்குகிற ஆள்பிடிக்க, திரும்பவும் பஸ் ஸ்டப்புக்கு ஓடுகிற பெண்களுமான எல்லாரும் சராசரிக்கும் கீழுள்ள மனிதர்களின் இஷ்டதெய்வம் இருக்கங்குடி மாரி.

பஸ்ஸில் வருபவர்கள் ரெண்டு பர்லாங் நடந்துதான் கோவிலுக்குப்போக வேண்டும். கார் வேனில் வருகிறவர்கள் மட்டும் நேராக ஆத்தா மடியில் இறங்கிகொள்வார்கள். அது மட்டுமில்லை அவர்களுக்காக கட்டண தரிசனம், தனி வரிசை, தங்கும் விடுதி எல்லாம் மற்ற கோவில்களைப்போலவே ஏற்பாடாகியிருக்கிறது. அதெல்லாமே இப்போ கொஞ்ச காலமாத்தான். மின்னயெல்லாம் அப்படிக்கிடையாது கூடார வண்டியில் பொம்பளைகளையும் சாமஞ்சட்டுகளையும் ஏத்திக்கிட்டு நேந்துவுட்ட கிடாயும் ஆம்பிளைகளும் வண்டிக்குபின்னால் நடப்பார்கள்.சாமத்துக்கு வண்டிகட்டினாக்க பத்து மைல் தொலைவிருக்கிற சுத்துப்பட்டுச்சனங்க பலப்பலவென விடிகிற போது கோவிலில் இருப்பார்கள். ஏதாவதொரு புளியமரத்து நிழலில் வண்டிய அவுத்துக்கட்டி குழிச்சு முடிச்சு கோவிலுக்குப்போயிட்டுவந்து கிடாவெட்டுவார்கள். பலூன்களும், ராஜன் ஐஸ் கம்பெனிச்சைக்கிள்களும், பணியாரக்காரப்பொம்பளைகளும், கொல்லபட்டி, சங்கராபுரம் பனையோலை விசிறிகளும். ஏழயிரம்பண்ணை காசி நாடர் கருப்பட்டி முட்டாய் சேவுக்கடையுமாக சிறுசுகள் அலையும்.

இருக்கங்குடி முழுக்க பனையோலைச்சத்தமும், பதினி வாசமும் நிறைந்திருக்கும். அப்பல்லாம் ஊருகள்ள எல்லாரும் குடிக்கமாட்டாங்க ஒண்ணு ரெண்டுபேர் குடிக்கிறவங்க இருப்பாங்க. அதுக்குன்னு ஆத்துக்குள்ள பட்டச்சாராயம், பழரசம், கிடைக்கும் ஆத்தத்தாண்டிப்போனா கள்ளுமுட்டி கிடைக்கும் அதெல்லாம் நாப்பதைத்தாண்டிய அரக்கிழடுகளுக்கான கிறக்கம். எளவட்டங்களும் கொமரிகளும் ஆத்துக்குள்ள போய் ஊத்துத்தோண்டி தண்னியெடுத்து வரப்போவார்கள். அப்போது வெயிலும் சுடுமணலும் அவர்களுக்கு இதமாக இருக்கும் அது எல்லாத்தையும் விடக்கிறக்கமானது. பசியெடுக்கிற சரியான நேரத்துக்கு கிடாக்கறியோடு பந்தி நடக்கும். செத்த துண்ட விரிச்சு கண்ணசரவும், வெயில்தாள ஓடிப்பிடிச்சு விளையாடவுமாக பொழுது ரம்மியமாகச் சாயும். மிச்சத்தொடையை மஞ்சத் தடவித் தொங்கவிட்டபடி கூடார வண்டிகிளம்ப சில மொட்டைத் தலைகளோடு ஊர்போய்ச் சேர்வார்கள்.

இப்பல்லாம் பஸ்ஸிலிருந்து இறங்கும்போதே ஒரு காலு படியிலும், ஒருகாலு பிரியா ஒயின்ஸ் வாசல்லயும் இருக்கும். வேன் லாரி பிடிச்சு வர்ற கூட்டம் சாத்தூரிலே நிப்பாட்டி ஏத்திக்கிட்டு அறப்போதையில் கோவிலுக்க் வருவார்கள். வண்டியவுட்டு இறங்கியதும் ஒருகூட்டம் பிரிஞ்சு எதுத்து நடக்கும். ஆக்கி வச்ச ஆட்டுகரியத் திங்கக்குடுத்து வைக்காம வாயப்பிளாந்துக்கிட்டு ரோட்டுல கிடப்பவர்கள். ஊறுகாயில உப்புக் கூடிருச்சின்னு சண்டையிழுத்து அடி ஒதைபட்டு, இருக்கங்குடி போலீஸ் ஸ்டேசனுக்குப்போய் ரைட்டருக்கு அரிச்சுப்பெறக்கி ஐநூறத்தெண்டங்கெட்டி தலையக்கவுட்டுக்குள்ள போட்டுக்கிட்டு ஊர் திரும்புகிறவர்கள். இப்படி உழைக்கிற சனங்களின் சந்தோசத்தை பச்சைக்கலர் போர்டு மாட்டிய டாஸ்மாக்கும், மீதியை கருப்புக்கலர் டீவிப்பெட்டிகளும் பறித்துக்கொண்டன. 

பெருமாள் கோவிலில் அடிக்கிற மாதிரி நகராவும், மணிச்சத்தமும் க்ளாங் க்ளாங் என்று அடிக்க இடையிடையே குழவெச்சத்தமும் வந்துகொண்டிருந்தது. எலக்ற்றானிக் முறையில் வடிவமைக்கப்பட்ட அந்த மேலச்சத்தம் கருவரைக்குப்பக்கத்தில் இருந்து வருகிறது. மேளமடிக்கிற கருப்பசாமியும் அவர் மனைவி மூக்கமமாளும் கருவரைக்குப்பின்னாளிருக்கிற தூனுக்குப்பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு வெத்திலை போட்டுக்கொண்டிருந்தார்கள்.

'மாணிக்சந்த் வாங்கலையா ' கருப்பசாமி கேட்டார்.
' ஒனக்கு வந்த துட்டுல கோட்ரடிச்சிட்டு வருவெ, நாங்க மட்டும் ஒங்களுக்கு வக்கனையா பான் பராக் வாங்கி வக்கனுமாக்கும் ' கொமட்டுல இடிச்சு பொய்க் கோபங்காட்டினாள்.

'கோட்டரடிச்சிட்டு உள்ள ஒக்காந்து பான் பராக் போட்டா கோயிலு வெளங்கும்' இப்படிச்சொல்லிக்கொண்டு தக்காரின் உறவுக்காரன் திட்டிவிட்டுப்போனான்.

'சரி சாமி' என்று பம்மிக்கொண்டு பதில் சொல்லிவிட்டு ஆள் கடந்ததும்.
'ஆமா மூட்ட மூட்டயா அடிச்சி சொத்துச் சேத்தா மட்டும் வெளங்கிருமாக்கும்'

என்றபடிமூக்கம்மாள் குப்பைகளை ஒதுக்கினார்.

27 comments:

சீமான்கனி said...

நான்தான் பஸ்ட்டு......

சீமான்கனி said...

300...க்கு மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணே....இன்னும் சிறப்பான ஆயிரம் ஆயிரம் பதிவுகள் வரட்டும்...

சீமான்கனி said...

//அந்தக்கதைகள் எல்லாவற்றுக்குள்ளும் ஒடுக்கப்பட்ட உழைக்கிற மக்களின் ஏக்கம் மட்டுமே
ஒளிந்திருக்கும்.//


வெள்ளந்தி மக்கள் வாழ்வியலை கண்கள் வழியே மனசுக்கு படம் காட்டி விடுகிறது ஜொலிக்கும் 300வது பதிவு வாழ்த்துகள் அண்ணே...

Unknown said...

மண்ணின் மொழி நடையில் அற்புதம்.. முன்னூறுக்கு வாழ்த்துக்கள் .

Romeoboy said...

வாழ்த்துக்கள்

க ரா said...

இப்பத்தான் சார் ஒரு வருசத்து முன்ன வந்தப்ப போயிருந்தேன் இருக்கண்குடிக்கு. அப்படியே வர வழில அங்க ஒரு சிவன் கோயில் இருக்கே அங்கேயும். திரும்பியும் ஊர நியாபகபடுத்தீட்டிங்க. 300வதுக்கு வாழ்த்துகள் சார்.

க ரா said...

ஆட்டுப்பண்ணை இன்னும் இருக்கா சார் அங்கே. டாம் வேலை முடிஞ்சுருச்சா !

செ.சரவணக்குமார் said...

300 பதிவுகளுக்கு வாழ்த்துகள் அண்ணா.

இருக்கண்குடிக்குப் போய்ட்டு வந்தமாதிரி இருந்துச்சி.

முன்பெல்லாம் அடிக்கடி சென்று வந்த இடம் இருக்கண்குடி. நீங்கள் விவரித்துள்ளவைகளை ரசித்து அனுபவித்திருக்கிறேன். எப்படி நாயாரா அடிக்கும் கருப்பசாமியையும் மூக்கம்மாளையும்கூட அத்தனை நுணுக்கமாக விவரிக்க முடிகிறது அண்ணே.

இப்போதெல்லாம் கடவுள்கள் எனப்படுபவர்களிடம் எனக்கு அத்தனை ஈடுபாடு இல்லைதான். ஆனால் கருப்பசாமி கோவில்களுக்கோ, இருக்கண்குடிக்கோ நேர்ந்துகொண்டு கிடாவெட்டி பொங்கல் வைக்கும் வைபங்களில் அசலான மனிதர்களின் தரிசனம் கிடைக்கும் சந்தோஷமும், சிறு சிறு காவல்தெய்வங்கள் மீதான அன்பும் எனக்கு உண்டு.

தொ.பரமசிவத்தை வாசித்த பின்னர்தான் நாட்டார் தெய்வங்கள் பற்றி நிறைய அறிந்துகொள்ள முடிந்தது.

விட்டா பேசிட்டே போவேன். மீண்டும் ஒரு முறை வாழ்த்துச் சொல்லிக் கொள்கிறேன் காமு அண்ணே. இந்த முன்னூறு விரைவில் ஆயிரமாகட்டும்.

மாதவராஜ் said...

வாழ்த்துக்கள் என் அருமைத் தோழனே! போய்க்கிட்டே இரு...!

அன்புடன் அருணா said...

300க்குப் பூங்கொத்து!!!

அன்புடன் அருணா said...

இருக்கங்குடி அனுபவங்களைத் திரும்பவும் அசை போட வைத்தது பதிவு.

ராம்ஜி_யாஹூ said...

முன்னூறுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

உங்களுக்கு பதிவுலகத்தல் எந்த அளவு பைடன் கிடைத்ததோ அதை விட ஒரு பகுதி அதிகமாகவே உங்களால் வலைப் பதிவர்களுக்கும், குழுமங்களுக்கும் சந்தோஷம் கிடைத்தது என்பது உண்மை.

எப்போதும் போலவே இருக்கங்குடி பதிவு அற்புதம், உங்கள் பதிவை அருகில் வீட்டு ஆள்கலையோ, அலுவலக ஆள்கலையோ வைத்து கொண்டு படிக்க முடிவதில்லை. கண்ணீர் வந்து விடுகிறது சாமி.

இந்தப் பதிவை படிக்கும் பொழுது கூட என் மனைவி கேட்கிறார், என்ன ஆச்சு உங்களுக்கு என்று.

அரவிந்த், நாச்சியார், எஸ் எஸ் கே, எம் ஆர் கோபாலன், ஜெயவிலாஸ் பஸ்கள் எல்லாம் கண் முன்னே கொண்டு வந்து விடுகிறீர்கள்.

பல வருடங்களுக்கு முன்னாள், எஸ் ரா எழுதிய இருக்கம்குடி மொட்டை போடும் சிறு கதை ஞாபகம் வந்து விட்டது.

லெமூரியன்... said...

முன்னூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா......!

நாட்டார் தெய்வங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் தோழன் அல்லது தோழி...!

இந்த தெய்வங்களிடம் மக்களுக்கு மரியாதை உண்டென்றாலும் அதிக உரிமையும் கூட உண்டு...

பல வித நேர்த்திக்டங்களில் சிலது பவ்யமாகவும் சிலது மிக உரிமையோடும்...சில வேண்டுதல்கள் மிரட்டலோடும் கூட இருக்கும்...

ஆயினும் அது நம் தெய்வம் என்ற அன்பே மேலோங்கி நிற்கும் இறுதியில்....!

அருமையான மற்றும் சுவையான பதிவு அண்ணா.....மாரியை சந்தித்து விட்டு வந்த ஒரு அனுபவம் ....!

\\'ஆமா மூட்ட மூட்டயா அடிச்சி சொத்துச் சேத்தா மட்டும் வெளங்கிருமாக்கும்'//
இது அந்த கோவிலின் இன்னொரு புரத்தை காண்பிக்கிறது.....!

vijayan said...

அன்பு நண்பா வாழ்த்துக்கள்.எங்கள் மாதிரி மத்திய மற்றும் வட மாவட்டக்காரர்களுக்கு உங்கள் வழிபாடு, தெய்வங்கள்,பாஷை ,எளிமை ,உறவு,நட்பு எல்லாம் புதிதாக இருக்கிறது.மனசுக்கு சந்தோசமாகவும் இருக்கிறது.

vasu balaji said...

முன்னூறுக்கு வாழ்த்துகள்.

மனுசன் பேசுறத விட முனகுறப்ப வர உணர்வு ரொம்ப நேர்த்தி.

/நா எதுக்கு அவ பின்னதா போறியள்ள '' /

//ஆமா மூட்ட மூட்டயா அடிச்சி சொத்துச் சேத்தா மட்டும் வெளங்கிருமாக்கும்'//

அட அட! ஒரு இனிய காலைப் போதுக்கு வந்தனம் சாமி:)

ஆடுமாடு said...

300 க்கு வாழ்த்துகள் தோழரே!

சின்ன வயசுல வந்திருக்கேன் அம்மாகூட.

மொட்டைப்போட்டுட்டு குளிச்சு, கோயில்குள்ள போனதும் அம்மாவுக்கு அருள் வந்திரும். அக்காவும் நானும் அம்மாவை பிடிச்சுக்கிட்டே,'ஆடாதம்மா, ஆடாதம்மா'ம்போம். நாங்க சொல்லி கேக்குமா சாமி? கால்மணி நேரம் அம்மா ஆடுவா. அக்காவுக்கும் எனக்கும் பயமா இருக்கும்.

அடுத்த முறை இருக்கன்குடிக்கு போவணும்னு அம்மா சொன்னதும் வரமாட்டோம்னு சொல்லிட்டோம். ஏன்னா, சாமியாடும் போது அம்மாவை பிடிக்க முடிலை. கீழ விழுந்துட்டான்னா என்ன பண்ணன்னுதான்.

பிறவு அம்மா கோவிலை மாத்திட்டா. நாங்க சாமியை மாத்திட்டோம்.

அழகா எழுதியிருக்கீங்க. வாழ்த்துகள்.

அம்பிகா said...

300 க்கு வாழ்த்துக்கள் அண்ணா.
இருக்கன்குடிக்கு பஸ்ஸில் போய் வந்த உணர்வு. வழக்கம் போல உங்கள் நடையில் அருமை.

ஈரோடு கதிர் said...

||சீமான்கனி, லெமூரியன்,சரவணக்குமார் ஆகியோரோடு பயணித்து வயதையும் குறைக்கமுடிந்திருக்கிறது||

இதுக்கு என்கூட, யூத்து வானம்பாடி கூட பயணப்பட்டிருந்தா... எலிமென்ட்ரி ஸ்கூல் லெவல்க்கே போயிருக்கலாம்

மிஸ் பண்ணிட்டீங்கண்ணே

ஈரோடு கதிர் said...

300 இடுகைக்கு முத்தான வாழ்த்துகள்

ஈரோடு கதிர் said...

அடடா...

அருமையான இடுகை போங்க...

வாசிக்கும் போதே பனையோலை சரசரக்குது..

இன்னிக்கு ஊர் அடங்கிய கோவில் கூட, சரக்கடிக்கும் பிக்னிக் ஸ்பாட் ஆயிடுச்சு... சாமிதான் எப்பயுமே கண்ணக்குத்துனதில்லையே!!!

அத்திரி said...

உச்சி வெயில்ல பதனீர் குடிச்ச மாதிரி இருக்கு

வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

பொங்கிப் பொங்கி வருகிறது காமு.

ராம்ஜி சரியா சொல்லி இருக்கிறார். மேற்கொண்டு அதிகமாய் வேற என்ன சொல்லிறப் போறேன்?

"என்னப் பெத்தாரு" என்பது, வேண்டுமானால் என் மொய்யாக இருக்கட்டும்.

முன்னூறுக்கு வாழ்த்துகள் ஓய்!

Unknown said...

300 கு வாழ்த்துக்கள் நண்பரே! கிராமத்து வாழ்க்கையை அருமையாக படம் பிடித்துக் காட்டுகிறிர்கள் நண்பரே! நன்றி. வட்டாரத்து மொழி புரிவதற்குதான் சிரமம். இருந்தாலும் படிப்பதற்கு ஒரு சந்தோசம் தான்.

pavithrabalu said...

அன்புள்ள தோழரே

அருமையான பதிவு.. மக்கள் தெய்வமான மாரியம்மன் அருள் வழங்கும் பூமியை மக்களின் உணர்வுகளோடு
சொல்லியிருப்பது நன்றாக உள்ளது. ஒரு முறை வந்த போது மேள சத்தம் கேட்டும் அருள் வந்து தீச்சட்டி ஏந்தி
ஆடுபவர்களை பார்த்து மிரண்டதும் நினைவுக்கு வருகிறது..

////இருக்கங்குடி ஒரு அடித்தட்டு மக்களின் ஆசுவாச பூமி.////

உண்மை தான்.. 300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

Karthick Chidambaram said...

இருக்கண் குடிக்கு அப்பா ஒரு முறை போய் வந்து நிறைய சொன்னார்.
போகவேண்டும் என்கிற ஆசை இன்னும் இருக்கு.
ஆனால் இன்னும் வாய்ப்பு வரவில்லை.
இருக்கண்குடிக்குப் போய்ட்டு வந்தமாதிரி இருந்துச்சி உங்கள் பதிவின் மூலம்.

300க்கு - வாழ்த்துக்கள் நண்பரே.
நல்ல எழுத்து நடை.

VijayaRaj J.P said...

300-க்கு வாழ்த்துகள்.

ஆயிரம் பதிவுகள் வரட்டும்.

kashyapan said...

It was 5.45pm onthe 9th.Ignoring Muthu Meenatchi"s objection I stood on the entrance in the jammu thavi express at Sathur tohave a glance of com.Kamaraj,Aunto,and mathavji. What if? if I have not seen u.your 300th posting gave a visvaroopa darson of u people.kaamaraj, you are fine tuning the blogers...pl. keep it up....kashyapan.