20.7.10

அந்த நாள்.

வாலிபவயதில் சூடேறிய சமூகக் கோபத்தை இனங்கண்டு என்னை ஒரு தொழிற்சங்கவாதியாக மாற்ற முயற்சி செய்தார் ஆவணப்பட இயக்குனர்.பா.கிருஷ்ணகுமார்.சின்னவயதில் யாரையும் கேட்காமல் நானும் வேலவரும் தோளில் கைபோட்டபடி அந்த குக்கிராமத்து ஆரம்ப பாடசாலைக்குபோனது போலவே.நானும் மாதுவும் தோளில் கைபோட்டபடி அந்த வாசலுக்குள் நுழைந்தோம்.கோபம், சந்தோசம், அழுகை, கண்முழிப்பு, வேலை, பயணங்கள்,ஒளிந்து ஒளிந்து மதுக்குடிப்பது என எல்லாவற்றினூடாக இரண்டு விஷயங்கள் கெட்டிப்படுத்தப்பட்டது.மனிதாபிமானம் குழைத்த பொதுவுவுடமை மீது ஈடுபாடும்.அதன் கிரியா ஊக்கியான நட்பின் விஸ்தீரனத்தை கூடுதலாக்கிய பயணமும்.

28 வருடங்கள் வங்கி ஊழியனாக கழிந்த காலங்களின் சம்பளம் அழிக்கவியலா நட்பும் கொஞ்சம் இலக்கியமும் தான். அதை உரசிப்பார்க்கிற தருணமும் 20.7.2009 வந்தது.நானும் கொக்கரக்கோ வலைத்தளத்தின் பதிவர் அண்டோ கால்பர்ட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நாள் இது.எதையும் அறியாமல் துங்கிக்கொண்டிருந்த என் மனைவி,அடுத்த மாதம் சேரவிருந்த கல்லூரியின் கனவுடன் தூங்கிக்கொண்டிருந்த மகன் இருவரின் தூக்கத்தை கலைக்காமல் என்னை சஸ்பெண்ட் செய்த சேதி சொன்னார் அண்ணன் சோலை மாணிக்கம்.

அப்படியே எழுந்து சங்க அலுவலகம் போன என்னை தங்களின் செட்டைக்குள் மூன்றுநாட்கள் வைத்து அடைகாத்தார்கள். அந்த கதகதப்பை நினைத்தால் இன்னும் கண்ணீர் முட்டிக்கொண்டு வருகிறது.மாது,செல்வா,மணியண்ணா,சங்கரசீனி,சங்கர்,நாசர்,மணி,அருண் சோலை அண்ணா.எல்லோருக்கும் வீடு மனைவி மக்கள் அன்றாடக்கடமைகள் இருந்தது.அவை யாவற்றையும் சங்கத்தின் பொருட்டு ஒதுக்கிவைத்துவிட்டு எங்கள் இருவரைச்சுற்றி அன்புவேலி கட்டியிருந்தார்கள்.

அதுதான்,அந்த அன்புவேலிதான்.. ஆணவம், மமதை,அதிகாரத்திமிர்,ஓரவஞ்சனை,கொக்கரிப்பு எல்லாவற்றையும் சுக்குநூறாக்கியது. சங்கத்தின் ஒற்றுமை எங்களை நான்காம் நாளே இருக்கையில் மீள உட்காரவைத்தது.ஒரு சமூக ஈடுபாடுள்ள தொழிற்சங்கத்தின் நேர்மைத்திறனை ஓங்கி பிரகடனப்படுத்தும் நாட்களிள் அதுவும் ஒருநாள்.நினைவுகள் அழியாத சிறுகண்டன் அப்புவின் பாத்திரங்களில் பளபளக்கும் லட்சியத்தினூடே நட்பும் செழித்து வளரவில்லையா? அதுபோல எங்களிடமும் சொல்வதற்கு இந்த நாளிருக்கிறது.

9 comments:

பத்மா said...

தொழிற் சங்கம் எப்படி இருந்தாலும் தப்பு செய்யாதவர்களை காப்பாற்றி விடும் ..
வெரி குட் comrade

க.பாலாசி said...

இந்த நினைவை மீண்டும் வந்து படிக்கிறேன். ஏதோவொன்று அழுந்தச் சொல்கிறது மனதில்...

ஆரூரன் விசுவநாதன் said...

நட்பின் வலிமைதான், பல நேரங்களில் நம் இருத்தலை உறுதி செய்கின்றது.

அன்புடன்
ஆரூரன்

☼ வெயிலான் said...

அதற்குள் நாம் சந்தித்து வருடமாகி விட்டதா?

ஈரோடு கதிர் said...

அந்த நட்புகளுக்கு வணக்கம்

வானம்பாடிகள் said...

/எதையும் அறியாமல் துங்கிக்கொண்டிருந்த என் மனைவி,அடுத்த மாதம் சேரவிருந்த கல்லூரியின் கனவுடன் தூங்கிக்கொண்டிருந்த மகன் இருவரின் தூக்கத்தை கலைக்காமல் என்னை சஸ்பெண்ட் செய்த சேதி சொன்னார் அண்ணன் சோலை மாணிக்கம்.//

ம்ம். எவ்வளவு பெரிய சோதனை இது!

/அதுதான்,அந்த அன்புவேலிதான்.. ஆணவம், மமதை,அதிகாரத்திமிர்,ஓரவஞ்சனை,கொக்கரிப்பு எல்லாவற்றையும் சுக்குநூறாக்கியது./

உழைச்ச கூலிய விட இது பெருங்கூலி. நாலு அப்பாவிங்களுக்கு தோள்ள ஆதரவா தட்டி குடுத்து ஆண்டைங்க மண்டையில போடும்போது வர சந்தோஷமிருக்கே. அலாதி.

ராம்ஜி_யாஹூ said...

நெகிழ்ச்சியான உணர்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றிகள்

அன்புடன் அருணா said...

/அதுபோல எங்களிடமும் சொல்வதற்கு இந்த நாளிருக்கிறது. /
எல்லோரிடத்தும் இது போன்று சொல்வதற்கு ஒரு நாளிருக்கக் கூடும்!

முனியாண்டி said...

இருவேறு வாழ்க்கை... உண்மை... என்ன செய்ய ?

if you time read my blog

http://adisuvadu.blogspot.com/2010/07/1.html