30.7.10

இங்கும் அங்கும், பராக்குபார்த்தல்

சூப்பர் சிங்கர் 3 பிரம்மாண்டக்குரலுக்கான தேடுதல் வேட்டை துவங்கியிருக்கிறது.முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பொது ஆளெடுப்பில் நீண்ட வரிசையில் பாட்டுப்பட்டாளம் காத்திருக்கிறது.பாத்ரூம் பாடகர்களில் இருந்து கைதேர்ந்த கர்நாடக சங்கீதக் கலைஞர்கள் வரை வரிசையில் நிற்கிறார்கள்.மாற்றுத்திறனாளி சரஸ்வதி தனது வசீகரக் குரலால் spot select ஆகிறார்.ஆடவர்களும்,இளம்பெண்களும் அதிக எண்ணிக்கையில் தெரிகிறார்கள்.பெரும்பாலும் IT துறை சார்ந்தவர்கள் வருவதை நம்மால் யூகிக்கமுடிகிறது.

கர்நாடக சங்கீதப் பாடகி சௌம்யா தேர்வு செய்கிற போது ஒரு இளைஞர் வருகிறார். அவரது பேர் கேட்கிறார். பேர் சொல்கிறார்.'நிஜம்மாவா, பயம்மா இருக்கு' என்று அபிநயத்தோடு சொல்லுகிறார் சௌம்யா.எதிர்
பார்த்தமாதிரியே அவர் சரியாகப் பாடாமல் தோற்றுத் திரும்புகிறார். அந்தப்பையன் பெயர் சதாம் உசேன்.லட்சக்கணக்கான உயிர்களை உறிஞ்சிக்குடித்த,பல நாடுகளைப் பொட்டல் காடாக்கிய ஜார்ஜ் புஷ்,ராஜபக்சே பெயர்களை அப்படிச் சொல்லுவாரா சௌம்யா ?.சொல்லலாம், சொல்லாமலும் போகலாம் அது அவரது உரிமை.பாடலை ஜட்ஜ் பண்ண வந்த இடத்தில் இந்த மாதிரியான கமெண்ட் கொஞ்சம் நெருடுகிறது.

பெயரில் என்னஅப்படி இருக்கிறது.'பெயர் வெறும் பேருக்கு,ஜாதிதான் பெயர்' என்கிற இளமைக் காலத்து கோபக் கவிதை ஞபகத்திற்கு வருகிறது.பேரசிரியர் ச.மாடாசமி பெயர்கள் குறித்து வேறு தகவல்களை முன்வைக்கிறார்.ரிக்சாக்காரர்களுக்கு,சலவைத்தொழிலளிகளுக்கு,பண்ணைக் கூலிக்காரர்களுக்கு,இப்படியான மக்களுக்கென்ற பிரத்யேகப்பெயர் இருக்கிறது.ஊடகங்கள் அவற்றை மிகத் துள்ளியமான நினைவுகளோடு அந்தந்த இடங்களில் பொருத்தி வைக்கும்.

சில கிராமங்களில் ஒரே குடும்பத்தில் பிறந்த ஐந்து பேருக்கும் ஒரே பெயர். கருப்பசாமி. கடக்குட்டி,சின்னவன்,நடுவுளவன்,பெரியவன்,மூத்தவன்.குடவோலையில் எல்லாப்பெயர்களும் ஒன்றாக இருப்பது மாதிரி,ஒரு ஒளிநாடாவில் எங்கு தொடங்கி எங்கு முடிந்தாலும் ஒரே ஒரு திரைப்படப்பாடல் பதிவு செய்து கொள்வது மாதிரி,ஒரு புது நோட்டுப் புத்தகத்தில் எல்லா பக்கங்களிலும் ஒரே பெயர் எழுதி வைக்கிற மாதிரி எல்லாமே அதுவாகி ஆக்ரமிக்கும் பிடிமானம்.ஒரு புகைப்படம் கூட எடுத்து மாட்டி அலங்கரிக்க முடியாத வீட்டிம் மூலை முடுக்கு எல்லாமே கருப்பனின் பெயர் ஒலிக்கவேண்டுமென்கிற வெறிதான் அது.சாதாரண ஜனங்களுக்கு பட்டும் படாமலும் இருக்கத்தெரியாது.அன்பென்றால் உயிரையும் கொடுப்பது, வம்பென்றால் உண்டு இல்லையென ஆக்குவது.

இதைத்தான் ராதாகிருஷ்ணன் மாமா இத்தனகோடிப்பேர்கள்ல இன்னொரு பேர் வைக்கலாமுங்றது கூடத்தெரியாத அப்பாவிச்சனங்க ஒரு பக்கம். ஒரே வீட்டில் பிறந்தவர்கள், இருக்கிற அத்தனைகட்சிக்கும் தலைவர்களாய் இருக்கிறமாதிரி வாழ்க்கையை வசப்படுத்திக்கிற வர்க்கம் இன்னொரு பக்கம் இருக்கு என்று சொல்லுவார்.

15 comments:

ராம்ஜி_யாஹூ said...

டைசி பத்தி கலக்கல்.

வாசிக்கும் வலைப்பக்கங்களில் எல்லாம் இந்த நிகழ்ச்சி பற்றி குறையே கண்டாலும், நிதர்சனத்தில் ஆயிரக் கணக்கான மக்கள் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள மிகுந்த ஆர்வமாய் வந்து கொண்டே இருக்கின்றனர்.
வயது, சாதி, நிறம்,கல்வி, பணப் பாகுபாடு இன்றி கூட்டம் கூட்டமாய் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
போன முறை தோற்றவர்களும் இந்த முறை ஆர்வத்துடன் பங்கு கொள்கின்றனர்.
இரு காவலர்கள், மைக் பழுது பார்ப்பவர், பஜனை பாடும் முதிய பெண்மணி போன்றோரும் அடக்கம்.

நெடுந்தொடர் என்ற தொல்லையில் இருந்து பலரை இந்த நிகழ்ச்சி விடுதலை செய்தது என்று சொன்னால் மிகையாகாது.

வானம்பாடிகள் said...

உங்களுக்கும் பராக்கு பார்க்க பிடிக்குமா:)

ராகவன் said...

அன்பு காமராஜ்,

நல்லாயிருந்தது பத்தி...
இசை நிகழ்ச்சி பற்றி ஆரம்பித்து எங்கெங்கோ கொண்டு செல்கிறது இது.

எல்லோருக்கும் ஒரெ பெயர் தானே காமராஜ், உங்களுக்கும் எனக்கும் கூட...

அன்புடன்
ராகவன்

ஹேமா said...

நானும் சூப்பர் சிங்கர் தொடர்ந்து பார்க்கிறேன்.பாட்டில் தொடங்கி நாட்டில் முடித்திருக்கிறீர்கள் உங்கள் மன ஆதங்கத்தை !

அன்புடன் அருணா said...

நல்லா பராக்குப் பார்த்திருக்கீங்க!

ராசராசசோழன் said...

உங்கள் எண்ணங்கள் சமூகத்தை சுற்றி சுற்றியே பறக்கிறது...மிக கடினமான பணியை மிக லாவகமாக வலைப்பூவில் செய்கிறீர்கள்... வாழ்த்துக்கள்....

லெமூரியன்... said...

வணக்கம் அண்ணா..!
ஒரு பிடி பிடிச்சிருக்கீங்க..!
\\ஒரு புகைப்படம் கூட எடுத்து மாட்டி அலங்கரிக்க முடியாத வீட்டிம் மூலை முடுக்கு எல்லாமே கருப்பனின் பெயர் ஒலிக்கவேண்டுமென்கிற வெறிதான் அது....//
வேற வழி இல்லாதபோது நமக்கான அடையாளங்களை இப்படித்தான் மீட்டெடுக்க முடியுமோ என்னவோ???

பத்மா said...

ஹ்ம்ம் ...பெயரில் என்ன இருக்கு இல்ல ?ஆனால் நான் கூட என் பேர் வேறாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்ததுண்டு

காமராஜ் said...

ஆமாம் ராம்ஜி.
எவ்வளவு கூட்டம்.அதிலும் செந்தமிழ் தேன்மொழியாள் பாட்டுப்படித்த ஷக்தி ங்ற பையனின் அசாத்தியக்குரல்வளம் அப்படியே புல்லரிக்க வைக்கிறது.

காமராஜ் said...

ரொம்பப்பிடிக்கும் பாலாண்ணா.

காமராஜ் said...

நன்றி ஹேமா,

ஆமாம் ராகவன்,

காமராஜ் said...

நன்றி அருணா,
நன்றி ராச ராச சோழன்,
நன்றி லெமூரியன்,

காமராஜ் said...

சொல்லுங்க பத்மா,

ஒரு நல்ல பெயர் செலக்ட் பண்ணலாம்.

பத்மஜா நல்லாருக்கா ?

சீமான்கனி said...

நானும் அந்த காட்சியை பார்த்தேன் உங்கள் பதிவை படிக்கும்போது சரியான கண்ணோட்டமாய் விளங்குது...பகிர்வு நிறைய குருட்டு கண்களை திறக்கட்டும் நன்றி அண்ணே...

பா.ராஜாராம் said...

இடுகையை வாசித்து கமென்ட் போடலாம் என வரும் போது, ஒரு கமென்ட் தூக்குது காமு.

//சொல்லுங்க பத்மா,

ஒரு நல்ல பெயர் செலக்ட் பண்ணலாம்.

பத்மஜா நல்லாருக்கா ?//

வேறு ஒன்னும் வேணாம். சந்தோசமா சும்மாருக்கலாம்.