15.7.10

கல்லெறியும் குரல்கள்.

கழுத்து தூளியில் தூங்கும் குழந்தையோடு
பேருந்து நிறுத்தத்தில் உறுமும்
கலைக்கூத்தாடிப் பெண்ணின் மேளச்சத்தம்.

தொலைக்காட்சி ஒலியை ஊடறுத்துக்கொண்டு
சமயற்கட்டுவரை ஓடிவரும் உப்புக்காரரின் அழைப்பும்

முன்மதிய நேரத்தில் தூரத்து வேலிச்செடியினின்று
தேடும் குயிற்பறவையின் கோரிக்கையும்

ஓரிடத்தில் நிற்காத பாதங்களோடு கழுத்துக்குன்ன
வாசல்வந்து பெயர் சொல்லி டீச்சரென்று கூவும்
கீரைக்காரம்மாவின் பரிவும்.

எஞ்சினீயர் கனவோடு கூட நிற்கும் மகனைக்காட்டி
வங்கிக்கடன் கேட்கும் ஏழைத்தகப்பனின் கண்களும்

உலுக்கிவிட்டுப்போகிறது சலனமற்ற மேற்பரப்பை
ஆண் பெண்,ஊர் நிறப்பேதங்களற்ற ஒரே சுரத்தில்.

19 comments:

Unknown said...

ஓரிடத்தில் நிற்காத பாதங்களோடு கழுத்துக்குன்ன
வாசல்வந்து பெயர் சொல்லி டீச்சரென்று கூவும்
கீரைக்காரம்மாவின் பரிவும்.//

இது மிக ஈர்க்குது.

Karthick Chidambaram said...

//எஞ்சினீயர் கனவோடு கூட நிற்கும் மகனைக்காட்டி
வங்கிக்கடன் கேட்கும் ஏழைத்தகப்பனின் கண்களும்//
உண்மையான வரிகள்.

Unknown said...

கழை கூத்தாடி பெண்ணைப் போலவே கவிதையில் ஆடித்தான் போகுது மனசும் ..

ராகவன் said...

அன்பு காமராஜ்,

இது போன்ற கல்லெறியும் குரல்கள் இப்போது தேய்ந்து போய் விட்டது, நாம் தேர்ந்தெடுத்த இந்த பொருள் தேடும் நகர வாழ்க்கையில்... கழைக்கூத்தாடிகள், உர்ரு உர்ருன்னு நல்லா வார் பிடிச்ச டோலக்கில் உராயும் வளைந்த குச்சியின் சத்தம், உப்பு, கோலப்பொடி, கீரை விற்பவர்களின் பிரத்யேக குரல்கள் வளர்ந்து தேய்வது, சாம்பல் பூத்த காங்கிரீட் மரங்களில் அடையும் புறாக்களின் குடுகுடுப்பை சத்தங்கள் தவிர பறவைகளின் குரல்கள் எனக்கு அனிமல் பிளானெட்டிலும், டிஸ்கவரி சேனலிலும்... டால்பி சரவுண்ட் சவுண்ட்டில் கேட்பதோடு சரி...

கல்லெறிவார் யாருமற்று குளம் சலனங்கள் ஏதுமின்றி பாசி அப்பிக் கிடக்கிறது அடியில் பெருமூச்சையும், விசும்பல்களையும் தேக்கிக் கொண்டு...

அன்புடன்
ராகவன்

ராம்ஜி_யாஹூ said...

உங்களின் பதிவும் ராகவனின் பின்னூட்டமும் மிக அருமை.

இயேசு கிறிஸ்து இன்று இருந்திருந்தால் இப்படி கூறி இருப்பார்-

கிராமங்களில் வாழ்பவர்கள் பாக்கியவான்கள் என்று

vasu balaji said...

/கல்லெறிவார் யாருமற்று குளம் சலனங்கள் ஏதுமின்றி பாசி அப்பிக் கிடக்கிறது அடியில் பெருமூச்சையும், விசும்பல்களையும் தேக்கிக் கொண்டு...
/

இதுதான் நகர வாழ்க்கை. உப்புக்காரன் குரலுக்கு பதில் குப்பை எடுப்பவரின் விசில் சத்தம்:(

Mahi_Granny said...

கலவையான குரல்கள் . அருமை. நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும் தங்களிடமிருந்து as Balaa sir said

VijayaRaj J.P said...

அருமையான பதிவு,காமராஜ்.

திரு.ராகவனின் பின்னூட்டம் சூப்பர்.

\\கல்லெறிவார் யாருமற்று குளம் சலனங்கள் ஏதுமின்றி பாசி அப்பிக் கிடக்கிறது அடியில் பெருமூச்சையும், விசும்பல்களையும் தேக்கிக் கொண்டு..\\

பா.ராஜாராம் said...

வாஸ்த்தவம் காமு. ரொம்ப நல்லாருக்கு. தலைப்பு, பிரமாதம்.

அன்புடன் அருணா said...

கல்லெறியும் குரல்கள் பற்றி எங்கிட்டே கூட ஒரு காமெடிக் கதையிருக்கு!எப்போவாது பகிர்வேன் பதிவில்.

க ரா said...

நல்லாருக்கு காமு சார்.

காமராஜ் said...

அன்பின்

ஆறுமுகம் முருகேசன்,
ராகவன்,
கார்த்திக் சிதம்பரம்,
செந்தில்,
பாலாண்ணா,
விஜி அண்ணா,
மஹி,
ராம்ஜி,
பாரா,
கண்ணன்,
அருணா

எல்லோரது அன்புக்கும் நன்றி.

ச.முத்துவேல் said...

தலைப்புக்கேற்ற அருமையான கவிதை. கவிதைக்கேற்ற அருமையான தலைப்பு.
வலிகளை அறிவதின் வலி.

ஈரோடு கதிர் said...

கவிதையும் உலுக்குகிறது

சீமான்கனி said...

//கழுத்து தூளியில் தூங்கும் குழந்தையோடு
பேருந்து நிறுத்தத்தில் உறுமும்
கலைக்கூத்தாடிப் பெண்ணின் மேளச்சத்தம்.//


//எஞ்சினீயர் கனவோடு கூட நிற்கும் மகனைக்காட்டி
வங்கிக்கடன் கேட்கும் ஏழைத்தகப்பனின் கண்களும்//

கல்லெறிந்தது குரல்கள் காயப்பட்டது கணங்கள்...சிறப்பாய் இருக்கு அண்ணே...

காமராஜ் said...

வாங்க வாங்க முத்துவேல். நன்றி.

நன்றி கதிர்,

அன்புக்கு வணக்கம் கனி.

உயிரோடை said...

அண்ணா குரல் எறியும் கற்களை பிடிக்க முயல்கிறேன்.

ராசராசசோழன் said...

யதார்த்தத்தை அழகாக பதிந்து இருக்குறீர்கள்...

r.v.saravanan said...

முன்மதிய நேரத்தில் தூரத்து வேலிச்செடியினின்று
தேடும் குயிற்பறவையின் கோரிக்கையும்

ஈர்க்கும் வரிகள்