22.12.10

வறுமையின் வாசமும் சிகப்புத்தான்.

கோழிக் கடைக்கானால் ஆளில்லாத நேரமாகப் பார்த்துப்போவான் தங்கவேல்.ஓசி வாங்கவோ கடன் வாங்கவோ இல்லை. அந்த ஊதா நிற வெற்று பீப்பாய்க்குள் கிடந்து அறுபட்ட கோழிகள் துடிக்கிற சத்தம் கேட்கவே பயமாக இருக்கும்.கோதைநாச்சியார் புரத்து காளியம்மன் பொங்கலுக்கு போயிருந்தப்போ கோழியை அறுத்து பச்சை ரத்தம் குடிக்கிற காட்சியைப்பார்த்து விட்டு ரொம்ப நாள் கோழிக்கறியே திண்ணாது இருந்தான்.அதுவும் அந்த பூசாரி விறகுவெட்டும் போது கையில் அறிவாள் பட்டு ரத்தம் வரும்போது துடித்தார்,அந்தக்காயம் ஆறாமல் அவஸ்தைப்பட்டார் .அப்போதும் கூட அந்தக் கோழியின் ஞாபகம் வேறு வந்து தொலைத்து விட்டது.அயிரை மீனையும்  சாப்பிடமாட்டான். அது குழம்புக்குள் கிடப்பதும் கலங்கல் தண்ணீரில் உயிரோடு மிதக்கிற மாதிரியே இருக்கும்.சாப்பிடும் போது தொலைக்காட்சியில் செய்தி பார்க்கமாட்டான் எதாவது குலைபதறுகிற மாதிரி காட்சிகள் தெரிந்தால்,அத்தோடு கைக்கழுவி விடுவான்.

ஞாயிற்றுக்கிழமைகள் அந்த இடம் ஒரே ரத்தச்சிவப்பாக இருக்கும். இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கரவாகனங்கள் சைக்கிள், பாதசாரி  என மசாலா தடவிய ஏக்கங்களோடு குழுமியிருப்பார்கள்.கையில் வயர்க்கூடை,மஞ்சள் பை ஏந்திக்கொண்டு முதல் வளையம்.எனக்கு முதலில் நான் மேனேஜர்.நான் நான் இந்த ஏரியா கவுன்சிலர் எனக்குத்தான் முதல் கவிச்சை.நான் சட்டம் ஒழுங்கு. இப்படி சைலன்சர் மாட்டிய உருமல்களோடு காத்திருப்பார்கள். வாலைத் தூக்கிக் கொண்டு நாய்கள் இரண்டாவது வளையம்.வெளிப்படையாக குறைத்துக் கொண்டு,விரட்டிக்கொண்டும்.மூன்றாவது வளையம் காக்கைகள்.எல்லோருடைய சட்டைப்பைகளையும் குறிவைத்தபடி அந்த மாலா ப்ராய்லர் கடைக்கார கந்தசமி.

'வாங்க தலைவரே எத்தனை கிலோ'என்று கேட்பார்.வியாபார நெளிவு சுளிவு.

'கேள்வியை மாத்துங்க எத்தனை கிராம்'

'கவர்மெண்டு ஸ்டாப் இப்படிக் கஞ்சத்தனம் பண்றீங்களே சார்'.

'நாங்க ஸ்டாப் மாத்ரம் தான்,நீங்க அதுக்கும்மேலே.சனிக்கிழமை வரைக்கும் கவர்ண்மெண்டு தொழிலாளி.ஞாயிற்றுக் கிழமையானால் கறிக்கடை முதலாளி'.

சம்பளம் கொடுக்கிற அலுவலகத்தில் பகுதிநேரமும்,சம்பாத்யம் கொடுக்கிற கோழிக்கடையில் சதா சர்வகாலமும் கிடக்கிற அவர் ஒருகாலத்தில் பெரும் கோழிப்பண்ணையாரானால் உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்று அடைமொழி போட்டுக்கொள்ளலாம்.எவன் கேட்கப்போகிறான்.சோலைச்சாமி மாதிரி வட்டிக்கு கொடுத்து வாங்காததால் கந்தசாமியை ஏற்றுக்கொள்ளலாம் பரவாயில்லை.ஊர் முழுவதும் மினரல் வாட்டர் விற்பனை நடக்கிறது.பானை பத்துரூபாய்க்கு குறைந்த விலையில் கொடுப்பவன் தானே தியாகி.

நான் ஒரு சேரிவீட்டில் சாப்பிட்டேன் அதனால் எனக்கு தியாகிப் பட்டம் வேண்டும் என்று ஆளுநருக்கு விண்ணப்பம் அனுப்பித்த குறுந்த மடம் கோவிந்தராஜைப் பற்றிப் பிறகு விலாவாரியாகப் பேசிக்கொள்ளலாம்.இப்போ கறிக்கடைக்கு வாங்க.கந்தசாமியைக் கண்டால் தங்கவேலுக்கு பிடிக்கவே பிடிக்காது.அவர் போட்டிருக்கிற  கோழி ரத்தத்தால் நெய்த சட்டையைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.அதை  அவர் வீட்டுக்கு கொண்டு போவாரா, துவைப்பாரா. இந்தச் சந்தேகத்தை எப்படித் தீர்த்துக்கொள்வது என்கிற உறுத்தல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தங்கவேலின் சாயங்காலம் வரை கூடவரும்.ரத்தப் பிசுக்கோடு விரல்களுக்கிடையில் புகையும் கத்திரிச் சிகரெட்டு.அதை ஒரு நிழற் படமாக எடுத்தால் கண்காட்சியில் வைக்கலாம். அதை அவர் உதட்டில் வைக்கும்போது ரத்தவாடை வருமா நிகோட்டின் கலந்த புகைவாடை வருமா. இப்படி விநோதமான பட்டிமன்றத் தலைப்புகள் நொரண்டிக்கொண்டே இருக்கும்.

பக்கத்து கடையிலிருந்து ஐந்து தேநீர் குவளை வரும்.கழுத்து அறுக்கிற வினோத்,துண்டு போடுகிற சதீஷ்,பக்கத்து ஆட்டுக்கறிக்கடை ராமர்,கந்தசாமியின் நண்பர் லட்சுமணன்  நாலுபேரும் மடமடவெனக் குடித்துவிடுவார்கள்.பணம் வாங்கிப்போட சில்லரை கொடுக்க கடனை நோட்டெடுத்து எழுதிவைக்க தேநீர் ஆறிப்போகும்.துக்கித்தண்ணீர் குடிக்கிறமாதிரிக் குடிப்பார்.பார்க்கிற தங்கவேலுவுக்கு அவர் பச்சை ரத்தம் குடிக்கிற மாதிரியே இருக்கும்.சில நேரம் இட்லி வாங்கிக் கூட அதே இடத்தில் வைத்துச் சாப்பிடுவார்.அப்பொழுதெல்லாம் மத்தியானம் வயக்காட்டில் சாப்பிட உட்காருகிற அய்யாவின் ஞாபகம் வந்து போகும்.குடிக்கப்போகிற கம்மங்கஞ்சியை ஏதோ எட்டுவகை காய்கறியோடு இலச்சாப்பாடு சாப்பிடுகிற முஸ்தீபுடன். பம்புசெட்டுத் தொட்டியில் கைகால் அலம்புவார்.தலைத் துண்டை எடுத்து ஈரம் துடைத்துக்கொண்டு சம்மணமிட்டு உட்கார்ந்து அந்த துண்டை மடியில் வைத்துக்கொள்வார்.

இந்தக் கந்தசாமியின் கல்லா முதல்,தொங்குகிற பெருமாள்சாமி படம் வரை ரத்தம் தோய்ந்ததாகவே  இருக்கும். ஆனால் அவரே ஒருநாள் டீயில் ஈ விழுந்துகிடந்ததென்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்தாரே பார்க்கலாம்.டீக்கடைக்காரர் கெக்கெக்கே எனக் கோழி கேறுவதுபோலச் சிரித்து விட்டு வேறு தேநீர் கொண்டு வைத்துவிடுப் போனார்.இந்த கலேபரசுவாரஸ்யத்தில் வண்டியில் மாட்டியிருந்த கோழிக்கறையைக்காணவில்லை.பதறிப்போய் சுற்றும் முற்றும் பார்த்தான். மீண்டும் கல்லாப்பாக்கம் வந்தான்.என்ன தலைவரே வண்டிச்சாவி மறந்துட்டிங்களா என்று கந்தசாமி கேட்டார்.விஷயத்தைச்சொன்னான். அந்த இடமே தங்கவேலைக் கவனிக்கத் தொடங்கியது.கந்தசாமி கல்லாவை விட்டு இறங்கிவந்து சுற்றுமுற்றும் நோட்டம் விட்டார்.அப்போது வண்டியில் வந்து இறங்கிய சுகுமார் வாத்தியார் என்னவெனக்கேட்டார்.ஓடைப்பக்கம் கையைக்காட்டி அங்கே ஒரு நாய் பாலித்தீன் பையைக் கவ்விக்கொண்டு ஓடுகிறதென்று சொன்னார்.

ஓடிப்போய் பார்த்தார்கள் சொறிப் பத்திப்போய் ஒரு செவலை நாய் தின்று கொண்டிருந்தது.போட்றா விநோத் என்றார் கந்தசாமி.வாலிபமும் கோபமும் கொண்ட விநோத் வெட்டுக் கத்தியை பலங்கொண்ட மட்டும் ஓங்கினான்.
வேண்டாந் தம்பி என்று தடுத்து நிறுத்தினான் தங்கவேல். ரெண்டுபேரும் விநோதமாகப் பார்த்தார்கள்.வண்டியை எடுத்துக்கொண்டு திரும்பவும் அந்தவழியே வந்தான்.இப்போது அங்கு நாயைக் காணவில்லை.சிதறிக்கிடந்த கறித்துண்டுகளை எடுத்து கிழியாத பாலித்தீன் பையில் சேகரித்துக் கொண்டிருந்தார் ஒரு நடுத்தர வயசுக்காரர். 

11 comments:

Unknown said...

என்ன நண்பரே! ஞாயிற்றுகிழமை கறிக்கடைப் பக்கம் விசிட் அடிச்சிங்களா? கனமா இருக்கு கதை.

நேசமித்ரன் said...

அடவு கட்டி ஆடுகிறது மொழி :)

Unknown said...

'கேள்வியை மாத்துங்க எத்தனை கிராம்'

சுவராசியமான வரிகள். கதை அப்பிடியே அழுத்தமா இருக்கு மனதில். இப்பிடி கதை சொல்லி எங்க மனதை அழுத்திப் பிடிக்கிறீங்க.

வினோ said...

அண்ணா சரளமா இருக்கு நடை...

Anonymous said...

நல்லதொரு கதை. அருமையான க்ளைமாக்ஸ்

Umapathy said...

ovvoru varium kanakka vaikkirathu.

ராகவன் said...

அன்பு காமராஜ்,

அருமையான பதிவு/கதை இது... கடைசி வரிதான் முழுக்கதையும்...

பிராய்லர் கோழி வந்தபிறகு...கோழிக்கறி சாப்பிடும் ஆசையே போய்விட்டது...

விடக்கோழியா சந்தையில பிடிச்சு வந்து, தன் காலில் அதன் கால்களையும், இறக்கைகளையும் ஒருசேர பிடித்துக் கொண்டு, இடது கையில் வாகாய் கோழியின் கழுத்தை வாகாக நீட்டிக் கொண்டு அப்பாவின் பையில் இருக்கும் வயர் சீவும் கத்தியை எடுத்து குரல்வளையை அறுத்து ரத்தத்தை ஒட்டப் பிடித்து, கோழி துடிப்பதை ஆர்வத்துடனும், அம்மாவின் தைர்யத்தை ஆச்சரியத்துடனும் பார்த்திருக்கேன்...கால்களை தனியா அறுத்து தூரப்போட்டு விட்டு, மயிறு பிடுங்கி, மஞ்சள் தடவி மண் அடுப்பில் வாட்டி கொஞ்ச கொஞ்சமாய் அது எண்ணெய் கசியும் போது தோலோடு அறுத்து பித்து கலையாமல் எடுத்து தூரப்போடும் கலையான கொலை, பிராய்லர் கோழியில் இல்லை... பூஞ்சைகள் பிராய்லர் கோழிகள்... அதனாலேயே கோழி இப்போது பிடிப்பதில்லை.

விருந்தோம்பல்னா என் அப்பா தான், எப்போதும், ஏலே வாசு... போய் மீசைக்காரன் கடையில் தொடைக்கறி எளங்கறியா வாங்கியா... நல்லி எலும்ப நாலஞ்சா வாங்கிக்க! நைனா கேட்டார்னு சொல்லு தருவான்... என்று அம்மாவை இட்லி கறிக்குழம்புடன் கொதிக்க வைத்து, மணக்க மணக்க உபசரித்தது எல்லாம் ஆட்டுக்கறி விருந்துகளில் தான்.

உங்க மொழி, நடை வழக்கமான மினுக்குடன் உடாடுது தான் என்றாலும்.. சில வரிகள் தொடர்பில்லாமல் தொங்குவது போல இருக்கு... முதல் பத்தியும் அப்படித்தான் தொடங்கி... ஒரு இடைவெளி விட்டு மீண்டும் தொடர்கிறது காமராஜ்...

அன்புடன்
ராகவன்

Jayaprakashvel said...

நல்லா இருக்கு

vasu balaji said...

கறியைப் பத்தி தெரியாது. இந்த மாதிரி கதை சொல்லும் லாவகமும் தெரியாது. அருமை.

சேக்காளி said...

வறுமையில் இருக்கும் போது வீசும் வாசமெல்லாமே சிவப்புதானோ?

Mahi_Granny said...

குறுந்த மேடம் கோவிந்தராசுவுக்காகவும் காத்திருக்கிறோம் . தங்கவேலுவுக்கு வந்த சந்தேகங்கள் சரிதான் .ஒரு கறிக்கடையில் இவ்வளவு சங்கதி இருக்கு என்பதே ஒரு ஆச்சரியம் .