4.9.11

மனதில் கேடுள்ள மனிதனை எளிதில் பழக்கமுடியாது.


சில நேரம் விதி என்பது கூட உண்டோ என்கிற மாதிரி நிகழ்சிகள் அமைந்துவிடுகிறது. ஒரே சுற்றுச்சுவர் இருக்கும் ஜெகன் மினி ஜெகன் தியேட்டரில் காஞ்சனா,ரௌத்திரம் ஆகிய இரண்டு படங்கள் திரையிடப்பட்டிருந்தது. காஞ்சனாவில் நகைச்சுவையும் புதிதாக திருநங்கையர் குறித்த மாறுபட்ட தமிழ்சினிமா அனுகுமுறையும் இருப்பதாக நண்பர்கள் சொல்லியதால் அந்தப்படம் பார்க்கப்போய், தவறுதலாக ’ரௌத்திரம்’ டிக்கெட் எடுத்து உள்ளே போக நேர்ந்தது. விதி வலியது. கொடுத்த எழுபது ரூபாய்க்கு படம் பார்த்து தீர்ப்பது என்கிற முடிவு. சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக்கொண்டது போலாகியது. ரௌத்திரம் என்பதற்கு பொத்துக்கொண்டு வருவது என்று பதவுறை எழுதியிருக்கிறார் உயர்திரு கோகுல் என்கிற இயக்குனர். சமீபமாக பார்க்கநேர்ந்த இப்படிக்கதைகள் மிகத்துள்ளியமாக ஒரு குறிப்பிட்ட மக்களை குரூர எதிரியாகச் சித்தரிக்கிறது. அப்படி சுட்டிக் காட்டப்படும் மக்கள் சிறுபான்மையினராக இருப்பதால் அதற்கு எதிராக எந்த சலலசலப்பும் எழுவது இல்லை. பெரும்பாண்மை மக்களை பெருமைப்படுத்தி கதை புனையப்படுவதால் அவர்களும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

கதாநாயகன் நடுத்தர குடும்பத்து உயர் ஜாதிக்காரனாக சித்தரிக்கப்படுகிறான்.போகட்டும்.அவன் நடுத்தெருவில் எதிரிகள் என்று சொல்லப் படுகிற ’கருப்பு நிற ’ ரவுடிகளை துவம்சம் செய்கிறான். வில்லன் வில்லனின் கையாட்கள்,அவர்களுக்கு உதவிசெய்கிற சட்டமன்ற உறுப்பினர் எல்லாமே கலப்படமில்லாத கருப்புநிறத்தில் இருப்பது போல தேர்ந்துகொண்டிருப்பது ஒட்டாமல் துருத்திக்கொண்டு தெரிகிறது. அந்தக்கதையின் தர்க்கத்தை நியாயப்படுத்த பாலாவின் படத்திலிருந்து ராஜ்கிரன் பேசுகிற வசனமாக சாமி நேர வராது அநியாயத்தை தட்டிக்கேட்கிற ஓவ்வொருத்தனும் சாமி தான் என்கிற வசனத்தை கோர்க்கிறார். அப்புறம் நடுத்தெருவில் இழுத்துக்கொண்டு போகும் பெண்ணைக் காப்பாற்றி அவள் அப்பனிடம் ஒப்படைக்கிறான். அவர் பெருமாள் கோவிலுக்கு வந்து சாமி கும்பிடாத நான் உன்னத்தான் சாமியாக்கும்பிடுகிறேன் என்று சொல்ல பின்னணியில்  வேத ஊச்சாடனங்கள் ஒலிக்க  பெருமாள் சிலை உயர்ந்து,அவர் உலாத் துவங்குகிறார்.

எல்லாமும் சரிதான். தவறு செய்கிறவன் எவனாயிருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும். ஆனால் முக்கியமான ரவுடியும் அவன் சேரித் தெருவும்,அவன் அணிந்திருக்கும் சிலுவைக்குறியும் க்ளோசப்பில் காட்டுவதால் தப்பு செய்கிறவன் எல்லோரும் விளிம்பு நிலைக்காரன் என்கிற கேடுகெட்ட சினிமாப் புத்தியை பொதுவாக்க முயல்கிறார் திருவாளர் கோகுல். இது மாதிரியான காட்சியமைப்புகள் கிட்டத்தட்ட தமிழ் (அகோர)ஆக்க்ஷன் படங்களின் பொது விதி என்றே ஆகிவிட்டது. ஆங்கிலப்படங்களில் இருந்து திருடப்பட்ட இப்படிப்பட்ட காட்சி களை தமிழ் மயப்படுத்துகிற பாவனையில் அப்பாவி விளிம்புநிலை மனிதர்களை எதிரியாக்குகிற படங்களை திருப்பாச்சி,நான் மகான் அல்ல, போன்றவற்றை குறிப்பிட்டு வரிசைப்படுத்தலாம். தமிழ்நாட்டின் நிவியல்புகளையும், சாதிய அடுக்குகளையும், அவற்றுக்குள் ஏற்படுகிற முரண்பாடுகளையும், அங்கு நடந்தேறுகிற பயங்கரங்களையும் அறியாத வெறும் தொழில்நுட்ப மொன்னைகள் தான் தங்களைப் படப் பாளிகள் என்று பிரகடனப்படுத்திக்கொள்ளுதுகள். இப்படிகதைகள் தயாரிப்பாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதும், பிரம்மாண்டச் செலவில் உருவாகி விற்றுப்போவதும் விநோதமில்லை. ஒரு இயக்குநர் குறைந்த பட்ச சமூக சிந்தனையில்லாமல் எப்படி இருக்க முடியும் என்பது தான் இங்கே விநோதமாக இருக்கிறது.

ஒரு கால் நூற்றாண்டுகாலம் தமிழ்சினிமாவில் கொடிகட்டிப்பறந்த திருவாளர் எம்ஜியாரை எனக்குப் பிடிக்காது. ஆனால் அவர்  திரைப் படங்கள் எல்லாமே நலிந்த மக்களின் பக்கமும் ஆதிக்கத்துக்கு எதிராகவும் மட்டுமே இருக்கும். தவறியும் அதில் ஜாதிய அடையாமும் ஜாதிய துவேசமும் இருக்கது. மதங்களுக்கிடையிலான முரண்களில் குளிர்காய்கிற சில்லறைத்தனமும் பூதக் கண்ணாடி கொண்டு பார்த்தாலும் கண்டு பிடிக்கமுடியாது. அந்த ஒரே ஒரு காரணத்துக்காக மட்டுமே அவர் ஜெயித்தார். சிலநேரங்களில் ஆரம்பப்பாடசாலைச் சின்னப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லுகிற மாதிரி பாட்டும் வசனமும்,நடிப்பும் கூட இருக்கும்.அப்போதெல்லாம் நான்  அதைகேலி செய்திருக்கிறேன்.  ஆனால் இப்போதெல்லாம் அந்தக்குள்ள உருவம் கொண்ட கலைஞனின் விசாலமான மனது விஸ்வரூபமாகத் தெரிகிறது. இப்போதிருக்கிற கிராபிக்ஸ்,உயர்தொழில்நுட்பம் எல்லாவற்றையும் காலில்போட்டு மிதித்தபடி.

6 comments:

hariharan said...

எம்ஜிஆர் க்காக எழுதப்பட்ட பாடல்களை கேட்க அப்படி ஒரு ஆனந்தம், ஏதோ பொதுவுட்மைச் சமுதாயம் சில மைல்களில் இருப்பது போல தோன்றும். சினிமாப் படங்களின் தலைப்பைப் பார்த்து ஆகா..பாரதியின் விசிறியாக இருப்பானோ என்று எண்ணமுடியவில்லை.

ஆனால் நீங்க வைத்துள்ள தலைப்பு நன்றாக இருக்கிறது. இதை மாதிரி ‘அன்னா’ வின் ரசிகர்களை திருத்தமுடியாதுன்னு கூட சொல்லலாம்.

கிச்சான் said...

அண்ணா
உணமையிலே நீங்க சொந்த காசுலதான் சூனியம் வச்சுகிட்டிங்கன்னு நினைக்கிறேன்


அன்புடன் கிச்சான்!

Rathnavel Natarajan said...

சிலநேரங்களில் ஆரம்பப்பாடசாலைச் சின்னப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லுகிற மாதிரி பாட்டும் வசனமும்,நடிப்பும் கூட இருக்கும்.

நல்ல பதிவு.
நன்றி.

MANO நாஞ்சில் மனோ said...

நல்லா சொன்னீங்க....!

ஓலை said...

Nallaa solliyirukkeenga.

நிலாமகள் said...

ஒரு இயக்குநர் குறைந்த பட்ச சமூக சிந்தனையில்லாமல் எப்படி இருக்க முடியும் என்பது தான் இங்கே விநோதமாக இருக்கிறது.//
உங்க‌ ஆத‌ங்க‌ங்க‌ள் தான் எங்க‌ளுக்குள்ளும்!