11.9.11

மங்காத்தா - தமிழ்சினிமா இதுவரை அரைக்காத கதை.




மங்கம்மா சபதம், ஒளிவிளக்கு,நல்லவன் வாழ்வான் என்றெல்லாம் தலைப்பைத்தேடித்தேடிஅலைந்த தமிழ்ச்சினிமா பயபுள்ள,ஏய், டூ என்றெல்லாம் தலைப்பு வைக்க துணிந்து விட்ட நிலையில் மங்காத்தா என்கிற இந்த தலைப்பு கொஞ்சம் முற்போக்கானதாக தோற்ற மளிக்கிறது. அந்த மங்காத்தாவை ராமநாதபுரம் வேலுமணிக்கம் திரையரங்கில் பார்த்தேன். சவாலே சமாளி என்கிற படத்தைப் பார்க்க எனக்கு எழுபதுகளில் வெறும் இருவத்தைந்து காசுகள் மட்டும் செலவானது. இப்போது சர்வசாதாரணமாக நுறு ரூபாய் வாங்கிக்கொண்டு நுழைவுச் சீட்டைக் கொடுக்கிறார்கள் அது என்னமோ ஆஸ்பத்திரி அட்டை மாதிரி இருக்கிறது. இருக்கைக்கு நுழையும்போது அதைக் கவனமாக திரும்ப வாங்கிக்கொள்கிறார்கள்.வீட்டுக்கு ஒரு ஹசாரேவை வைத்து கண்கானித்தாலும் அம்பானி வகையறாக்கள் அதற்கும் செலவுகளை ஏற்றுக்கொண்டாலும் கூட எதுவும் செய்ய முடியாது என்பதை நிமிடத்துக்கு நிமிடம் உறுதிசெய்கிற இந்திய லஞ்சத்தின் இன்னொரு வடிவம் இது. ஹசாரே ...அது வேறுவகையான சினிமா.

சமீபத்தில் அதிகம் பார்வையாளர்களை தியேட்டருக்கு இழுத்த பெருமை காஞ்சனாவுக்கு அடுத்து மங்காத்தா படத்துக்குத்தான் சேரும் அவ்வளவு கூட்டம். படம் வெளியாகி எட்டுநாள் கழித்து இவ்வளவு கூட்டம் என்பது இப்போதைய தழிழ்சினிமா வரலாற்றில் அபூர்வம்தான். அதற்கான ஈர்ப்பு இந்தப்படத்தில் இருக்கிறதா என்றால் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. நீண்டகாலமாக கெட்டவனைப் போரிட்டு ஜெயிக்கும் நல்லவன் கதைகளாகப் பார்த்து அலுத்துப்போன மக்களுக்கு முள்ளும் மலரும்,பொல்லாதவன், இப்படியான நெகடிவ் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்தபோது ஏற்பட்ட ஈர்ர்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது. எங்கே பார்த்தாலும் ஒரே அருவா,கிராமம் வெட்டுக்குத்து இந்த ரத்தவாடைக்குள் ரெண்டு குத்துப்பாட்டு,ஒரு டூயட் பாட்டு பாத்துப்பாத்து சுருண்டுபோன மக்களுக்கு விநாயக் மகாதேவன் பாத்திரம் தெம்பான அறிமுகம். ஒரு இருபது வருடங்கள் இந்த சினிமவுக்குள் கிடந்து முதிர்ச்சி அடைந்த ஒரு நடிகனுக்கு கிடைத்த லட்டு மாதிரியான பாத்திரம். இதுவரைக்கும் தமிழ்சினிமா உலகில் பேசப்படாத கிரிக்கெட் சூதாட்டம் இதில் பேசப்படுகிறது.

யூகிக்கமுடியாத கதைத்திருப்பங்களும் வேகம் வேண்டும் என்பதற்காக மெனக்கெட்டு சேர்க்கப்படும் கட்சிகளும் இல்லாத இந்த ரகம் புதுசு.இடைவேளைவரை படம் மெல்ல நகர்கிறதென்கிற குற்றச்சாட்டை ஊர்ஜிதப்படுத்துகிற இயல்புக்காட்சிகள் நிறைய்ய இருக்கிறது. தூங்குவது குளிப்பது இனிமேல் குடிக்கக்கூடாது என்று தனக்குத்தானே பேசிக்கொள்வது நிச்சயமாக அதிகம் சோர்வைத்தரும் காட்சிகள் தான்.அதுவுமில்லாமல் அப்போதெல்லாம் பின்னணி இசையே இருக்காது எதோ கல்யாண வீடியோ பார்த்த  உணர்வு வரும். ஆனால் அந்த மந்தக் காட்சிகள் தான் இந்தப்படத்தின் முடிவுக் காட்சிகளுக்கு கூடுதல் வேகத்தைக் கொடுக்கிறது. மேக்கப் இல்லாத நரைத்த முடியோடு அஜித். தமிழ்ச் சினிமாவுக்கு அச்சாணியாக இருக்கிற காதல் சரக்கை உலகத்துக்கே அச்சாணி என்று பினாத்துகிற உருகுதல் இல்லாதது. விவேக்,சந்தாணம் போன்ற ஹைகிளாஸ் கமெடியன்கள் வைத்துக் கொள்ளாதது. ஆகக்சிறந்த எழுத்தாளர்கள் என்கிறவர்களை எழுதச் சொல்லி ஆகக் குப்பையான, ஆக பிற்போக்குத் தனமான, ஆக சாதிய திமிர்நிறைந்த சிந்தனைகளை பரப்புதல் என்று செக்குமாட்டு தடத்திலிருந்து கொஞ்சம் விலக எத்தனித்திருக்கிற முயற்சி இது.

த்ரிஷாவும் அஜித்தும் மீண்டும் இணைவார்கள் என்கிற எதிர்பார்ப்பு.கல்யாணமாகி புதுத்தாலியின் நிறம் மங்காமல் இருக்கும் அஞ்சலிக் காகவாவது வைபவ் உயிரோடு வந்துவிடுவார் என்கிற நம்பிக்கை.வேறு எவனாவது புதுசா ஒரு வில்லன் வந்து ஊடே புகுந்துகொள்ள த்ரிஷாவின் தகப்பனாரான ஜெயப்ரகாசும் அஜித்தும் கைகோர்த்துக்கொண்டு துவம்சம் செய்வதற்கான ஒரு தமிழ் ஆக்சன் சினிமா  இடை வெளியிருக்குமே அதற்குள்ளும் கதை ஊடுறுவவில்லை.  

ஆக இது வழக்கமாக அரைத்த மாவு இல்லை. என்றாலும் செறிவூட்டம் மிக்க கதையும் பாத்திரத்தேர்வும் இதில் இல்லை. யுவனின் பின்னணி இசை அருமை என்று பல பல விமர்சனங்கள் இட்டுக்கட்டினாலும் வத்தியக்கருவிகளை மூடிவைத்து விட்டு நடிக்க வாய்ப் பளிக்கிற உணர்வுகளை அதிகப்படுத்துகிற மௌனமும், புல்லாங்குழல், தவில், கஞ்சிரா, உடுக்கு, எவர்சில்வர் பானை, கோழிக்குஞ்சு அடங்கி அழவைக்கிற தாலாட்டு என அள்ளி அள்ளி கொடுத்த இளையராஜாவைத் தாண்டி இதுவரையாரும் முயற்சிக்க வில்லை. ராமராஜனா, மோகனா நீங்க எப்படிவேண்டுமானலும் சொதப்புங்கள்.ஆனால் வாழ்நாளெல்லாம் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் இதமான பாடல்கள் கிடைக்கும் என்று நம்பித் தியேட்டருக்குப் போகவைத்த இசை இப்போது கிடைப்பதில்லை. ஒரு வேளை இது தலைமுறை இடை வெளி யாகக் கூட இருக்கலாம். ஆனால் இசை வெளியென்பது நினைவுகளை இழுத்துக்கொண்டு அலைவது. அப்படி இழுக்கிற ஒரு பாடல் கூட இந்தப்படத்தில் இல்லை.

இவ்வளவு சீரியசான கதைக்குள் வலிந்து புகுத்தப்பட்ட ப்ரேம்ஜி அநாவசிய பாத்திரம். காமெடி கட்டாயம் வைத்தால்தான் படம் ஓடும் என்கிற மூட நம்பிக்கையும் எப்படியாவது தலையைக் காண்பிக்க வைக்கவேண்டும் என்கிற சகோதர பாசமும் அநாவசியம். ப்ரேம்ஜி க்கு கிடைத்திருக்கிற மேடை கிடைத் தற்கரிய மேடை அதை உபயோகப்படுத்த நிறைய்ய யோசிக்க வேண்டும் மெனெக்கெடவேண்டும். அதே போல கங்கை அமரனுக்கு கிடைத்த  கரகாட்டக் காரன் மாதிரி வெங்கட்பிரபுவுக்கு இந்த மங்காத்தா. தமிழ்ச்சினிமாவுக்குள் ஒரு இடத்தை நிறுவி இருக்கிறது அதைக்கவனத்துடன் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

14 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நல்ல அலசல்.
ஆனால் சினிமாவே பார்ப்பதில்லை.
வாழ்த்துக்கள்.

Mahi_Granny said...

உங்களிடம் பாராட்டு வாங்கியதில் தெரிகிறது பார்க்க கூடிய படம் என்று. உங்கள் நடையில் ஒரு அலசல் என்பதால் கூடுதல் ரசனை

Ashok D said...

குளத்தில் வீசப்படும் பொறிகளுக்கு மீன்குஞ்சுகள் எட்டிப்பார்ப்பதுபோல,
பதிவின் ஊடே ஒரு கவிஞன் தெரிந்துக்கொண்டிருந்தது அழகு :)

//இசை வெளியென்பது நினைவுகளை இழுத்துக்கொண்டு அலைவது// :)

தமிழ்வாசி பிரகாஷ் said...

வித்தியாசமான பார்வை.... நன்று...

vasu balaji said...

/ஹசாரே ...அது வேறுவகையான சினிமா./

உங்க குறும்பை ரசிச்சு சிரிச்சிட்டேயிருக்கேன்:)))))))

செ.சரவணக்குமார் said...

சிறப்பான அலசல் காமு அண்ணா. ரொம்ப நாள் கழிச்சி இப்பத்தான் உங்களை வரிசையா படிச்சிட்டு இருக்கேன். ராமனாதபுர நாட்கள் உட்பட எல்லாவற்றையும் இன்று வாசித்தேன்.

rajasundararajan said...

//ஆகக்சிறந்த எழுத்தாளர்கள் என்கிறவர்களை எழுதச் சொல்லி ஆகக் குப்பையான, ஆக பிற்போக்குத் தனமான, ஆக சாதிய திமிர்நிறைந்த சிந்தனைகளை பரப்புதல் என்று செக்குமாட்டு தடத்திலிருந்து கொஞ்சம் விலக எத்தனித்திருக்கிற முயற்சி இது.//

இதை ரசித்தேன். ஆகச் சிறந்த எழுத்தாளர்களுக்குப் புகழ் வேண்டும்; பணம் வேண்டும் - என்ன செய்ய?

//..என்று செக்குமாட்டு தடத்திலிருந்து..// என்பது '..என்ற செக்குமாட்டுத் தடத்திலிருந்து..' என்றிருக்க வேண்டும்தானே?

ஓலை said...

Sema alasal. Aaga moththam oru thdava paarththudalam gareenga. Good.

N.H. Narasimma Prasad said...

அருமையான அலசல். எந்த இடத்திலும் நீங்கள் படத்தின் கதாநாயகனை பெரிதாக பேசாமல் அளவாக சொல்லியிருப்பது, உங்கள் பார்வைக்கான நேர்மையின் வெளிப்பாடு.

Sulaxy said...

அடோ.. நம்ம தலைய பற்றி தப்பா கதைச்ச அப்புறம் பெரிய பிரச்சினையாகிடும் சொல்லீட்டன்..
http://illamai.blogspot.com

ராகவன் said...

அன்பு காமராஜ்,

நல்லாயிருந்தது இது போல ஒரு திரைப்பார்வை...காமராஜ் மாதிரி ஒரு சமூகப் படைப்பாளி திரைப்பார்வை பார்த்தால் இப்படித்தான் இருக்கும் போல...

இதை திறனாய்வு என்ற ரீதியில் பார்க்காமல், ஒரு படம் பார்த்து வந்த ஒரு சமூக, அரசியல் பார்வை உள்ளவன் பார்த்தால், அவன் எழுத்து திறமை உள்ளவனாயும் இருந்தால்... இப்படி தான் எழுதுவான் என்று நினைக்கிறேன்.

எத்தனை விஷயம் இதில் இருக்கு படத்தைத் தவிர... சமூகம், பொருளாதாரம், அரசியல், காசு இலக்கியம் என்று சகலத்தையும் தொட்டு கலக்குறீங்க காமராஜ்! உங்களோட அங்காடி தெரு, பேராண்மை, உன்னைப்போல ஒருவன் போன்ற எந்தப்படத்திலும் இது போல ஒரு எள்ளலும், சாடலும் ஒரே நேரத்தில் இல்லை.

ரொம்ப ரசிச்சேன்... காமராஜ்...

அன்புடன்
ராகவன்

மனசாலி said...

Rathnavel said...

நல்ல பதிவு.
நல்ல அலசல்.
ஆனால் சினிமாவே பார்ப்பதில்லை.
வாழ்த்துக்கள்.


சினிமாவே பார்ப்பதில்லை என்பதில் ஒரு பெருமையா?

ராகவன் said...

அன்பு மனசாலி,

ரத்னவேல் அவர்கள், சினிமாவே பார்ப்பதில்லை என்பதை ஒரு சாதாரண விஷயமாக எந்த உள்ளீடும் அற்று தான் சொன்னார் என்று நினைக்கிறேன்...

கலையின் எந்த வடிவத்திலும் அவருக்கு ஈடுபாடு உண்டு என்பதில் சந்தேகம் இல்லை.

அன்புடன்
ராகவன்

Unknown said...

நல்ல பதிவு ,வித்தியாசமான அலசல் !