18.9.11

பெட்டிக்குள் சுருங்கிப்போன பிராயங்கள்.


அம்மையின் இடுப்பும்
அப்பன்காரனின் முதுகும்

வாசற் கதவும்
வள்ளிமுத்து தாத்தாவீட்டு
வண்டி மேக்காலும்

வானம் விரித்துப்போட்ட
படுதாவில் வரைந்த
மேகச்சித்திரங்களும்

பள்ளிக்கூடப்பெஞ்சும்
பார்வதியின் சடைக்குஞ்சமும்

மதியமழைநாளில்
காரைவீட்டு மொட்டைமாடிக்
குழாயிருந்துகொட்டும் குற்றாலமும்

வேலவர் பவுல் மாதுவென
சாயக்கிடைத்த தோள்களுமாய்
விளையாடக்கிடைத்த நாட்களை

ஈடுகட்டுமா
பொம்மைப்படங்களும்
போகோசானலும் ?

காட்ட்டுப்புழுதியில்
சுட்டுத்தின்ற
காடைமுட்டையின்
ருசியறியுமா
பீட்ஷா சகதிக்குள்
பிசைகின்ற விரல்கள்.

9 comments:

பத்மா said...

nostalgic ....

IlayaDhasan said...

உண்மை ,நமக்கு கிடைத்த அந்த அனுபவங்களை நம் வாரிசுகள் நிச்சயம் கிடைக்கும் பேறு கிட்டவில்லை தான்

படிசீங்களா : மிஸ்டர் பீன் இன் புதிய திரை படம் - விமர்சனம்

சாந்தி மாரியப்பன் said...

நிறைய நினைவுகளை கிளறி விட்டுவிட்டது :-)

Mahi_Granny said...

வீட்டு வாசல் தாண்டி வெளியே போகக் கூட முடிவதில்லை இப்போதுள்ள குழந்தைகளால் . தங்க கூட்டில் சிறை வைக்கப் பட்டுள்ளனர்

ராகவன் said...

அன்பு காமராஜ்,

நல்ல கவிதை... இது...

அன்புடன்
ராகவன்

இரசிகை said...

//
பீட்ஷா சகதிக்குள்
//

:))

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கவிதை!

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

ஆடுமாடு said...

பிரமாதம். ஊர்ப்பெருமை (பிராயம்) பேசுவதும் பாயாசமாகத்தான் இருக்கிறது உங்களுக்கும் எனக்கும்.
படிச்சதும், எப்பவோ விகடன் தீபாவளி மலர்ல எழுதின என் கவிதை ஞாபகத்துக்கு வந்துச்சு.

வட்டு ஓட்டவோ
செல்லாங்குச்சி ஆடவோ
மேலவீட்டு அக்காள்களுடன்
கொலகொலயா முந்திரிக்கா பாடவோ
..........
..........
......... (ஞாபகத்தில் இல்லை)

ஒரு போதும் அனுமதிக்கா அம்மா,
ஆசையோடு அனுப்புகிறாள் பேரனை
கம்ப்யூட்டர் கேம்ஸ் ஆட.

வாழ்த்துகள்.