26.9.11

நம்பிக்கையூட்டும் கதைகளின் வரிசையில்- எங்கேயும் எப்போதும்



ஒரு ஓம்னிப் பேருந்துப் பயணம் தான் மொத்தக் கதை.பயணமும் பயணம் சார்ந்த நினைவுகளும் மட்டுமே தமிழ்ச்சினிமாவுக்கு மையக் கருவாக இருப்பது உண்மையில் துணிச்சலான விஷயம். நீண்ட தூரம் பேருந்தில் பயணப்பட்ட எல்லோரோடும் இந்தக்கதை கைகோர்த்துக் கொள்ளும்.அப்படிப் போகாதவர்களை வெகுவாக ஈர்க்கும் சமாச்சாரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற எதார்த்தப் பதார்த்தம் தான் ’எங்கேயும் எப்போதும்’.

பயண நேரங்களில் நமக்கு கிடக்கும் சௌகர்யங்களையும் அசௌகர்யங்களையும் அழகாகத் தொகுக்க முடிந்திருக்கிறது இயக்குநர் சரவணனுக்கு. கிராமத்திலிருந்து நகரம் போகிற எல்லோருக்கும் போதனைகள் கட்டாயம் காத்திருக்கும். அந்தப்போதனைகள் எச்சரிக்க வழிநெடுகச் சந்திக்கிற மனிதர்களை எல்லாம் கட்டாயம் சந்தேகிக்க வைக்கும். அப்படியாப்பட்ட சூப்பர் ஹீரோவாக இல்லாத சராசரி மனிதனின் பின்னாடி நகர்கிறது ஒலிப்பதிவாளரோடு கூடிய இந்த இயக்குநர் பட்டாளம். மக்கள் இதைத்தான் கேட்கிறார்கள் இந்த வெடுக்வெடுக்கென ஆடும் இடுப்பும்,ரத்தம் கோபளிக்கிற சண்டையும்,கண்ணீர் கொப்பளிக்கிற செண்டிமெண்டும் இல்லையென்றால் போட்ட துட்டை எடுக்கமுடியாது என்கிற இலக்கணத்தை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள் சின்னச் சின்ன இயக்குநர்கள்.

பேருந்தில் ஏறியவுடன் தூங்கிப்போகும் அறிமுகமில்லாத பயணியாக வரும் நபர் மூன்று நான்கு ஷாட்டுகளில் விவேக்கையும் சந்தானத்தையும் ஊதித் தள்ளிவிட்டுப் போகிறான். தாம்பரத்தில் வண்டியை நிறுத்தி திருச்சி திருச்சி என்று நடத்துநர் கத்தியவுடன் எழுந்து பையைத் தூக்கிக்கொண்டு திருச்சி வந்துருச்சா என்று இறங்குகிற போது தியேட்டர் குபீரென ஆர்ப்பரிக்கிறது. சமீபத்திய எல்லாப் படங்களிலும் அழகிய படித்த மேல்தட்டுப் பெண்ணை ஒரு ரவுடி காதலிப்பதாகத்தான் கதை பண்ணினார்கள்.அது விதிவிலக்கு.ஆனால் எதார்த்தமாக தங்கள் கனவுகளுக்கு அருகில் வருகிற ஆண்கள் மேல் காதல் கொள்வதும் அதையே பரஸ்பரம் பெண்கள் மேல் கொள்வதுமாக சித்தரிக்கப்பட்ட நிஜம் இது. உறுத்தாத நிஜம்.

இந்த தமிழகம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முடிந்தாலும் முடியாவிட்டாலும் அதை ஆட்டுவிக்கிற ஒரு பொருள் உண்டெனில் அது தொழில் நுட்பக்கல்லூரிகள். அங்கிருந்து வெளியேறும் எதிர்கால இந்தியா.வெளியேறவிடாமல் வாசலிலேயே வழிமறித்து அழைத்த்துக் கொண்டுபோய் அடைத்துக் கொள்ளும் கார்ப்பரேட் நிறுவணங்கள். அடைக்கப்பட்ட கதவுகளுக்குள்ளிருந்து வெளியேறி எந்த ஊடகத்தையும் சலனப்படுத்தாத பேய்க்கதைகள் மண்டிக்கிடக்கிறது அங்கே. அதைப்பற்றி இன்னும் விரிவாக எந்த ஊடகமும் சொல்லவில்லை சித்தரிக்க வில்லை.அதன் வெளிப்புற விஷயங்களை நம்மோடு லேசாய்க் கசியவிட்டுப் பகிர்ந்து கொள்கிறது இந்த திரைப்படம். அந்த இளைஞர்களின் காதலை தெய்வீக-அமரத்துவம் வாய்ந்ததாக அறிமுகப்படுத்தாமல் ஆணுக்கும் பெண்ணுக்குமான ஈர்ப்பாக முன்வைத்திருப்பது ஆரோக்கியமானது.

அஞ்சலி ஜெய் இணையின் சந்திப்பும் காதலும் அடித்தள நடுத்தரவர்க்கத்தின் ஸ்பெசிமனாக்கியிருப்பதும், துபாயிலிருந்து திரும்புகிற  பிறப்பதற்குமுன் துபாய் கிளம்பிப்போய் ஆவலோடு திரும்புகிற தகப்பன், இளங்காதலர்கள்,ப்ராக்போட்டுக்கொண்டு அண்டை இருக்கைக்கெல்லாம் போய் காட்சியளிக்கிற குட்டீஸ் இந்தப் பாத்திரங்களின் செதுக்கல் எல்லாமே அவர்கள் மேல் நமக்கு அனுதாபம் வரவழைக்கத்தான் என்பதை இறுதிக்காட்சி சொல்லுகிறது.

நேர்க்குநேர் மோதிக்கொள்கிற பேருந்துகள் சின்னாபின்னமாகிற காட்சிதான் தமிழ் சினிமாவின் நிஜத்தொழில்நுட்பம். எனவே கதைகள் வற்றிப் போய்க்கிடந்த தமிழ்ச்சினிமாவுக்கு பலகோடிக் கதைகளில் ஒவ்வொன்றாய் எடுத்துக்கொடுக்க புது ரத்தங்கள் கிளம்பிவிட்டது. அதை அர்த்தத்தோடு சுவீகரிக்கிறது தொழில்நுட்பம். முந்தைய திரைப் படங்களுக்குச் சொல்லியிருந்த எமது விமர்சனங்கள் இதுபோலில்லையே என்கிற ஏக்கம் மட்டும் தான். இந்த நல்லவைகளுக்காக ஒரு பாட்டையும் அதைப்பாடுகிற உதித்நாராயணனையும் மன்னித்துவிடலாம்.

.இறுதிக்காட்சியில் லாரிக்காரர் ப்ரேக்போட்டு நிறுத்தி ஓடிப்போய் இடிபாடுகளுக்குள் பயமிலாமல் இறங்குவது.செல்போனில் நூற்றி எட்டுக்கு தகவல்கொடுக்கும் அடுத்த பேருந்துப் பயணிகள், களையெடுப்பைப் போட்டுவிட்டு ஓடிவரும் உறுத்துள்ள நிஜச்சனங்கள்.சிதறுண்ட உறுப்புகள்,ரத்தம், ரத்தம் உறய்ய வைக்கிற காட்சிகள் மருத்துவமனை மரணஓலம் என அதகளப்படுத்துகிறது அந்த எங்கேயும் எப்போதும் டீம். எங்களோடு திரைப்படம் பார்க்க வந்தவர்களில் இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரும் கடைசிக்காட்சிகளைத் தவிர்த்துவிட்டு வெளியே போய் நின்றுகொண்டார்கள்.

நாம் படைக்கிற படைப்பு லேசாக சிலிர்ப்பையாவது உண்டு பண்ணி பார்வையாளனைச் சலனப்படுத்தவேண்டும்.அப்படிச்சலனப்படுத்தி தன்னை படைப்பாளியென நிரூபித்துக்கொண்ட இயக்குநர் சரவணன் நிச்சயமாய்ப் பாராட்டுக்குறியவர்.

வாழ்த்துக்கள் ’எங்கேயும் எப்போதும்’ பட்டாளத்துக்கு.

3 comments:

Mahi_Granny said...

உடனடியாக பார்க்க முடியா விட்டாலும் நல்ல விமர்சனம் என்பதால் கட்டாயம் பார்க்க வேண்டிய வரிசையில்.அருமை

இரசிகை said...

nalla vimarsanam...
vaazhthukal adar karuppu:)

aotspr said...

நல்லா விமர்சனம்......
தொடர்ந்து எழுதுங்கள்......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com