7.2.12

சாதாரண மக்கள் வாழ்க்கைப் பாட்டின் சொற்சித்திரங்கள்...-எஸ் வி வேணுகோபாலன்

காலண்டர்கள், கடிகாரங்கள், பஞ்சாங்கங்கள், ஜாதகக் கட்டுகள், பிரதோஷம், நவகிரக சாந்தி, பரிகாரங்கள், வாஸ்து சாஸ்திரங்கள்... இவற்றின் வாடையே படாத உலகிலும் மனிதர்கள் இருக்கிறார்கள். வாழ்கிறார்கள், மரிக்கிறார்கள். இவர்களது வாழ்வியல், நாகரிக உலகம் பேசிக் கொண்டிருக்கும் ஒழுக்க விதிகளின் ஆதாரத்தை அம்பலப்படுத்திவிடும் வல்லமை கொண்டதாக இருப்பது மேலோட்டமான பார்வையில் பிடிபடாது.

தெருவோரத்தில் எதையோ வெறித்துப் பார்த்துப் படுத்துக் கொண்டிருக்கும் ஆள், நடு வீதியில் காது கூசுகிற கெட்ட வார்த்தைகளால் எவனையோ ஏசிக் கொண்டே போகிற ஒழுங்கற்ற முறையில் உடையணிந்திருக்கும் பெண்ணொருத்தி, ரயில் பயணத்தில் திடீரென்று தோன்றி உங்கள் கால்களின் கீழே திரளும் குப்பையைப் பெருக்கிக் கொண்டே சில்லறைக்காக கையை நீட்டும் ஏழைச் சிறுவன்....இவர்களைக் கண்டால் ஏதோ தியேட்டரில் சுவாரசியமாகப் படம் பார்த்துக் கொண்டிருக்கையில்  புரொஜெக்டர் ஒளியின குறுக்கே எழுந்து நிற்கும் எவருடைய நிழலோ திரையில் விழுந்தாற் போல எரிச்சலடைகிறோம் நாம்.

பொற்கொல்லர் வீதியில் ஓடும் சாக்கடை நீரை முகந்தெடுத்து அலசி அலசி வடிகட்டி அதில் பொன் துகள்கள் கிடைக்காதா என்று தேடும் வாழ்க்கையை யாரும் ஏ.டி.எம். எந்திரத்தின்முன் வரிசையில் நின்று அட்டையைப் போட்டுப் பெற்றுக் கொண்டு வருவதில்லை. இந்த சமூகம் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கும் அடிப்படை தார்மீக அம்சம் அதில் புதைந்திருக்கிறது. சமூகவியலாளர் பதிவு செய்ய வேண்டியதை, இலக்கியவாதி படைப்புகளாய் வார்க்கிறார். முன்னதில் புள்ளி விவரங்களாக இருப்பது, பின்னதில் மண்டையில் ஓங்கி அறையும் சம்மட்டியாக வெளிப்படுகிறது. எல்லோருக்கும் அப்படியான புனைதல் சாத்தியமாவதில்லை.  உலுக்கி எடுக்கும் கதைகளை எஸ் காமராஜ் இந்தத் தொகுப்பு நெடுக வழங்கி இருப்பது, இதனால் தான் கவனத்தை ஈர்க்கிறது.

"எம்மா கஞ்சி போடுங்கம்மா, அழுக்கெடுத்துப் போடுங்கம்மா.." என்று வீதி நெடுக அலைந்து  தினம் ஒரு வீட்டில் எச்சிச் சோத்தோடு அவமானத்தையும் சேர்த்து வாங்கிக் கொண்டு வந்து வயிறு நிரப்பும் வண்ணார் குடும்பத்தின் சிறுவனுக்கு, இந்த ஊரு பூராம் வேற, நாம வேற என்பதை விளக்க முடியாத பெற்றோர் (வேரை விரட்டிய மண்), தெருக்கூத்தில் நடிப்புக்குக் கூட 'செத்த மாடு திங்கிற சின்ன சாதிப்பய, நாயே, போடா, வாடா என்று நம்மாளை எந்த மசுத்துக்கும் சொல்லப்பிடாது (விடுதலையின் ஒத்திகை ) என்று திமிரும் ஆதிக்க சாதி, தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலைக்குப் போன தாழ்த்தப்பட்ட சாதிச் சிறுமிக்கு முதலாளியின் காமத்திற்கு ஈடு கொடுக்க வேண்டியதும் ஒரு ஊழியமாக அர்த்தப்படும் கொடுமையின் அடுத்த நுனியில் அதுவே அவளது வாழ்க்கை விதியாக மாறுவதும், அந்த அவமானத் தொழிலில் இருந்து வெளியேறுவதன் வாசலில் அவள் சாமியாடி குறிசொல்லியாக பரிணமிப்பதும் (மருளாடியின் மேலிறங்கியவர்கள்).. என "கருப்பு நிலாக் கதைகள்" தொகுப்பின் சிறுகதைகள்  உள்ளத்தை உலுக்கும் விவரிப்புகளோடு பட்டவர்த்தனமான விசாரணையாகவே உருவெடுக்கின்றன.

தலைப்புக் கதை, ஈவிரக்கமின்றி பாலியல் வேட்டைக்குப் படைக்கப்படும் பெண்ணொருத்தியின் கதையைச் சாட்டையடியாய்ச் சொல்கிறது. கயவனின் வன்புணர்ச்சியின் வலியில் இருந்து அவள் மீளுமுன் கணவன் தனது புனிதம் காப்பாற்றிக் கொள்ளக் குழந்தைகளோடு வேறிடம் போய்விடுவதும், அந்தக் கயவனோடே பகிரங்க வாழ்வை அவள் தொடர இடம் கொடுததும் கொச்சைப் படுத்தப்பட்ட உடலுக்கு மரியாதை மிஞ்சியிராததும் அவளுக்கான கூராயுதங்களைத் தயாரித்துக் கொடுக்கத் தான் செய்கிறது. 

வேதனையான வாழ்வுச் சூழல்களை மட்டுமே சொல்லி நகர்ந்துவிடாத காமராஜின் எழுதுகோல், இவற்றினூடே பனிப்பூக்கள் போல் மின்னும் மனிதநேயத்தை, மாற்றுப் போக்குகளின் தடயத்தை, சவால்களை ஏற்றுப் போராடும் வேட்கையை எல்லாம் உள்ளன்போடு பதிவு செய்கிறது. உலகெங்கும் பாட்டாளி மக்களின் விடியலுக்காகத் தன்னலமற்று உழைக்கும் தொழிற்சங்க ஆளுமைகள் அனைவருக்குமான படிமமாக படைக்கப்பட்டிருக்கும் சம்பத் (சம்பாரி மேளத்தின் உச்சமும், சில இழப்புகளின் மிச்சமும்) கதை ஒரு தந்தையும் மகளும் பகிர்ந்து கொள்ளும் எத்தனையோ சின்னச் சின்ன சந்தோசங்களை இழந்திருந்தும், ஒரே ஒரு பார்வையில், லேசாகத் தோலில் சாய்கையில், தலை கோதுவதில் அவற்றை மீட்டெடுக்கும் வல்லமை பற்றி அழகாகப் பேசி பொது வாழ்வை கவுரவிக்கிறது.

நகைச்சுவையோடு சாதாரண மனிதர்களின் அசலான வாழ்வைப் பேசும் "ஆனியன் தோசையும், அடங்காத லட்சியமும்", காதலின் மெல்லிய கணங்களைக் கவிதையாகக் கடக்கும் "ஜீவ அப்பமும் கொஞ்சம் கெட்டிச் சட்டினியும்", குழந்தைத் தொழிலாளர் பற்றிய வெற்றுப் பிரகடனங்களைக் கேள்விக்குட்படுத்தும் அதிர்ச்சியான "சிறுபிள்ளைகள் என்னருகே வர தடை செய்யாதிருங்கள்", அன்பின் வெள்ளம் எங்கே வழியுமோ அங்கே கழியும் வாழ்க்கை என முகவரி தரும் "நினைவில் சலசலக்கும் பனங்காடு"...என தொகுதி முழுக்க மீண்டும் மீண்டும் வாசிக்க நிறைந்திருக்கின்றன பதினான்கு கதைகள்.

இரண்டு கதைகள் ஒன்றாகக் கலந்து விட்ட பாட்டுக்காரி தங்கலச்சுமி மற்றும் தொகுப்பு முழுவதிலும் ஆங்காங்கு சரி செய்ய விடுபட்ட  மெய்ப்பு திருத்தங்களால் நெருடும் பிழைகள், சில இடங்களில் இருவரது பேச்சுக்களை ஒன்றாகக் கலந்துவிட்ட  உரையாடல்களால் ஏற்படும் வாசிப்பின் இடையூறுகள் இவற்றைக் குறிப்பிடாதிருக்க இயலாது. என்றாலும் வம்சி புக்ஸ் வெளியிட்டிருக்கும் இந்த அழகான நூல், காமராஜின் இரண்டாவது சிறுகதை தொகுப்பு.  தமது தேர்ச்சியான சொற்சித்திரங்களில் அவர் குழைத்துத் தரும் மிகச் சாதாரண மக்களது வாழ்க்கைப்பாட்டின் வித்தியாசமான வாசிப்பு அனுபவம் அது. 

1 comment:

சக்தி said...

வாங்க வேண்டும் ..வாசிக்க வேண்டும்..தூண்டிவிட்டன எஸ் வி வி வரிகள்