22.2.12

ஜாதி கடந்த பொதுவுடமைவாதியின் வீட்டுக்கல்யாணம்.

பாண்டியன் கிராமவங்கி ஊழியர்சங்கத்துக்கு 42 பி எல் எஃப் தெரு என்று ஒரு முகவரி உண்டு அதே போல எண் 6 பிச்சைப்பிள்ளைதெரு விருதுநகர் என்கிற முகவரியும் உண்டு. அது ஒரு பாதியில் நின்று போன  கட்டிடம். மீதிக் கட்ட முடியாமல் போன வீட்டுக்காரரின் கனவை நாங்கள் வாடகைகொடுத்து நனவாக்கினோம். அவர் வீடாக் கியிருந்தால் ஒரே ஒருகுடும்பம் மட்டுமே அங்குவாழ்ந்திருக்கும்.ஆனால் தமிழ்நாடு அரசு  ஊழியர்  சங்கம், பாண்டியன் கிராமவங்கி ஊழியர்சங்கம் என்ற இரண்டு சங்கங்களின் உறுப்பினர்களின் தற்காலிக வீடாகவும். நேரம் தப்பி வீடுபோக முடியாத தோழர்களுக்கு புகழிடமாகவும்.அங்கு தங்கியிருந்த  சுந்தரராஜ்,சிதம்பரம்  என்ற தோழர்களின் வாழிடமகவும் மாறியிருந்தது.

யாருக்காவது தேநீர்குடிக்க ஆசையிருந்தால் குறைந்தது பத்து தேநீர் செலவாகும் அதுவும் சந்தோசத்தோடு. யாருக்காவது காய்ச்சலென்றால் எதாவது ஒரு கை மாத்திரை தேடும் நெகிழ்சியான அரைக் கம்யூன் வாழ்க்கை வாழ்ந்த காலம் அது. பல நேரங்களில் பாண்டியன்கிராம வங்கி ஊழியர் சங்கத்தின் செயற்குழு  நடக்கும். அதுபின்னிரவில் தொடங்கி விடிய விடிய தொடரும் அப்போதெல்லாம் தங்கள் படுக்கைகளை எடுத்துக்கொண்டு மாடிப்படிக்கோ அல்லது பிடிக்காத சினிமா ஓடும் தியேட்டருக்கோ  போய் விடுகிற இங்கீதம் ஒலித்துக்கிடந்த காலம் அது. நான் மாதவராஜ், அன்பை மொத்தமாக வாங்கி  சில்லறைக்கு விநியோகம் செய்வதுபோல எந்தநேரமும் சீவலும் வெத்திலையும் கூடவே வைத்திருக்கும் தோழர் விஸ்வநாதன். எங்கள் அன்புத்தோழர் முதலாளி செல்வா தினம் அங்கே இரவு பத்துமணி வரை உட்கார்ந்திருப்போம்.

கடிதங்கள் வரும் அல்லது ஒரே ஒரு லேண்ட்லைன் போனுக்கு எப்பொழு தாவது அழைப்புவரும்.அதுதவிர்த்த நேரங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தோழர்களோடு பேசிப்பொழுது கழிப்போம். அங்கே முத்துராஜ், ஜீவா, செல்வின், போன்ற தோழர்களோடு தோளாய் இருந்த அப்போதைய செயலா ளர் தோழர் பாலசுப்ரமணியன் மிகச்சிறந்த தொழிற் சங்கப்ப போராளி. அத் தோடு  மிகச்சிறந்த கவிஞர். சின்ன சின்ன கடிதங்களிலும், போஸ்டர்களிலும், நோட்டீசுகளிலும் சிரத்தையெடுத்து கவிதை மொழியில் எழுதும் தோழர். அவரை நானும் மாதுவும் நிறைய்ய எழுதச்சொல்லுவோம் அவரும்  ஆவலோடு   சரி சொல்லுவார்.ஆனால் மாவட்டம் முழுக்க வியாபித் திருக்கும்  அவரது சங்கத்தின் பிரச்சினைகள் அவரை முழுமையாக ஆகரமித்துவிடும். எங்கு பிரச்சினையென்றாலும் ஓடோடிச்செல்லும் மிகச்சிறந்த மனிதாபிமானி. அதனால் தான் எழுத்தையும் மிஞ்சிய செயலால் உயர்ந்துநிற்கிறார்.

அம்மா,அப்பா ஊர் ஜாதியக்கட்டுமானங்களை எதிர்த்து மணம் முடித்தார். அந்த மீறலில் விளைந்த கவிதையாய் ஒரு பெண் மகள் கிடைத்தாள். பெண்ணுக்கும் ஜாதிமதம் பாராத வரன் தேடினார் கிடைத்துவிட்டார். இரண்டாயிரம் வருட குப்பையைப் புறங்காலால் எத்தி நிமிரும் களிப்பை நான் அவர் முகத்தில் எபோதும் பார்க்கலாம். அதை எந்தச்சூழலிலும் தொய்வில்லாது பாது காக்கும் ஒரு சில தோழர்களில் தோழர் பாலுவும் ஒருவர்.அவர் தனது மகளின் கல்யாணத்தை ஜாதிகலக்காத தோழமையோடு நடத்தப்போகிறார்.அதற்கு அவரே எழுதிய கவிதையே அழைப்பிதழாகிறது.

சாதி,மதம்,இனம்,மொழி- என
புதர்மண்டிக்கிடக்கும்
சமூகச்சூழலுகிடையேயான
எங்களின் வாழ்க்கைப்பயணத்தை...

குருவிகளும்,கிளிகளும்
குயில்களும்,மைனாக்களும்
கூடுகட்டிகுலாவிடும்
சோலைகளுக்கு
இடையே ஆனதாக மாற்றிய
எங்கள் அன்புமலரின்
திருமணம்......

கால்நுற்றாண்டிற்கும் மேலாய்
எங்களுக்கு
எல்லாமுமாய் இருக்கிற
அன்புநெஞ்சங்களே....

அவசியம் வாருங்கள்.....

29.2.2012 விருதுநகரில்.
மணமக்கள், அபர்ணா-பாலச்சந்திரன்

அந்தக்கோட்டையில் கல்யாணம் இந்தக்கோட்டையில் கல்யாணம் என்று ப்ளக்ஸ் பேனர்கள் வழியே ஜாதி மருரூபம் எடுத்து நாக்கைத் துருத்திக் கொண்டலையும் இந்த அடர் இருளில் ஆங்காங்கே தெரியும் ஒளிக்கீற்றைப் போல நம்பிக்கையை தோற்கவிடாத தோழனுக்கும் அவர் மனைவிக்கும் முதலில் வாழ்த்துக்கள்.பின்னர் மகளுக்கும் வாழ்த்துக்கள். ஜாதிகடந்த பொதுவுடமையை நேசிக்கிற எல்லோரும் வாழ்த்தலாம்.
     

14 comments:

க ரா said...

Best Wishes for the couples..

க.பாலாசி said...

வணக்கங்களும் வாழ்த்துகளும்..

விமலன் said...

வ்ணக்கம் காம்ஸ்.
நட்புகளையும்,கூடவே தோழமைகளையும் நினைவில் வைத்தி ருப்பது "அவுட் ஆப் பேஷன்"ஆகி போன இந்த காலத்தில் இம்மாதிரியான நினைவுகளை சுமந்து அதில் மையமானவரைபற்றி எழுதியிருப்பது மிகவும் நெகிழ்வூட்டுகிறது,காலம் கடந்து நிற்கிற மனிதர்களில் ஒருவராக அவர்தெரியவும் செய்கிறார்,இம்மாதிரியான மனித உள்ளங்களை அவசியம் பாராட்டவேண்டும். அவரது இல்ல திருமணத்திற்கு வாழ்த்துக்கள்.

காமராஜ் said...

நன்றி கரா.

காமராஜ் said...

நன்றி பாலாசி

காமராஜ் said...

நன்றி மூர்த்தி.
மிக அருமையாகசொன்னாய். நமக்கு அருகில் இருக்கும் பெருமிதங்களை நாம் உணர்வதில்லை. மேடைகளில் கழுத்து நரம்பு புடைக்க முழங்காத அவர் எங்கும் தன்னை முன்நிறுத்திக்கொண்டதில்லை.இப்போது ஒரு மாநில பொதுச்செயலாளரானபின்னாலும் எந்த பந்தாவும் எதிர்பார்ப்பும் இல்லாத எளிமையானவராய் அலைகிறார்.அவருக்குள் ஒரு கவிஞன் எழுந்து வரமுடியாமல் தவிக்கிறான். அவரை நாம் பெருமிதப்படுத்தியே தீரவேண்டும்.இல்லையென்றால் மினுக்குகள் மட்டுமே உஅயரத்தில் இருக்கும்.

கே.ஆர்.பி.செந்தில் said...

பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்,

வானம்பாடிகள் said...

வாழ்த்துகள்

Mahi_Granny said...

மணமக்களுக்கு எனது வாழ்த்துக்கள்

ஓலை said...

Manamaarntha vaazhthugal.

புதுவை செல்வம் said...

தோழர் பாலுவுக்கும், மணமக்களுக்கும் வாழ்த்துக்கள்.

திலிப் நாராயணன் said...

காமராஜ் அந்தஎண் 6 பிச்சை பிள்ளைத்தெருவின் படிமம் ஒன்றுதான் நான். கூரைக்குண்டில் ஒரு வீடு கட்டி அங்கே ஒரு நூலகம்( பூசை அறைக்கு மாற்றாக) கட்டி புதுகை பூபாளம் குழுவினரின் இசை நிகழ்ச்சியோடு விழாவினை எனத் இணையோடு ரசித்தவன் நான். கண்டிப்பாக சாதீய மறுப்பு இயக்கத்தில் நான் எனது இணையயோடு பங்கேற்பேன். தங்களை சந்திக்கிறேன் அங்கே... மகிழ்வுடன்
திலிப் நாராயணன்

venu's pathivukal said...

அன்புத் தோழன் காமாராஜ் அவர்களுக்கு

சாதி கடந்த காதலே ஒரு கவிதை தான்.அதை ஆதரிக்கும் பெற்றோர் கவிதையின் முதல் ரசிகர்கள் ஆகின்றனர்..

காதல் இருவர் கருத்தொருமித்து
ஆதரவு பட்டதே இன்பம்
என்றால் அவ்வை..

அந்த ஆதரவு பெற்றோரிடமிருந்தே கிடைப்பது பேரின்பம்
அதைக் கொண்டாடும் தோழர்கள் உங்களைப் போன்றோர் வாய்த்தது களியுவகைப் பேரின்பம்..
ஆழமான நேயத்தோடு தழைக்கட்டும் அந்தக் காதல்..

திருமணத்திற்கு எனது அன்பு வாழ்த்துக்கள்..

எஸ் வி வேணுகோபாலன்

phantom363 said...

Belated but heartfelt Best Wishes for the couple to have a contented, healthy and happy life together :)