24.12.08

சம்சாரிக்குக் கிடைத்த சாகித்திய அகாடமி


அவர்..

எழுத்தை உடைத்து அணுவாக்கி அதிலிருந்து தத்துவத்தைத்தேடும்
இலக்கணத்துக்காரரல்ல. வார்த்தைகளில் வெள்ளந்திச் சிந்தனைகளையும், மானாவாரி மனிதர்களை நடுநாயகர்களாகவும் வாசக உலகிற்கு அறிமுகப்படுத்திய கிராமத்துக்காரர். சமூகத்தின் மேலுள்ள பிடிமானத்தில் பொதுவுடமைக்கட்சியில் சேர்ந்து அதன் மூலம் எழுத்து பரிச்சயமாகி, கதைகள் வாசிக்க ஆரம்பித்த ஒரு கடைக்கோடி இளைஞன், கதைகள் படைக்க ஆரம்பித்தார். கரிசல் காட்டிலுள்ள விருவுகளையும், வேலிக்கரடுகளையும் வாசக உலகத்துக்கு ஓவியமாய்த் தீட்டித்தந்தார். அங்கே உழுதுகொண்டிருக்கிறவர்கள், ஊர்த்திண்ணையில் வெட்டிக்கதைபேசுகிறவர்கள், கிராமத்துக்குச்செல்லும் நகரப்பேருந்தில் பயணிக்கிறவர்கள், தீப்பெட்டி உற்பத்தியாலையில் வேலைபார்க்கிறவர்கள், நகரத்துக்கு மாட்டு வண்டியோட்டிச்செல்கிறவர்கள், இப்படியான அழுக்கு மனிதர்களைத் தன் கதைகள் நெடுகக் கடைவிரித்தவர்.எளிய உழைக்கும் மக்களின் கோபம், நெகிழ்ச்சி, நிராசை என எல்லாவற்றையும் எளிய வார்த்தைகளிலேயே பதிவு செய்தவர். சாலையில் எதிர்ப்படுகிற ஒரு கிராமத்து சம்சாரி இன்று சாகித்திய அகாடமியின் உயரிய கௌரவத்துக்கு ஆளாகி இருக்கிறார்.

தோழர் மேலாண்மைப்பொன்னுச்சாமி.

'அப்ப நம்ம கூட எழுதலாம் போல இருக்கே'

என்கின்ற உந்து சக்தியை பெருவாரியான எழுத்தாளர்களுக்குள் விதைத்த விவசாயி. தயக்கம் சூழ்கொண்டிருக்கும் உழைக்கும் மக்களின்,விளிம்பு நிலை எழுத்துக்களின் மானசீக முன்னத்தி ஏர். இப்படியே நீண்டுகொண்டு போகிற அசாத்தியங்களைச் சாத்தியமாக்கிய எழுத்துப் போராளி எங்கள் தோழர் மேலாண்மைப் பொன்னுச்சாமிக்குக் கிடைத்த இந்த சாகித்திய அகாடமி விருதை சாதாரண மனிதர்களுக்கு, உண்மையான உழைப்பாளிகளுக்கு கிடைத்த கௌரவமாக உணர எல்லா அருகதையும் இருக்கிறது.

பின்குறிப்பு...

கல்விப்பின்புலம் இல்லாத முதல் தலைமுறை எழுத்தாளர்.உயர் நிலைக்கல்வியைக்கூட நெருங்கமுடியாமல் போனவர்.ஒரு சாதரண பலசரக்குக்கடைக்கு சொந்தக்காரர்.பேர் சொல்லும்படியன ஆங்கில எழுத்துக்களின் வாசனை கூடத் தெரியாதவர்.எழுத்துக்குறித்து உரையாடக் குறைந்தது முப்பது நாற்பது கிலோமீட்டர்கள் சைக்கிளில் செல்ல நேர்கிற கிராமத்துக்காரர்.

இப்படியொரு பொது வரலாற்றை, எண்பது கோடிக்குமேல் சீரழிந்துகிடக்கிற கிராமத்து இலக்கணத்தைத் தனதாக்கியவர்.

அவை அணைத்தையும் கொடியாக்கி உயர்த்தியவர்.

4 comments:

Raj said...

Great......எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் மிக முக்கியாமனவர்.

RAMASUBRAMANIA SHARMA said...

EXCELLENT ARTICLE...A REAL RESPECT TO THE GREAT WRITER "MELANMAI PONNUSAMY"....

geevanathy said...

////எழுத்துப் போராளி எங்கள் தோழர் மேலாண்மைப் பொன்னுச்சாமிக்குக் கிடைத்த இந்த சாகித்திய அகாடமி விருதை சாதாரண மனிதர்களுக்கு, உண்மையான உழைப்பாளிகளுக்கு கிடைத்த கௌரவமாக உணர எல்லா அருகதையும் இருக்கிறது.////

உண்மை..

cheena (சீனா) said...

கிராமப்புற பலசரக்குக் கடையின் உரிமையாளர் - பல கல்வி கற்காதவர் - அனுபவக் கல்வியின் பயனாளி - வார இதழ்களின் மூலம் நான் அறிந்தவர் - உயர்திரு மேலாண்மை பொன்னுசாமி சாகித்திய அகடமியின் மேன்மையான விருதினைப் பேற்றது மகிழ்வினைத் தருகிறது. அருமையான அறிமுகம் காமராஜ்