1.1.09

தீராமல் தொடரும் வித்தியாசங்கள்

நகரத்திலிருந்து எட்டு அல்லது ஒண்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு பெண்ணுக்கு பிரசவத்தில் சிக்கல். அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை. அரிதான பிரிவு வகை ரத்தம் தேவைப்படுவதாகச் சொல்லவும் நிலை குலைந்துபோன குடும்பத்தாருக்கு சொந்தக்காரர் கொடுத்த தகவலைத்தொடர்ந்து ஜனநாயக வாலிபர்சங்க ரத்ததானக்கழகத்தில் உதவிகேட்டார்கள். ஏற்பாடாகியது. உறவினர்களை அழைத்து வந்தார்கள். ரத்தம் கொடுக்க வந்த அன்பளிப்பாளரை அழைத்துக்கொண்டு ஒரு ரத்த பரிசோதனை நிலையத்துக்குப் போனார்கள். உடன் வந்த கிராமத்து உறவினர்கள் கையில் இரண்டு சாப்பாட்டுத் தூக்குவாளி இருந்ததைக் கவனித்த ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் அது எதற்கு என்றுகேட்டாராம். ரத்தம் கொண்டுபோக என்று பதில் சொன்னார்களாம் உறவினர்கள். பின்னர் ரத்த தானத்துக்கான குருதியை பதப்படுத்தித்தான் எடுத்துச்செல்ல முடியும் என்கிற விபரம் சொல்லி அனுப்பி வைத்ததார்களாம். இந்தத் தகவலைக் கேள்விப்படுகிறபோது சிரிக்கத்தான் தோணும். ஒரு திரைப்பட நகைச்சுவைக்கான எல்லா அம்சமும் இருக்கிற இந்தச்சேதியில், உள்ளார்ந்த பலப்பல அசமத்துவங்களை உள்ளடக்கி இருக்கிறது.


நிலவைச்சுற்றுகிற சந்திராயன் விண்கலத்தை, தரையில் ஒரு கட்டுப்பாட்டு அறையிலிருந்தே வழிநடத்த முடிகிற விஞ்ஞான உலகமிது. சென்னையில் நடக்கிற அறுவை சிகிச்சையை, அமெரிக்காவிலிருந்து கண்காணிக்க முடிகிறகணினி யுகமிது. தன் தாயையும், தந்தையையும் தவிர ஏனையவற்றையெல்லாம் புதிதாகப்பார்க்கிற மழலைகள் இன்று அயிரத்து முன்னூற்று முப்பது குரளையும் மனப்பாடமாக ஒப்புவிக்கிறார்கள். காரணம் அறிவு கூடியிருக்கிறது. இருந்தாலும், கோடிக்கணக்கான ஜனங்கள் வெட்டுக்காயத்துக்கு மண்ணைத்தெள்ளிப் பூசுகிற அறியாமையும், அதன் ஊற்றுக்கண்ணான இல்லாமையாலும் அல்லாடுகிறதும் இதே தேசத்தில் தான். இந்தியாவில் கற்கால மக்களிலிருந்துகணினி கால மக்கள் வரை பரிணாமத்தின் எல்லாச் சமூகமுகத்தின் மிச்சசொச்சங்களும் இன்னும் இருக்கிறது.

2 comments:

cheena (சீனா) said...

காமராஜ்

பிறந்ததிலிருந்து நகர்ப்புறத்தில் வாழ்ந்து விட்டதனால் இதை நம்ப முடியவில்லை. இருக்குமோ என்ற ஒரு ஐயமும் கூடவே தொடர்கிறது.

இர்ணடாவது பத்தி உண்மையை உரைக்கிறது.

இந்தியாவில் கற்கால மக்களிலிருந்து கணினி கால மக்கள் வரை பரிணாமத்தின் எல்லாச் சமூகமுகத்தின் மிச்சசொச்சங்களும் இன்னும் இருக்கிறது.

அருமையான சிந்தனை. கிராமப்புரங்களில் கல்வியறிவு இன்னும் எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

நல்வாழ்த்துகள் காமராஜ்.

காமராஜ் said...

நல்வரவு சீனா...,

மலைப்பாய் இருக்கிறது, அத்தனை கருத்துக்கும்
எப்படிப் பதிலும் நன்றியும் சொல்ல ?.

கிராமங்களில் கறி எடுக்கச்செல்லும்போது
ரத்தம் வாங்கவேண்டுமானால்
பார்சல் காப்பி, டீ , வாங்க வருவதுபோல்
தூக்குச்சட்டி கொண்டு செல்வதுதான் வாடிக்கை.

சேலை முந்தானையில் சோறு வாங்கிக்கொண்டு
போகிறவர்கள் இல்லையா?.

நடப்புகள் இன்னும் இறுக்கமானதும்
வேதனையானதுமாக இருக்கிறது.
ஆனால் அவர்களுக்கோ மிக மிக
இயல்பானதாக இருக்கிறது.