30.1.09

அதிகாரத்துக்கு எதிரான ஆழமான கேள்விகளைப் பாய்ச்சுவது நிஜ


எண்பதுகளில் சாத்தூர் பிள்ளையார் கோவில் தெருவில்தான் தான் முதன் முதலாய்ப்பார்த்தேன் தோழர் கிருஷ்ணக்குமார் என்னையும் மாதவராஜையும் அழைத்துப்போனார். மேடை இல்லை, கொட்டகை இல்லை, மருந்துக்குக் கூட ஒரு பெண் இல்லை அதெல்லாம் கூட பரவாயில்லை. ஒலி பெருக்கி இல்லை அதை எப்படி நாடகம் என்று ஏற்றுக்கொள்வது. கண்மாய்ப்பட்டியில் கார்த்திகைக்கு வருசா வருசம் நடந்த ஏற்படுத்திய பிம்பம் எனக்குள் கேள்விகளெழுப்பியது.


வெறும் பொழுது போக்காகக் கழியாமல், அதிகாரத்துக்கு எதிரான ஆழமான கேள்விகளைப் பாய்ச்சுவது நிஜ நாடகங்கள். நாடகம் நடத்தியதற்காக கொல்லப்பட்ட புரட்சிக் கலைஞன் சப்தர் ஹஸ்மி. ஒற்றைக்காலில் சலங்கை கட்டி ஒரு கருப்புப் போர்வையோடு அடர்ந்த பாடல்களை சுந்தரத்தெலுங்கில் விதைத்துவிட்ட புரட்சிப்பாடகன் கத்தார். இவர்கள் தொடங்கி வைத்த வீதிநாடகங்கள் மிக மிக வலிமையானவை.


இரவு ஏழுமணிவாக்கில் தொடங்கியது நிகழ்ச்சி. முதலில் இருபது பேர்கள் பார்வையாளர்களாக . அரிதாரமில்லா நடிப்பின் ஒவ்வொரு அசைவும் இன்னும் கண்ணுக்குள்ளே நிற்கிற காட்சிகள் மாப்பிள்ளைக் கடை நாடகத்தின் காட்சிகள்.


கடையில் மாப்பிள்ளைகள், காட்சிப்பொருளாக நிறுத்திவைக்கப் பட்டிருப்பார்கள். சிப்பந்தி கடையைத் திறந்து ஒவ்வொரு மாப்பிள்ளையாக துணி வைத்துத் துடைப்பார். முதலில் கடைக்கு வரும் வாடிக்கையாளர் கருவாடு வேண்டுமெனக்கேட்க கடைக்காரர் கோபப்படும் காட்சி பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கிற எள்ளல் விமர்சனம்.
வாடிக்கையாளருக்கு தொலைபேசியில் ரக வாரியாக மாப்பிள்ளைகளின் விலை சொல்லுவது, கையிருப்பு இல்லை ரெண்டு நாளில் பேங்க் மாப்பிள்ளை வந்துவிடும் என்று பதில் சொல்லுவது, கிராமத்து தகப்பனும் மகளும் வந்து கேட்கும்போது அலட்சியப் படுத்துவது, ஊடே யாவரத்தைத் தொடதே என்று விரட்டுவது இப்படி அந்த நாடகம் எங்கும் நுணுக்கமான வாழ்வியல் பதிவுகள் பொதிந்து கிடக்கும். பெண்ணாக நடித்தவர் ஒரு கிராமத்து குமரியின் கோட்டோவியமாக தன்னைநிலைநிறுத்துவார். நகம் கடிக்கிற பெண்ணை "ஆக்கங்கெட்ட மூதி கடைக்குள்ள இருந்து நகத்தக் கடிக்காதெ" என்றுகடிந்து கொள்ளும் வசனம் திரும்பத்திரும்ப வரும். ஆனால் ஒவ்வொரு முறையும் சிரிப்பை வரவழைக்கும் சித்தரிப்புகளோடுவரும். இறுதியில் காரில் வந்திறங்கிய தகப்பணும் மகளும் சில சொற்ப கணங்களில் கொள்முதல் பண்னிவிடுவார்கள். அவர்களை கவனிக்கிற கடைக்காரனின் உபசரிப்பும் அவள் நகம் கடிக்கிற போது " பொம்பலப்புள்ள நகத்தக்கடிக்கிறதே அழகு சீதேவி " என்று மாறுகிற நெறிமுறைகளும் ஆழமான கேள்விகளின் பதிவு.


இப்படி நாடக வழிநெடுகிலும் சிரிக்கச் சிரிக்க அடைத்துக் கொடுத்த காலத்தின் பதிவுகள் இன்னும் கெட்டுப்போகாமல் கிடக்கிறது நினவுக்குடுவைகளில். நடிகர்களைப்பற்றிச் சொல்லவில்லையே, எல்லாமே கோவில்பட்டித் தமுஎச தோழர்கள். எழுத்தாளர் சாரதி, போஸ்டல் பாலு, எழுத்தாளர் உதயசங்கர், கிருஷி வாத்தியார், befi பால்வண்ணம், எழுத்தாளர் தமிழ்செல்வன், எழுத்தாளர் கோணங்கி, கரிசல் குயில் கிருஷ்ணசாமி எனும் இப்போதைய மிகப்பெரிய இலக்கிய ஆளுமைகள் சேர்ந்து கொடுத்த காலப்பொக்கிஷம் அந்த நாடகங்கள். அவை முற்போக்கு சிந்தனையிகளுக்கான அப்போதைய கங்குகள். கிராமத்துப் பெண்ணாக நடித்தவர் எழுத்தாளர் கோணங்கி. நெடுங்காலத்துக்கும் பிரமிப்பு நீங்காத செய்தி.


நாடகம் முடியும்போது ஆணும் பெண்ணுமாக தெருவடைத்துக் கூட்டமிருக்கும் நல்ல கலைகளின் விதி மாறாமல்.

No comments: