9.1.09

ஒரு வனதேவதையும், ரெண்டு பொன்வண்டுகளும்




கரிச்சான்குருவி விட்டு விட்டு கூவிக்கொண்டிருந்தது. எங்கோ தூரத்தில் கைக்குழந்தை அழுகிற சத்தம் கேட்டது. சாத்தூர் ரோட்டில் கடந்து போகிற வாகனங்களின் சத்தம் சன்னமாகக்கேட்டுக்கொண்டிருந்தது. அகக்கக்கா குருவியின் சத்தம் கேட்டதும் தூக்கம் சுத்தமாக ஓடிப்போயிருந்தது. வேலவர் வீட்டுத்தொழுவத்தில் யாரோ சாணி எடுத்துக்கொண்டு அரக்கப்பாரக்க ஓடுவது தெரிந்தது. இன்னும் சின்னச்சுப்பைய்யாத்தாத்தா எந்திரிக்கவில்லை. அவர் மட்டும் முழித்திருந்தால் விடிந்தும் விடியாத அந்தபொழுதில் ''அவா எவடி'' சொல்லி வசவை ஆரம்பித்திருப்பார். மூஞ்சைக்கழுவும் போது அந்த அக்கக்கா குருவி மறுபடியும் கூப்பிட்டது. விசில் சத்தத்தைப்போல இருக்கிற அதில் உயிருக்குள் கயிறு போட்டு இழுக்கிற தொணி இருந்தது. மணி என்ன இருக்கும் என்று நினைத்தான். பிறகு ''மணி பார்த்து என்ன கலெக்டர் வேலைக்கா கிளம்பப்போற'' அந்த ஹெச் எம்டி வாட்சை வித்து கூறை செம்ம பண்ணியபோது அம்மா சொன்னது சம்பந்தமில்லாமல் ஞாபகத்திற்கு வந்தது. சட்டையைப்போட்டுக்கொண்டு தெருவுக்கு வந்தான்.

கீழக்கோயில் வரை ஆளரவமில்லாத தெருவில் ரெண்டு குண்டு பல்பும், ஒரு ட்யூப் லைட்டும் தூங்கிக்கொண்டிருந்தது. நாலு வருசம் இரவில் படிக்க ஒளி தந்த அந்த ட்யூப் லைட்டுக்கு கீழே நின்று அன்னாந்து பார்த்தான். கவருக்குள் பூச்சிகளும் வண்டுகளும் நிறைந்துகிடக்க அதைத்தாண்டி மஞ்சளும் வெள்ளையும் கலந்த ஒளி அவன் மேல் விழுந்து கொண்டிருந்தது. சீட்டாட்டம் இல்லாத இரவுகளில், கட்டப்பஞ்சாயத்து இல்லாத இரவுகளில், இவனும் அந்த ட்யூப் லைட்டும் தான் போட்டி போட்டு முழித்திருப்பார்கள். நடந்தான். ஊர்தாண்டியதும் பூத்திருக்கும் கடலைச்செடி, பச்சைப்பசேரென்று செழித்துகிடக்கும் சோள நாத்து வாசமெல்லாம் கலந்து வந்தது. இதென்ன இப்படியொரு குதூகலம் குதித்து ஓடவேண்டும் போலொரு ஆர்ப்பாட்டம். கம்மாக்கரைக்கு போய் ததும்பி வழிகிற தண்ணீரின் மேல் பரப்பில் கால் நிலவின் பிம்பம் மிதப்பதை பார்த்துக்கொண்டிருந்து விட்டு திரும்பினான். சந்தனக்கட்டை முதலியாரின் காடு தரிசாகக்கிடந்தது. சுற்றிலும் கடலையும் பாசிப்பயறும் உழுந்தும் செழித்திருக்க ஒருகாலத்தில் ஓகோவென்றிருந்த பெரும்பண்ணை தரிசாகக்கிடந்தது. மங்கிய நிலா வெளிச்சத்தில் எதோ மினுங்குவது போலிருந்தது. அழகிய கம்மல் போலிருக்க, குனிந்து பார்த்தான். கிளிப்பச்சைக்கலரில் தங்கத்தை தடவியது போல ஒரு பூச்சி. இன்னும் உற்றுப்பார்த்தபோது பச்சைக்கும் தங்கக்கலருக்கும் நடு நடுவே சின்னச்சின்ன கருப்பு புள்ளிகள். அட என்ன ஜொலிப்பு. நிலவொளியைப்பழிக்கிற தங்க கதிர்கள் அதன் மேலிருந்து கிளம்புகிற வண்டை, குத்துக்காலிட்டு உட்கார்ந்து பார்த்தான். இயற்கை வாரித்தந்த அந்த ஏகாந்தத்தில் நிலவைப்போல, இவனைப்போல அந்தப்பொன்வண்டும், சங்கம் சேர்ந்துகொண்டதான நினைப்பில் மிதந்திருந்தான். கடுகிப்பறந்து போக புரவி தரும், உருகிக்கசிந்து போக இசையும் தரும். நனைந்து குளிர்ந்து போக அருவி தரும், அந்தத் தனிமை மேகம் பார்க்கையில் மழை பார்க்கையில் ஆயிரம் பேருக்கு நடுவேயும் தனித்துப் பயணிக்கச்செய்யும். பொன்வண்டு நகர்ந்தது இரண்டாகத்தெரிந்தது. காட்சிப்பிழையா என்று கண்கசக்கிப்பார்த்தான், நிஜம். ஆனும் பென்னுமாக இரண்டு பொன்வண்டுகள். கொஞ்சம் குறு குறுப்பிருந்தது அயல் வீட்டு படுக்கையறை பார்த்த குற்ற உணர்விருந்தது. இயற்கையின் பரப்பில் அந்தரங்கம் ஏது. அதுவென்ன அன்னலச்சுமியும் குசும்பனுமா?.ஒன்பது படிக்கிற போது, பம்பரம் விளையாண்டுகொண்டிருந்த விருவிருப்பைக்கலைந்தது பவுல் தான். உண்மையைச்சொன்னால் வரமாட்டார்கள் என்பதறிந்து பாம்பு பார்த்ததாகச்சொன்னதும் நாலுபேரும் அடித்துப்பிடித்து ஓடிப்போய் பார்த்த முதல் வயதுவந்தோர்களுக்கான காட்சி. ஆர்வமும் அருவருப்பும் கலந்து தீர்த்து வைத்த பதினாலு வருசப்புதிர்.நகர்ந்து போன இரண்டிலெது பெண் எனும் தேடல் உருவானது. மறைந்திருந்தது பெண் வண்டென கண்டுகொள்ள விஞ்ஞானியாகவேண்டிய அவசியமில்லை. ஆனால் அதில் ஏதோ ஒரு மனுஷி உருவம் தெரிந்தது. பாசிமாலை,பவுடர், கைக்குட்டையை விட உயிருள்ள பரிசுகள் இன்னுமதிகமான ஈர்ப்பைத்தருமென நம்பினான்.பொத்திய கைகளுக்குள் பொன்வண்டு குறு குறுத்தது. ஒரு வெற்றுத்தீப்பெட்டி தேடி எடுத்து அதற்குள் அடைத்துக்கொண்டான்.வெகு தூரத்தில் கசகசப்புக்கேட்டது அனில் தீப்பெட்டியாபீசுக்குப்பொகிற பெண்கள் ஒத்தையாலை நெருங்கிக்கொண்டிருந்தார்கள்.ஒத்தையடிப்பாதையிலிருந்து வந்தபோது, வண்டிப்பாதயில் நீட்டிக்கொண்டிருக்கும் சோள நாற்றுத்தோகையிலுள்ள பனித்துளிகள் பட்டு சிலீரிட்டது. பனித்தண்ணீர் ஒட்டியிருக்கிற தோகயை இழுக்கிற போது கிரீச்செனும் இசைவந்தது. ஒவ்வொரு தோகையாக இழுத்துக்கொண்டே நடந்தான்.

'' ச்சீய்ய் வழிய விடு ''கார்த்தீஸ்வரி நின்று கொண்டிருந்தாள். எதிர்பாராத அவளது பிரசன்னம் குழப்பத்தையும் பயத்தையும் உண்டு பண்ணியது.''பேயறஞ்சமாரியிருக்க சாமத்துல இங்கென்ன சோலி '''' நா ஒன்னியக்கவுனிக்கல '''' ஆமா சூட்ட மாட்டுனதும் ஊர்ப்போட்டச்சிக பறட்டயாத்தான் தெரிவாளுக ''
ஒரு கார்த்தியலுக்கு, அவளுக்கு ஒட்டுப்புல் தேய்க்கப்போய் அவ அம்மையிட்ட வாங்க்கிக்கட்டிக்கிட்டது, சுருக்குத்தைத்தது. இவளும் கொஞ்சம் மினுக்கு, ரொம்ப வாய். மாட்டிக்கிட்டா வசவுக்குள்ள முக்கித்தொவச்சி காயப்போட்டுருவா. பம்புசெட்டுக்கு குளிக்க வந்தா அவளப்பத்ததும் ஆம்ம்பளக்கூட்டம் பதறி ஓடிவிடும்.அவள் கடந்து போனப்பிறகும் பாண்ட்ஸ் பவுடர் வாசம் அவனைச்சுற்றியே வட்டமடித்தது. கையிலிருக்கும் பொன்வண்டை பற்றிக்கொண்டு நடந்தான். இரண்டு எட்டு நடந்தபிறகு, தனியே இந்தச்சாமத்தில் எப்படிப்போவாள், குழப்பத்தோடு திரும்பிப்பார்த்தான். போனவள் திரும்பிக்கொண்டிருந்தாள்.

'' அவுகெல்லாம் என்னேரம் போனாக '''' போன தேரத்துக்கு இப்பல்லாம் ஒரு கட்டை உருவிருக்கனும் '''' மணியென்னருக்கும், இந்தா யோவ், அழகர் நாய்க்கர் பொழி வரைக்கும் வந்து உட்டுருங்க '' மரியாதைக்கான இடைவெளியில் ரெண்டுபேரும் நடந்தார்கள். '' வாயில என்ன கொழக்கட்டயா ''
அவளுக்கு ஒட்டுப்புல் தேய்க்க வந்ததையும், அம்மாவிடம் வசவு பட்டதையும் சொல்லவும் சிரித்துக்கொண்டு
'' சரியான பயந்தாங்கொள்ளி '' மேகத்திட்டுக்குள் நிலவு மறைந்ததால் இருட்டெங்குமாக ஒளிர்ந்தது. பச்சை படர்ந்த காடு பளீரென்றசெம்மண்பாதை.மௌனமும் திட்டமில்லாத வார்த்தைகளுமாக நகர்ந்தது. சீனிக்கிழங்கு வேண்டுமா என்று கேட்டாள். மறுத்தபோது விசம் ஒன்றுமில்லை சொல்லி கையை வலியப்பிடித்து இழுத்துக்கொடுத்தாள்.பொன்வண்டோ டு தீப்பெட்டி கீழே விழுந்தது. குனிந்து அவளே எடுத்து.
'' ஊம போல இருந்து எரும போல சாணி போடுமாம் '' '' ம்ம்ம்....'''' பீடியெல்லாங்குடிப்பீங்களா '''' இல்ல, பொன்வண்டிருக்கு அதுக்குள்ள '''' இதென்ன சின்ன நொள்ள கணக்க, பூச்சி போட்டையெல்லாம் புடிச்சிக்கிட்டு '' தூக்கி எறிந்த தீப்பெட்டிக்குள்ளிருந்து பெண் வண்டு பறந்து போனது.விடிய இன்னும் நிறய்ய நேரமிருந்தது.

No comments: