24.1.09

ஆறுகள் எல்லாம் பெண் பெயர் சூடிக்கொண்டோடும் இங்கே.





நிறைய்ய ஆறுகள், 33 ஆற்றுப்படுகைகள், மூன்று கடல், பல மலைத்தொடர், ஒரு பாலைவனம்,

வருடம் முழுக்க மழைபொழிகிற சிராபுஞ்சி, உலகுக்கே படியளக்கும் நெல்லும் கனியுங் கிழங்கும் கோதுமைகளை கணக்கின்றித்தரும் நாடு.

மதுரையில் சித்திரை வெயில் கொளுத்தும் ஜூன் ஜூலை மாதத்தில் ஒரு அறுபது கிலோ மீட்டர் பயனம் செய்தால் போதும் குளுகுளு கொடைக்கானல் வரும்.

ஒரே தேசத்தில் ஆயிரமாயிரம் விநோதங்கள் விளைந்துகிடக்கிறது.

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.

ஆறுகள் எல்லாம் பெண் பெயர் சூடிக்கொண்டோடும் இங்கே.

பூக்களும், தென்றலும், நிலவும் நிலமும் அவளே,

நடுகல்லும், ஒற்றைப்பனையும் உருமாறும் லட்சோப லட்சம் தெய்வங்களாய்

அதில் பெண்ணே பெரும்பாண்மை.



இங்குதான் பிறந்த பெண்குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்துக்கொல்லும் சிசுக்கொலை நடக்கிறது. இங்குதான் பெண்குழந்தைகளை இரண்டாம் தரமாக்குகிற பெற்றோர்கள் இருக்கிறார்கள். இங்குதான் பால்ய விவாகம் நடத்துகிற கலாச்சாரக்கொடூரம் நடக்கிறது.

பேருந்து நிறுத்தத்தில் ஒற்றைத்தாளத்தின் அதிர்வில்மூங்கில் கம்பின் நுனியில் வயிற்றை அடகு வைத்துஅவமானக் கொடியாய்த் தொங்குகிறது பெண் குழந்தையின் உடல்.

நெடுந்தூர ரயில் பயணத்தில் பெயர்தெரியாத நிறுத்தத்தில் ஏறிகழிப்பறையின் பக்கம் நிற்கும் பதின்மூன்று வயதுப்பெண்ணின்கண்ணில் தெரிவது காமம் அல்ல.


முடைநாறும் மூவாயிரம் ஆண்டு ஒதுக்குதலின் அவமானம்.

இன்று சர்வதேச பென்குழந்தைகள் தினம்.