7.1.09

கூலிக்காரனின் ஆயுதம்.காப்பிக்கலரும், கருப்புக்கலரும் குழைந்த
கைப்பிடியில்லா ஒரு ஆயுதம் இருக்கிறது.
ஊரில் அதைத் துருப்பிடித்து போனது
என்று சொல்லுவார்கள்.
எங்கோ விறகொடிக்கப் போகையில்
கண்டெடுத்தது என்பதைத்தவிர
அதன் தோற்ற வரலாறு ஒன்றுமில்லை.
யாருக்கும் இரவல் கொடுக்கச் சம்மதிக்காத
எனது தாத்தாவின் விருப்ப பிராணி.
பேரீச்சம்பழக்காரரிடம் போட்டுத் தின்றநாளில்
எனக்கு விழுந்த வசவும், அடியும்
இன்னும் தித்திப்பாய்க் கசக்கிறது.

வில்லும், பம்பரமும், கிட்டிப்புல்லும்
விளையாடக் கொடுத்தது அதை வைத்துத்தான்.
எங்க வீட்டுக் கூனக் கெழவிக்கு
ஊனுகம்பும் ஆடுமேய்க்க தொரட்டிக்கம்பும்
செதுக்கித்தந்த உற்பத்திக்கருவி.
எதுத்தவீட்டு ஏகலைவத் தாத்தன்
காக்காவலிப்புக்கு அடிக்கடிகையில்
கொடுக்கிற மருத்துவக்கருவி.
வேலையில்லாத காலங்களில்
வேலிக்காடுகளைச் சாய்த்து விறகாக்கி
விற்றுத்தரும் சம்பாத்தியக் கருவி.
குலசாமி கெழவனாருக்கு
பொங்க வைக்கயில்
பூவோடும், மஞ்சளோடும்,
பூஜைத் தேங்காயோடும் மங்களமாகப் பயணப்படும்.
எரவானத்தில், செதுக்கியோடும்,
மம்பட்டியோடும், எட்டு ராத்தல் சம்மட்டியோடும்,
எங்கள் கூரை வீட்டில்
நிரந்தர குடிகொண்ட உழைப்பாளி.
யாராவது மொண்டி அருவா
என்று சொல்லிவிட்டால்
ஆங்காரத்தோடு சண்டைக்குப்போவார்.

1 comment:

cheena (சீனா) said...

காமராஜ்

தாத்தாவின் ஆயுதம் அருமையாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

விளையாட்டுப் பொருள் செய்யும் ஆயுதம் - ஊனுகம்பும் தொரட்டிக்கம்பும் செய்யும் உற்பத்திக் கருவி - வலிப்பிற்கு உதவும் மருத்துவக் கருவி - விறகு வெட்டும் சம்பாத்தியக் கருவி - பூசை வைக்கையில் மங்களக் கருவி - பல்வேறு உருவங்களில் வலம் வரௌம் நிரந்தரக் கருவி. உழைப்பாளியின் உணவினிற்கு உதவும் கருவி

சிந்தனை நன்று நன்று

நல்வாழ்த்துகள்