26.1.09

இடறுகிற கேள்விகளோடுஇன்னும் சிறிது நேரத்தில்விடிகாலை எழுந்து சீருடையோடு பள்ளிக்கூடம் சென்ற குதூகலம்.கொடிக் கம்பைச் சுற்றி நீர்தெளித்து, பூக்கள் தேடிக் கொண்டுவந்து ஒரு கைக்குழந்தையைக் கையாளுவதைப் போல அதற்குள் வைத்து மடக்கிய தொழில்நுட்பம்.பிரமுகர் கயிறு சுண்டும் போது சிதறிவீழும் ஒவ்வொரு பூவிலும் சந்தோஷம் சிதறி வரும். கொடி வணக்கம் படிக்கும் போதுஎல்லோருக்குள்ளும் ஒரு ராணுவவீரனின் ஆவி குடியேறி முறுக்கேறும். கைக்குள் பொத்திவைத்த ஆரஞ்சு மிட்டாயின் இனிப்பு நெடுநேரம் கூடவந்த குடியரசு தின நாட்கள்.

நிமிடத்திற்கு ஐந்து ரூபாய்க்கு தேசப்பற்றுபாடல்கள் விற்பனைக்கு வந்துவிட்டது நேற்றிரவிலிருந்தே அலைபேசியில்.
இப்போது மூவர்ணக் கொடியில் எத்தனை நிறம் என்றறியாத நடிகையின் தேசப்பற்றை ரசிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தோடு தொலைக்காட்சிக்கு விடிகிறது குடியரசு நாள்.

செய்திகளைதிருகினால்.
அப்பாவிப் பிஞ்சுத் தமிழ்சடலங்களை அடுக்கி வைத்து அதிலேறி இலங்கை ராணுவம் முல்லைத்தீவைப் பிடித்துக் கொக்கரிக்கிற சத்தம் பாடத்திட்டத்தில் இடம்பெறுமா? இஸ்லாமாபத்தில் ஒபாமாவின் முதல்குண்டு வெடித்த சத்தம் கேட்கிறது. பள்ளியறியாச் சிறார்கள் பற்றுவதற்கு அவர்தேசம் என்னகொடுக்கும்? காசாவில் குண்டு துளைத்த பள்ளிக் கூடத்தில் விரித்துவைத்த புத்தகத்தில் மரண பயம் நீங்காத கண்களோடு என்ன பாடம் படிப்பார்கள்?.

இடறுகிற கேள்விகளோடு இன்னும் சிறிது நேரத்தில் குண்டு துளைக்காத மேடையேறி இடைக்காலப் பிரதமர் குடியரசுப் பேருரையாற்றுவார்.
பின்னர் சினமா சிற்றுண்டி, பட்டிமன்ற நொறுக்குத்தீனி விகடத்தேனீர், இப்படியே கழியும் இந்த நாள் அண்டைவீட்டின் அழுகுரல் கேட்காத ஒலியளவில்

No comments: