18.1.09

இடிபாடுகளில் தொலைந்த இந்திய ஞானம்

பீகார் மாநிலம் புத்தகயாவில் நடந்த மாநாட்டுக்கு மாதவராஜ், மாப்பிள்ளை ஆண்டோ, பாலுசார், மணியண்ணன் ஆகியோரோடு ஒரு இருபது பேர் போனோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்வெளிகள். நீரோடிப் பயமுறுத்தும் அகலமும் ஆழமுமான பெயர் தெரியாத ஆறுகள். புகை வண்டிப் பயணமெங்கும் கிடைத்த காட்சிகள் இது. இரவு இரண்டரை மணிக்கு காலகண்டி ரயில் நிலையத்தில் இறங்கும் போது கடும் குளிர். பாதுகாப்புக் கருதி விடியும் வரை அங்கிருந்து யாரையும் கிளம்ப வேண்டாமென்று காவல் துறை தடுத்துவிட்டது. நாங்கள் ரயில்வே ஊழியர் சங்கத்தின் அலுவலகத்தில் தங்கவைக்கப்பட்டோம். அலுவலகத்துக்கு நடந்து போகையில் தரையெங்கும் பயணிகள் சுருண்டு படுத்துக்கிடந்த்தனர். காலையில் ஐந்தரை மணிக்கு கிளம்பிய போதுதான் தெரிந்தது சுமார் மூவாயிரம் பேர் வெட்டவெளியில் மொட்டைக்குளிரில் படுத்துக் கிடந்தார்கள். அவர்கள் கூட்டம் கூட்டமாய் கூலி வேலைக்கு இடம்பெயர்ந்து செல்பவர்கள் என்று சொன்னார்கள். தேசம் செழித்து மக்கள் வறுமையில் வாடுகிற முரணும் விநோதமும் கொண்ட தேசம் எனது இந்தியா. தனித் திறனாளர்களாக கிரிக்கெட் வீரர்கள் முதலிடத்தில் இருக்கும்போது இந்திய அணி அதள பாதாளத்தில் கிடக்குமே அது போல. நகரங்கள் எல்லாம் குண்டு பல்பில் மங்கிக் கொண்டிருக்க கிராமங்கள் இருளில் கிடக்கிற பிகார். இன்னும் முறுக்கிய மீசையோடு நிலச்சுவாந்தார்கள் குதிரையில் வலம் வரும் மாநிலம். பகலிலே ஓடும் வாகனங்கள் எல்லாம் தனியாருக்குச் சொந்தமான ட்ரக்குகள். நினைத்தால் போகும் இல்லையென்றால் வேறு ஏற்பாடுகள் தான். ஐந்து மணிக்குமேல் அதுவும் இல்லை. சாலையில் வாகனங்கள் பார்க்க முடியாது. எல்லாவற்றையும் தனியாருக்குக் கொடுத்தால் சௌஜன்யமாக இருக்கலாம் என்று சோதிடம் சொல்லும் நண்பர்கள் ஒரு மாதம் பீகரைச்சுற்றிப் பார்க்கலாம்.
அங்குதான் உலகின் அதிக மக்கள் தொகை வழிபடும் புத்தர் கோவிலும் போதிமரமும் இருக்கிறது. நம்ம ஊர் தொழில் நுட்பக்கல்லூரிகளை நினைவுபடுத்தும் பெரிய பெரிய தர்மசாலாக்கள் இருக்கிறது. அங்கிருந்து அறுபது கிலோ மீட்டரில் வாரணாசி இருக்கிறது. எண்பத்தி ஏழு கிலோ மீட்டரில் நாலந்தா இருக்கிறது.
ஒரு கிலோ மீட்டர் பரப்பளவு. முப்பது மீட்டர் அகலமுள்ள நடைபாதை. சுமார் இரண்டாயிரம் ஆசிரியர்களோடு பத்தாயிரம் பௌத்த மாணவர்கள் தூரக்கிழக்கு நாடுகளில் இருந்து வந்து தங்கிப்படித்த உலகின் முதல் பல்கலைக்கழகம் நாலந்தா. ஐந்தாம் நுற்றாண்டுக்கும் பனிரெண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் என்று கணிக்கப்படுகிறது. அந்தக்காலத்திலேயே அங்கே இறையியல், இலக்கணம், தர்க்கசாஸ்திரம், வானவியல், இயல்பியல், மருத்துவம், மனோதத்துவம் ஆகியவை கற்றுத் தரப்பட்டிருக்கிறது. உலகப்புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரும் சீன யாத்திரிகருமான யுவான் சுவாங் நலாந்தாவின் பழைய மாணவர். சீக்கிய மதகுரு குரு நானக், ஜனநாயக விதை போட்ட நல்லரசன் அசோகன், மஹாத்மா காந்தி, இஸ்லாத்தின் சூவ்பி தத்துவம், இவற்றுக்கு ஊற்றுக்கண் நாலந்தா. இன்றைக்கும் உலகமெங்கும் பரவிக்கிடக்கின்ற பௌத்த விகாரைகளுக்கு இங்கிருந்து தான் பிடி மண்ணெடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.

இரண்டடுக்கு தங்கும் அறைகள், ஏழு அடுக்கு தியான மண்டபம், கல்வி சாலை, கோவில்கள் யாவும் தனித்தனியே அமைந்திருக்கிறது. ஒருகிலோமீட்டர் பரப்பளவில் எங்கு தண்ணீர் விழுந்தாலும் மைய மண்டபத்துக்கு அருகிலுள்ள தெப்பத்துக்கு வந்துசேரும் ஏற்பாடு. இடிபாடுகளில் தப்பித்து இன்னும் உருக்குழையாத கட்டைச்சுவர்கள் கட்டிடக்கலையைப் பெருமைப் படுத்துகிறது.

பதிவுலகினருக்கு கொட்டாவி வரும் இந்த ஒட்டை ரிக்காட்டுத் தகவல்கள் அவசியமாவெனத் தெரியவில்லை. ஆனால் ஒரு கேள்வி மட்டும் அத்தியாவசியமாகிறது.
இவ்வளவு சிறப்புமிக்க ஒரு கல்வி சாலை ஏன் பாதுகாக்கப்படவில்லை ?.
உலகத்துக்கு ஆனா ஆவன்னா சொல்லிக்கொடுத்த இந்தியா இன்று ஒரு கலர் பிக்சர் டியுப்புக்கும், மைக்ரோ சாப்டுக்கும்கையேந்துவதன் காரணமென்ன ?.
இன்னய தேதி வரை நம்மால் ஒரு சிறு குண்டூசியைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லையே ஏன் ?.

அடுத்தடுத்து நடந்த படையெடுப்பில் தரைமட்டமாக்கப்பட்டது நாலந்தா. அங்கிருந்து கிளம்பிய சமண பௌத்த துறவிகள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டார்கள். போதி மரம் வளர, வளர வெட்டப்பட்டது. வெட்டப்பட்ட உடல்களிலிருந்து பீறிட்ட குருதியோடு தர்க்க ஞானமும், பரிணாமத்தேடலும் உறைந்து போனது. உலகின் மிகப்பழம் பெரும் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு மூன்று மாதங்கள் தழல் விட்டு எறிந்திருக்கிறது. பற்றி எறிந்த தீயில் இந்திய மெய்ஞானமும்,அறிவியலும்சமூகக் கேள்விகளும் சாம்பலாகிப்போனது. அந்த இடத்தில் இப்போது ஒரு உயர்நிலைப் பள்ளிகூட இல்லை. இந்தியாவின் மொத்தக் கல்விமுறையே அதன் பழைய மாணவர்களாக மாறியிருக்க வேண்டிய ஒரு மாபெரும் வாய்ப்பு இனப் படுகொலையோடு மறுக்கப்பட்டிருக்கிறது.
அதன் பின்னர் வந்த குருகுலக்கல்வி முறைதான் உலகமறிந்ததே. ராஜாக்களுக்கும், பண்ணையார்களுக்கும் முதுகு சொரிந்து கொடுத்த கல்வித்திட்டம். அந்தக்கல்வி முறையைக் காப்பியடிக்கக்கூட சாமன்யர்களுக்கு உரிமையில்லை என்று சம்பூகனையும், ஏகலைவனையும் தண்டித்தது. அப்புறம் நம்ம மெக்காலேயின் அடிமைக் கல்வித்திட்டம் இதோ இந்த நிமிடம் வரை நீடிக்கிறது. மெக்காலேவைப் படித்த யுவன்களும், யுவதிகளும் கூட்டம் கூட்டமாய் நாலந்தாவுக்கு வந்து போகிறார்கள். வரலாற்றுப்பாடத்தில் ஒரு மதிப்பெண் கேள்வியாகக்கடந்து போகிற அந்த நாலந்தா மீது கடலைத்தோல்களையும் அது மடித்த காகிதத்தையும் வீசிவிட்டுப் போகின்றனர்.

பிரமிப்போடு அந்த இடிபாடுகளிலிருந்து ஒரு துகள் செங்கல்லையாவது எடுத்துக்கொண்டுவர ஆசையிருந்தது. ஆனால்நம் பேரப்பிள்ளைகளும் வந்து கால் வைத்துவிட்டுப் போகும் போது கருப்பும் சிகப்பும் கலந்த அந்த செங்கற்கள் மிஞ்சிநிற்கட்டும் என்று மனம் மாறித்திரும்பி வந்தோம்.
முரண்பாடுகள்

3 comments:

மாதவராஜ் said...

காமராஜ்!

நாலந்தா போய்வந்து ஒரு வருடம் ஆன பிறகும், அந்த உணர்வுகளை மிக அழுத்தமாக சொல்லியிருப்பது, ஏற்படுத்திய பாதிப்பை உணர்த்துவதாய் இருக்கிறது.
//வரலாற்றுப்பாடத்தில் ஒரு மதிப்பெண் கேள்வியாகக்கடந்து போகிற அந்த நாலந்தா மீது கடலைத்தோல்களையும் அது மடித்த காகிதத்தையும் வீசிவிட்டுப் போகின்றனர்.//

தவிக்க வைத்த வரிகள்.

காமராஜ் said...

வணக்கம் மாதவராஜ்.
கருத்துக்கு நன்றி

மாதவராஜ் said...

காமராஜ்!

உனக்கொரு விருது என் வலைப்பூவிலிருந்து பறந்து வருகிறது... பெற்றுக்கொள்ள வரலாமா?