இன்னொரு குருச்சேத்திரம் என்னும் தொழிற்சங்க கட்டிடத்திறப்புவிழாக் கவிதையோடு எண்பதுகளில் தமிழுலகுக்கும் கூடவே எனக்கும் அறிமுகமான ஒரு எழுத்தாளரைப்பற்றிச் சொல்லவேண்டும். தனது முதல் சிறுகதையிலேயே இலக்கியச்சிந்தனை பரிசோடு தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் ஒரு பரவலான கவனத்தைபெற்ற எழுத்தாளர். முன்னதாக ராஜகுமாரன் என்கிற தலைப்பில் வெளியாகிப் பின்னால் போதிநிலா என்ற பெயர் மாற்றத்தோடு அவரது சிறுகதை தொகுதி வெளிவரும்போது வீரசுதந்திரம் வேண்டி, காந்தி புன்னகைக்கிறார் தொடங்கி சேகுவாரா வரையிலான பல கட்டுரைத் தொக்குப்புகள் அதை முந்திக்கொண்டு விட்டது. பனைக் குருத்தின் வசீகர வாசனையை சுமந்து வரும் சிந்தனையின் ஆழத்தோடு நாஞ்சில் தேரிக்காட்டுப் பகுதியிலிருந்து பெயர்த் தெடுத்துவந்த ஒரு உயர்ந்த எழுத்தாளர் ஒருவர் கந்தக பூமியில் கரிசல் மண்ணில் வேர்பிடித்துக் கொண்டார். கொல்லையில் முளைத்துக்கிடக்கும் காட்டுக்கீரைகளின் மகத்துவம் தெரியாது வீட்டுக்காரனுக்கு. அதுபோல விருதுநகர் மாவட்டமும் ஏன் அவர் வசிக்கிற சாத்தூரும்கூட இதுவரை அறியாத மூன்று ஆவணப்படங்களின் இயக்குனர். அந்தப் படங்களைத் தயாரித்த கரிசல் குழுமத்தின் ஊடு இழை அவர். எழுத்தாளர் மாதவரஜ். ( பதிவர் - தீராத பக்கங்கள் ) குழந்தைப் பருவத்துப் பாட்டி கதைகளில் வரும் மாயக்கம்பளம், அண்டரண்டாப் பட்சி, சுண்டெலியண்ணன் தொடங்கி படக்கதைகளின் வரும் லைலா, துப்பறியும் ரிப்கர்பி, இரும்புக்கை மாயாவி எனும் அமானுஷ்யங்களில் அற்புதங்களில் லயிக்காதவர் யாருமிருக்க இயலாது. அப்படிப்பட்ட குழந்தை பருவத்து அற்புதங்களில் மனிதரல்லாத ஒரு படிமம் இந்த வாழ்வின் துயரங்களை தீத்துவைக்கும். வேதாளம் கதைசொல்லும். ராஜகுமாரன் தூங்கும் போது மரக்கிளையில் உட்கார்ந்திருக்கும் கிளிகள் பேசிக்கொள்ளும். அது போலவே நிகழ்காலத் தண்ணீர்ப் பஞ்சத்தின் நாவறட்சியை ஒரு மண்குடம் நெகிழ்ச்சியோடு பேசுகிற கதை '' மண்குடம் ''. கதாநாயகர்கள் அழகான வசீகர நிறம் கொண்டு அறம் மறம் செழித்த மனிதர்களாகத்தான் இருக்கவெண்டும் எனும் விதிகளை உடைத்து ஒரு மண்பானையை அதுவும் பெண் பானையை மையக் கருவாக்கியிருக்கும் அந்தச்சிறுகதை. எல்லோரும் படித்தே தீரவேண்டிய படிமம். மண்பானைக்கு அடியில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் மணலும், அதிலிருந்தும் ஊர்ந்து செல்லும் எறும்புகளும் கூட தண்ணீர்பஞ்சத்தின் உக்கிரத்துக்கு வலுச்சேர்க்கும் கதையின் இறுதியில் ஒரு போராட்ட உத்தி உயர்த்திப் பிடிக்கப் பட்டிருக்கும். ஆனாலும் அது ஒரு ஏழைக் குடிசையின் எல்லா சுக துக்ககங்களையும் கூர்மையாக வாசகர்களுக்குள் இறக்கும். // அவ அப்படியே ஆசையா என் கழுத்த எடது கையால கட்டி அணைச்சுக்கிடுவா. அக்குள் பக்கத்துக்ல வர்ற வாசனையில சொக்கிக் கிறங்கிப் போவேன். அப்பப்ப அவ மாரை ஒரசிப்பாத்து 'க்ளுக்' குன்னு சிரிப்பேன். சில நேரம் குலுங்கி குலுங்கிச் சிரிச்சு அவ சேலைல தண்ணிய வாரி எறச்சு விளையாடுவேன். அவா கோபமே படமாட்டா. அண்ணாந்து அவ மொகத்தப் பாப்பேன், அவ கண்ண, மூக்க, ஒதட்ட, கழுத்த எத்தன தடவப் பாத்தாலும் அலுக்காது // . ஒரு தண்ணிக் குடத்துக்கும் பெண்ணுக்கும் உண்டான வசீகர நிமிஷங்களை ஒரு காதல் நிமிடங்களோடு ஒப்பிடுகிற, அல்லது கிராமத்து சேட்டைகளை நினைவுக்கு கொண்டு வரும் விவரணைகளும் அடங்கிய கதை. அதில் தண்ணீர்க் குடம் குடிசையிலிருந்து கிளம்பி தெரு, ஊர், நாடு என பஞ்சத்தின் ரேகை படர்ந்த எல்லா இடங்களுக்கும் அலைந்து இறுயில் நகராட்சி அலுவலக வாசலில் தன்னைப் போன்ற குடங்களோடு வந்து நிற்கும். தன்னைத் தலைக்கு மேல் தூக்கி உடைக்கப் போகும் போது போருக்குப்போகிற வீரனின் கர்வத்தோடு பேசும். உடைந்து சிதறிய பின்னால் அடுத்த பிறவியில் செண்பகத்தின் வயிற்றில் பிறக்கவேண்டுமென்கிற கண்ணீர்கனவோடு முடியும். சிட்பண்ட் கம்பெனியில் வசூல் வேலை பார்க்கும் ஒரு வேலையில்லாப் பட்டாதாரியின் ஏக்கங்களை சொல்லாமல் சொல்லும் இயேசுவானவன். கடன் வசூல் பண்ண போய்விட்டு திரும்ப பேருந்துக்காகக் காத்திருப்பவனின் நினைவுகளாக சொல்லப்படும் அது. காத்திருக்கையில் கடந்துபோகிற ஒரு மாருதி காரும் மணல் லாரியும் போல வாழ்வின் மேடுபள்ளங்கள் சொல்லப்படுகிற கதை. அந்த இரண்டு வாகனத்தோடு போட்டி போடுகிற வேகமான கதை. ஓடிக்கொண்டிருக்கும் லாரி மணல்மேல் கைகால் பரப்பி வெயில் உரைக்காமல் படுத்துக்கிடக்கும் உழைப்பாளிக்கு எது வெயில் என்னும் கேள்வியோடு முடிந்து வாசகனுக்கு அதிக வேலை கொடுக்கும். உத்தியோகம், குடும்பம் இந்த இரண்டுக்கும் நடுவில் உருளும் பொருளாதாரம் எனச் சிக்கிக் கிடக்கும் வாழ்க்கையிலிருந்து சில தெறிப்புகளை அலாதியாக எடுத்து வாசகனுக்கு வழங்கும் மாதவராஜின் கதைகள். யாரும் பார்க்கமறந்த அடுக்கு மாடிக் குடியிருப்பின் மொட்டை மாடியில் காத்துக் கிடக்கும் நிலா, காதலித்து நெருங்கியவன் அந்த நெருக்கத்தை ஊர்மடத்தின் பேசு பொருளாக்குவதும். அதைக் கேட்ட நேரத்தில் கழிவைக் கறைத்து தலையில் ஊற்றிய அவமானம் கொள்ளும் ''புறம் தள்ளி''. கண்தெரியாத ஐஸ்காரனுக்கு கிடைத்த குளிர் நேரமும் ஆளரவம் கேட்டதும் அவனை தூக்கியெறிந்து விட்டு ஓடும் அவலமும், வாழ்ந்து கெட்ட குடும்பத்தை ஜப்தி செய்ய வரும் வங்கி ஊழியருக்குள் இருக்கும் நெகிழ்வான மனிதன், வாழ்நாள் முழுக்க மிதிபடும் குடிகரனின் மனைவி கணவனின் அவமானத்தை தாங்காமல் வேலைபாக்கும்வீட்டை விட்டு வெளியேறும் ரோசமென மாதவராஜின் கதை எங்கும் நெகிழ்வின் தருணங்கள் பதிவாக்கப்பட்டிருக்கும். எனக்குப்பிடித்தமொத்தம் பதினைந்து சிறுகதைகள் அடங்கிய தோழர் மாதவராஜின் தொகுதி. அடக்கம் கருதி சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். இதுவும் எங்கள் அன்புத்தோழர் பவா செல்லத்துரையின் " வம்சி புக்ஸ் " வெளியிட்டது அந்தப் போதிநிலா வின் பாலொளியில் வாசகன் வாழ்வின் உன்னதங்களையும் சூட்சுமங்களையும் தெரிந்து கொள்ளலாம் |
21.6.09
பனைக் குருத்தின் வசீகர வாசனையை சுமந்து வரும் போதிநிலா - மாதவராஜின் சிறுகதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
தோழனே!
மிக்க சந்தோஷம். அதுவும் உன் மொழியில் கதைகள் குறிப்பிடப்படும்போது ஒரு கிறுகிறுப்பு வருகிறது. நன்றி.
வா தோழனே வா.
உன் எழுத்தின் வீர்யம் சொல்லி நிரப்பமுடியாதது. உள்ளத்தில் உள்ள ஒளி சிதறி உலகம் தெளிவுறக்காட்டும். நான் சொன்னது ரொம்ப ரொம்ப கம்மி.
நன்றி
நல்ல பகிர்வுக்கு நன்றி நண்பா.. தோழர் மாதவராஜ் அவர்களுக்கு என் பாராட்டுகள்
நல்ல பகிர்வு, பகிர்வுக்கு நன்றி, மாதவராஜ் அவர்களின் சிறுகதைத் தொகுப்பை தேடிக் கொண்டிருந்த போது, இந்தப் புத்தகத்தை எனி இந்தியன் இணையத்தளத்தில் கண்டேன், எனி இந்தியன் கடைக்கு செல்லும் போது வாங்க வேண்டுமேன நினைத்திருந்தேன்.
தங்களின் இந்தப் பகிர்வு மகழ்ச்சியளிக்கிறது.
/கொல்லையில் முளைத்துக்கிடக்கும் காட்டுக்கீரைகளின் மகத்துவம் தெரியாது வீட்டுக்காரனுக்கு./
தோழரைச் சந்தித்தேன்.பேசப்பேச அவர் அருமை தெரிந்தது.பரந்துவிரிந்துகொண்டே போனது. நிறையதான் பேசமுடியாமல்போனது.தொகுப்பை வாசித்துவிடவேண்டும்.
Post a Comment