CK. ஜானு, கேரளத்தின் பிரபலப் பெயர்களில் ஒன்று. ஆதிவசி கோத்ரா மாஹா சபாவின் தலைவரான ஜானு அதியா எனும் ஆதிவாசி இனத்திலிருந்து வந்த கலகக்காரர். அதியா என்பதற்கு அடிமைகள் என்று அர்த்தமாம். என்ன பெயரிட்டாலும்பட்டியலினத்தவர்கள் அடிமைகள் என்பதை மறுதலிக்க இந்திய சமூகம் லேசில் தயாராக இல்லை. இயற்கையோடு இயைந்தவாழ்வினால் தங்களை நிலை நிறுத்திக்கொள்ளும் ஆதிவாசிப் பழங்குடியினர். காடுகளில் வசிப்பதனால் ஒரு போதும் காட்டின் இறையான்மை பாதிக்கப்படுவதில்லை. அல்லது அவர்களால் காடு மாசு படாத வாழ்நெறிகள் படைத்தவர்கள். இதை எழுத்தாளரும் வழக்கறிஞரும் ஆதிவாசிகளின் ஆர்வலருமான ச. பாலமுருகனின் சோளகர்தொட்டி நாவல் மிக அருமையாகவிவரிக்கிறது. ஜேம்ஸ்ராப்டனின் மெட்ரிக் முறை நில அளவைக்கு முன்னர். வளமான இந்தியக் காடுகளின் செல்வங்களின் மேல் ஆங்கிலேயக்கண்ணகள் பதிவதற்கு முன். பட்டா முறை கொண்டுவருவதற்கு முன்னர். காடுகள் முழுக்க இயற்கைக்கும், விலங்குகளுக்கும், ஆதிவாசிகளுக்கும் தான் சொந்தமாக இருந்தது. பல நூறு ஆண்டுகள் வாழ்ந்த அவர்களை காட்டிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கை இந்த தேசம் முழுக்க நடந்து வருகிறது. அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட காடுகள் வழிதவறி, தடுமாறி, சரியான முறையில் பெருமுதலாளிகளின் கைகளுக்கு வந்து விடுகிற ஏற்பாடுகள் இங்கே கச்சிதமாக நடைபெறுகிறது. தங்களின் காடுகளை மீண்டும் தங்களுக்கே மறுபங்கீடு செய்து தரவேண்டுமென்கிற போராட்டத்தின் மிகப்பெரிய உந்து சக்தி CK ஜானு. முறைப்படியான பள்ளிக் கல்வி கிடைக்கப்பெறாத ஜானு கேரள எழுத்தறிவு இயக்கதினால் எழுதப்படிக்கத் தெரிந்துகொண்டார். எழுத்தறிவித்த இயக்கத்தின் வெளிச்சத்தில் கேரள சிபிஎம் கட்சியின் அனுதபியாகிப் பின் உறுப்பினாராகவும் மாறிச் சமூகச் சீர்திருத்த இயக்கங்களில் தன்னை இணைத்துக்கொண்டார். அங்கே அவருக்கு மங்களாக இருந்த உலகைப்புரிந்து கொள்ளும் அணுபவம் கிடைத்தது. இருந்தும் பொதுச்சமூகம் விடுபட்டவர்களின் உரிமைக்காகப் போராடும் என்கின்ற நம்பிக்கை இழந்து போனது. கேரள ஜனத்தொகையின் 1.5 விழுக்காடு பங்கு வகிக்கிற தங்களுக்கான தலைமையையும் போராட்டத்தையும் 1982 ல் தாங்களே வகுத்துக்கொண்டார்கள். தொண்ணூறுகளின் துவக்கத்தில் மலை சார்ந்த மக்களின் ஒவ்வொரு அசைவிலும் தன்னை நெருக்கப்படுத்திக்கொண்ட ஜானுவுக்கு 1994 ல் அரசு சேவை விருது வழங்கியது. அதை திருப்பி அணுப்பினார். 2001 ஆம் ஆண்டு கேரளத்தை உலுக்கிய நடைபயணங்கள், சாலை மறியல்கள், செயலகம் நோக்கிப்பேரணி போன்ற போராட்டங்களுக்குத் தலைமை வகித்த ஜானு உலகச்செய்திகளின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பினார். இறுதியாக 2003நில மீட்சிப்போராட்டங்கள் மிகப்பெரிய அதிர்வை உண்டாக்கியது. அரசின் தடையை மீறி '' முத்தங்கா '' மலைப்பகுதியில் குடியேற்றம் நடத்திய அவர்களின் மீது வழக்கம்போல காவல்துறை வன்முறையை பிரயோகித்தது. ஒரு காவலர் இறந்து போனார் போராட்டக்கரர்களிலும் பல உயிர்ச்சேதம் உண்டானது. பின்னர் ஆராளம் பண்ணைப் பகுதியில் ஆதிவாசிகளுக்குஇடம் ஒதுக்கித்தர அரசு கொள்கையளவில் ஒத்துக்கொண்டது. மிகப்பெரிய கல்விபின்புலம், அரசியல் பின்புலம், குடும்பப் பிண்ணனி என ஏதுமில்லாத CK ஜானு நிஜமான மக்கள் தலைவர் என்பதை உலகச் செய்தி ஊடகங்கள் அங்கீகரிக்கின்றன. |
1.6.09
மண்ணிலிருந்து வேர்பிடித்த பெண்தலைவர் - CK. ஜாணு
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//மிகப்பெரிய கல்விபின்புலம், அரசியல் பின்புலம், குடும்பப் பிண்ணனி என ஏதுமில்லாத CK ஜானு நிஜமான மக்கள் தலைவர் என்பதை உலகச் செய்தி ஊடகங்கள் அங்கீகரிக்கின்றன.///
நல்ல பகிர்வு
Post a Comment