15.7.09

சாமக்கோடாங்கி.

ஒற்றை நாயின் குறைப்புச்சத்தம் தூக்கத்தைக் கெடுக்கும். ஆளரவமற்ற நடு இரவில் காற்சலங்கைச்சத்தம் குலைநடுக்கும். ச்சூ ச்சூ வென நாய்களை அதட்டும் சத்தம் கேட்கும். கையில் இருக்கும் காண்டா விளக்கும் பெரிய மணியும் ஊருக்குள் சாமக்கோடாங்கி வந்துவிட்டாரென சங்கேத மொழியில் அறிவிக்கும். ஊரெல்லாம் முழித்தாலும் ஒரு வீட்டுக்கதவும் திறக்காது அடைந்துகிடக்கும். எதோவொரு மொழிபோலிருக்கும் தமிழில் குறிசொற்கள் இருக்கும். அந்த இரவை ஒரு அமானுஷ்யம்வந்து ஆக்ரமிக்கும்.

சாமக்கோடாங்கி பற்றி இன்னும் விடுபடாத புதிர்களை கிராமங்கள் அடைக்காக்கின்றன. அவர் நேராக சுடுகாட்டிலிருந்து தான் வருவார். மண்டையோடுகளில் மாந்த்ரீகம் செய்து அதை மாலையாக்கி அணிந்திருப்பார். அவர் ஊரில் நடமாடும்போது யாரும் எதிர்ப்படக்கூடது, அவர்கண்ணில் படுவது மகாப்பாவம். தப்பித்தவறி யாரும் எதிர்ப்பட்டு விட்டாலோ ச்சூ ச்சூ வெனச் சொல்லிக்கொண்டு தன்னை மறைத்துக் கொள்வார். இப்படி ஊரிலுள்ள ஒட்டு மொத்த மக்களுக்குமான பூசாண்டியாக அவர் உருவகப்படுத்தப்படுவார். எதிர்க்கேள்வி கேட்கும் இளவட்டங்களை அதட்ட ஊரே ஒட்டுமொத்தமாக திரண்டுவரும். வழிபடத் தகுந்தவராக இல்லாமல் வழிவிட்டு ஒதுங்குக்கிற ஒரு பயம் அவர்மேல் கவ்வி இருக்கும். காலபைரவன் என்னும் பெயர் கொண்ட சாமக்கோடாங்கி.


இந்த பயமும் அறியாமையும் மட்டும்தான் இன்னும் கூட கிராமங்களில் சாமக்கோடாங்கிகள் புழங்குவதற்கான சூழலை ஏற்படுத்தித்தருகிறது. ஒரு இருபத்தைந்து வருடம் வாழ்ந்த போது வந்துபோன சாமக்கோடாங்கிகள், நகர வாசம் வந்த பிறகு அவர்கள் ஒரு இரவைக்கூட அலைக்கழிக்க முயலவில்லை. இங்கே அலைக்கழிக்கப் படுவதற்கு வேறு வேறு காரணங்கள் ஆயிரம் இருக்கின்றன.


முழித்துக்கிடக்கும் ஜோடிகள் சபித்துக்கொள்ளும். முழித்துவிட்ட ஜோடிகள் வழ்த்திக்கொள்ளும். இடம் மாறி வகையறாக்கள் பதட்டம் கொள்ளும். சிறுவர்களுக்கு பயமும் ஆர்வமும் முளைத்துக்கொள்ளும். ஒரு மனிதனின் வரவால் ஒரு இரவே தலை கீழாக்கப்படும். அந்த இரவின் ஒரு சிறு பகுதியை எடுத்துக்கொண்டு அவர் திரும்பிவிடுவார். அதற்குப்பிறகான இரவு இருள் கவிழ்ந்த பகலாகிவிடும்.


பகலில் திரும்ப வரும் போது, இரவில் அவர் சொன்ன அருள்வாக்குளின் பதவுறை பொழிப்புறை கேட்டுத்தெரிந்து கொள்வார்கள். பெரும்பாலும் கெட்டவைகள் எதிர்வரும் என்கிற எச்சரிக்கை மட்டுமே அவரது அருள் வாக்காக இருக்கும். அப்படி சொன்ன வீடுகள் அதற்கான பரிகாரம் செய்தே தீரவேண்டும். பசியும் வறுமையும் மிகுந்த அந்த மனிதன் பரிகாரப்பொருள்களை வாங்கிக்கொண்டு திரும்பிப்பாரமல் போய்விடுவார்.எதிர்முனையில் காத்திருக்கும் சாமக்கோடாங்கியின் குடும்பத்துக்கு கொஞ்ச நாள் பசியில்லாமல் கழியும்.

14 comments:

Unknown said...

மாமா! இந்த பரபரப்பான சமூகச் சூழலில் நாம் மறந்து போன மனிதர்களை நினைவு படுத்த இது போன்ற பதிவுகள் மிகவும் அவசியமாகிறது. நல்லாயிருக்கு.....

காமராஜ் said...

வா மாப்பிள்ளை நன்றி.
உனது பதிவில் ஹாஸ்யம் கூடுகிறதே
நல்லாயிருக்கு.
அங்கே பின்னூட்டம் இடமுடியவில்லை

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பெரும்பாலும் கெட்டவைகள் எதிர்வரும் என்கிற எச்சரிக்கை மட்டுமே அவரது அருள் வாக்காக இருக்கும். அப்படி சொன்ன வீடுகள் அதற்கான பரிகாரம் செய்தே தீரவேண்டும்.//


இது எப்படி இருக்கு

ஈரோடு கதிர் said...

//இங்கே அலைக்கழிக்கப் படுவதற்கு வேறு வேறு காரணங்கள் ஆயிரம் இருக்கின்றன.//
நிதர்சனாமான உண்மை

//எதிர்முனையில் காத்திருக்கும் சாமக்கோடாங்கியின் குடும்பத்துக்கு கொஞ்ச நாள் பசியில்லாமல் கழியும்.//

சரியான வார்த்தைகள்....

சாமக்கோடங்கிகள் என்னையும் பெரிதும் ஆச்சிரியப்படுத்தியவர்கள். ஆனால் நகரத்திற்கு புலம் பெயர்ந்த பின் அவர்களை மறந்துபோனேன்

சென்ஷி said...

அருமையான பதிவு காமராஜ்! இன்னும் விவரங்கள் கோர்த்து கதை மாலை ஆக்கியிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது.

//நகர வாசம் வந்த பிறகு அவர்கள் ஒரு இரவைக்கூட அலைக்கழிக்க முயலவில்லை. இங்கே அலைக்கழிக்கப் படுவதற்கு வேறு வேறு காரணங்கள் ஆயிரம் இருக்கின்றன.
//

நல்ல லாவகமான பிரயோகம். அசத்தல்!

குடந்தை அன்புமணி said...

//பசியும் வறுமையும் மிகுந்த அந்த மனிதன் பரிகாரப்பொருள்களை வாங்கிக்கொண்டு திரும்பிப்பாரமல் போய்விடுவார்.எதிர்முனையில் காத்திருக்கும் சாமக்கோடாங்கியின் குடும்பத்துக்கு கொஞ்ச நாள் பசியில்லாமல் கழியும்.//

நிதர்சனமான உண்மை.

குடந்தை அன்புமணி said...

கவிதைத்தனமான நடையுடன் வாசிக்க முடிந்த நல்ல இடுகை. ரசித்து படித்தேன்.

காமராஜ் said...

வாருங்கள் சுரேஷ்
வருகைக்கு சந்தோசம்
கருத்துக்கு நன்றி.

காமராஜ் said...

தோழர் கதிர் வணக்கம்.

காமராஜ் said...

வாருங்கள் சென்ஷி, வணக்கம்.
நீங்கள் சொன்னது உண்மைதானனின்னும்
சொல்லவேண்டிய சாமக்கோடாங்கியின்
பகுதிகள் ஏரளம் இருக்கிறது. முயற்சிக்கிறேன்.
கருத்துக்கு நன்றி.

காமராஜ் said...

வருங்கள் அன்புமணி.
இன்றிரவு உங்கள் அனைத்துப்பதிவையும்
படிக்க உத்தேசம்.

ஈரோடு கதிர் said...

ஜூலை 30 குங்குமம் இதழில் "சாமாக்கோடாங்கி" வெளிவந்திருக்கிறது...

வாழ்த்துக்கள்

Unknown said...

நான் இவர்கள் பற்றிய தலைப்பில் தான் Phd க்கு தயாராகிக் கொண்டு இருக்கிறேன்..

Unknown said...
This comment has been removed by the author.