25.7.09

ஒரு போராட்டம் நட்பை அடர்த்தியாக்கியது.

கனத்துக்கிடந்த அந்தநான்கு நாட்களை
நட்பு எனும் வளையம் இலகுவாக்கியது.
துளியிடமில்லாமல் தனித்து விடப்படாதவாறு
தோழமை எனைச் சூழ்ந்து கொண்டது.

தூரம், காலம், அடர்த்தி
எனும் அளவைகளைத் தாண்டி
கரங்கள் என்தோள்மீது கிடந்தது.
ஒரு போராட்டத்தின் வெற்றியை
இசங்களோடு இணைந்து
அந்த நட்பே பகிர்ந்து கொண்டது.

பக்கத்தில் அமர்ந்து உழைக்கும் தற்காலிக ஊழியர்களின் கண்ணில் தேங்கிக்கிடக்கும் ஏக்கத்தை திரட்டி ஒரு கோரிக்கையாக்கினோம். காலடியில் கிடக்கும் அசமத்துவத்தைத் துடைக்க ஒரு போராட்டத்தை அறிவித்தோம். அதைத்துவக்கிய நாட்களிலிருந்தே பழிவாங்கும் குறி படர்ந்தது. இறுதியில் இரண்டு பேர் இலக்கானோம். அண்டோவும் நானும். இதை எனது தோழன் மாது தனது வலைப்பக்கத்தில் எழுதிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான். சுமார் முப்பது தோழர்கள். " அந்த இரண்டுபேர் வேலைக்குப் போகாமல் நாங்களும் வேலைக்குப்போவதில்லை " என அறிவித்து தங்களைத் தாங்களே தற்காலிக பணிநீக்கம் செய்து கொண்டார்கள்.
போராட்டமும் நீதிமன்ற வழக்கும் ஒரு சேர நடத்தப்பட்டது ஒரு நாவலுக்கான பெரும் செய்தி. அதை அண்டோ மற்றும் மதவராஜ் வலைப்பக்கங்கள் சொல்லியிருக்கிறது. விருதுநகர், மதுரை, சென்னை, டெல்லி ஆகிய இடங்களிலிருந்தும் வங்கி சார்ந்த தொழிற்சங்கத் தலைவர்கள் இதைச்சரிசெய்ய முயற்சியெடுத்தார்கள். இரண்டு சங்க செயற்குழு உறுப்பினர்கள் ஓயது பாடுபட்டார்கள். விருதுநகர் காவல் துறையின் அணைத்து மட்டங்களிலும் எங்களின் நியாயம் அணுசரணையாக்கப்பட்டது. காக்கிசட்டைக்காரர்கள் மேல் இருக்கிற விமர்சனங்களைத் தாண்டிய நிகழ்வு இது. 24.7.2009 அன்று ஏழாயிரம்பண்ணைக் கிளையில் மீண்டும் கையெழுத்திட்டேன்.

குலதெய்வம் கோவிலுக்கு போக இருந்த குடும்பத்தை, தனியே அனுப்பிவிட்டு எங்களோடு சங்க அலுவலகத்தில் படுத்துக் கிடந்தார் சங்கரசீனிவாசன் எனும் பெயர்கொண்ட எங்கள் முதலாளி. சங்கரும், நாசரும் வேலை என்ன வேலை என்று சொல்லிக்கொண்டே என்னை ஆற்றுப்படுத்தினர்கள். தோழர்மூர்த்தி, தம்பிஅருண், அண்ணன் சங்கரலிங்கம் இப்படி எண்ணற்றதோழர்கள் சங்க அலுவலகத்திலேயே தங்கிவிட்டார்கள். ஒருவர் கிண்டலடித்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் வேலை ஏவிக்கொண்டும் அந்த அலுவலகம் ஒரு பேச்சலர் அறையாகி குலுங்கியது.

தோழர் சோலைமாணிக்கமும் போஸ்பாண்டியனும் அலைபேசியை காதிலிருந்து எடுக்காமல் நான்கு நாட்களைக் கழித்தார்கள். அந்த நான்கு நாட்களில் பிஎஸ்என்எல் அலைவரிசை சற்று, சற்றென்ன நிறைய்யவே தடுமாறியிருக்கவேண்டும். ஒரு நாள் காலை ஒதுக்கமான அறையில் தனியே உட்கார்ந்து கொண்டு தனக்குத்தானே இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டிருந்த தோழர் செல்வக்குமார் திலகராஜைப் பார்த்த எனக்கு அழுகையை அடக்க முடியவில்லை. இரவுத்தூக்கத்தில் பற்களை நற நறவெனக்கடித்துக்கொண்டு, பகலிலும் அதைச் செயல்களால் காட்டிக் கொண்டும் மாது அலைந்தான்.

இந்த சுய வருத்தல் சங்கத்துக்காகவா எனக்காகவா எனும் கேள்விக்களுக்கு அதிக விழுக்காடுகளை விழுங்கிக்கொண்ட பதில் நட்பாகத்தானிருக்கும். அதுபோலவே தூரமான இடங்களிலிருந்து தொலைபேசியில் அழைத்த தோழர்கள் தங்கள் துணைவியர்களையும் என்னோடு பேசப்பணித்தார்கள். அவர்களின் ஆறுதல் வார்த்தை என்கண்கள் பனிப்பதை மேலும் மேலும் அதிகமாக்கியது. இவை எல்லாமே அசைபோட அசைபோட செரிக்காத பெருமிதங்கள். ஒரு இருபத்தைந்தாண்டுகால தொழிற்சங்க வாழ்க்கையின் இந்தச்சேமிப்பை ஒரு நூறு ஆண்டுகள் கூட செலவழித்தும் கரைக்க இயலாது.

எனது அருமைத்தம்பி ப்ரியா கார்த்தியைப்போல இந்தத்துறையோடு சம்பந்தமில்லாத பல தோழர்கள் நேரடியாகப் பங்கு கொண்டார்கள். தோழன் மாது எழுதியதும் துடிதுடித்து பின்னூட்டமிட்ட வலையுலக நண்பர்கள். தொலைபேசியில் தொடர்புகொண்டவர்கள். நேரில் எங்களைப்பார்க்க வந்த எங்கள் மண்ணின் மைந்தன் " வெயிலான் " வரும்போது வழக்கு சாதகமான மகிழ்ச்சியை பலமடங்காக்கினார். கஷ்டகாலத்தில் மட்டுமே நண்பர்களின் முழு முகவரியும் தெரியும். அந்த முகவரிகள் மிக நீளமான பாடியலைக் கொடுத்திருக்கிறது.

மீண்டும் பணிக்குச்சேர்ந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்றுதான் கிராமத்திலிருக்கிற எனது தாயார் பொதுத் தொலைபேசியிலிருந்து அழைத்து மனைவியிடம் " நோட்டீசுல பேரு போட்ருக்காமே, என்ன ஆச்சு எம்பிள்ளைக்கு " எனப்பதறி அழுதார்களாம். சங்கம் சாதித்தது, கவலை வேண்டாமென பதில் சொன்னாளாம்.
நேரில் போய் பார்க்கவேண்டும்.அப்போது அந்தக்கண்ணீர் ஆயுதமாகலாம்.
கோவலன் சாதாரண வணிகன், கோப்பெருஞ்சோழன் சர்வவல்லமை படைத்த அரசன்

29 comments:

hariharan said...

long live labour unite!!!

காமராஜ் said...

அங்குதான் வர்ணங்களைச் செயலிழக்கவைக்கிற
வர்க்க மாத்திரைகள் அதிகம் கிடக்கிறது.

ஆ.ஞானசேகரன் said...

//சங்கம் சாதித்தது, கவலை வேண்டாமென பதில் சொன்னாளாம். //

வாழ்த்துகள்
எல்லாம் நல்லவையாக இருக்கட்டும் நண்பா

ranjani basu said...

com,

In any organisation selfless contribution by leaders of trade union at critical situations,give confidence to the members... After the situation, sure the bondage of friendship is strengthened.. hats off to your tradeunion

காமராஜ் said...

வாருங்கள் நண்பா தங்களைப்
போலவே எண்ணிறந்த தோழர்கள் எனைச்சுற்றி
இருக்கிறார்கள்.

காமராஜ் said...

ஆயிரம் முறை விழுந்திருக்கிறது,
ஆயிரமாயிரம் முறை சறுக்கியிருக்கிறது,
ஆனாலும் இந்த அசமத்துவம் நீடிக்கிற வரை
அது பீனிக்ஸாக எழும்.
ரத்த பீஜன்களாக தோழமை பெருக்கெடுக்கும்.

நன்றி ரஞ்சனி பாசு.

Anonymous said...

காமராஜ்,

இடுக்கன் களையத்தானே நட்பு?

geevanathy said...

///கனத்துக்கிடந்த அந்தநான்கு நாட்களைநட்பு எனும் வளையம் இலகுவாக்கியது.//

உங்கள் போராட்டம் வெற்றிபெற்றதும் , மீள வேலைக்குத்திரும்பியதும் மகிழ்ச்சி தருகிறது.

//" நோட்டீசுல பேரு போட்ருக்காமே, என்ன ஆச்சு எம்பிள்ளைக்கு " எனப்பதறி அழுதார்களாம். ///

வலித்தது..

உங்கள் பணி சிறப்பாகத் தொடரட்டும்...

நட்புடன் ஜீவன்.

துபாய் ராஜா said...

சோதனை வரும்போது நல்ல நண்பர்களை தெரிந்துகொள்ளலாம்.

முன்னெப்போது சந்திக்காத முகம் தெரியாத பல நல்ல நண்பர்கள் இப்போது உங்களுக்கு.

நியாயமான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி தொடர வாழ்த்துக்கள்.

உண்மைகளை எப்போது உரக்க கூறுங்கள்.

துபாய் ராஜா said...

உண்மைகளை எப்போதும் உரக்க கூறுங்கள்.

அன்புடன் அருணா said...

//"ஒரு போராட்டம் நட்பை அடர்த்தியாக்கியது."//
இப்படிக் கூட சொல்லலாம்..."நட்பு போராட்டத்தை சாதித்துக் காட்டியது "என்று....
பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள்!

cheena (சீனா) said...

அன்பின் காமராஜ்

தொழிற்சங்கம் என்றாலே போராட்டங்களை புறந்தள்ள முடியாது. நட்பு - இதன் சிறப்பு உடுக்கை இழக்கும் போது தான் தெரிய வரும். உதவிடும் கைகள் ஏராளம். ஒற்றுமையான சங்கம் சாதிக்கும். கோவலன் சாதாரண வணிகன் ஆயினும் கண்ணகி சாதிக்க வில்லையா

நல்வாழ்த்துகள் காம்ராஜ்

காமராஜ் said...

நன்றி வடகரைவேலன்,
நன்றி ஜீவன் நலம் தானே ?

காமராஜ் said...

நன்றி துபாய் ராஜா உங்கள் வருகைக்கும்
ஆறுதல் வார்த்தைக்கும் நன்றி.

காமராஜ் said...

வாருங்கள் அருணா மேடம் இவ்வளவு நல்லவர்கள்
என் பக்கமிருக்கும் போது. வார்த்தைகள் இல்லை.

காமராஜ் said...

ஆமாம் சீனா சார். கண்ணகி சாதித்தாள் இப்போதும்.
பல நன்பர்கள் இணைந்த சங்கமாக. நன்றி சீனா சார்.

VijayaRaj J.P said...

வாழ்த்துக்கள் காமராஜ்

உங்கள் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி!

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.

இது போன்ற சம்பவங்களில் தான் நாம் உண்மையானவர்களை.... நம் மீது அக்கறை உள்ளவர்களை உணர்ந்துகொள்ள முடியும்..

ஈரோடு கதிர் said...

அன்பு காமராஜ்...

தங்களுக்கு நேர்ந்த இடறினை மாதவராஜ் அவர்களின் வலைப்பதிவு மூலம் அறிந்தேன்...

கடந்த முன்று நாட்கள் இணைய வசதி இல்லாத பகுதியில் இருந்ததால் தாங்கள் மீண்டும் பணியை தொடர்வதை இப்பொழுதுதான் அறிந்தேன்...

போராட்ட காலங்கள் ஒரு மனிதனை வழுப்படுத்தும் என்றாலும், தற்போதைய காலகட்டத்தில் ஒரு மிகப்பெரிய அயர்ச்சியை ஏற்படுத்தும் என்பதும் உண்மை...

ஆனாலும் தங்களுடன் இருந்த தோழர்கள் உங்களுக்காக இவ்வளவு தூரம் போராடியிருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே உங்களுக்கு மிகப்பெரிய ஊக்கசக்தியாக இருந்திருக்கும்...

வாழ்த்துக்கள்..
மகிழ்ச்சி பரவட்டும்

பாலராஜன்கீதா said...

உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

குடந்தை அன்புமணி said...

ஒற்றுமைக்கும் நட்புக்கும் கிடைத்த வெற்றியைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். வாழ்த்துகள்... தங்களுக்கும் தங்களுடன் தோள்தந்த நண்பர்களுக்கும்.

venu's pathivukal said...

அன்பு காமராஜ்

வணிக வங்கித் தோழர்கள் பலரது சார்பிலும் உஙளுக்கும் ஆன்டோவிற்கும் வாழ்த்துக்கள்.

தற்காலிக வேலை நீக்கம் என்று சொல்லிக்கொண்டாலும், எப்போது முடியும் என்று தெரியாத கணங்களில் சாதாரண தொழிலாளிக்கும் தொழிற்சங்க முன்னணி தோழனுக்கும் வித்தியாசம் உண்டு. ஆனாலும் குடும்ப ரீதியாக அதைப் புரிந்து கொள்வதில் சிக்கல் பல உண்டு.

போராட்டம் என்பது மனிதர்களின் நெருக்கத்தை அடையாளப்படுத்தும் வசந்த காலம். மன அழுக்குகள், கிலேசங்கள், விருப்பு வெறுப்புகள் கழியும் பொழுதுகள் அவை.

ஆண்டாளின் திருப்பவையில் இப்படி ஒரு வரி வருகிறது:

நின்றனவும் தீயினில் தூசாகும்...

போராட்டத் தீ மாசுகளை தூசாக்கி எரித்துவிடும். அங்கே தோழமை துளிர் விடும்.
உங்கள் பதிவு மிக அருமையாக வந்துள்ளது.

வாழ்த்துக்களுடன்

எஸ் வி வி

☼ வெயிலான் said...

அடர்த்தியை நேரில் கண்ட போதே நெகிழ்ந்தேன்.

நட்பும், ஒற்றுமையும் இன்னும் பல சாதிக்கும்!

காமராஜ் said...

விஜி அண்ணா வாருங்கள்.
நீங்கள் அழைத்த தொலைபேசி அழைப்பு
நிறைய்ய நெகிழ்ச்சியை உண்டாக்கியது.
அதுபோலவே அந்த நாள் முழுக்க. நன்றி,
நன்றி அண்ணா.

காமராஜ் said...

வாருங்கள் கதிர் ரொம்ப சந்தோசம்.

காமராஜ் said...

வாருங்கள் பாலராஜன் கீதா இது உங்கள்
முதல் வருகை ரொம்ப சந்தோசம். நன்றி.

காமராஜ் said...

அன்பு குடந்தைமணி நன்றி.

காமராஜ் said...

அஹா தேற்றுகிற சாக்கில் எனக்கொரு
சங்கப்பாடல் பரிசாகக்கிடைத்திருக்கிறது
நன்றி svv.

காமராஜ் said...

வாருங்கள் வெயிலான். அந்த ப்ளாக்கில் இருக்கிற
புகைப்படம் யாருடயது ?

யாத்ரா said...

ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.

வேலன் அண்ணாச்சி சொன்னது போல இடுக்கண் கலைவது தானே நட்பு