7.7.10

தேங்கிக்கிடந்த மந்தத்தை உடைப்பெடுத்த முழு அடைப்பு.

இந்த முழு அடைப்பைப் பற்றிப் பேசியே ஆக வேண்டும்.

முன்னமெல்லாம்,ஆளுங்கட்சி,எதிர்க் கட்சி, அடிக்கடி கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் இந்த நிகழ்வில் பெரிதாய் ஏதும் தாக்கமிருக்காது.ஒன்றிரண்டு மாநிலங்கள் வெறிசோடிக்கிடக்க தமிழகம் அதுபாட்டுக்கு எனக்கென்னேன்னு இயல்பாக இருக்கும். ஆனால் இந்த முறை ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்தபிறகும்,ஓசித்தொலைக் காட்சிப் பெட்டிவாங்கிக்கொண்டபிறகும்,அதில் செம்மொழி மாநாடுகளைப்பார்த்த பிறகும்,அரசு கடுமையாக எச்சரித்த பிறகும் மக்கள் மௌனமாக ஒரு எதிர்ப்பைப் பதிவாக்கி இருக்கிறார்கள்.தமிழகத்திலுள்ள அத்துணை நகரங்களிலும் தேர்வு நிலைப் பேரூராட்சிகளும் கூட கடைதிறக்காமல் சாத்திக்கிடந்தது கவனம் பெறக்கூடிய நிகழ்வு.வீட்டுக்குள்ளே ஈரத்துணியைச் சுத்திக்கிட்டு சுருண்டுகிடந்தால் தமிழர்களுக்கு எந்தச்செலவும் இல்லை.எழுந்து வெளியே வாசலுக்கு வந்தால்தான் எல்லா வினைகளும் வந்துசேரும்.அங்கே காற்றுக்கூட கல்லாப்பெட்டி வைத்துக்கொண்டு காத்திருக்கிறது துட்டுப்புடுங்க.

தொலைக்காட்சியை வெறும் ஊடகமாக கற்பிதம் செய்துகொள்வதைப்போலொரு முட்டாள்தனம் ஏதும் இல்லை.
அது கட்சிகளின் (காட்சிகளின் அல்ல) வழியே வில்லாததை எல்லாம் விற்றுத் தீர்க்கிற வியாபாரிகளின் ஊது குழலாகிப்போனது யருக்கும் தெரியாமல்.அரிசியில் கல்பொருக்குவதை விட்டுவிட்டு மணலுக்குள் அரிசிபொறுக்குகிறது தமிழகம்.விளம்பரம் நீக்கி செய்தி,விளம்பரம் நீக்கி,சினிமா,விளம்பரம் நீக்கி விமர்சனம் தேடுவது மணலுள் அரிசி பொறுக்குகிற விளையாட்டாகிவிடும்.

ஆமாம் நண்பர்களே..

நாளெல்லாம் தொலைக்காட்சி பார்க்கிற சனங்களின் மண்டைக்குள் ஏற்றப்படுவது விளம்பரப் படங்களும்,பொருட்களின் ஆடம்பரமும் தான் என்பதை கூர்ந்து கவனித்தே ஆகவேண்டும்.அங்கிருந்து தப்பித்து வெளியேறும் கனவான்கள் பளபளக்கிற பல்பொருள் அங்காடிகளுக்குள்ளும்,சாமான்யர்கள் பச்சைக்கலர் டாஸ்மாக்குக்குள்ளும் தொலைந்து போவதுதான் இயல்பாகிப்போனது.

இப்படித்தொலைந்து போவது தெரிகிறபோதும்,மயங்கிக்கிடப்பது தெளிகிறபோதும்தான் துவரம்பருப்பு ஒருகிலோ 75 ரூபாய் என்பது சுள்ளென்று உறைக்கும்.தேசம் முழுக்க உறைத்ததால் தான் இந்த முழுஅடைப்பு கொஞ்சம் கலக்கத்தைக் கொடுத்திருக்கிறது.அதனால்தான் மாண்புமிகு முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள் முழு அடைப்பைப்பற்றி சொந்தத் தொலைக்காட்சியில்  அடிக்கடி விளக்கம் அளிக்கிறார்.ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்தது மிகப்பெரும் சாதனை என்பதை ஒத்துக்கொள்கிற அதே நேரத்தில்,அரிசி வெளியில் 45 ரூபாய்க்குமேல் விற்கப்படுவது வேதனை என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.இதைப் பரவலாகப் பேசுகிற ஊடகம் இல்லை,இதைப்பரவலாகப் பேசுகிற அரசியல் இல்லை.காரணம் ஜாதிகளின் எண்ணிக்கையோடு போட்டிபோடுகிறது கட்சிகளின் எண்ணிக்கை.எல்லாச் சாதிக்காரர்களுக்கும் எல்லாக் கட்சிக்காரர்களுக்கும் வயிறு ஒரே மாதிரித்தான் இருக்கிறதென்பதைகேட்கிற பொதுக் காதுகள் குறைந்துபோயிருக்கிறது.

இந்த முழு அடைப்பை வாக்குச் சீட்டாக மாற்றுகிற உத்திகளோடுதான் கட்சிகள் களம் இறங்கும். மருத்துவம் முடிந்தபிறகும் தீராத தலைவலி அது.தலையணைகள் மாற்றப்படுவதால் தலைவலி தீராது என்பதை சோல்லிக்கொடுக்கிற பாடம் இந்தியாவில் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது.கட்சிபேதமில்லாமல் மக்கள் கவனம் விலைவாசியின் பக்கம் திரும்பியிருக்கிறது.இது ஒரு சரியான திருப்புமுனை.

14 comments:

Unknown said...

மக்களின் வாங்கும் சக்தி வெகுவாக குறைந்துவிட்டது.. இலவசங்களால் அவற்றை நிரப்பி விட முடியாது ..

லெமூரியன்... said...

போதை தெளிந்து மக்கள் விழித்து கொள்ள கூடாது என்று அரசு பகீர்ப்றேயத்னம் செய்து கொண்டிருக்கிறது...மீறி மக்கள் விழித்து கொண்டால் மலிவு விலை பாகெட் மது தமிழக அரசால் மறுபடியும் கொண்டுவரப்படும்..! :-)
அவங்க தொலைகாட்சியில் பெரியம்மா என்றொரு முழுநீள தொடர் ஆரம்பிக்கபட்டுவிடும்...!

http://rkguru.blogspot.com/ said...

உலகத்தில் தமிழ்நாட்டு மக்கள் வாங்கும் இலவசத்தை அடிச்சிக்க ஆளில்லை....

vasu balaji said...

/மருத்துவம் முடிந்தபிறகும் தீராத தலைவலி அது.தலையணைகள் மாற்றப்படுவதால் தலைவலி தீராது என்பதை சோல்லிக்கொடுக்கிற பாடம் இந்தியாவில் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது./

இதையும் தொலைக்காட்சியில் சொன்னால்தான் மக்கள் கவனத்துக்கு போகும் என்ற நிலை.

தமிழ் உதயம் said...

எல்லா
ஊடகங்களை விலைக்கோ, மிரட்டியோ தன் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு - இருப்பதை இல்லாததை போல், இல்லாததை இருப்பதை போல் காட்டி எவ்வளவு நாளைக்கு ஏமாற்ற முடியும்,

ராம்ஜி_யாஹூ said...

உங்க பதிவும் எழுதும் ஹிட்சும் பின்னூட்டங்களும் அருமையாக தான் இருக்கிறது.

ஆனால் வாக்கு போடும் பொழுது நாங்கள் தீர்க்கமாய் எங்கள் வாக்குகளை உதய சூரியனுக்கு ரூபாய் எட்டாயிரதிர்க்கு விற்று விடுவோம்.

மே 2011 இல் பார்க்கத்தானே போகிறீர்கள்.

ஈரோடு கதிர் said...

||காற்றுக்கூட கல்லாப்பெட்டி வைத்துக்கொண்டு காத்திருக்கிறது துட்டுப்புடுங்க.||

கண்டிப்பா நடக்கும்

Unknown said...

//தலையணைகள் மாற்றப்படுவதால் தலைவலி தீராது என்பதை சோல்லிக்கொடுக்கிற பாடம் இந்தியாவில் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது//

மிகச்சரியான வாதம்தான்.
ஆனால் தலைவலி மாத்திரையே தலையணையை பரிந்துரைப்பதால்தான் இந்த குழப்பம்.
இடதுசாரிக்கட்சிகளின் சித்தாந்தமும் கொள்கையும் மக்களுக்கான இயக்கங்களும் மக்களை ஈர்க்கவே செய்கின்றன. ஆனால் தேர்தல் என்று வந்துவிட்டால் அவர்களும் கூட்டணிதேடி அலையும் நிலைக்குதானே தள்ளப்படுகிறார்கள். அதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், மக்களின் பார்வையில் அவர்களும் பா.மா.க வும் ஒன்றே. இடதுசாரிகளின் போராட்டங்களை மக்கள் பார்க்கும் கண்ணோட்டம் இதுதான் - "இவங்க ஆனா ஊனா கொடிய தூக்கிட்டு போராட்டம் பண்ணுவானுங்க.. ஆனால் தேர்தல் வந்துவிட்டால், யாரை எதிர்த்து போராட்டம் பண்ணாங்களோ, அவங்ககிட்டயே சீட்டுக்கு போயி நிப்பானுங்க.
இன்றைக்கு இருக்கிற தி.மு.க. விற்கு சென்ற தேர்தலில் ஆதரவு கேட்டவர்களும் இதே இடதிசாரிகள்தான். இப்போது அவர்களை எதிர்க்கிறோம் என்பதும் இதே இடதுசாரிகள்தான். 2001 -2006 இலும் இதே கதைதான். 2011 -2016 இதுதான் நடக்கப்போகிறது". மக்களிடம் இடதுசாரிகள் ஒரு நம்பகத்தன்மையை வளர்க்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக எனக்குத்தோன்றுகிறது.
பேசாமல் ஒரு 10 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் நாங்கள் போட்டியிடமாட்டோம் என்று முடிவு செய்து, மக்களிடம் சென்று கட்சியினை வளர்த்துவிட்டு பிறகு தேர்தலில் நிற்கலாமே....

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு காமு அண்ணா.

இப்போதைய மிக முக்கியமான பிரச்சனை பற்றி பேசியுள்ளீர்கள்.

vasan said...

காம‌ராஜ்,
பொதும‌க்க‌ளுக்கு நன்றாக புரிகிற‌து
'அர‌சின் இல‌வ‌ச‌ங்க‌ள்' ஓட்டுமீனுக்கான தூண்டில் என்று.
விலையுய‌ர்வு விஷ‌ம் ஏழைக‌ளையும், ம‌த்திய‌த‌ர‌த்தின‌ரையும்
மெல்ல‌, மெல்ல‌ மூச்சு திணரற வைக்கிற‌து.
கேட்க‌ வேண்டிய‌ த‌மிழ‌க‌ எதிர்க‌ட்சிக‌ள், சில‌ மாத‌ங்க‌ளில்
வ‌ர‌விருக்கும், பொதுத்தேர்த‌ல் அணிச்சேர்ப்புக் குழ‌ப்ப‌த்தில்
அறிக்கை விடுகின்ற‌ன‌. த‌லைய‌ணை மாற்றினால், ந‌ம் த‌லைவ‌லி
தீராதென‌ தெரிந்திரிந்தும் மாற்று த‌லைய‌ணை த‌விர‌ வேறு மாற்ற‌மில்லையே?
ப‌ழைய‌ த‌லைய‌ணை க‌றை க‌ழுவ‌வாவ‌து இடைவெளி த‌ந்தால் அதிகார‌வாரிசு
ஏகாதிப‌த்திய‌த்திய‌ ம‌ன்ன‌ர்க‌ளுக்கு சிறிதுகால‌ ஒய்வாக‌ளாம்.
நோயும், அத‌ன் கூறும், தாக்க‌மும் தெரிந்திருக்கும்
ம‌க்க‌ளுக்கு, அதை சீராக்க‌ வ‌ழி தெரிய‌லையே.
அந்தோ, ம‌ருத்துவ‌ர்க‌ளெ, நோய் வ‌ளர்த்து, ப‌ர‌ப்பி ப‌ண‌ம் ப‌ண்ணுவார்க‌ள்
என‌, ச‌ட்ட‌மெழிதிய‌ எம்முன்னோர் எண்ண‌வில்லையே!
ம‌ன‌சால‌ கூட‌ நினைக்க‌லையே!

hariharan said...

நடந்துமுடிந்த வேலை நிறுத்ததிற்கு இதுவரை எப்போதுமில்லாத அளவிற்கு ஆதரவு கிடைத்துள்ளது. மக்களாட்சித் தத்துவத்தின் மீது இன்னும் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சியினரும் நம்பிக்கை வைத்திருந்தால் விலையுயர்வை விலக்கிக்கொள்ளவேண்டும்.

காமராஜ் said...

செந்தில்,
லெமூரியன்,
குரு,
பாலாண்ணா,
தமிழ் உதயம்,
ராம்ஜி,
கதிர்,
தியாகராசன்,( ஆமாம்)
தம்பி சரவணகுமார்,
வாசன்,
ஹரிகரன்.

எல்லோருக்கும் நன்றி.

சீமான்கனி said...

இந்த நிகழ்வுகளை ஊடகங்களில் பார்க்கவே வெறுப்பாக இருக்கு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் தகவல்....மக்கள் முன்புபோல் இல்லை இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது என் கருத்து...நன்றிகள் அண்ணா...

அன்புடன் அருணா said...

/அங்கே காற்றுக்கூட கல்லாப்பெட்டி வைத்துக்கொண்டு காத்திருக்கிறது துட்டுப்புடுங்க./
பயமாகத்தானிருக்கு!