8.7.10

மரவட்டப் பூச்சியோடு ஒரு பேருந்துப் பயணம்.

பேருந்திலிருந்து பிதுங்கி படிகளில் தொங்கிக்கொண்டு பயணம் தொடர்ந்தது.புத்தகப் பைகளைத் தோளில் மாட்டமுடியாமலும்,கீழேவைக்கமுடியாமலும் அவஸ்தைப்பட்டார்கள் அரசுப்பள்ளிச் சிறுவர்கள்.இரண்டாவது நிறுத்தத்தில்
ஏறிய அந்த இருவரும் குழந்தைகளை இடித்துத் தள்ளிவிட்டு மத்திப்பகுதியில் வந்து நின்றுகொண்டார்கள்.வாசனைத் தைல நெடி பேருந்து முழுக்க கவ்வியது.தோளில் சாப்பாட்டுப்பை தொங்கியது,கழுத்தில் தொங்கிய தங்கச்சங்கிலிக்கு வழிவிட்டு மேல்சட்டையின் இரண்டுபொத்தான்களை கழற்றி விட்டிருந்தான்.தனியார் கம்பெனியிலோ அல்லது அரசு அலுவலகத்திலோ வேலைபார்க்கவேண்டும். சனி ஞாயிறு குற்றாலம் போய்வந்த கதையைப் பேசிக்கொண்டிருந்தார்கள்.மாப்ள சுமோவுக்கு கொடுத்த வாடகைக்கு ரூம் போட்டு இன்னும் ரெண்டு நாள் ஜாலியா இருந்திருக்கலாம் என்று கூடவந்தவன் சொன்னான். வண்டி என்னாச்சு என்று கேட்டான்.

ஹோண்டா சரியில்ல, குடுத்துட்டு பல்சர் வாங்கிருக்கன், நம்பர் வாங்க ஆர்ட்டிஓ ஆபீஸ் போயிருக்கு
சாத்தூருக்கா
இல்ல மாப்ள பெருசு அரவிந்துல இருக்குல்ல
எப்ப சேத்தீங்க
பத்து நாளாச்சு
ஒரு நாள்ள அனுப்பிருவாய்ங்களே
இது வேற கத, ஆப்பரேசனுக்கு இருபதாகும்னு சொன்னாய்ங்கெ எந்தம்பிங்க எவனு சரிப்பட்டு வரல
மொத்தத்தையு நம்ம தலைல மொளகரைக்க பாத்தா உடுவனா,இந்தா வாரன்னு எஸ்கேப்பாகி வந்துட்டன்
மூனு நாக்கழிச்சி வீட்லவந்து பஞ்சாயத்து,ஆளுக்கு அஞ்சி குடுத்தாய்ங்க நாளைக்கி ஆப்பரேசன் அதா போறன்.

அவர்களிருவரின் சத்தம் பேருந்து இரைச்சலைத்தாண்டி,நடத்துனரின் சத்தத்தைத்தாண்டி,அந்த பேருந்தில் பயணம் செய்த அறுபது எழுபது பேரின் மேல் கவிழ்ந்து கொண்டிருந்தது. கண்மாய்ச்சூரங்குடி பேருந்து நிறுத்தத்தில் அவர்கள் மூன்றுபேரும் ஏறினார்கள்.டர்க்கித்துண்டு போர்த்திய ஒரு காய்ச்சல்கார சிறுவன், தாய், அப்போதுதான் தோளில் போட்டிருந்த சட்டைய மாட்டியபடி தகப்பன்.படியில் தொங்கும் கூட்டத்தை விலக்கி காய்ச்சல்கார சிறுவனுக்கு ஏறமுடியவில்லை.அதற்குள் நடத்துனர் விசிலடித்துவிட்டார்.அய்யோ ஏம்பிள்ள கீழ நிக்கி என்று தாய் பதறவும் தகப்பன் நடத்துனரோடு மல்லுக்குப்போனான்.பத்தடி போய் வண்டி நின்று ஏற்றிக்கொண்ட பின்னும் தாயும் தகப்பனும் நடத்துனரை விடுவதாக இல்லை. மற்ற பயணிகள்சமாதானம் செய்தபிறகு பக்கத்து இருக்கையில் உட்கார்ந்திருந்தவர்களிடம்  'எய்யா சாமி கொஞ்சம் எந்திரிங்க காச்சக்காரப்பய செத்த ஒக்காரட்டும் நெருப்பாக் கொதிக்கு' என்று கெஞ்சி அவனை உட்காரவைத்தார்கள்.பேருந்து முழுக்க விக்ஸின் வாசமும் பிள்ளைப்பாசமும் வியாபித்திருந்தது.தங்கச்சங்கிலி ஆசாமி கூட்டத்துக்குள் நகர்ந்து நகர்ந்து போய் காலியாய் இருந்த ஒரு இருக்கையில் உட்கார்ந்தான்,மரவட்டப்பூச்சி நகர்ந்ததுபோல்.

9 comments:

http://rkguru.blogspot.com/ said...

Good....post

vasu balaji said...

தலைப்பே சொல்கிறது முழுக்கதையும். ஒரு நல்ல துவக்கம் ஆரம்பிச்சிருக்கு. இது வரைக்கும் 5 பேரு புகார் கொடுத்து பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகள் போலீசில் பிடிபட்டிருக்கிறார்கள். இதையும் காசாக்க வழியாக்காமல் இருக்க வேணும்:(

க.பாலாசி said...

மரவட்டப்பூச்சேதான்... வேறெப்படி பொருத்தி சொல்றது..

//பேருந்து முழுக்க விக்ஸின் வாசமும் பிள்ளைப்பாசமும் வியாபித்திருந்தது//

அந்த பிள்ளைக்கும் பாசம் கடைசிவரை இருந்தா சரிதான்..

vasan said...

ம‌ர‌வட்ட‌ப் பூச்சிக்கு ஈர‌மிருக்க‌லாம். அவ‌னால்,
அதை கேவ‌ல‌ப்ப‌டுத்த‌ வேண்டாம். காம‌ராஜ்.
'விக்ஸ் வாச‌மும்', வாச‌னை தைல‌ வீச்ச‌மும்.

ஹேமா said...

தலையங்கமே அழகாயிருக்கு.

லெமூரியன்... said...

ஒரே நேரத்துல நடக்கிற இரண்டு வகையான முரண்பட்ட நிகழ்வு...!

ஒரு பக்கம் பெற்று வளர்த்தவருக்கு வைத்தியம் பார்க்க பங்கு கேட்க்கும் பிள்ளைகள்....

மற்றொருபக்கம் குழந்தைக்கு காய்ச்சல் என்று பதைபதைக்கும் தகப்பன்.....

உணர்வுகளற்று மரத்து போய்க்கொண்டிருக்கிறோம்....

கொஞ்சம் கொஞ்சமாக...

ஈரோடு கதிர் said...

காய்சலோடு சிரமப்படும் சிறுவனின் உரசலும், வெம்மையும் உணரமுடிகிறது...

சீமான்கனி said...

//பேருந்து முழுக்க விக்ஸின் வாசமும் பிள்ளைப்பாசமும் வியாபித்திருந்தது.//

மொத்த பகிர்வையும் இந்த வரிகளின் வாசம் மறக்கடித்து விடுகிறது...அருமை வாழ்த்துகள் அண்ணே...

உயிரோடை said...

அவ்வளவு கூட்டத்திலும் தங்கசங்கிலி ஆசாமிக்கு ஒரு காலி இருக்கை எப்படி கிடைத்தது?

//கூட்டத்துக்குள் நகர்ந்து நகர்ந்து போய் காலியாய் இருந்த ஒரு இருக்கையில் உட்கார்ந்தான்,மரவட்டப்பூச்சி நகர்ந்ததுபோல்.//

ஒரு கவிதை படிமம் குறீயீடு ரென்ஞ்க்கு இருக்குங்க அண்ணா