4.12.10

நம்பி ஏன் அழுதான்.

அந்த புகைவண்டி நிலையத்தில் எங்குபார்த்தாலும் ஒரே சிகப்பாகத் தெரிந்தது.தூரத்திலிருந்து பார்க்க பெரிய்ய தீ நகர்ந்து வருகிற மாதிரித் தெரிந்தது.கணேசனுக்கு சிகப்பாய் எதைப்பார்த்தாலும் உடல் புல்லரிக்கும். அதன் அடர்த்தியினாலா,இல்லை உதிரவண்ணத் திலிருப்பதாலா, வேறு எதற்குமா என்று தெரியவில்லை.டெல்லி தர்ண்ணாவுக்கு போகும்போது வாராங்கல் பகுதியைக்கடக்கிற போதெல்லாம் காட்டுக்குள் செம்மண் பூமியில் தனியாக ஒரு சிகப்பு ஸ்தூபி நிற்கும். சுற்றிலும் சிகப்புக்கொடிகள் பறக்கிற அழகைப்பார்க்கும் போது பரவசமாகிப்போவான். ஊருக்கு வந்து  ராதாகிருஷ் ணனிடம் விசாரிப்பான் 'அங்கெல்லாம் நம்ம கட்சி சூப்பரா இருக்கே எப்படி' என்று. 'அது வேற கட்சி கணேசா நம்மளுது இல்ல'.அவனுக்குள் முளைக்கும் கேள்விகளுக்கு உடனே பதில் சொல்லமாட்டார்  பிறகெங்கேயாவது  அரசியல் வகுப்புகளில் விடைகிடைக்கும்.அது அவனுக்கு பத்தாது.

நகர்ந்து வரும் சிகப்பு என்னவென தெரிந்து கொள்ள பயணச்சீட்டு எடுக்கிற வேலையை மறந்து கத்திருந்தான்.சிகப்புச்சேலை சீருடை அணிந்த மேல்மருவத்தூர் பக்தர்கள் வந்தார்கள்.பெருமூச்சு விட்டுக்கொண்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தான்.சகல வயதிலும் பெண்கள்.சுடிதார் அணிந்த நான்குபெண்களும் ஏதேதோ சிரித்துப்பேசியபடி கடந்து  போனார்கள். சுடிதாரும் சிகப்பு வண்ணத்திலே இருந்தது.எல்லோர் முகத்திலும் பக்தியை விட பயணக்களைப்பு மேலோங்கியிருந்தது.ஒரு வயதான பெண்மணி கொண்டுவந்த பையை கீழே வைத்துவிட்டு உட்கார்ந்து வாந்தியெடுத்தார்.  கூட்டம் அதிகமானது. அதற்குள்ளே தெரிந்த முகங்களும் வந்து போனது. முள்ளிச்செவல் டீச்சர் இவனை ஒரு கணம் பார்த்ததுப்பின் தலைகவிழ்த்தி விட்டுப்போனார்.

அந்த ஒரு கணப்பார்வை பத்துவருடங்களைப் பின்னிழுத்து கொண்டு போனது.எவ்வளவு உஷ்ணமான பார்வை.அகல விரித்து படபடக்கிற இமைகளுக்குள்ளிருந்து இனிப்புப் பறவைகள் பறந்து போகும்.டீச்சர் தான் முதன் முதலில் கணேசனுக்கு ஒரு பிட்டுப்பேப்பர் கொடுத்தது.'காலங் கலிகாலமாகிப் போச்சு சார் வாத்தீச்சிகளே பிட்டடிக்கிறாங்க' என்று மீரான்சாஹிபும்,இன்னும் தோழர்களும்அலுவலக மதியங்களில் கிண்டலடிப்பார்கள். இறுதியில் அதுவே ஒரு நீண்ட கடிதம் எழுதியது. மைப்பேனாவின் எழுத்து சில இடங்களில் தண்ணீர் பட்டழிந்திருந்தது.அது தண்ணீரல்லவாம் கண்ணீராம்.ஒரு சனிக்கிழமை மதியம் நாலைந்துபேரோடு வந்த டீச்சரின் அண்ணன் கடித்தங்களை எல்லாம் திருப்பிக் கொடுக்கும்படிக் கேட்டான்.எடுத்துக் கொடுத்துவிட்டு 'அவுங்க ஒராள் வந்திருந்தாப்போதுமே கொடுத்திருப்பேனே.எதுக்கு இப்டி அடியாளேல்லாம் கூப்பிட்டுக்கிட்டு'. கடிதங்களை என்ன செய்தார்களென்று தெரியாது.அதிலிருந்த நினைவுகளை காலத்தால் கூட அழிக்க முடியவில்லை.

ரெங்கலட்சுமி ஒரு நூறு அடி போய் பைகளை இறக்கிவைத்துவிட்டு யாரையோ எதிர்பார்க்கிற மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு திரும்பிப்பார்த்தாள்.அப்படிப்பார்க்கிற நேரமெலாம் கன்னத்தில் சொறிந்து விடுகிறமாதிரி பாவனை காட்டி ஆள்காட்டிவிரலால்  சமிக்ஞை செய்ய வேண்டும்.கணேசனுக்கும் ரெங்கலட்சுமிக்கும் மட்டுமேயான தனிச் சங்கேதங்களில் அதுவும் ஒன்று.கூட வந்த கணவன் ஏதோ கேட்டான் அதற்கு பதில் சொல்லாமல் யோசிக்கிற பாவனையில் கன்னத்தை சொறிந்து கொண்டிருந்தாள் ரெங்கலட்சுமி. இன்றிரவு கணேசன் மதுக்குடிப்பான் நண்பர்களோடு.அதற்கென ஒரு காரணம் தேடிக்கொள்வான். பாட்டு, அரசியல், விகடமென மதுவாடையில் நினைவுகளை அழிக்கப் பாடாய்ப்படுவான்.வீட்டில் வந்து தனியே அமர்ந்து அசைபோடுவான்.மனைவியின் கேள்விகளுக்கு அலுவலகத்தில் பிரச்சினை என்று கன்னத்தைச் சொறிவான்.அந்த  நம்பியை மட்டும் பார்த்திருக்காவிட்டால்.

நம்பியை அந்தக்கூட்டத்தில் பார்த்ததும் கணேசன் அதிர்ந்து போனான். ஒருவாரத்  தாடி, கழுத்தில் ருத்ராட்ச மாலை,கையில் சிகப்புத்துணியில் காப்பு,சிகப்பு வேஷ்டி,சிகப்பு சட்டையில் நம்பி. நம்பியும் அதிர்ந்திருக்க வெண்டும். கணேசனைப் பார்க்காத்தது போல முகத்தை திருப்பிக்கொண்டு ஐம்பது ரூபாய் கேட்ட ஆட்டோ வில் ஏறி உட்கார்ந்துவிட்டான்.'எறங்குங்க இருபது ரூபாய்க்கு அம்பது கேக்காங்க நீங்க பாட்டுக்கு ஏறி உக்காந்துட்டீங்க, கொஞ்சங்கூட..'.கடுமையான குரலில் நம்பியின் மனைவி சொன்னார். தன்னைப் பார்க்க சங்கோஜப் படுகிறான் என்று தெரிந்ததும் கணேசன் அங்கிருந்து நகர்ந்து போனான்.நம்பி கருப்பும் சிகப்புமில்லாத நிறத்தில் கமலஹசனைப்போலிருப்பான்.அடர் ஊதா நிறத்தில் கால்சராயும்,வெளிர் நீல நிறத்தில் முழுக்கை சட்டையும் அணிந்து கொண்டு சைக்கிளில் வருகிற அழகே அழகு.வங்கியில்  கூட வேலைபார்க்கும் பூர்ணிமாவிலிருந்து வாடிக்கையாளர்களாக வரும் டீச்சர்கள் எல்லாம் ஏங்குகிற அழகன்.அவன் மட்டுமல்ல அவனது எழுத்து குண்டு குண்டாக பிசிறில்லாமல் செதுக்கி அடுக்கி வைத்ததுபோல இருக்கும்.அவன் பாட்டு ஹஸ்கி வாய்சில் பொதிகைத் தென்றலாக இருக்கும்.அளவாகச்சிரிக்கிற போது அந்த சிங்கப்பல் சொக்கி இழுக்கும்.

தபால் தந்தி அலுவலகத்தில் வேலை பார்க்கும் கணேசனையும்,வங்கியில் வேலைபார்க்கும் நம்பியையும் சேர்த்து வைத்தது அந்த கலை இலக்கிய இரவுதான்.அங்கு பேசுகிற பேச்சு,பாடல்கள்,நாடகம் எல்லாம் காண்போரை உலுக்கிவிடும்.இவர்கள் இருவரையும் உலுக்கியது. நம்பி அழகாக ஓவியம் வரைவான்.கணேசன் அழகாக கவிதை எழுதுவான்.ரெண்டு பேரையும் கலை இலக்கிய இரவுக்கான வேலைகளில் இணைத்துக்கொண்டது இயக்கம்.
ஒரு படுதாவில் அடர் பச்சை வண்ண பின்னணியில் கருப்பாக ஒரு தூளி அதிலிருந்து ரெண்டு பிஞ்சுகால்கள் வெளி நீட்டிக்கொண்டு இப்படி ஒரு விளம்பர பதாகையை நம்பி வரைந்தான்.'விடிய விடிய பாட்டு மக்களை உசுப்பி விடுகிற தாலாட்டு' இப்படி அதற்கு கவிதை தலைப்பு எழுதிக்கொடுத்தான் கணேசன்.மாநிலத்தலைவர் வெகுவாகப்பாராட்டினார்.ரெண்டுபேரும் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர்களானாரகள்.

நம்பியின் கல்யாணத்துக்கு இயக்கம்தான் எல்லா வேலைகளையும் செய்தது. கணேசன் மூன்றுநாள் விடுப்பெடுத்து கூடவே  இருந்தான். கணேசன் மனைவி சிசேரியன் பேறுகாலத்துக்கு நம்பி தான் ரத்தம் கொடுத்தான்.சின்ன சின்ன சந்தோஷங்களையும்,துக்கங்களையும் இயக்க நண்பர்களோடு பகிர்ந்து கொண்டார்கள்.ரெண்டு வருடத்தில் இருவரும் கட்சி உறுப்பினர்களாகப்பதிவு செய்து கொண்டர்கள். முதல் பையனுக்கு கார்க்கி என்று பேர் சூட்டினான் நம்பி.ஊரிலிருந்து வந்த மாமனார் 'ஏழுமலையான் பேர் தான் தலப்பிள்ளைக்கு உடனும் நீங்கென்ன மாப்ள அதெல்லாம் ரோட்லயே விட்டுட்டு வந்திரனும் அடுப்படிவரைக்கும் வரக்கூடா'தென்றார்.சண்டையானது.நண்பர்கள் ஆலோசனைப்படி ரெங்கராஜன் கார்க்கி என்று நீட்டப்பட்டது.பின்னர் ஒரு வருடம் போக வர இருந்தார்கள் அடுத்த வருடத்தில் நம்பியின் மனைவிக்கு டீச்சர் வேலை கிடைத்தது.மாறுதல் வாங்கிக்கொண்டு அருப்புக்கோட்டைக்கு வீட்டைமாற்றிக்கொண்டு போய்விட்டான்.

பிறகான நாட்களில் கொஞ்சமாக நம்பியின் நினைவுகள் மங்கிப்போனது. அருப்புக்கோட்டைக்கு ஒரு ஊர்வலத்துக்காக வேனில் போயிருந்தபோது கணேசன் நம்பியைத்தேடினான். கிடைக்கவில்லை ஊர்வலம் போகிற பாதையில் ஒரு இரு சக்கரவாகனம் எதிரே வந்து திரும்பிப்போனது.அது நம்பியாக இருக்குமோ என்கிற சந்தேகம் வந்து காணாமல் போனது. அருப்புக் கோட்டை நண்பர்களிடம் விசாரித்து நம்பியின் அலுவலக நண்பரைடம் நம்பி பற்றிக் கேட்டான். 'அவர் நம்மாளா ஒன்னுந் தெரியலயே' என்று சொன்னார்.அதன் பிறகு ஒரு மாதங்கழித்து ஒரு ஞாயிறு இரவு கணேசனின் மனைவி '  ஏங்க ஒங்க ப்ரண்டு நம்பி வந்திருந்தாருங்க, ரொம்ப நேரம் காத்திருந்திட்டு போயிட்டார் '. என்று சொல்லிவிட்டு, 'ஏங்க அவர் குடிப்பாரா' என்று கேட்டாள்.அன்றைக்கு மாது வீட்டுக்கும் காம்ஸ் வீட்டுக்கும்  வந்திருந் ததாக தோழர்கள் சொன்னார்கள்.

வருடங்கள் ஓடிப்போய் ஒரு வெள்ளிக்கிழமை மேல்மருவத்தூர் வார வழிபட்டு மன்றக்கூட்டத்துக்குள் நம்பி தென்பட்டான்.மாற்றலாகி சாத்தூருக்கே வந்திருப்பதாகச்சொன்னார்கள். ஒரு நாள் வங்கிக்கிளைக்கு கணேசன் போன போது வேலை ஜாஸ்தியா இருக்கு சாயங்காலம் வீட்டுக்கு வரேன் என்று அனுப்பி வைத்தான்.ஆறுமாதங்களாகிப்போனது வரவில்லை .மறந்து போயிருந்த ஒரு காலை நேரத்தில் கணேசனின் வீட்டுக்கதவு தட்டப்பட்டது.
நம்பிதான்.

'வா நம்பி நல்லாருக்கயா'
'சட்டையப்போடு வா வெளியே'
'எங்கே'
'வா சொல்றேன்'
'ஏதும் பிரச்சினையா'
'கேக்காத வா'

ஒரே வண்டியில் போனார்கள்.பிரதான சாலை ஏறி  துலுக்கபட்டி பாலத்துக்கு அருகில் இருக்கிற அடர்ந்த மரங்களுக்கு நடுவே வண்டியை நிறுத்தினான்.ஒரு புட்டியும் ரெண்டு குவளைகளையும் எடுத்து வைத்தான்.குடித்தார்கள். பேசினான்,அழுதான்,துடைத்துவிடச் சொன்னான்.பெருமூச்சு விட்டான். தழுவிக்கொண்டான்.பாட்டுப்படித்தான். பொழுது நீண்டுகொண்டே போனது.

13 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஒன்றாய்க் கிளைவிட்ட நம்பிக்கை வேறு திசைக்கு மாறியபோதும் நட்பு முழுமனங்கொண்டு ஏற்றுக் கொள்கிறது.நம்பி ஏன் அழுதனோ அவனை என்றும் நம்பிப் பின் தொடரும் கணேசனின் நட்பு பெருமைக்குரியது.அருமை காமராஜ்.

வினோ said...

என்ன தான் காலங்களும் கோலங்களும் மாறிப் போனாலும், தோழமையின் பாதிப்புகள், பதிப்புகள் என்றும் மாறாமல் இருக்கும். என்றும் தேவைப்படும்.

Unknown said...

சிவந்து கொண்டிருக்கிறது நம்பியின் விழிகளைபோலவே ...

Unknown said...

Avargalukkul yenna pesikittaanga?

vinthaimanithan said...

எனக்கு சு.சமுத்திரத்தின் எழுத்து மிகவும் பிடிக்கும். கதையைப் படித்தவுடன் அவர்தான் என் நினைவுக்கு வருகிறார். கதையின் உள்ளடக்கம் தீவிரமான விவாதத்துக்குள் இழுக்கின்றது...என்னைப்பொறுத்தவரை அது காலந்தோறும் தொடரும் வினாக்களின் தொகுப்பு...! ம்ம்ம்... எனக்கு சரியாக விளக்கத் தெரியவில்லை என்று நினைக்கிறேன்... ம்ம்ம்ம்....

மாணவன் said...

அருமை சார்,
தோழமையை சிறப்பாக பதிவு செய்கிறது கதை

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

வாழ்க வளமுடன்

நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்

காமராஜ் said...

நன்றி சுந்தர்ஜி சார் முந்தைய பதிவிலும் இந்தப்பதிவிலும் உங்கள் பின்னூட்டம் எனக்கு வெளிச்சம் தருகிறது.

காமராஜ் said...

.

நன்றி அன்பின் செந்தில்.

காமராஜ் said...

நன்றி வினோ,

காமராஜ் said...

Sethu said...

Avargalukkul yenna pesikittaanga?

சேது..... சார்...

காமராஜ் said...

விந்தை வணக்கம்.
விவாதம் வராது. ஒரு இருக்கமான மௌனம் மட்டும் மிஞ்சும்.

காமராஜ் said...

வருகைக்கு நன்றி மாணவன்.

vimalanperali said...

எழுதி,எழுஹ்டி தீராத பக்கங்களாய் வாழ்க்கை தன்னுள் நிரைய,நிரையவே முடியிட்டுக் கொண்டும்,பொதித்துக் கொண்டுமாய்.....அதனுள் விரவிக்க்டக்கிற சம்பவங்கள் நம்மை பல நேரம் கலங்கடித்து விடுகிறதுண்டு,அதி ஒன்றாக இது.முக்கியபதிவு.அவர்கள் கிடக்கட்டும்,விட்டு விடுங்கள்,சொல்லிச் செல்லுங்கள்.படிக்கிறோம்,பிந்தொடர்கிறொம்.நல்ல சிறப்பான ஆழமான பதிவு.வாழ்த்துக்க்கள்.