6.12.10

ஓடு,அவர்கள் நகரத்துக்குள் வருகிறார்கள்


(இன்று அம்பேத்கரின் நினைவு தினம்.மும்பை சிவஜி பூங்காவில் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் மரியாதையை செலுத்த திரளும் நாள் இன்று.ஆனால் இந்த பெரும் கூடல் பரவலாக அறியப்படாத ஒரு நிகழ்வாகும்.இந்த தேசம்,அல்லது தலித்துகள்கூட அவரது கனவுகளை உணர்ந்துகொண்டார்களா என்பது இன்னும் கேள்வியாகவே தொடருகிறது.இருப்பினும் லட்சக்கணக்கான ஒடுக்கப்பட்டவர்களை ஒரே இடத்துக்கு இழுத்துவரும் உந்து சக்தி அவரிடம் இருந்திருக்கிறது. khairlanji the bitter crop என்கிற ஆனந்த் டெல்டும்டே  புத்தகத்திலிருந்து தமிழாக்கப்பட்ட சில பக்கங்கள்)

 " சைத்யா பூமி "  அம்பேத்கர் நினைவஞ்சலி . இதுவரை ஊடகங்களால் கண்டுகொள்ளப்படாத ஒரு உணர்வுபூர்வமான அபூர்வ நிகழ்வு. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்துவரும் இந்த தாழ்த்தப்பட்டவர்களின் பெருந்திரள், நிதானமாகப் பெருகிக்கொண்டே வருகிறது. தங்களின் ஒப்பற்ற வழிகாட்டி பாபாசாஹேப் அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்ட சமத்துவ சகோதரத்துவ ஜனநாயகக் குடியரசு அவர்களுக்கு எந்த பாதுகாப்பும் சந்தோசமும் வழங்காவிட்டாலும் கூட அவர்களந்த நாளின் புனிதத்தன்மையின் மேல் களங்கம் வரும்படியான சிறு அசம்பாவிதமும் நடக்காமல் பார்த்துக் கொண்டார்கள். கட்டுக்கடங்காத அந்தப் பெருந்திரள் ஒரு சிறு நூலிழை போன்ற சமதா சைனிக் தல் எனும் தொண்டர்களால் கட்டுப்படுத்தப்படவில்லை, ஒழுங்கு படுத்தப்பட்டது.

அதுவரை சமதா சைனிக் தல்லின் பாதுகாப்பு எல்லைக்கு வெளியே இருந்த மும்பை காவல்துறை. வலுக் கட்டாயமாக நிகழ்ச்சியைக் காவல்துறைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டிய நிர்ப்பந்தத்தை ஊடகங்கள் ஏற்படுத்தின. தொடர்ந்து ஐந்து நாட்கள் ஒருங்கிணைக்கப்பட்ட பீதிப் பிரச்சாரத்தால் தங்களின் மீட்பருக்கு செலுத்த வேண்டிய மரியாதையை செலுத்தமுடியாமல் பயத்தில் ஆயிரக்கணக்கான தலித்துக்கள் மும்பை பயணத்தை கைவிட்டுவிட்டார்கள். அரசியல் மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு தலித்துக்கள் திரண்ட இந்த பெருந்திரளை காவல்துறையின் கட்டுக்குள் கொண்டு வரும் இந்த அரிய சந்தர்ப்பத்தை கவனிக்கத் தவறிவிட்டார்கள்.

தலித்துகள் ஒன்றிணையும்போது என்ன விசை உருவெடுக்கும் எனும் அச்சத்தை இந்த வருடாந்திர நிகழ்வு சாத்தியப்படுத்துகிறது. அது தலித் ஒற்றுமைக்கான நம்பிக்கையை விரிவடையச் செய்கிறது. டிசம்பர் ஆறாம் நாள் நிகழ்ச்சியால் மாநிலத்தில் பெருகிவரும் தலித் நம்பிக்கையில் விஷத்தைக்கலக்க ஊடகங்கள் திட்டமிட்டன.

மூட்டை முடிச்சுக்களுடன் வெளியேறத் தயாராக இருக்கிற இரண்டு மும்பை சிவாஜி நகர வாசிகளின் புகைப்படத்தை முதல் பக்கத்தில் பிரசுரித்தது மும்பை நாளிதழ். ஒரே ஒரு நாள் தாங்கள் வசிப்பிடத்து தெருக்களில் தலித்துக்கள் நடமாடுவதைத் தவிர்க்கும் பொருட்டு இந்தச் செய்திகள் வெளிப்படையாகச் சித்தரிக்கப்பட்டன. 5.12.2006 ல் வெளியான தி டெய்லி நியூஸ் அண்ட் அனலைசிஸ் நாளிதழில் " கத்தி முனையில் வசிக்கும் சிவாஜி நகரக் குடியிருப்போர்" என்கிற கட்டுரை மூலமாக உயர் ஜாதிக்காரர்களின் அசௌகரியங்களைப் பட்டியலிடுகிறார் கட்டுரையாளர் ஹைனா தேஸ்பாண்டே.ஒருதலைப் பட்சமான,முன்முடிவுகளோடு புனையப்பட்ட அந்தக்கட்டுரை  பிரிட்டிஷ் காலத்தில் எழுதப்பட்ட நேட்டிவ்ஸ், ஈவென்ட்ஸ் எனும் ஆங்கிலக் கட்டுரையை நினைவுபடுத்துகிறது.

பலர் தங்களின் அன்றாட வேலைகளை மாற்றியமைத்துக்கொண்டார்கள். வீடுகளின் பாதுகாப்பை மேம்படுத்திக் கொண்டார்கள்.தங்களின் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பவில்லை. தங்களுக்குள்ளே ஒரு தடுப்புச்சுவரை ஏற்படுத்திக்கொண்டார்கள். இரவு நேரத்தில் இறைச்சலாக ஒலிபெருக்கி அலறுகிறது. தலித்துக்கள் வீடுகளின் சுற்றுப்புறத்தை அசிங்கமாக்குகிறார்கள். நடைபாதையில் குளிக்கிறார்கள். உடைத்துவிடுவார்களோ என்கிற பயத்தில் கார்களை வெளியே எடுப்பதில்லை. ஒரு நாள் முழுக்க நாங்கள் வீட்டுச்சிறையில் இருக்கிறோம் என்னும் கூப்பாடுகளை ஊடகங்கள் வெளியிட்டன.

// அம்பேத்கரைப்பின்பற்றும் ஜனங்கள் கிராமங்களினின்றும், நகரங்களினின்றும் மும்பையை நோக்கி வந்து குவிவதால் உண்டாகும் அசௌகரியங்கள் தெருக்களில் சிறுநீர்கழிப்பதும், மலம் கழிப்பதும், மட்டுமல்ல. பெண்களைச்சீண்டுவது, அரசுப் பொதுப் போக்குவரத்தில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது, என நீள்கிறது. மும்பை மக்களின் பெருமையும் மேன்மையும் அவர்கள் அதீத பொறுமையைப் படித்துக்கொண்டதால் கிடைத்தது. ஒடுக்கப்பட்டவர்கள் என்பதற்கு தலித்துகளின் அதிகாரத்தால் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதே எனக்குத்தெரிந்த அர்த்தம். தலித்துகள் வசிப்பிடங்களில் இப்படியான அடக்குமுறைகளை எங்கும் காணமுடியாது. அவர்கள் தேர்தலில் போட்டியிடட்டும், அதிகாரப்பகிர்வுக்காகப் போராடி அதன்மூலம் இந்தச்சமூகத்துக்குள் நுழைவதை வரவேற்கிறேன். அதற்காக மும்பையை நாசமாக்காமல் இருக்கட்டும். //

என்று 5.12.2006 தேதி ஆஃடர்நூன் டெஸ்பாட்ச் அண்ட் குரியர் இதழின் ஆசிரியர் மார்க் மனுவேல்  தலித்துக்களின் மீதான தன் வெறுப்பை வெளிக்காட்டும் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.இதுதான் சமூக முரண்பாடுகளின் மீது ஒட்டுமொத்த ஊடகங்கள் கொண்டிருக்கும் பொதுப் புத்தியாக இருக்கிறது. கயர்லாஞ்சிக் கொடூரம் மார்க் மனுவேலின் புத்திக்கு தலித் ஒடுக்குமுறை யாகப்  படவில்லை. இதற்கு முன்னால் அரசியல் கட்சிகளாலும் மதவாதி களாலும் சிவாஜி நகர் பூங்காவில் வருடம் முழுவதும் கூடங்கள் கூட்டப் படுகிறது. பொதுச் சொத்துக்களையும், தனியாரின் உடமைகளியும் சூரையாடிக் கொள்ளையடிக்கும் அந்தச்சீரழிவுகள் ஒரு போதும் இதழியலாளர்களின் கண்ணை உறுத்துவதில்லை.

 தங்களின் வசிப்பிடத்துவழியாக ஒரு நாள் கூட நடமாட அனுமதிக்காத மேட்டிமைப்புத்தி தான் இந்த எழுத்து.மேலோட்டமாகப்பார்த்தால் இது மிகச்சரியான அனுகுமுறை மாதிரித்தோன்றும்.ஆனால் இதே அனுகுமுறை ஏனைய பெருந்திரள்களுக்குப் பொருந்தாது.அதற்கு உளவியல் ரீதியன, பரிணாம ரீதியான தத்துவங்களை மேற்கோள் காட்டி அதை ஒரு உன்னதமான நிகழ்வாக உருமாற்றும் தந்திரம் வெளிப்படும். கவர்ஸ்டோ ரியாக.

என் நிலம் எங்கே,எனது இடம் எங்கே,என் தன்மானம் எங்கே,என்ஏதிர்காலம் எங்கே,நான் யார் என்கிற கேள்விகளைப் புதைத்து விட்டு அதைத் தேடியலைகிற 20 சதமான தலித்துகளை புரிந்துகொள்ள கொஞ்சம் மனிதாபிமானம் வேண்டும். அதற்குத்தான் இங்கே பெரும்பஞ்சமாக இருக்கிறது.அதிலிருந்து நீள்கிற ஈரம் தோய்ந்தகைகளை அவர்கள் அறிவார்கள். 

ஒரு சில நேர்மையான பத்திரிகையாளர்கள் இதில் விதிவிலக்காகிறார்கள். சாய்நாத்தும் , ஜோதி புனிவானியும் பிரதான ஊடகங்களின் சார்புத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். கடந்த நாற்பது வருடங்களாக சிவசேனா நடத்தும் தசராக் கொண்ட்டாட்டங்களால் மொத்த மும்பையே திணறடிக் கப்படுவது ஏன் ஊடகங்கலின் கண்ணில் படுவதில்லை. பால்தாக்கரே வெறிப் பேச்சால் ஒவ்வொரு முறையும் சிவாஜி பூங்காவின் சுற்றுவட்டாரம் சூரையாடப் படும்போது மட்டும் அந்தப்பகுதிக் குடியிருப்போர் ஆனந்தம் அடைகிறார்களா?. வருடாவருடம் பத்து நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டுமொத்த மும்பை கொண்டாடும்போது, போக்குவரத்து சீர்கெட்டு மாற்றமடைகிறது, ஒலிமாசுபடுகிறது,கடல்நீர் மாசுபடுகிறது, சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு வருடத்தில் ஒரு நாள் அமைதியான முறையில் அஞ்சலி செலுத்திவிட்டுப் போகும் சைத்ய பூமி நிகழ்வை மட்டும் பூதாகரப்படுத்துவது ஏன். தாக்கரேயின் மனைவி மீனாதாய் தாக்கரேயை இழிவுபடுத்தியதாக சொல்லி ஜுலை 2006 ல் சிவசேனா கும்பல் நடத்திய, அட்டகாசங்களையும், சூரையாடல்களையும் எதிர்த்து எந்த விதமான கருத்தும் தெரிவிக்க துணிச்சலில்லாததுதான் உங்கள் பத்திரிகை நீதியா?.என்று புனிவாணி கேள்வி எழுப்புகிறார்.

6 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

புனிவாணியின் குரல் நம் குரலாக உண்மையின் பக்கம் நிற்பவர்களின் குரலாக ஒலிக்கிறது.இதற்கான பதில் அவர்களிடம் இருக்காது.கேள்விகளும் ஓயாது எழுப்பப் பட்டபடியே இருக்கும்.பகிர்வுக்கு நன்றி காமராஜ்.

kashyapan said...

காமராஜ்! தீட்சா பூமியில் நடந்தது வித்தியாசமாக இருக்கிறது.விஜயதசமி யன்று நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ்.வைத்தது தன் சட்டம்.ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். அண்ணல் அம்பெத்கர் தீட்சை பெற்ற நாளும் அன்று தான்.நகரத்தின் ஒரு கோடியில் அவர்கள் கூடுவார்க்ள்.இப்போது கதை மாறிவிட்டது. விஜய தசமி அன்று நாகபுரி நகரம் முழுவதும் விழாக்கோலத்தில் ஆர்ப்பரிக்கும்.தலித்துகள் லட்சக்கணக்கில் கூடுவார்கள்.ஒவ்வொரு தெருவிலும் கொடியும் தோரணங்களும் கட்டப்பட்டிருக்கும்.கிராமங்க்ளிலிருந்து குடும்பம் குடும்பமாக வரும் மக்களுக்கு ஒவ்வொரு தெருவிலும் இலவசமாக உள்ளுர்க்காரர்கள் உணவு அளிப்பார்கள்.அந்த கிராமத்து ஏழை எளிய மக்கள் தங்களின் மிகசிறந்த உடையில் கூடுவது கண்கொள்ளாக்காட்சியாகும்.
அப்போதெல்லாம் ஆர்.எஸ்.ஏஸ் காரர்கள் "ஜெய் ராம், ஜெய் ராம்" என்று ஒருவரை ஒருவர் விளித்துக்கொள்வார்கள்.இப்போது "ஜெய் பீம்! ஜெய் பீம்1" என்று தலித்துகள் அழைத்துக்கொள்வது கெட்க ரம்யமாக இருக்கிறது.மாற்றம் வருகிறது காமராஜ்!---காஸ்யபன்.

vasu balaji said...

படிக்கப் படிக்க கோபம் கொப்பளிக்கிறது. காஸ்யபன் சாரின் நம்பிக்கை வார்த்தைகள் ஆறுதல்.

sivakumar said...

//படிக்கப் படிக்க கோபம் கொப்பளிக்கிறது. காஸ்யபன் சாரின் நம்பிக்கை வார்த்தைகள் ஆறுதல்//
எனக்கும்

Unknown said...

அருமையான பதிவுங்க. இவ்வுலகம் எல்லோருக்கும் பொது. பிரிச்சு வைச்சுப் பார்ப்பவர்கள் உணரவேண்டியது கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

ஆ.ஞானசேகரன் said...

மிக அருமையான பகிர்வு தோழரே... நல்ல பகிர்வுக்கு நன்றிங்க