16.12.10

பராக்குப்பார்த்தல். குழந்தைகள், நாடு, சகிப்புத்தன்மை

பள்ளியின் சேர்கிற மாதத்தை ஒட்டிப்பிறக்கும் குழந்தைகளின் பருமனும், முந்திப்பிறக்கும் குழந்தைகளின் பருமனும் வளர் இளம்பருவத்தில் ஒப்பீட்டளவில் வித்தியாசப்படுகிறதாம்.இதை ஆராய்ச்சி செய்கிற பள்ளி மற்றும் மருத்துவ பல்கலைக்கழகம் சொல்லுகிறது.

குழந்தைப்பருவத்துக்கும் இளமைப்பருவத்துக்கும் இடையிலான இந்த காலத்தை ஒவ்வொரு நாடும் மிக உன்னிப்பாக அனுகுகிறது.அதிக கண்டிப்பு மில்லாத அதிக சுதந்திரமுமில்லாத ஒரு விட்டுப்பிடிக்கிற இடத்தில் பெற்றோரை நிற்கச்சொல்லுகிறது.தேசத்துக்கு தேசம் வித்தியாசமான அனுகுமுறை இருந்த போதிலும்,கல்யாணம்,வாகன ஓட்டும் உரிமம், மதுக் குடிப்பதற்கான சுதந்திரம்,உயர் கல்விகற்பதற்கான தகுதி,ஆயுதப்படைகளில் பணிபுரிவதற்கான தகுதி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கான தகுதி இவற்றில் உலகளாவிய பொதுத்தன்மை நிலவுகிறது.

எனினும் கல்விகற்கிற,கற்றுக்கொடுக்கிற பொறுப்பை எல்லா தேசமும் கட்டாயம் ஆக்குகிறது.அந்த வயதில் அவர்களுக்கு வேலைசெய்யும் உரிமை மறுக்கப்படுகிறது.அதை ஒரு பாவச்செயலாக எழுதிவிட்டு தொடரவிடாமல்
ஒரு தண்டணைக்குரிய குற்றமாக்கி அதை அமல்படுத்தவும் செய்கிறது. இதுபோன்ற நல்ல பழக்கவழக்கங்களைத்தூக்கி குப்பையில்போட்டுவிட்டு தொடர்ந்து பீடு நடை போடுவதுதான் இந்த தேசத்தின் மிகப்பெரிய அவமானம். சாப்பிடப்போகிற உணவு விடுதிகளில் தொள தொள சட்டைப் போட்டுக் கொண்டு மேஜை துடைக்கிற இவர்களைப் பார்த்துச் சின்னச் சலனம் கூட வராத சகிப்புத்தன்மை இருக்கிறது.அந்தச் சாமன்யனுக்கு சாம்பார் ரசத்தில் உப்புக்கூடக் குறைய்ய இருந்தால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.

பொது மக்கள் அப்படியென்றால் அரசும் அதன் எந்திரமும் 'இங்கு குழந்தை தொழிலாளர் இல்லை' என்கிற அட்டையைத்தொங்கவிட்டால் போதும் என்று திருப்தியடைந்து கொள்கிறது.அதுபோலத்தான் புகையிலைப்பண்டங்களின் உறைகளில் இப்போது இருக்கிற எச்சரிக்கை வாசகம் போதுமானதாக இல்லையாம். அதாவது அட்டையின் மூன்றில் இரண்டு பங்கு இடத்தை அடைத்துக்கொண்டு இருக்கவேண்டிய எச்சரிக்கை வாசகம்  ஒரு பங்குதான் இருக்கிறதாம்.அதை ஆழ்ந்த கவலையோடு பரிசீலித்திருக்கிறது.சட்டங்கள் வெரும் எழுத்து வடிவோடு நின்றுபோனால் குற்றங்கள் காற்றுப்புகாத இடத்துக்குள்ளும் நுழைந்து திரும்பும்.

சினிமாக்கள் மூலமாக மட்டும் அறியப்பட்ட சிபிஐ என்கிற அரசு நிறுவணம் எதிர்க்கட்சிக்காரர்களின் வீடுகளுக்கு மட்டும் சோதனைக்குப்போகும் என்கிற எழுதப்படாத சட்டம் சுதந்திரத்துக்கு முனாடியே அமலுக்கு வந்துவிட்டது. இது தெரியாமல் அடி சக்க கிளம்பிட்டாய்ங்கய்யா என்று பூரித்துப்போவதில் செய்தித்தாள்களின் விற்பனை மட்டுமே கூடும்.மக்களால் மக்களுக்காக செய்யப்படுவது தேர்தல்காலத்துக்கான ரூபாய் நோட்டு மட்டும் தான்.

13 comments:

Chitra said...

சட்டங்கள் வெரும் எழுத்து வடிவோடு நின்றுபோனால் குற்றங்கள் காற்றுப்புகாத இடத்துக்குள்ளும் நுழைந்து திரும்பும்.


.......உண்மை.... நாட்டு நடப்பில், இது சகஜம் என ஏற்றுக் கொள்ளப் பழ(க்)கி விட்டார்களே!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இப்படிப் பட்ட தொடர்ச்சியான எழுத்துக்களின் மூலம்தான் பூட்டப்பட்டிருக்கும் பல கேள்விகளுக்கான திறவுகோலை உருவாக்க முடியும் காமராஜ்.

விடாமுயற்சிக்கு வாழ்த்துக்கள்.

Unknown said...

பெட்ரோல் விலை எகிறியதில் இன்னும் விலைவாசி கடுமையாகும், சமையல் கேஸ் விசயத்தில் ஏற்ப்படும் தட்டுப்பாடுகளைப்பார்த்தால் அதற்கும் விலை ஏற்றம் வரபோகிறது என்பதும் தெரிகிறது, ஆனால் நாடு போகிற போக்கை பற்றி இன்றைய சராசரி மனிதர்கள் கவலைபடுகிற மாதிரி தெரியவில்லை ..

மீண்டும் ஒரு அடிமை வாழ்வுக்கு அல்லது பட்டினி சாவுக்கு நாம் த்யார்படுதப்படுகிறோம்...

vasu balaji said...

மிருக வாழ்க்கையில் ஒரு கட்டுக் கோப்பிருக்கிறது. அதையும் தொலைத்து விட்டு ஒட்டுண்ணி வாழ்க்கை வாழப் பழகிவிட்டோம்.:(

Unknown said...

//சாப்பிடப்போகிற உணவு விடுதிகளில் தொள தொள சட்டைப் போட்டுக் கொண்டு மேஜை துடைக்கிற இவர்களைப் பார்த்துச் சின்னச் சலனம் கூட வராத சகிப்புத்தன்மை இருக்கிறது.அந்தச் சாமன்யனுக்கு சாம்பார் ரசத்தில் உப்புக்கூடக் குறைய்ய இருந்தால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.//

சவுக்கடி வார்த்தைகள்..

ஆ.ஞானசேகரன் said...

//சட்டங்கள் வெரும் எழுத்து வடிவோடு நின்றுபோனால் குற்றங்கள் காற்றுப்புகாத இடத்துக்குள்ளும் நுழைந்து திரும்பும்.//

உண்மைதான் தோழரே..
சட்டங்கள் இருந்தாலும் பொறுப்பற்ற செயல் பொறுப்பற்ற அதிகாரிகள் இருப்பதால்தான் இந்த நிலை...

க.பாலாசி said...

உண்மை, உண்மை... இந்த சகிப்புத்தன்மைங்கற கன்றாவி எப்டித்தான் நமக்கு உண்டாச்சோ தெரியலைங்க... எல்லாத்தையும் பார்த்து, பார்த்து சவுங்கிப்போச்சு புத்தியும்கூட..

ஈரோடு கதிர் said...

வெறும் எழுத்துவடிவச் சட்டம், சாமானியன் மேல் மட்டும் எளிதாய் உயிர்பெற்றுவிடுகிறதே!

Unknown said...

இல்லாத சட்டங்களையெல்லாம் சமூக அமைப்பில் உள்ளாடக்கி நமது மீது திணிக்கும் நம்மக்களே, தனா முன் வந்து செயல் படுத்தினா தான் எல்லா சட்டமும் செயல் பட முடியும். விசாரணை தீர்ப்பு எல்லாம் ஏழைகள் மீது மட்டுமே சரிவர அமுல் படுத்த முடியும்.

வினோ said...

சட்டம் மட்டுமே இருக்கு... செயலில், மனதில் எதவும் இல்லை.. மாற வேண்டும் அண்ணா...

அன்புடன் அருணா said...

/மக்களால் மக்களுக்காக செய்யப்படுவது தேர்தல்காலத்துக்கான ரூபாய் நோட்டு மட்டும் தான்./
சாட்டை.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

நாம் இனி மாற்று குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் காமராஜ்.

யாரின் பின்னும் இனிச் செல்லாது நாம் முன்நின்று அடிப்படையிலிருந்து எல்லாவற்றிலும் மாற்றத்தைத் தொடங்குவது மிக அத்தியாவசியம்.

எல்லாக் கட்சிகளும் அவரவர் பங்குக்கு அவரவர் ஆட்சிக் காலங்களிலோ ஆளும் மாநிலங்களிலோ பல வகையான வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

அடிப்படைக் கட்டமைப்பிலிருந்து தெளிவான சிந்தனையும் லாப நோக்கற்ற நெடுந்தூரப் பயணத்துக்கு நம்மைத் தயார் படுத்திக் கொள்வோம்.

மதம் மொழி இனம் ஜாதி இவையெல்லாம் நான்கு சுவர்களுக்குள் அடைபடட்டும்.

நம் கவனம் இனி திசைதிருப்புதல்களுக்கு ஆட்படாது யார் பெரியவர் சிறியவர் என்ற அகங்காரம் தொலைத்து ஒரு பெரும் இயக்கத்துக்கான நம்பிக்கையுடன் தமிழகத்திலிருந்து இந்தச் சுடரை ஏற்றுவோம்.

பிற மாநிலங்களுக்கும் பின் இந்தியா முழுமைக்குமான வெளிச்சமாயும் விடியலாயும் இது சுடர் விடட்டும்.

முதலடி எடுத்து வைக்க முனைவோம்.நாட்டை நேசிப்பவர்களை இணைப்போம்.அடுத்த தலைமுறைக்கான விடுதலைப் போராட்டமாக இது இருக்கட்டும்.

காத்திருக்கிறேன் அருமை காமராஜ்

hariharan said...

//சாப்பிடப்போகிற உணவு விடுதிகளில் தொள தொள சட்டைப் போட்டுக் கொண்டு மேஜை துடைக்கிற இவர்களைப் பார்த்துச் சின்னச் சலனம் கூட வராத சகிப்புத்தன்மை இருக்கிறது//

உண்மை தான் தோழரே! நமது தோலின் தடிமன் அதிகமாகிவிட்டதோ?