29.4.11

ரயில் கோபம் 2


முருகேசன் அப்படி ஒண்ணும் பிரம்மாதமாகப் படித்துவிடவில்லை. ப்ளஸ்ட்டூ படித்துக் கொண்டிருக்கும் போது ரெண்டு அக்காமார்களுக்கு கல்யாணம் நடத்த வேண்டி இருந்தது.அதற்கு வாங்கிய கடனை அடைக்க ஆந்திராவுக்கு டவர் வேலைக்குபோனான். ஒரு ஆளுக்கு பத்தாயிரம் முன்பணம் தருகிறார்கள் என்று கேள்விப்பட்டதும் இருமிக்கொண்டே அய்யா நான் போகிறேன் என்றார். ’இந்த வயசுல அதும் கொடல்வெளியே வாரா மதிரி இருமிக்கிட்டு அந்த மனுஷன் போகனுங்காரே’ என்று அம்மா கண்ணைக்க சக்கினாள். புத்தகப் பையைத் தூக்கி பரண் மேல்போட்டு விட்டு ரயிலேறினான். பத்தாயிரம் கடனடைக்க ரெண்டு வருஷமானது. மின்சார கோபுரத்தில் ஏறி கயிற்றைக் கட்டிக்கொண்டு நிற்கிற வேலை.கயிறுவழியே மேலே வருகிற இரும்புத் துண்டுகளை இணைத்து இணைத்து கோபுரமாக்கவேண்டும். காலையில் சாப்பிட்டுவிட்டு மேலேறினல் மதியச்சாப்பாட்டுக் குத்தான் இறங்கனும். சிலநேரம் சாப்பாடும் கூட கயிறு வழியே மேலே வந்துவிடும்.

காக்கை பருந்து குருவிகள் அருகே பறந்து பெரிதாய் தெரிந்தது. கீழிருக்கும் ஆடுமாடு  மனிதர்கள் குட்டியூண்டாய்த் தெரிந்தார்கள். அவனுக்கு வேலை சொல்லிக் கொடுத்த பரமன்தான் சிகரெட்டுக் குடிக்கச் சொல்லிக் கொடுத்தான். ஒவ்வொரு தரமும் ஒண்ணுக்கிருக்க கீழிறங்கும்  அவனைக் கிண்டல் பண்ணி மேலிருந்தே கழிக்கக் கற்றுத் தந்தான்.அந்த உயரத்தில் இருந்துகொண்டு பரமனின் காமக் கதைகளைக் கேட்பது நடுவானில் ஊஞ்சல் ஆடுகிற மாதிரி இருந்தது. கடிதம் கொடுப்பது,சைக்கிளை எடுத்துக்கொண்டு அவள் பார்க்க அலைவது, கனவு காண்பது என்கிற முருகேசன் உடலாலும் நினைவுகளாலும் வேறு மனிதனாக மாறிப்போனான். சாயங்காலம் ஆனதும் சரக்கு அடிக்கச் சொல்லிக் கொடுத்தான். முதல் தரம் குடித்த போது கொமட்டிக்கிட்டு வந்தது அப்படியே கக்கிவிட்டான். ஆனாலும் ஒரு மாதிரியாக ராட்டினத்தில் போகிற மாதிரி இருந்தது.ரெண்டாவது தரம் குடித்தபோது கீழ வீட்டுசெல்வியின் முகம் பாண்ட்ஸ் பவுடர் வாசனையோடு மிக அருகில் தெரிந்தது.பரமனிடம் செல்போன் வாங்கி செல்வியின்பக்கத்துவீட்டு சின்னமணியக்காவிடம் பேசி செல்வியைப்பேசச்சொல்லும் தைர்யம் வந்தது. இதற்கிடையில் நாலுதரம் ஊருக்கு வந்தான் கூடப்படிச்ச பயலுகள் காலேஜுக்கும்,பாலிடெக்னிக்குக்கும் போய்க்கொண்டிருப்பதைப் பார்த்து அழுகை அழுகையாய் வந்தது. அந்த நிராசையைச்சரிக்கட்ட அவனுக்கு செல்வியின் அருகாமை தேவையாய் இருந்தது.

அடிக்கடி செல்வியோடு பெசுவதைக்கேள்விப்பட்ட அவள் வீட்டார் முருகேசனின் வீட்டுக்குப்போனார்கள்.இரண்டு வீட்டுக்காரர்களும் சேர்ந்து ஜோசியக்காரரிடம் போனார்கள்.ஒரு நல்ல நாளில் ஊர்க்காரர்கள் எல்லோரும் முருகேசன் வீட்டுக்குவந்தார்கள்.எண்ணி ஒரு வருஷத்தில் செல்வியின் மடியில் ஒரு குழந்தைகிடந்தது.அந்த நேரத்தில் தான் சாத்தூர் மெரிட் மேச்கம்பெனிக்கு சீனாவில் இருந்து ஒரு தனியங்கி எந்திரம் வந்தது.அங்கு ஏஜெண்டாக குழந்தைகளை அனுப்பும் சாமியாடி பூச்சப்பெரியப்பாவிடம் பொறுப்பான ஹெல்பெர் வேண்டுமென்று கேட்க.பூச்சப்பெரியப்பா முருகேசனைக் கூட்டிக்கொண்டு போனார். குடியாத்தத்தில் இருந்து வந்திருந்த மூத்த மெக்கானிக்கிடம் உதவியாளராகச் சேர்ந்தான். மாசம் நாலாயிரம் ரூபாய் சம்பளமும் போக வர கட்டணச்செலவும் கொடுத்தார்கள்.

ரவ்வாப் பகலா மெஷினுக்கு அடியிலே கிடந்தான் முருகேசன்.சிவப்பு நிற முண்டா பனியனும் அரைக்கால் டவுசரும் கையில்  ரெண்டு ஸ்பானர்,ஒரு ஸ்க்ரூ ட்ரைவர் உடம்பு முழுக்க கிரீஸ் வாசனையோடு வலைய வலைய வந்தான்.ஒரு முனையில் பேப்பரும் மெழுகும் போட்டால் நடுவில் தீக்குச்சிகளாக வந்து விழும்.அங்கிருந்து கன்வேயர் வழியே கடந்துப்போய் தானே தன் தலையில் கருமருந்தை ஏந்திக்கொண்டு திரும்பிவரும். வரும்போதே காற்றாடியின் காற்றில் உலர்ந்து கீழே தீக்குச்சிகளாய் பொது பொதுவெனக் கீழே விழும். முருகேசனுக்கு ஒரே ஆசர்யமாக இருக்கும். இந்த வேலைகள் எல்லாம் நடக்க முன்னமெல்லாம் ஒரு வாரம் ஆகும். நூற்றுக் கணக்கான பெண்கள் தீக்குச்சிகளோடு கிடந்து மல்லுக் கட்டுவார்கள். தீப்பெட்டி யாபீசுக்குள் நுழைந்தால் சண்டைகள்,சிரிப்பு,பாட்டு இப்படிச் சலச் சலவென ஒரே மனித இரைச்சலாகாக் கேட்டுக் கொண்டே இருக்கும். அவற்றையெல்லாம் விழுங்கிச் செரித்தபடி அந்தச் சீனாவின் எந்திரம் பேரோசையோடு ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒருகாலத்தில் பிரதான தளவாடச் சாமான்களாக இருந்த பழய்ய கட்டைகள், ராக்குகள்,மெழுகு முக்கும் இரும்பு பிளேட்டுகள் எல்லாம் சுற்றுச்சுவரின் மூலையில் அம்பாரமாகக் குவிந்து கிடந்தது. தீப்பெட்டியாப்பிஸ் ராக் ரூமு களுக்கென்று தனிக்கதைகள் உண்டு.அவற்றோடு சேர்ந்து பழய்ய நினைவு களும் குவிந்து கிடந்தது.  

9 comments:

சக்தி கல்வி மையம் said...

Nice.,

hariharan said...

//தீப்பெட்டி யாபீசுக்குள் நுழைந்தால் சண்டைகள்,சிரிப்பு,பாட்டு இப்படிச் சலச் சலவென ஒரே மனித இரைச்சலாகாக் கேட்டுக் கொண்டே இருக்கும். அவற்றையெல்லாம் விழுங்கிச் செரித்தபடி அந்தச் சீனாவின் எந்திரம் பேரோசையோடு ஓடிக்கொண்டிருக்கிறது.//

ரெம்ப நல்லாயிருக்கு.. மெஷின் மேல ஆளுகளுக்கு கோபம் வந்துராம!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

வாழ்க்கை ஒவ்வொருத்தருக்கும் ஒரு வாசலையும் அதுக்குக் கதவையும் கொடுத்து வெச்சுருக்கோ காமராஜ்.

முருகேசனுக்கு இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையும் அதற்கான வர்ணங்களும் கொண்டதாய்.

vasu balaji said...

நினைவுகளை மீட்டெடுத்துத் தாருங்கள்:)

செ.சரவணக்குமார் said...

பத்தாண்டுகளுக்கு முன்பாக சாத்தூரில் வங்கிப்பணிக்கான பட்டயப்படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது ரயில் நிலைய பெஞ்சுகளிலேயே பெரும்பாலும் கிடப்போம். கிட்டத்தட்ட ஓராண்டு காலம். மறக்கவே முடியாத ரயில் நிலைய வாசனையை இன்று இந்தப் பதிவில் மீண்டும் உணர்ந்தேன்.

மெழுகு வாசம், ரேக் ரூம், கட்டைக்காக அடப்பு ரூமில் காத்திருக்கும் பெண்கள், கட்டை செட்டுக்கும் அடப்பு ரூமுக்குமாக சேர்த்து ஒலிக்கும் ஸ்பீக்கர் பாட்டு என ரொம்ப நெருக்கமான இடுகை அண்ணா இது.

சொல்வதற்கு ஊர்க்கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. எனினும் ஊர் வாசம் சுமந்துவரும் உங்கள் எழுத்தே இப்போதைக்குப் போதும் என்றிருக்கிறேன்.

ரயில் கோபத்தை ஒரு 50 பகுதிகளாகவாவது எழுதிவிடுங்களேன், இந்தத் தம்பிக்காக.

ஓலை said...

Nice.

க ரா said...

ஊர்வாசம் அடிக்குது காமு சார். வீட்டுல வம்பு பண்ணினதுக்கு மேக்கட்டையால சாத்து வாங்கினது நியாபகம் வருது. முழுப்பரிட்சை லீவுக்கு ஆளுக்கு இத்தன சக்கை அடுக்குனாதான் சாப்பாடுன்னு வீட்ல சொல்லுவாங்க. டிமிக்கி கொடுத்துட்டு விளையாட போயிருவேன். திரும்பி வரப்ப மேக்கட்டை ரெடியா இருக்கும் எங்கம்மா கையில. பொங்கல் அப்ப காள நாடார் தீப்பெட்டி ஆபிஸ்ல ஒவ்வொரு வீட்டுக்கும் ரெண்டு கரும்பு கிடைக்கும்.. அத வாங்கிட்டு வந்து வீட்டுல போடறப்ப கை முழுக்க தீப்பெட்டி வாசம் அடிக்கற மாதிரி இருக்கும். அதெல்லாம் ஒரு காலம்.. இனிமே உங்க எழுத்துல மட்டுமாவது அந்த நாளலெல்லாம் பாக்காலான்னு நினைக்கிறேன்.

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் நல்லாயிருக்கு தொழரே,,

Backyard Design Parma said...

Goood share