17.10.11

வாகைசூடட்டும் புதுப்புதுக் கதைகள்.



சூட்டோடு சூடாக பார்த்துவிடத் துடித்து முடியாமல் போனது. இந்த இரண்டு வார இடைவெளியில் பார்க்கநேர்ந்த விளம்பரங்கள் உச்சிமண்டையில்  உட்கார்ந்துகொண்டு என்னைப்பார் என்னைப்பார் என்று கெஞ்சியது. சிட்பியா டோனில் அல்லது கேவாக்கலரில்  விளம்பரம் விரிய அது எனது பால்ய நினைவுகளைக் கிளறிவிட்டு விட்டது. மீளக் கிராமத்துக்குள் போகிற போதெல்லாம் பால்யத்தின் நினைவுகள் மட்டுமே நிழலாடமுடியும்.நாங்கள் ஏறி விளையாண்ட உரல்களும் மதில்களும் குள்ளமாகிவிட்டதுப்பொன்ற பிரம்மை உண்டாகும். ஆனால் அவற்றை வேரோடு தோண்டியெடுத்து  காட்சிகளாய்க் கொண்டுவந்து கொட்டியிருக்கிறார் இயக்குனர் சற்குணம்.

சொல்லப்பட்ட கதை நூற்றுக்கு நூறு கொத்தடிமைகளின் கதை. இரவுகளிலும் கூட நிழலென நீளும் அவர்களின் துயரத்தைக்கோடிட்டு மட்டும் காட்டிவிட்டு அந்த துயரத்துக்குள் இருந்து நகர்த்தப்படும் வாழ்க்கையைச் சின்னச் சின்ன சந்தோசங்களாக கோர்த்திருக்கிறார் இயக்குனர். ஒரு கலைப்படத்துக்கு மிக அருகில் நகரும் இந்த திரைப்படம் முந்தைய களவாணிபோல கொண்டாடப் படாததற்கு செங்கல் அறுக்கிற கொத்தடிமைகள் மட்டுமே காரணம்.  விளிம்பு மக்களிலும் ஒருகுறுகிய எண்ணிக்கையில் தமிழகத்தில் வாழும் அவர்களது வாழ்க்கை ஏனைய சமூகத்துக்கு முற்றிலும் அந்நியமானது.  வெறும் உழைப்புச் சுரண்டலோடு நின்று போகிறவராக ஆண்டை  பொன் வண்ணனைக் காண்பித் திருப்பது கொஞ்சம் நழுவல் ரகம். அல்லது முழுக்க முழுக்க குழந்தை உழைப்பை  சுற்றுகிற காரணத்தால்  பொன் வண்ணன் முழுக்கச் செதுக்கப் படாமல் போயிருக்கலாம். ஆயினும் கொத்தடிமைகளின் வாழ்க்கை சொல்லமுடியாத இருள் அடர்ந்தது. அதுவும் அறுபதுகளின் மத்தியில் ஆன காலம் என்பதால் ஆதிக்கம் இன்னும் கூடுதலாகவே இருக்கவாய்ப்பிருக்கிறது.

எங்கள்முதல் ஆவணப்படத்துக்காக கேபிள் குழி தோண்டும் ஒருகுடும்பத்தை ஒருவாரகாலமாக படம் பிடித்தோம். வெறும் பணிரெண்டு நிமிடங்கள் நீடிக்கிற அந்த ஆவணத்துக்கு அவ்வப்போது அவர்களுக்குத்தெரியாமல் படம் பிடித் தோம். ஒருவாரத்துக்குப் பின்னால் அதிலிருக்கிற ஒரு பெண் காணவில்லை.  கேட்டதற்கு,ஊருக்கு (சேலத்துக்கு பக்கத்திலாம்)  போனதாகச்சொன்னார்கள். ஊருக்குப் போகிறேன் என்று சொன்னதற்காக கங்காணி அவளைக் கணவன் முன்னாடியே கன்னத்தில் அடித்தானாம். இது 2005 ஆம் ஆண்டுவாக்கில் நடந்தது. 1966 ல்  அதுவும் ஆதிக்கம் செரிந்த புதுக்கோட்டைப்பகுதியில் நிலைமை எப்படியிருந்திருக்கும் என்று ஊகித்துக்கொள்ளுங்கள்.

ஆயினும் அந்த ’கண்டெடுத்தான் காட்டு’ மனிதர்களைச் சுற்றியும், அவர்களு க்கான அறிவொளி குறித்தும் பேசுவதால் இந்தப்படத்தை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கணும்.

குருவிக்காரர்,வைத்தியர்,தம்பிராமையா,அப்புறம் சூரங்குடி ( தம்பி) கந்தசாமி ஆகிய விரல்விட்டு எண்ணக்கூடிய ஆண் பாத்திரங்களும் இனியா, ஊனமுற்ற சிறுவனின் தாய் என இரண்டே இரண்டு பெண்பாத்திரங்களும் தவிர இந்தப் படமெங்கும் வியாபித்திருப்பவர்கள் அந்த சிறுவர்களும் அவர்கள் அடிக்கிற லூட்டியும் தான். சதா நேரமும் பயமுறுத்திக்கொண்டிருக்கும் ஆதிக்கத்தின் மீது மறைமுகமான அவர்களுக்குள்ளே புழங்கிக்கொள்ளும் விமர்சனம் இருக்கும். அந்த விமர்சனத்தை பொழுதுபோக்காக கடத்தும்  விளிம்பு மனிதர் களிடத்தில் வியந்து வியந்து போற்றக் கூடிய குசும்பு மண்டிக்கிடக்கும்.
அதோடு கூடவே இயற்கையோடு இரண்டறக் கலந்த அற்புதமான வாழ்வு முறை இருக்கும். அவர்களிடத்தில் ஆதிப்பொதுவுடமை வாழ்க்கையின் எச்சங்கள் ஒட்டிக்கொண்டிருக்கும். அந்த அரிய பொக்கிஷங்களை அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார் சற்குணம்.

மரத்தில் மீன் ஏறுவது,குளத்தில் அடியில் கிடக்கிற மீன் புழுவைக்கடிக்கும்போது அது என்னவகை எனத் துள்ளியப்படுத்துவது,புகை போட்டு எலிப்பிடிப்பது,செத்துப்போன குருவிக்காரருக்கு படப்பு வைப்பதென்று இந்த கணினி யுகம் மறந்து போன கிராம வாழ்க்கையை சின்ன சின்ன காட்சிகளில் மீட்டித் தருகிறது வாகைசூடவா. இனியா இதுவரை வந்து தங்களை கிராமத்துப்பெண்ணாக உருமாற்றிக்கொண்ட புகழ்பெற்ற தமிழ் நாயகிகளை விழுங்கிச்செறித்தபடி அநாயசப் படுத்துகிறார். அவரும் கூட கன்னடத்துக்காரராமே. கலை எல்லைகளற்றது. அதுபோலவே காதலும் வரம்புகளற்றது. ஊருக்கு வந்த வாத்தியாரை காதற்கணவனாய் வரித்துக் கொள்கிற கண்டெடுத்தான்காட்டுப் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் இனியா. அதற்குச் சம்பவங்களும், பின்புலமும் கதையும் வலுவூட்டியிருக்கிறது. வாத்தியார் விமலை ஏகடாசி பண்னிவிட்டு இந்தப்பக்கம் திரும்பி தனக்குள் சிரிக்கிற இனியாவின் அந்த மேனரிசம் நெடுநாள் நினைவுகளில் கிடக்கும்.

இரவில் முசிறிக்கு தீப்பந்தங்களோடு காட்டு வழியே நடந்துபோகிற காட்சி தமிழ்சினிமாவுக்கு அர்த்தம்கூடுதலாகச்சேர்க்கிறகாட்சி. அதை  அனுபவித் தவர்களைக் கட்டாயம் அலைக்கழிக்கும் அந்தக்காட்சி.
http://skaamaraj.blogspot.com/2010/04/blog-post_09.html
( நேரமிருந்தால் கொஞ்சம் படியுங்கள் )

நடந்துவரும் கூட்டத்துக்குள் இருளும் ரகசிய சில்மிஷங்களும் கலவையாக சூடுபரவிக்கிடக்கும் அப்போது தீப்பந்தங்கள் வழிமறிக்கிற நெருடல்களாக மாறும். இப்படிப்படம் முழுக்க ஒரு  விளிம்பு வாழ்க்கையை செதுக்கிச்செதுக்கி வைத்திருக்கிற படம். மிருனாள் சென் இயக்கி எண்பதுகளில் வெளிவந்த மந்தன் திரைப்படத்தை நினைக்க வைத்தாலும் வைத்துவிட்டுப்போகட்டும். அவர்களுக்குள் தூவப்படும் கல்வி இந்த சமூக மடமைகளில் இருந்து  உடைத்துக் கொண்டு வெளிவர உதவும் கிரியா ஊக்கியாக மாறவேண்டும் என்கிற கனவிருக்கிற எல்லோரும் அங்கீகரிக்கிற படைப்பாக வந்திருக்கிறது வாகை சூடவா.

விமலின் நடிப்பை, இசையை, தொழில்நுட்பத்தை எல்லாம் தனித்தனியே சொல்லுகிற அளவுக்கு எனக்கு திரைப்பட ஞானம் இல்லை. ஒரு வலுவுள்ள  கதை செய்நேர்த்திமிக்க படைப்பாளனின் கையில் கிடைக்கும் போது அந்தக் குழுவும் செய்நேர்த்திமிக்கதாக மாறும். வரண்டு கிடந்த தமிழ்ச் சினிமாவுக்குள் கதைகளோடு களமிறங்கும் எல்லோருக்குமான வெற்றியாக இந்தப்படமும் இருக்கட்டும்.

10 comments:

ஓலை said...

Arumaiyaana vivarippu. Nanri.

நிலாமகள் said...

ஒரு வலுவுள்ள கதை செய்நேர்த்திமிக்க படைப்பாளனின் கையில் கிடைக்கும் போது அந்தக்குழுவும் செய்நேர்த்திமிக்கதாக மாறும்.//

ச‌ரியாச் சொன்னீங்க‌!

ப‌ட‌ம் பார்த்து இருநாட்க‌ளாகியும் ம‌ன‌சினுள் அக்க‌தாபாத்திர‌ங்க‌ளின் வெள்ள‌ந்தியும் வாழ்வு சும‌த்தும் வேத‌னைக‌ளும் ச‌ல‌ன‌ப்ப‌டுத்திய‌ப‌டியே உள்ள‌து.

காமராஜ் said...

வணக்கம் சேது சார்.
கருத்துக்கு நன்றி

காமராஜ் said...

வாருங்கள் நிலாமகள்
நானும் அப்படியே தான்.படம்பார்த்துமுடித்து இரவுமுழுக்கதூக்கம் இல்லாமல் இருந்தேன். இதே போன்ற மக்களின் அருகிருந்து வாழ்ந்திருக்கிறேன்.அவர்களின் சந்தோசம் துக்கம் காதல் எல்லாவற்றோடும் நானும் என்பால்யத்தில் அருகிருந்திருக்கிறேன்

மணிஜி said...

அனுபவிச்சு எழுதிருக்கீங்க..அடர்சிவப்புகாரரே..கொஞ்சம் நீளத்தை குறைத்திருந்தால் இன்னும் நிறைவாக இருந்திருக்கும்..(படத்தை சொல்கிறேன்..)

ஆடுமாடு said...

தோழர் சிறப்பு.

சின்ன சின்னதாக பாடல்காட்சிகளில் வந்துபொகிற ஷாட்கள் கொள்ளை அழகு.

இனியா, பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மணிஜீ சொன்னதை போல நீளமும், நாடகத்தனமாக கிளைமாக்ஸூம் படத்தின் முடிவை மாற்றியிருக்கிறது.

செ.சரவணக்குமார் said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள் காமு அண்ணா. ஒருசில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதனாலென்ன இப்படி ஒரு படம். இந்த கண்டெடுத்தான் காட்டு சூளை மனிதர்கள், அந்த டீக்கடைக்காரப் பெண், குருவிக்காரர், கிராமசேவா வாத்தியார் என்று எல்லாமே அற்புதம் இல்லையா?

க.பாலாசி said...

அருமையான படத்திற்கு அருமையான விமர்சனம்.. உங்களை இப்படி எழுதவைக்கவே இதுபோன்ற படங்கள் வரவேண்டும்..

Kavin Malar said...

தோழர்!

கதை புதுக்கோட்டைக்கு அருகில் நடக்கவில்லை. அது கும்பகோணத்துக்கு அருகே நடக்கிறது. நாயகனின் சொந்த ஊர் தான் புதுக்கோட்டை. வலங்கைமான், சுவாமிமலை என்றெல்லாம் சுற்றுப்புற ஊர்கள் குறித்து வசனங்களில் வருகின்றதே?
மிகவும் உணர்ந்து விமர்சனம் எழுதியுள்ளீர்கள். நீங்கள் சொன்னது போல் கண்ணை மூடிக்கொண்டு பாராட்ட வேண்டிய படமிது.

கமர்ஷியல் அம்சங்களை படங்களில் சேர்த்து சுவாரஸ்யமாக்குவதாலேயே சுமாரான படங்களையும் கூட சூப்பர் என்று விமர்சிக்கும் சிலர், இது போன்ற காம்ப்ரமைஸ் இல்லாத படங்ங்களை மட்டும் பொழுதுபோக்கு அம்சம் குறைவாக இருக்கிறது என்று குற்றம் சாட்டி நிராகரித்து கவிழ்க்கும்போது எரிச்சல் வருகிறது. ’படத்தில் உள்ளே நுழைய முடியவில்லை; ஒரு சீனில் கூட கண்கலங்க வைக்கவில்லை’ என்று படத்தைப் பற்றி சிலர் குறை சொல்கிறார்கள். சமூகத்த்தின் மீது அக்கறை கொண்டோருக்கு இந்தப் படம் கண்ணீரை வரவழைக்கும். குடும்பம் என்கிற கூட்டுக்குள் அடைபட்டு, குடும்பப் பாசம் மட்டுமே முக்கியம் என்று நினைப்போருக்கு, தெய்வத்திருமகன் போன்ற படங்கள் மட்டுமே கண்ணீர் வரவைக்கும். ’வாகை சூட வா’ பார்த்து உணர்வு மயமாதல் என்பது சமூக அக்கறையுள்ளவர்களுக்கு சாத்தியம். மற்றவர்களுக்கு அது வறட்டுப் படமாகத் தான் தெரியும். அதற்குப் படத்தை குற்றம் சொல்ல முடியாது. There is no social commitment. So you cant like that movie. thats it.

kashyapan said...

அருமை நண்பர் காமராஜ் அவர்களே ! "மந்தன்" தயிர்கடையும் "மத்து". ஆனந்த் பால் வினியொகம் செய்யும் கூட்டுறவு நிருவனம் மூலம் குஜராதில் தலித் மக்களுக்கு பால் உற்பத்தியில் ஈடுபடும் திட்டம் வந்தது. அது தான் white revolution வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டது. சாதிவெறியர்களின் எதிர்ப்பையும் மீறி வெற்றியடைந்தது .இதனை படமாக எடுக்க விரும்பியபொது அந்த தலித்மக்கள் நபருக்கு ஒரு ரூபாய் வீதம் 50000 வசூலித்துக் கொடுத்தார்கள். ஸ்யாம் பெனிகல் இயக்கத்தில் கிரீஷ் கர்நாட், ஸ்மிதாபடீல் ஆகியொர் நடித்த அற்புதமான படம் "மந்தன்" . ...காஸ்Aயபன்