18.12.11

அக்கம் பக்கம் - பராக்குப்பார்த்தல் ( போட்டி நிகழ்சிகள் )


இன்று மதியம் ஜெயா( அப்படிச்சொல்லலாமா?) தொலைக்காட்சியில் ஒரு போட்டி நிகழ்ச்சி நடந்தது. சமயல் போட்டி.எது எதற்கெல்லாம் போட்டி வைக்கலாம் என்கிற வரையரை ஏதும் இல்லை.அது அவரவர்களின் சுதந்திரம். இருக்கிறவன் கொழுப்புக்கு போட்டிவைப்பான் இல்லாதவன் பசிக்கு போட்டிவைப்பான்.கொழுப்புக்கு நடக்கும் போட்டிகளில் நேரமும் பணமும் இன்னபிறவும் விரயமாகும்.இல்லாதவனுக்கு அப்படியில்லை.
நிகழ்சியில் நூடுல்ஸ் சமைத்துக்கொண்டுவந்த ஒரு இளம் யுவதியின் நூடுல்ஸ் நிராகரிக்கப்பட்டது உடனே அவள் கண்ணைப்பிழிந்து கொண்டு அழுதாள். மனசுக்கு கஷ்டமாக இருந்தது.

இப்படித்தான் சூப்பர் சிங்கர் ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகளிலும் சிறார்களைப் போட்டிக்கு இலக்காக்கி அவர்களுக்கு தோல்வியைப் பற்றிச்சொல்லிஅழவைத்து அதற்கு பின்னணி இசை அமைத்து காசாக்குகிறார்கள். ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையோடு ஒப்பீட்டுப் பேசக்கூட கூடாது என்று உளவியலார்கள்  சொல்லு கிறார்கள். அது ஒரு புறமிருக்கட்டும். தோல்வியடைந்த இந்தக் குழந்தைகளின் இசைத் திறமையோடு புகழ்பெற்ற வாய்ப்பாட்டுக்காரர்கலைப் பாட வைத்தால் குழந்தைகள் தான் ஜெயிப்பார்கள். பித்துக்குளி முருகதாசின் தொண்டையையும்,ஏ.ஆர்.ரகுமானின் தொண்டையிலிருந்து வரும் பாடல்களுக்கும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கும்போது ஒரு குழந்தையின் பாட்டை நிராகரிப்பது கொடூரம். ஏன்  கே.பாக்கியராஜையும், டீஆரையும் கொண்டாடுவத்ற்கு இங்கொரு கூட்டமே இருக்கிறதே.

குழலினிது யாழினிது என்ப தம்மக்கள் மழலைச்சொல் கேளாதவர். இந்த உலகம் தனது குழந்தையின் மழலையை கூடிநின்று கேட்டுக்குதூகலித்துக்கொண்டாடுகின்ற உலகம்.அதன் மொழிக்கு இலக்கணம் கிடையாது.  அப்பாவைப் போடா என்று சொல்லும்,விருந்தினரை தொந்தி மாமா என்று சொல்லும்.ஏற்றுக்கொண்டு சிரிப்பதில்லை.இப்போது அது இல்லையா?. எல்லாம் மறந்துப்போய் நடுவர்கள் அப்போது ஒரு தத்துவம் சொல்லுவார்கள். போட்டியென்று வந்துவிட்டால் ஒருவர் தான் ஜெயிக்க வேண்டும் அதனால் நாங்கள் உங்களை நிராகரிக்கிறோம் என்று. இது  போட்டி நடுவர்களின் தத்துவமல்ல.இது தான் இன்றைய உலகமயத்தின் பிரதான தத்துவம் . அது, தான் ஜெயிக்கவேண்டு மென்பத்தற்காக எதையும் தோற்கடிக் கும். குழந்தைத் தனத்தையும் சேர்த்து.

எல்லா விலையாட்டிலும் ஜெயிப்பது ஒருவராகவும் தோற்பது இன்னொருவராகவும் தான் இருக்கும். ஆனால் இந்த தாராள உலகமய விளையாட்டில் ஜெயிப்பது ஒருவராகவும் தோற்பது கோடிக் கணக்கிலும் பெருகிவருகிறது. வால்மார்ட் ஜெயிப்பதற்காக இந்தியா தோற்கிறது.விலைவாசி பஸ்கட்டணம் ஜெயிப்பதற்காக
தமிழ் மலையாள உணர்வுகள் பணயம் வைக்கப்படுகிறது.

8 comments:

நிலாமகள் said...

இது தான் இன்றைய உலகமயத்தின் பிரதான தத்துவம் . அது, தான் ஜெயிக்கவேண்டு மென்பத்தற்காக எதையும் தோற்கடிக் கும். குழந்தைத் தனத்தையும் சேர்த்து//

அதானே...!

ராம்ஜி_யாஹூ said...

உலக மயமாக்கல் பொருளாதாரம், வணிகத்தை மட்டும் அல்ல ,
மக்களின் குண நலன்கள், ரசனையையும் கூட மாற்றும் சக்தி கொண்டுள்ளது.

saambaldhesam said...

இதற்குள் சாதியமும் ஒளிந்துள்ளதை தயக்கமின்றி நான் சொல்வேன். குழந்தைகள் ஆயினும் இளைஞர்கள் ஆயினும் இது போன்ற நிகழ்ச்சிகளில், குறிப்பாக பாட்டுப்போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஒரு குறிப்பிட்ட மேல்சாதி வகுப்பாக இருப்பதையும் நுட்பமாக கவனிப்பவர்கள் அறிவார்கள். அப்படியிருக்க நிராகரிக்கப்படுபவர்கள் யாராய் இருப்பார்கள் என்பதை சொல்ல வேண்டுமோ?

ராகவன் said...

அன்பு காமராஜ்,

எப்படி இருக்கீங்க? நல்ல பதிவு இது காமராஜ்.... இன்னும் ராம நாதபுரத்தில் தான் இருக்கிறீர்களா? இல்லை இங்கே மாற்றல் வந்தாச்சா?

குயில்தோப்பு... எப்படி இருக்கு?

அன்புடன்
ராகவன்

ஹரிஹரன் said...

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டியி கலந்து கொள்ளாலாமல் இருப்பது நன்று. ஒருவரின் திறமை உலகிற்குத் தெரிந்தாலும் மற்றவர்களை அந்த துறையிலிருந்தே ஒதுக்குகிறார்கள்.

வானம்பாடிகள் said...

சற்றே வேறுபடுகிறேன் காமராஜ். இன்றைய போட்டி உலகில் தோல்வி என்பதைத் தெரிந்துகொள்வது அவசியமான ஒன்று. ஆனால், தொலைக்காட்சியில் முகம் தெரிந்தால் போதும் என்ற அளவில் போதிய பயிற்சியில்லாவிடினும், அடித்தாவது இழுத்துக் கொண்டு போகும் பெற்றோர்களே குற்றவாளிகள். போட்டிக்கு முன்பே தோல்வி என்பது ஒன்று உண்டு. வெற்றி தோல்வியல்ல முக்கியம், பங்கேற்றல் என்று எத்தனை பேர் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்? ஒரு பெரிய போட்டியில் பங்கேற்க எத்தனை ஆயத்தங்கள், எத்தனை தியாகங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக சுய முனைப்பு அவசியம். நிகழ்ச்சி நடத்துபவர்களும் வாரக் கணக்கில் இழுக்க வசதியாய்ப் போனது என்று இந்த அடிப்படையை வலியுறுத்துவது இல்லைதான்.
தனக்குகந்த சூழலில், நெருக்கடியின்றி மனம்போல் ஒரு பாடலை பாடவிட்டு பதிவு செய்து அனுப்பச் சொல்லி அதைக் கேட்டு தேர்ந்தெடுக்கக் கூடும்தானே. வியாபார உலகம். விலையாய்க் குழந்தைத்தனம்.

காமராஜ் said...

பாலாண்ணா வணக்கம்.ஏற்கிறேன்.ஆனாலும் ஒரு துறையில் நுணுக்கம் பெறுவது என்பது வேறு அதற்காக குழந்தைமையைத்தொலைப்பது என்பது வேறு.

கிடக்கட்டும் அண்ணா கொலவெறி பாட்டைக்கேட்டீங்களா.என்னா பாப்புலர்.

காமராஜ் said...

நிலாமகள்,ராம்ஜி,ராகவன்,இக்பால்,ஹரிகரன் எல்லோருக்கும் அன்பும் வணக்கமும்.