8.4.12

திரைகடலோடி திரவியம் தேடு. திமிறும் உணர்வுகளைக் கொன்றுபோடு


அலுவலக ஊழியர்களோ,நண்பர் வட்டாரத்திலோ,இல்லை இலக்கிய வட்டாரத்திலோ மரணச்செய்தியென்றால் தவறாமல் போய்விடுவது வழக்கமாகிவிட்டது.கல்லூரி முடிக்கும் வரை ஊரில் துஷ்டியென்றால் எங்காவது காட்டுக்குள் போய் விட்டு எடுத்த பின் வீடு திரும்புகிற சுபாவம் இப்படி மாறிப்போனதற்கு தொழிற் சங்கமே காரணமாக இருந்தது. இன்றும் கூட பணி ஓய்வு பெற்று நான்குவருடம் ஆகிவிட்ட ஒருதோழரின்  மரணச் செய்தி வந்தது. சாயங்காலம் போவதாக உத்தேசித்துக்கொண்டோம். நான்குமணி இருக்கும் மாது வீட்டைப் பார்த்தேன் வண்டி இல்லை.போயிருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டு மற்றொரு தோழர் கணேசனுக்கு போன் பண்ணி அவரும் துஷ்டி வீட்டில் இருப்பதாக சொல்லவே தாமதமாகிவிட்டது என  அடித்துப்பிடித் துக்கொண்டு ஓடினேன்.

தெருவை நெருங்கிய போது ஆட்கள் யாரும் தென்படவில்லை.ஒருவேளை காரியம் முடிந்திருக்குமோ என்கிற கவலை வந்துவிட்டது. நின்று தயங்குவதைப் பார்த்த அந்த தெருக்காரர் துஷ்டி வீடு அடுத்த தெருவில் என்றார். நிம்மதியாக இருந்தது. அங்கேபோன போது ஏழெட்டு அலுவலகத் தோழர்கள் உட்கார்ந்திருந்தார்கள் நான் போனவுடன் எல்லோரும் சென்று இறுதி மரியாதை செய்துவிட்டு வந்தமர்ந்தோம். இறந்தவருக்கு பத்துப்பைசா என்கிற அடைமொழி உண்டு. எண்பதுகளில் பத்துப்பைசாவுக்கு ஒரு ரோஜாப்பாக்குப் பொட்டலம் கிடைக்கும். சிகரெட் குடித்துவிட்டு புகை வாடையைப் போக்க பாக்குப்போடுகிற பழக்கம் எல் லோருக்கும் இருப்பதுபோல அவருக்கும் இருந்தது. அது செய்தியில்லை. ஒருபாக்குப் பொட்டலம் வாங்கி ஒருநாள் முழுக்க குடிக்கிற சிகரெட்டுக்கெல்லாம் அதையே கொஞ்சம் கொஞ்சமாக உபயோகப்படுத்திவிட்டு பத்திரப் படுத்திக் கொள்வார். யாருக்கும் அதிலிருந்து ஒரு துகள் கூடக்கொடுக்கமாட்டார் அப்படிப்பட்ட சிக்கண காரர். அதனாலே அவருக்கு பத்துப்பைசா என்கிற அடைமொழி வந்தது.

இப்படி ஒவ்வொரு காரியத்திற்குப் பின்னாடியும் ஒரு காரணம் வைத்துக்கொள்ளும் இந்த மனிதக்கூட்டம் விசித்திரமானது. இறந்த வீட்டில் வந்து குழுமி,அந்தக் குடும்பத்தார்களின் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் மகோன்னதமான பழக்கம் பொதுமைச் செயலால் ஆனது. கிராமம் என்றால் அதில் இன்னும் கூடுதல் பொதுமை இருக்கும். யாரும் வேலைக்குப் போக மாட்டார்கள். அன்று வேலைக்குப் போனால்தான் உலை வைக்கமுடியும் என்கிற வறுமை சூழ்ந்திருக்கும் ஏழைக்கிராமங்களிடம் இது இன்னும் அபரிமிதமாக இருக்கும். செல்போன் இல்லாத அந்தக்காலங்களில் வெளிஊர்களுக்கு செய்தி சொல்ல,அடக்க வேலைகள் பார்க்க, பந்தல்போட, சாப்பாடு தயார்செய்ய, இரவானல் தூங்கவிடாமல் செய்ய கதைப் பாடல் படிக்க பாம்பாட்டிக் காளியப்பத் தாத்தாவைக் கூப்பிட ஒருவர் என, தாங்களாகவே வேலைப்பிரிவு செய்துகொண்டு, அதை சிரமேற்கொண்டு செய்யும் மனிதாபிமானம் கட்டாயம் ஆதிப் பொதுவுடமையால் ஆனது. எவனாவது அதற்கும் மதத்திற்கும் முடிச்சுப்போட எவனாவது நினைத்தால் அவன் தொண்டையில் போடுபோடுங்கள்.

இங்கே ஒரு நடுவயதுக்காரர் ஓடியாடி வேலைகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார்.வரவேண்டியவர்கள் எல்லாம் வந்தாச்சா என்று கேட்டார்கள் இளையபையன் மட்டும் வரவில்லை என்று பதில் வந்தது.வெளி நாட்டில் இருக்கும் அவர் வருவதற்கான சூழல் இல்லை. நிறைமாதக் கர்ப்பினியான மணைவியை அழைத் துக்கொண்டும் வரமுடியாது அங்கே அவரைத்தனியே விட்டு விட்டும் வரமுடியாது என்று சொன்னார்கள்.

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து கொஞ்ச நாள் அலுவலகத்தில் வேலை பார்த்த  நமக்கே தாமதமாக வருவது உறுத்தியதே. வரமுடியாத அந்த இளைய பையன் என்னபாடு பட்டுக்கொண்டிருப்பார்.

3 comments:

vasan said...

பத்து பைசா பாக்கை சிக‌க‌ன‌மாக‌ச் செல‌வ‌ழித்த‌தே,
"சின்ன‌ ம‌க‌ன் சீமையில‌ வேலை பார்க்க‌ வைக்க‌ணும்"
என்ப‌து ம‌றைந்த‌ தோழ‌ரின் க‌னவாய் இருந்திருக்க‌லாம் காம‌ராஜ் சார்.
விதையை இழ‌க்காம‌ல் செடி இல்லை..அது வேண்டுமெனில் இதைத் துற‌க்க‌வே வேண்டும்.
சின்ன‌வ‌னுக்கு என‌து அனுதாப‌ங்க‌ள்.

ஓலை said...

Sad. Anjaligal.

vimalanperali said...

ஓடியாடி வேலைகளை ஒருங்கிணைக்கிறவர்கள் எங்கும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறார்கள்.இங்கு பத்து பைசா,பாக்கு,சிகரெட் எல்லாமே ஒரு உருவகப்பட்டு நிற்கிறது சமூகத்தின் சொல்லாக்கங்களாய்/மற்றபடி தவிர்க்க முடியாத தாமதங்கள் வாழ்வில் எப்போதும் நிலை கொண்டு/நன்றி, வணக்கம்.