19.4.12

எதைத் தேடுகிறது நீதியின் தராசு ? ( எஸ். வி. வேணுகோபாலன் )

கைக்குழந்தைகளும் பெண்களும்
அய்யகோ என்று
அலறிய சத்தம்
பெருகிய குருதி
சாதிய வெறியோடு
சாய்க்கப்பட்ட உடல்களும்
மாய்க்கப்பட்ட உயிர்களும்
எல்லாம் பொய் என்று அறிவிக்கப்படுகிறது
நீதியின் மேடையிலிருந்து

அடங்காத ஆண்டைகளின்
அடியாட்கள் கும்பல் வெளியேறுகிறது
வெற்றிப் புன்னகையோடு சிறைகளிலிருந்து

சாட்சியங்கள் போதவில்லையாம்

காலகாலமான வன்கொடுமைக்கும்
தீண்டாமைக்கும்
அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும்
உறைந்து போன இரத்தத்தின் மீதே
நிறைந்து பெருகும் புதிய குருதியும்
சரிந்த இதயங்களும்
குலைந்தே போன நம்பிக்கைகளும்
பற்றுறுதியும் இன்ன பிறவுமாய்
தேசத்தின் சேரிகளெங்கும்  
பரவி விரவி இருக்கும் காட்சிகளுக்குச்
சாட்சிகளாய்
கையாலாகாத அரசுகளே இருக்க

வேறெதைத் தேடுகிறது நீதியின் தராசு,
வெறித்துப் போன தெருக்களில்
பொறித்திருக்கும் சாதிய வன்மத்தின்
தடயங்களுக்குக் கண்களை மூடிக் கொண்டு ?

***********

1996 ஜூலை 11 அன்று பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் பெதானி தோலா என்ற கிராமத்தில் நிலச் சுவான்தார்களின் ரணவீர் சேனை என்றழைக்கப் படும் குண்டர்படை தலித் குடும்பங்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் பெண்கள், கைக் குழந்தைகள் உள்பட 21 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

 பெரிய முயற்சிகளுக்குப் பிறகு மறு நாள் பதிவு செயயப்பட்ட முதல் தகவல் அறிக்கை, நீண்ட நெடிய வழக்கு இவற்றுக்குப் பிறகு ஆரா செஷன்ஸ் நீதிமன்றம் மே 2010 ல் குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனையும், மீதி இருபது பேருக்கு வெவ்வேறு கால அளவில்  சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப்பு வழங்கியிருந்தது.

மேல் முறையீட்டை அடுத்து,  ஏப்ரல் 16, 2012 அன்று  பாட்னா உயர்நீதிமன்றம்,  'குறைபாடுள்ள சாட்சியங்கள்' என்ற அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த
அத்தனை பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துவிட்டது.

 0
கவிதையும்,தகவலும்,கோபமும் 
தோழர். எஸ் . வி .வேணுகோபாலன்

2 comments:

kashyapan said...

காமராஜ் அவர்களே! மூன்று மாதம் கூட ஆகாத குழந்தையை மேலே வீசினான்.அந்தக்குழந்தையை தன் கையிலுள்ளாவாளால் வாங்கினான் ஒரு பாவி. 11பெண்கள்,7 சிறுவர்கள் 3 சிசுக்கள் கொல்லப்பட்டனர். குடும்பத்தினரக் கொன்றால் தான் அவர்கள்கொழுப்பு அடங்கும் என்றான் ரண்வீர் சேனையின் தலைவன். இந்த தலித்துகள் தமிழ் பெச மாட்டார்கள்.அதனால் நம்ம ஊர் திருமா,ஜான், கிரு வாயைத் திறக்கமாட்டார்கள்!---காஸ்யபன்

hariharan said...

எத்தனை ஆண்டுகள் கழித்து வருகிறது அநியாயத்தீர்ப்பு.

தராசின் தட்டு சாய்ந்திருப்பதன் உண்மையான காரணம் புரிகிறது.

மாவோயிசம் என்பது தீவிரவாதம் என்றால் ரன்வீர் சேனா, சத்திஸ்கரில் இயங்கும் சல்வா ஜூடும் தீவிரவாத அமைப்புகளே.